என்ன செய்வது?

 

இன்றைக்கும்  மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தை பார்வையிட வந்த ஜெனரல்போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள் பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்புயூட்டரில் நான் வேகமாக தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். ’இதுவெல்லாம் குப்பையாக கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கி வைக்க ஏலாதா? அதன் பின்னர் எழுதினால் என்ன?’ நான் சொன்னேன். ’நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.’

மனைவி ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கத் தொடங்கினார். இது முக்கியமானது. நான் அவர் எங்கே வைக்கிறார் என்று பார்த்தால்தான் மறுபடியும் இழுத்து எடுத்து வேலையை தொடரலாம். ஆகவே நானும் சேர்ந்துகொண்டேன். இன்றைய எழுத்து முடிவுக்கு வந்தது அப்படித்தான்.

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. யூன் 1815. வாட்டர்லூ ( இப்பொழுது பெல்ஜியத்தில் இருக்கிறது) போர் நடக்கிறது. இங்கிலாந்து கோமகன் வெல்லிங்டனின் படைக்கும் பேரரசன் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைக்கும் இடையில் பெரும் போர் நிகழ்கிறது. ஒவ்வொரு விநாடியும் வாழ்வா சாவா என்பதுபோன்ற நிலை. லண்டனிலிருந்து கணக்காளர்கள் ஓயாது வெலிங்கடனுக்கு போர்க்களத்து கணக்கு விவரங்களை உடனுக்குடன் எழுதியனுப்பும்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். பொறுக்கமுடியாமல் வெலிங்டன் லண்டனுக்கு இன்றைக்கும் பேசப்படும் புகழ்பெற்ற கடிதம் ஒன்று எழுதினார். ‘இன்றைய கணக்கு விவரங்கள். ஒரு ஷில்லிங் 9 பென்ஸ் கணக்கில் இடிக்கிறது. ராஸ்ப்பெர்ரி ஜாம் போத்தல் ஒன்றைக் காணவில்லை.  மேன்மைதங்கிய அரசரின் சேவகர்களுக்கு லண்டனில் என்ன வேண்டும்? ஜாம் போத்தலை கண்டுபிடிக்கவேண்டுமா? அல்லது நான் நெப்போலியனை அடித்து துரத்த வேண்டுமா?’

நான் என்ன செய்யவேண்டும்? யாராவது சொல்லுங்கள். அறையை துப்புரவாக்கவேண்டுமா? அல்லது எழுதவேண்டுமா?

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta