இரண்டு வயிறுகள்

என்னுடைய மனைவி சொல்வார் என் உடம்பு கண்ணாடித் தன்மை வாய்ந்தது என்று. அது முற்றிலும் உண்மை. நேற்றிரவு நடந்த விருந்திலும் அதை உறுதிசெய்ய முடிந்தது. ஒரு பெண் சிற்றுண்டியை தட்டத்தில் ஏந்தியபடி ஒவ்வொருவராக கொடுத்துக்கொண்டு வந்தார். வரிசையில் அடுத்தது நான். என் முறை வந்ததும் தட்டத்தை அப்படியே சுழற்றி எடுத்து அடுத்தவருக்கு நீட்டிக்கொண்டு போனார். காரணம் என்னை அவர் கண்கள் பார்க்கவில்லை. விருந்துகளில் என்னை ஒருவரும் காண்பதில்லை; முக்கியமாக பரிசாரகிகள். என் உடம்பு கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கிறது. யாராவது உணவு தந்திருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஓர் இரவு உணவு இல்லாமல் உறங்கப் போனால்தான் என்ன?

 

நேற்று படித்த செய்தியும் அதைத்தான் சொன்னது. உலகத்தில் ஏழுபேரில் ஒருவர் இரவு பட்டினியோடு உறங்கச் செல்கிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எத்தனை மோசமான உலகில் நாங்கள் வாழ்கிறோம். இரவு பட்டினியோடு உறங்கச் செல்லும் ஒரு குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? ஒரு காலத்தில் 75 மில்லியன் மக்களைக் கொன்ற கொள்ளைநோய் எப்போவோ ஒழிந்துவிட்டது. அம்மை நோய் ஒழிந்துவிட்டது. கோமாரி ஒழிந்துவிட்டது. பசி, அதுகூட ஒரு நோய்தானே, அது மட்டும் இன்னும் ஒழியவில்லை. புறநானூறுப் புலவர் ஒருவர் ‘எறும்பு முட்டையை காவுவதுபோல சிறுவர்கள் சோற்று மூட்டையுடன் வரிசையாகப் போகிறார்கள். பசிப்பிணி மருத்துவன் வீடு எங்கே இருக்கிறது. கிட்டவா, தூரவா?’ என்று வினவுகிறார். இந்த உலகில் பணக்காரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள், அவர்கள் என்றுமே இருப்பார்கள். அவர்களை ஒழிக்கவே முடியாது.

 

எறும்புகள் பட்டினியால் சாவது கிடையாது. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒரு வயிற்றில் அதற்கான உணவு. இன்னொரு வயிறு பொதுவான வயிறு. அதிலே உள்ள உணவை வேறு எந்த  எறும்பும் எடுத்து உண்டு கொள்ளலாம். எறும்புகளைப்போல சக உயிரை நேசிக்கும் வேறு எந்த உயிரினமும் இருப்பதாகத் தெரியவில்லை. மனிதனுக்கும் இரண்டு வயிறு இருந்தால் பசிப்பிணி ஒழிந்துபோகும். ஒரு வயிற்றில் அவனுக்கான உணவு. இன்னொரு வயிற்றில் பொது உணவு. அதை யார் வேண்டுமானாலும் எடுத்து உண்டு கொள்ளலாம்.  மனிதனுக்கு இரண்டு வயிறுகளை இனிமேல் உருவாக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் இன்னொருவனுக்கு உணவு அளிக்கமுடியும். அப்படிச் செய்தாலே பூமியில் வறுமை ஒழிந்துவிடும்.

 

எனக்குப் பக்கத்தில் ஒருவர் வெகுநேரமாக உட்கார்ந்திருக்கிறார். என்னுடைய பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. மனைவி சொன்னதுபோல என்னுடைய உடம்பு கண்ணாடி உடம்பாக இருப்பது காரணமாக இருக்கலாம். 100 பழைய லொத்தர் டிக்கட்டுகளை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்.  கண்ணாடி உடம்பை விட்டு வெளியே வந்து நான் ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டு ’பழைய டிக்கட்டுகளை ஆராய்ந்தால் மிகச் சரியாக அடுத்து வெல்லும் லொத்தர் டிக்கட்டை கண்டுபிடித்து வாங்கலாம்’ என்றார். ’இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்றேன். அதற்கும் புதிரான பதில் கிடைத்தது. ’என்னுடைய ராணித் தேனீ பறந்துவிட்டது. நண்பர் ஒருவர் ராணித் தேனீ விற்பனைக்கு இருப்பதாகச் சொன்னார். அவருக்காக காத்திருக்கிறேன்.’ ஆர்வமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதரின் மீதி விருத்தாந்தத்தை கேட்டு தெரிந்துகொண்டேன்.

 

அவருடைய பெயர் இஸ்ரார். அவரிடம் இரண்டு பொழுதுபோக்குகள் உள்ளன. ஒன்று, லொத்தர் டிக்கட் வாங்குவது. இரண்டாவது, தேனீ வளர்ப்பது.  ராணித்தேனீயை வைத்து புது தேனீக்கூட்டத்தை  உருவாக்க முயற்சிக்கிறார். என்னை அவர் வீட்டுக்கு வரச் சொன்னார். தேனடையை என் கண்முன்னே பிழிந்து நல்ல தேன் தருவதாகச் சொன்னார். ’என்ன விலை?’ என்று கேட்டேன். சொன்னார். என்னை வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளிவிடும் முயற்சி என்று பட்டது. என் தயக்கத்தை பார்த்து உங்களுக்கு 50 வீதம் கழிவு உண்டு என ஆசை காட்டினார்.  

 

அடுத்த நாள் காலை அவர் கொடுத்த முகவரிக்கு புறப்பட்டேன். அகலமான வாய் போத்தல்கள் கொண்டு வரச் சொல்லியிருந்தார். கடந்த இரண்டு மணி நேரமாக மனைவி பலவிதமான போத்தல்களை பல அளவுகளில் பல நிறங்களில் சேகரித்து, கழுவி தயாராக வைத்திருந்தார். அவற்றை ஞாபகமாக இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டேன்.. கனடாவில் தேனீ வளர்ப்பது  எத்தனை சிரமமான காரியம் என்பது எனக்குத் தெரியும். வருடத்தில் ஏழு மாதங்கள் பூக்கள் கிடையாது. ஆகவே தேனீக்களும் இல்லை. அவை கூட்டுக்குள்ளே ஒருவித உறைநிலையில் கிடந்து இருக்கும் உணவை உண்டு உயிர் வாழும். ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரைக்கும் சுறுசுறுப்பாக பூந்தேன் சேகரிக்கும்.

 

நான் போனது செப்டம்பர் மாதக் கடைசியில். அவருடைய வீடு பண்ணை வீடுபோல பெரிசாக அடர்ந்த தோட்டத்துடன் ஒதுக்குப்புறமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. சின்ன வீடுதான். ஒடுக்கமான வீதியின் முடிவில் நெருக்கமான வீடுகளுக்கு நடுவில் இருந்தது. அழைப்பு மணியை அடித்ததும்  வாசல் கதவு பறவை செட்டை விரிப்பதுபோல இரண்டு பக்கமும் பிளந்து திறந்தது. ’நீங்களா?’ என்றார். ’நான்தான்’ என்றேன். ‘எங்கேயிருந்து வருகிறீர்கள்?’ ‘சிலோன்’ என்றேன். ‘அப்படியா? அது எந்த தெருவில் இருக்கிறது?’ ‘இங்கே பக்கத்தில்தான்.’

 

இஸ்ரார் தலையாலே நுழைந்து மாட்டும் நீண்ட அங்கி தரித்திருந்தார். அழுகிய பூசணிக்காய்போல சற்று உள்ளுக்கு போன முகம். சமையலறை வழியாக கூடத்துக்குள் நுழைந்தால் அவர் சோபாவில் படுத்துக் கிடந்த உடல் வடிவம் அப்படியே இருந்தது. எங்கே உட்காருவது என்று தெரியவில்லை. இன்ன இடத்தில் இன்ன சாமான் என்று இல்லை. எல்லா இடத்திலும் எல்லா சாமானும் இருந்தன. இனம் காண முடியாத ஏதோ மிருக வாடை முகத்தில் அடித்தது. தேனீ வளர்ப்புக்கான ஏதாவது அடையாளம் தென்படுகிறதா என்று பார்த்தேன். பெரிய ஏமாற்றமாக இருந்தது.  ’போத்தல் கொண்டு வந்தீர்களா?’ என்று கேட்டார். நான் சேகரித்து வந்த அத்தனை போத்தல்களையும் மேசையில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கினேன். ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதுபோல அதைப் பார்த்து தலையை ஆட்டினார். ’என்னுடைய தேனீ வளர்ப்பு பெட்டிகளைப் பார்க்கப் போகிறீர்களா?’ என்றார். ஓமோம் என்று சொல்லி அவர் பின்னால் புறப்பட்டேன்.

 

சந்திர மண்டலத்துக்கு போவோர் அணிவதுபோல ஓர் உடையை தந்தார். இதற்கு முன்னர் நூறுபேர் அதை அணிந்திருக்கவேண்டும். காலை சாப்பிட்ட உணவு வெளியே வரும் விருப்பத்தை தெரிவித்தது. உடை என்னை முற்றிலும் மூடியது. முகத்தில் மாத்திரம் வலைப் பின்னல். அவரும் அதேபோல ஒன்றை அணிந்து, நீல் ஆர்ம்ஸ்ரோங்க்போல நடக்க நான் பின்னால் தொடர்ந்தேன். அவர்கள் வீட்டு வெளிச்சுவரில் நீள் சதுரமாக ஓட்டை துளைத்து அதை பலகையால் மூடியிருந்தது. பலகையை அகற்றிவிட்டு அவர் நுழைய நானும் நுழைந்தேன். அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு காட்டுக்குள் நின்றோம். அங்கே நாலே நாலு தேனீ வளர்ப்பு பெட்டிகள். அதிலே ஒன்றிலிருந்து ராணித்தேனீ பறந்தோடிவிட்டதால் அது மட்டும் வெறுமையாக இருந்தது.

 

மீதி மூன்று பெட்டிகளில் இருந்த தேனீக்கள் பறந்து வந்து எம்மைச் சூழ்ந்துகொண்டன. ஐந்து திசைகளிலும் கைகால்களை வீசிக்கொண்டு ஓடப் பார்த்தேன். இஸ்ரார் அசையவே இல்லை. சைகையினால் என்னை ஓடாமல் நிற்கச் சொன்னார். கையை நிதானமாக பெட்டியினுள் நுழைத்து தேனடையை எடுத்துக் காட்டினார். அது பார்க்க பரிதாபமாக வரட்டிபோல ஒட்டிக்கொண்டு கிடந்தது. அதைப் பிழிந்துதான் தேன் எடுக்கவேண்டும். வெகுவிரைவில் பனிக்காலம் ஆரம்பித்துவிடும். இனி வரும் ஏப்ரல் மாதம்வரை இதை உண்டுதான் தேனீக்கள் வாழவேண்டும். ’இதைப் பிழிந்து எடுத்தால் தேனீக்களுக்கு உணவு இல்லையே’ என்றேன். ‘இத்தனை தூரம் சிலோனில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்களே’ என்றார். ’வேண்டாம்’ என்றேன். ‘வேண்டாமா?’ ‘நான் சுப்பர்மார்க்கட்டில்  வாங்கிக்கொள்கிறேன்’’ என்றேன். ஐந்து ஓட்டை வைத்த சேர்ட்டில் ஆறாவது பட்டனை பார்த்ததுபோல திடுக்கிட்டு குழம்பிப்போய் என்னைப் பார்த்தார். அவருடைய வாய் மூடிக்கொள்ள முன்னர் நான் புறப்பட்டேன்.

 

எங்கள் வாழ்க்கை திருட்டு வாழ்க்கைதான். பால் திருடுகிறோம். முட்டை திருடுகிறோம். தேன் திருடுகிறோம். திருடி வாழாமல் கொடுத்து வாழ முடியாதா? இரண்டு வயிறுகள் காவும் எறும்பு செய்வதுபோல. இருப்பதை பகிர்ந்து உண்டால் பூமியில் இரவு பட்டினியோடு படுக்கும் மனிதர்கள் இருக்கவே மாட்டார்கள்.

 

மனைவியிடமிருந்து குறுஞ்செய்தி மீண்டும் மீண்டும் வந்தபடி இருந்தது. செல்பேசியை எடுத்து என்னவென்று பார்த்தேன். ’ தேன் நாலு போத்தல்களுக்கு மேல் வேண்டாம். தேன் நாலு போத்தல்களுக்கு மேல்  வேண்டாம்.’

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta