தாய்மொழி நாள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது.

 

இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழ் உலக மொழிகளில் 15வது இடத்தில் இருக்கிறது. ஒருநாள் எங்கள் மொழியும் அழிந்துபோகுமா என்ற பயம் எல்லோரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு மொழியை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. தமிழ் தொடர்ந்து வாழ தமிழ் மொழி பேசுபவர்கள் கொஞ்சம் உதவி செய்யவேண்டும். வேறு ஒன்றுமே இல்லை.

 

நான் சமீபத்தில் ஒரு சிறுகதையில் ’சப்பாத்து’ என்று எழுதிவிட்டேன். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் எழுதிக் கேட்டார். ‘அது என்ன சப்பாத்து?’ நான் பதில் எழுதினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ‘ஷூ என்று எழுதியிருக்கலாமே’ என அறிவுரை வழங்கினார். சப்பாத்து என்ற வார்த்தை தமிழ் அகராதியில் இருக்கிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆங்கில – தமிழ் – ஆங்கில அகராதியில் ’சப்பாத்து என்று பதிந்தால் பதில் ’shoe’ என்று வருகிறது. ஆனாலும் அந்த வாசகருக்கு தெரியவில்லை. அறியும் ஆவலும் இல்லை.

 

ஒருமுறை சென்னையில் நான் ‘உப்பு’ என்று கடைக்காரரிடம் கேட்டேன். அவருக்கு புரியவில்லை. அவருக்கு பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை. பலதடவை சொல்லியும் அவருக்கு தெரியாததால் அதைச் சுட்டிக் காட்டினேன். அவர் ‘ஓ, சால்ட்டா? தமிழில் கேட்டிருக்கலாமே?’ என்றார். சங்க இலக்கியங்களில் உப்பு என்ற வார்த்தை பாடலுக்கு பாடல் வருகிறது. உப்பு வண்டிகள் வீதிகளில் உப்பு கொட்டிக்கொண்டு போவதைப்பற்றி வர்ணனைகள் இருக்கின்றன. உப்பு வியாபாரிகளுக்கு உமணன் உமட்டியர் என்ற பெயர்களும் உண்டு. இன்று அந்த வார்த்தையே அழிந்துகொண்டு வருகிறது. முதலில் ஒவ்வொரு வார்த்தையாக மறையும். பின்னர் மொழி அழியும். செங்கல் செங்கல்லாக அகற்றி ஒரு கட்டிடத்தை உடைப்பதுபோல.

 

இந்த இணைய உலகில் நாங்கள் பெரிதாக ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. உங்கள் இணைய தளத்திலோ, வலைப்பூவிலோ, நீங்கள் எழுதும் மின்னஞ்சலிலோ, குறுஞ்செய்தியிலோ, முகப்புத்தகத்திலோ, துரிதரிலோ ஒருநாளைக்கு சில தமிழ் வார்த்தைகளை எழுதி விடுங்கள். இன்னும் மேலாக தமிழ் வார்த்தைகளை குரலாகப் பதிவுசெய்து காணொளியாக உலவவிடுங்கள். இது இணைய வெளியில் உயிர்வாழும்.  உங்கள் காலத்துக்கு  பின்னரும் கிரகங்கள்போல என்றும் சுற்றிக்கொண்டிருக்கும்.

 

அந்தமான் மூதாட்டியின் மொழிக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏற்படக்கூடாது. நாங்கள்தான் அதைச் செய்யவேண்டும். இன்னொரு மொழிக்காரர் வந்து எங்களுக்காக அதை செய்யப்போவதில்லை.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta