புது வருடம்

புது வருடம்

 

அ.முத்துலிங்கம்

 

’2013 புதுவருடம் பிறக்கிறது, என்ன செய்யலாம்?’ என்றார் நண்பர். ’அது நல்ல காரியம். அதை தடுக்கக்கூடாது’ என்றேன் நான். ’கொண்டாடப்போவதில்லையா?’ என்றார். ’வேறு என்ன, இரவு விருந்துதான்’ என்றேன். அப்படித்தான் தீர்மானமானது. விருந்துக்கு எட்டுப் பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். 200 பேர் ஒரே சமயத்தில் இருந்து உண்ணக்கூடிய பிரம்மாண்டமான பொஸ்டன் உணவகம். அங்கே இடம் கிடைப்பது அரிது. ஆகவே முன்கூட்டியே ஒரு மேசையை பதிந்து விருந்தை உறுதி செய்துகொண்டோம்..

 

நண்பர்கள் ஒவ்வொருவராக குறித்த நேரத்துக்கு வந்தனர். எங்களுக்கு பரிமாறிய பெண் இளம் வயதுக்காரி. நூலகத்து பழைய புத்தகம்போல மஞ்சள் முகம். பனிச்சறுக்கு காரிபோல எங்களுக்கு மேசையை காட்டிவிட்டு ஓடியபடியே இருந்தார். முதலில் வைன் ஓடர் பண்னினோம். பின்னர் மேசையிலேயே நெருப்பு மூட்டி நெடுகலும் சூடாகவே இருக்கும் சூப்பை குடித்தோம். இப்பொழுது பிரதான உணவு. ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டிய உணவுக்கு ஆணை கொடுத்தோம்.

 

உணவகம்நிரம்பியிருந்தது. பிளேட் சத்தம், கரண்டி சத்தம், மனிதச் சத்தம் எல்லாம் சேர்ந்தாலும் கூட்டுச்சத்தம் ’ஓ’ என்றுதான் எழுந்தது. பரிசாரகர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கைகளில் மூன்று, நான்கு பிளேட்டுகளை லாவகமாக காவினார்கள். வேறு சிலர்   வண்டில்களில் வைத்து தள்ளினார்கள். எங்கள் பரிசாரகி வண்டிலில் உணவை தள்ளிவந்து  எல்லோருக்கும் பரிமாறினார். பசி இல்லாதவர்களுக்கும் பசியை கிளப்பும் நல்ல மணம். சாப்பிடத் தொடங்கினோம்.

 

நான் ஒரு கரண்டியை வாயினுள் வைத்தேன். என்ன  ருசி. என் வாழ்நாளில் அப்படியான ஒன்றை சுவைத்ததில்லை. இன்னொரு வாய் கரண்டியை அள்ளி உண்டேன். மூன்றாவது கரண்டி உணவை வாய்க்கு கிட்ட பிடித்தபடி. மேசையை பார்த்தேன். என்னுடைய பிளேட்டை காணவில்லை. மேசைதான் இருந்தது. திரும்பிப் பார்த்தேன் மஞ்சள் முக பரிசாரகி என் பிளேட்டை எனக்குத் தெரியாமல் பின்னுக்கு இருந்து தூக்கிவிட்டது தெரிந்தது. ஒரு மன்னிப்பு இல்லை. விளக்கம் இல்லை. நான் பார்த்தபோது தூரத்தில் புள்ளியாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் காவிக் கொண்டுபோன அதே பிளேட்டை இன்னொருவருக்கு பரிமாறிவிட்டு சமையல்கூடத்துக்குள் நுழைந்தார்.

 

உடனே என் மேசையிலிருந்த மீதி ஏழுபேரும் அறிவுரை வழங்க ஆரம்பித்தார்கள்.

‘நீங்கள் பிளேட்டை எடுக்க விட்டிருக்கக்கூடாது.’

’பிளேட்டிலேயே கண்ணாயிருப்பது முக்கியம்.’

‘முறைப்பாடு செய்வதுதான் சரி.’

‘அவர் மார்பிலே குத்தியிருக்கும் பெயரை நினைவில் வையுங்கள்.’

மூன்றாவது கரண்டி உணவு இன்னும் என் கையிலேயே இருந்தது. அதை வாய்க்குள் வைத்தபடி யோசித்தேன். ‘இத்தனை அறிவு எனக்கு இருந்தால் நான் கார் பின் கண்ணாடி துடைப்பானை எப்படி இயக்குவது என்பதை ஒருவருடம் முன்பாகவே கண்டுபிடித்திருப்பேன்.’

 

மற்றவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம் கழிந்து பரிசாரகி ஆவி பறக்கும் உணவை ஒரு பிளேட்டில் கொண்டுவந்து என் முன் வைத்தார். நான் திரும்பிப் பார்க்குமுன்னர் மறைந்துவிட்டார். அப்பொழுது கூட ஒரு விளக்கம் இல்லை. ஆனால் என்னால் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இதுதான் நான் ஆணை கொடுத்த உணவு. வேறு யாரோ ஓடர் பண்ணிய உணவை எனக்கு தவறுதலாக தந்துவிட்டார். என்னுடைய உணவும் சுவையாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய எச்சிலை உண்ணும் மனிதரின் பிளேட்டில் இருக்கும் உணவின் சுவைக்கு கிட்டவும் நிற்கமுடியாது.

 

அதற்கு பின்னர் அந்தப் பெண் பலதடவை எங்கள் மேசைக்கு வந்து பரிமாறினார். ஒவ்வொரு முறையும் அவர் அணுகும்போது என் பிளேட்டை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொள்வேன். அப்பொழுதும் அந்தப் பெண் பேசவில்லை. இறுதியில் பில் கொண்டு வந்தார். அதையும் கட்டிவிட்டு எங்கள் எங்கள் மேலங்கிகளை தேடி அணிந்துகொண்டு புறப்பட்டோம். பாதி வழியிலே இந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்தோம். அவர் ஓட்டத்தை மறித்து அவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்று வினவினோம். ’இந்தோனேசியா’ என்றார். ’எவ்வளவு காலமாக வேலை பார்க்கிறீர்கள்?’ என்றேன். ’ஒரு வாரம்’ என்றார். ’படிக்கிறீர்களா?’ அவர் பொஸ்டன் பல்கலைக் கழகத்தில் கம்புயூட்டர் மென்பொருளில் முதுகலை படிப்பதாகச் சொன்னார். பகுதிநேரமாக இங்கே வேலை பார்க்கிறார். இந்த வருமானத்தில்தான் அவர் படிப்புக்கு பணம் கட்டுகிறார். கேள்விகள் முடிந்துவிட்டதால் நாங்கள் புறப்பட்டோம். அவர் எங்களைக் கலைத்துக்கொண்டு வந்து ’முறைப்பாடு கொடுக்கப்போகிறீர்களா?’ என்றார். இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம். அப்படியான ஒரு பிரபல உணவகத்தில் அன்று அந்தப் பெண் செய்த வேலையை மேலிடத்துக்கு சொன்னால் அவருடைய வேலை உடனே போவது நிச்சயம்.

 

வெளியிலே பனி கொட்டிக்கொண்டு இருந்தது. அவரவர் கார்களில் ஏறியபடி புதுவருட வாழ்த்தை உரக்கச் சொல்லிக்கொண்டு புறப்பட்டோம். ஒரு பழைய கவிதை நினைவுக்கு வந்தது.

 

சிறுவர்கள் விளையாட்டு முடிந்து.

இரவு வந்தது.

ஒவ்வொருவரும் சந்திரனோடு

வீட்டுக்கு போனார்கள்.

 

அன்று நாங்கள் வீடுபோய்ச் சேர்ந்தோம். எங்கள் ஒவ்வருவரோடும் அந்த பெண்ணின் நினைப்பும் போயிருக்கும். வீட்டிலே புதுவருடம் ஏற்கனவே வந்து காத்துக்கொண்டிருந்தது.

 

END

.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta