எங்கள் வீட்டு மணிக்கூடு

        

அது மிகப் பழைய மணிக்கூடு. மனைவி சொல்கிறார் அதற்கு 40 வயது இருக்கும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் 20 வருடம் கூடுதலாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு மணிக்கும் டங் டங் என்று இசையுடன் அடிக்கும். ஐந்து மணிக்கு, ஐந்து  டங், ஆறு மணிக்கு ஆறு டங். இப்படி எங்கள் வீட்டு வாழ்க்கையில் அவ்வப்போது மணி பார்த்து அதன் பிரகாரம் சகல காரியங்களும் நிறைவேறிக் கொண்டிருந்தன. பிரச்சினை வரும் வரைக்கும்.

 

ஒருநாள் மணி ஐந்து காட்டியது, நாலு டங் அடித்தது. சரி, ஞாபகப்பிசகாக இருக்கலாம் என நினைத்தோம். ஆறு மணி வந்தபோது ஐந்து அடித்தது. தொடர்ந்து மணிக்கூடு எண்ணிக்கையில் பிழைவிட்டுக்கொண்டே வந்தது. என்னுடைய மனைவி மணிக்கூட்டை திறந்து பார்த்து திருத்தச் சொன்னார். எனக்கு அதிசயமாக இருந்தது. நான் என்ன மணிக்கூடு திருத்துபவனா? என்னை அவர் நல்லாக அறிவார். நான் செய்யும் ஆகக் கடுமையான உடல் உழைப்பு பல்ப் மாற்றுவதுதான். ஏணியை தூக்கிக் கொண்டுவந்து வைத்து அதன்மீது ஏறி சுட்டுப்போன பல்பை கழற்றிவிட்டு புது பல்ப் மாட்டுவது. அதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவைப்படும். ஒருவேளை அதனிலும் சுலபமான வேலை இது என்று அவர் நினைத்திருக்கலாம்.

 

சிறுவயதில் ஒருமுறை ஆர்வம் காரணமாக எங்கள் வீட்டு கடிகாரத்தை நான் திறந்து பார்த்திருக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை. ஒவ்வொன்றாகத் திறந்து அடி ஆழத்துக்கு போனேன். திறந்தது மாதிரியே மிகவும் எச்சரிக்கையாக  பூட்டினேன். பூட்டிமுடிந்தபோது ஒரு ஸ்குரூவும் ஒரு சில்லும் மிஞ்சிப்போயின. கடிகாரம் பார்த்து நேரம் அறியும் வழக்கம் வீட்டில் அன்றுடன் அற்றுப்போனது. பழையபடி சேவல்கூவி நேரம் கணித்துக்கொண்டோம்; அல்லது நிழலை காலால் அளந்து நேரம் கணித்துக்கொண்டோம்; அல்லது நாலுமணிப்பூ பூத்து நேரம் கணித்துக்கொண்டோம். அல்லது ரயில் கூவும் சத்தத்தை வைத்து நேரம் கணித்துக்கொண்டோம்.  

 

எங்கள் வீட்டு மணிக்கூட்டை சுவரிலிருந்து லேசாக இறக்கமுடியாது. வயிற்றுடன் சேர்த்து தூக்கிக்கொண்டுதான் இறக்கவேண்டும். மனைவி சொல்கிறாரே என்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு திறந்து பார்த்தேன். ஒரு தானம்தானே பிழைக்கிறது ஆகவே சின்னப் பிழையாகத்தான் இருக்கவேண்டும். ரஸ்ய எழுத்தாளர் கோகொல் எழுதிய சிறுகதை ஒன்றில் கதாநாயகன், சூட்டடுப்பில் இருந்து மனைவி இறக்கிய  ரொட்டியை சாப்பிடுவதற்காக கத்தியால் வெட்டுவார். உள்ளே மனித மூக்கு ஒன்று கிடக்கும். அவர் எத்தனை அதிர்ச்சி அடைந்திருப்பார். அப்படியான அதிர்ச்சிதான் எனக்கும் கிடைத்தது. உள்ளே எங்கே பார்த்தாலும் சில்லுகளும் பல்லுகளும். எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என ஒன்றுமே தெரியவில்லை.

 

மணிக்கூட்டை சுமந்துகொண்டு ரொறொன்ரோவில் கடிகாரம் திருத்தும் சீனாக்காரர் ஒருவரிடம் போனேன். அவர் மணிக்கூட்டைத் தூரத்தில் பார்த்ததுமே கையை நீட்டி ஏதோ தொற்றுநோய்க்காரனை துரத்துவதுபோல என்னை துரத்தினார். ‘அது மிகமிகப் பழமையானது. அதைத் திருத்தமுடியாது’ என்றார். நான் ‘நீர் மணிக்கூடு பற்றி படித்தவர். நான் படிக்காதவன். என்னாலும் முடியாது. உம்மாலும் முடியாது. அப்ப உமக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?’ என்றேன். அவருக்கு கொஞ்சம் ரோசம் வந்துவிட்டது. அவர் கைநீட்டி உதவிசெய்ய நான் மணிக்கூட்டை இறக்கி வைத்தேன். ’பெரிய பிழை ஒன்றுமில்லை. மணி அடிக்கும்போது ஒரு தானம் வித்தியாசப்படுகிறது’ என்றேன்.

 

இரண்டுவாரம் கழித்துப் போய் மணிக்கூட்டை மீட்டேன். சிரித்துகொண்டே சீனாக்காரர் அது சரியாக வேலை செய்வதாகச் சொன்னார். ’இதற்கு உதிரிப்பாகங்கள் கிடையாது. நானாகச் செய்து போட்டேன். எந்தக் காரணம் கொண்டும் முள்களை கையால் திருப்பி வைக்கவேண்டாம்’ என்றார். வீட்டிலே கொண்டுவந்து மணிக்கூட்டை மாட்டியதும் அது ஒரு மணிக்கு ஒன்று அடித்தது. இரண்டு மணிக்கு இரண்டு அடித்தது. ஞாபகமாக எல்லாத் தானங்களையும் சரியாகவே இசை பிசகாமல் ஒலித்தது. இப்படி ஒரு ஆறு மாதம் சுமுகமாகக் கழிந்தது.

 

மறுபடியும் கடிகாரம் தான் நினைத்தபடி அடிக்கத் தொடங்கியது. அதாவது ஓர் ஒழுங்குமுறை  இல்லை. கண்டபாட்டுக்கு சும்மா ஏதாவது ஒரு தானத்தை ஏதாவது ஒரு நேரத்துக்கு அடித்தது. முன்பு என்றால் ஒரு தானம் குறைய அடித்தது. இப்போது அப்படியில்லை. தாறுமாறாக அடித்ததால் ஒன்றுமே புரியவில்லை. மறுபடியும் சீனாக்காரரிடம் போனேன். அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு மணிக்கூடு சரியாகத்தான் வேலை செய்கிறது. இது நூறு வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட அருமையான மணிக்கூடு. அருமையாக நேரத்தையும் காட்டுகிறது. அதனால் நேரத்தை காட்டட்டும் ஆனால் மணியடிப்பதை நிறுத்திவிடுகிறேன் என்றார். நானும்  சம்மதித்தேன்.

 

வீட்டிலே வந்து மணிக்கூட்டை சுவரிலே மாட்டியதும் வீடு முன்போலவே இல்லை. வேறு யாருடையவோ வீடுபோல மாறிப்போனது. முன்பு என்றால் வீட்டில் எங்கே இருந்தாலும் அது எழுப்பும் இசை ஒலியை வைத்து மணியை கண்டு பிடிப்போம். இப்போ அப்படியில்லை. கைக்கடிகாரத்தில் அல்லது செல்போனில் மணியை பார்த்தோம். ஓடியாடி விளையாடிய குழந்தை இல்லாததுபோல வீடு வெறுமையாகிப்போனது. மனைவி ஒருநாள் சொன்னார் ‘அது எந்த நேரத்துக்கு எத்தனை மணி அடித்தாலும் பரவாயில்லை. மணிக்கூட்டின் இசை இல்லாமல் வீடு ஏதோ போல இருக்கிறது. பழையபடி மணி அடிக்கவையுங்கள்’ என்றார். ஒரு வீடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு வீட்டிலே தொடர்ந்து இசை ஒலிக்கவேண்டும். சத்தம் இல்லாத மணிக்கூடு சூரியக் கடிகாரம் போலத்தான் என்றார்.

 

அவர் சொன்னது உண்மை. சூரியக் கடிகாரம் சத்தம்போடாது. நான் பாகிஸ்தானில் இருந்தபோது ஒரு சூரியக் கடிகாரத்தை பார்த்திருக்கிறேன். இரண்டு சூரியக் கடிகாரங்கள் அது மாதிரி செய்யப்பட்டன என்று சொன்னார்கள். ஆனால் உலகத்தில் வேலைசெய்யும் சூரியக் கடிகாரம் அது ஒன்றுதான் என்று அதை எங்களுக்கு காட்டிய ராணுவ மேஜர் சொன்னார். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் லாண்டிக்கோட்டல் என்னும் இடத்தில் கைபர் ரைபில்ஸ் ராணுவப் பிரிவு உண்டு. அங்கேதான் சூரியக் கடிகாரம் நின்றது. நாலடி உயரமான தூணில் அதை பதித்திருந்தார்கள். என்ன மாதம், என்ன தேதி என்று லீவரை திருப்பி வைத்தால் நடுவே செங்குத்தாக நிற்கும் முள்ளின்மேல் சூரியன் விழுந்து நிழல் உண்டாகும். அதில் சரியாக இத்தனை மணி இத்தனை நிமிடம் என்று பார்க்க முடியும்.  என்னுடன் வந்த நண்பர் ’இரவிலும் மணி பார்க்க முடியுமா?’ என்று கேட்டார். ராணுவ அதிகாரி ’ஏன் முடியாது. இரவிலே ரோர்ச் அடித்துப் பார்ப்போம்?’ என்று சிரிக்காமல் சொன்னார். இன்றுகூட அந்த நண்பர் அதை நம்பிக்கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

 

நான் மீண்டும் சீனாக்காரரிடம் மணிக்கூட்டைத் தூக்கிக்கொண்டு போனேன். அவர்  நான் கேட்டுக்கொண்டபடி மறுபடியும் இசைமணி ஒலிக்க வைத்தார். ஆனால் அது மணியடித்த முறை மட்டும் புரியவே இல்லை. தாறுமாறாக அடித்தது போலவே பட்டாலும் அதற்கு மட்டும் புரிந்த ஓர் ஒழுங்கு முறை இருந்தது. மணிக்கூடு ஒன்று அடித்தால் மூன்று மணி காட்டியது. இரண்டு அடித்தால் ஐந்து மணி காட்டியது. ஒரு பட்டியல் போட்டு அதை சுவரிலே ஒட்டி வைத்தேன்.

 

       1 அடித்தால் – 3 மணி

       2 அடித்தால் – 5 மணி

       3 அடித்தால் – 4 மணி

       4 அடித்தால் – 7 மணி

       5 அடித்தால் – 6 மணி

       6 அடித்தால் – 9 மணி

       7 அடித்தால் – 8 மணி

       8 அடித்தால் – 10 மணி

       9  அடித்தால் – 11 மணி

       10 அடித்தால் – 12 மணி

       11 அடித்தால் – 1 மணி

       12 அடித்தால் – 2 மணி

 

நானும் மனைவியும் இந்த பட்டியலை முடித்துவிட்டு பெருமைப்பட்டோம். இனிமேல் பிரச்சினை இல்லை. நிம்மதி கிட்டும். நேரமும் தெரியும். இசையும் கேட்கும்.

 

அடுத்தநாள் ஞாயிறு 11 மார்ச் 2012, அன்றுதான் பகல் வெளிச்சம் சேமிப்பு ஆரம்பம். ஒரு மணித்தியாலத்தை முன்னுக்கு தள்ளிவைக்கும் நாள்.

 

END

 

      

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta