அஞ்சலி – செல்வா கனகநாயகம்

         நான் இங்கே இல்லை

             அ.முத்துலிங்கம்

 

முதலில் அவர் அந்தச் செய்தியை சொன்னது என்னிடம்தான். Fellow of the Royal Society of Canada விருது அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருந்தது. அந்தக் கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி பெருமையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். கனடாவில் ஒரு கல்வியாளருக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய கௌரவம் இது. இந்தக் கௌரவம் முதன்முறையாக ஓர் இலங்கைத் தமிழருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

’வாழ்த்துக்கள்’ என்றேன்.

’ஒரேயொரு பிரச்சினைதான்’ என்றார்.

‘என்ன?’

‘இந்த விழாவுக்கு கியூபெக் சிட்டிக்கு போகவேண்டும். விழாவுக்கு அணிவதற்காக பிரத்தியேக உடை வாடகைக்கு எடுக்கவேண்டும். ஒருநாள் வாடகை 600 டொலர்’ என்றார்.

அவர் என்னிடம் விளையாடுகிறாரா தெரியவில்லை. அப்படி விளையாடுகிறவர் அல்ல அவர்.

‘நிச்சயம் போகவேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காக போகவேண்டும். இது உங்களுக்கு மட்டும் கிடைத்த கௌரவமில்லை. தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் அல்லவா?’ என்றேன்.

 

செல்வா கனகநாயகம் பல வருடங்கள் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர். அத்துடன் தெற்காசிய கற்கை மையத்தின் இயக்குநர். கடந்த ஏழு வருடங்களாக ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் சார்பாக வருடாவருடம் தமிழ் ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்துவதில் முதன்மையாக இருந்தவர். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் தலைவராகவும் 15 வருடங்கள் அந்த அமைப்பை வெற்றிகரமாக நடத்தியவர். ஆய்வுக்கட்டுரை நூல்கள், மொழிபெயர்ப்புகள் தொகுப்புகள் என 13 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். இவர் தொகுத்து, தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக சமீபத்தில் வெளியான IN OUR TRANSLATED WORLD, 78 சமகால உலகத் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். இந்து நூலுக்கு உலகளாவிய விதத்தில் சிறப்பான பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. 

 

செல்வாவும் அவருடைய மனைவியும் கியூபெக் சிட்டியில் ஏற்பாடுசெய்யப்பட்ட விருது விழாவுக்கு வெள்ளிக்கிழமை 21 நவம்பர் 14 அன்று புறப்பட்டார்கள். சனிக்கிழமை காலை விருது விழா. அதிலே ஒரு விசயம் அவர்களுக்கு புதுமையாக இருந்தது. இரண்டு விருது மண்டபங்கள் ஒரே மாதிரி அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒன்றிலே ஒத்திக்கை நடந்தது. அடுத்ததில் நிசமான விருது வழங்கல் நடைபெற்றது. விழா மூன்று மணி நேரம் நடந்து முடிந்து அவர்கள் கிளம்பியபோது நடந்த ஒரு சம்பவம் கணவன் மனைவி இருவரையும் சற்று கலங்கடித்தது. ஆனால் ஒருவருக்கு ஒருவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

 

பழைய கனடிய பேராசிரியர் ஒருவர் அவசரமாக அவர்களை நோக்கி வந்து கைகொடுத்தார்.

’வாழ்த்துக்கள். நாங்கள் பல வருடங்கள் முன்பாக சந்தித்திருக்கிறோம்.’

‘அப்படியா? நல்லது.’

‘அப்பொழுது நீங்கள் ஒன்று சொன்னீர்கள். உங்கள் சந்ததியில் எல்லோருமே முதுமை வரமுன்னரே இறந்துவிடுகின்றனர் என்று. ஞாபகம் இருக்கிறதா?’

‘இல்லையே.’

’உங்கள் வயது என்ன?’

’62.’

‘ஓ, அச்சப்படவைக்கிறதே.’

இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார்.

 

மிகச் சிறப்பாக நடந்த விழா முடிந்து வெளியே வந்த தம்பதிகளின் உற்சாகம் சட்டென்று குறைந்துவிட்டது. இருவரும் காரிலே மொன்றியல் நகரத்துக்கு புறப்பட்டார்கள். 3 மணி நேரப் பயணம் அது. விருது கிடைத்த சந்தோசத்தில் அவர்கள் கலகலப்பாக இருக்கவேண்டும். ஆனால் பெரும் மௌனமே சூழ்ந்தது.

 

’பாட்டுக் கேட்போமா?’ என்றார் மனைவி. செல்வா ’அது நல்ல யோசனை. நல்ல பாட்டாய் தெரிவுசெய்து போடுங்கள்’ என்றார். திருமகள் தெரிவு செய்த பாடல்கள் பயணத்தை உற்சாகப் படுத்தியது. எல்லாமே 20, 30 வருடத்திற்கு முந்திய சினிமா பாடல்கள். அவர்கள் இளமையை மறுபடியும் நினைவூட்டின. திடீரென்று அவர்கள் இருவருக்கும் பிடித்த பாடல் ஒன்று ஒலித்தது. மணமுடித்த புதிதில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். வியட்நாம் வீடு படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தராஜன் பாடியது. பாடலை பாரதியின் வரிகளில் ஆரம்பித்து கண்ணதாசன் எழுதியிருப்பார்.

 

’உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவை அன்றோ

கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.’

இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கினர். சிவாஜி கணேசன் பிரஸ்டீஜ் பத்மநாபனாக நடிப்பார். பத்மினி அவருடைய மனைவி. அந்தப் படத்தை இருவரும் சேர்ந்து பார்த்த நினைப்பு.

’என் தேவையை யார் அறிவார்

உன்னைப்போல்

தெய்வம் ஒன்றே அறியும்.’

இந்த வரிகள் வந்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். திருமகள் கேட்டார் ’படத்தின் இறுதியில் யார் சாகிறார்கள்?’ செல்வா சொன்னார் ‘கணவன்தான் சாகிறார்.’

 

செல்வா இரக்க குணம்  உடையவர். இளகிய மனம் கொண்ட பண்பாளர். சுடுசொல் பேசியே அறியாதவர். இது எல்லோருக்கும் தெரியும். நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்களை அவர் சந்தித்திருக்கிறார். அந்த மாணவர்களுடன் பேசி அவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் அவருடைய மனிதநேயத்தின் ஆழத்தை திருமகள் அறிந்த அளவுக்கு பலர் அறியவில்லை.

 

செல்வா, கனடாவின் பல பல்கலைக்கழக மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக பயணித்திருக்கிறார். சிலவேளைகளில் பிறநாடுகளுக்கும் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மாதம் முன்பு ஐஸ்லாந்து பல்கலைக் கழகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் போகவிட்டால் பல வருடங்களாக முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்த மாணவருக்கு பட்டம் கிடைக்காமலே போய்விடும். முதலில் மறுத்துவிடத்தான் நினைத்தார். ஆனாலும் மனம் கேட்கவில்லை. அந்த மாணவருடைய உழைப்பு வீணாகிவிடும். அவருடைய ஆய்வேட்டை படித்து குறிப்புகள் தயாரித்துக்கொண்டு ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு விமானத்தில் சென்றார். ஆய்வு முடிவுகளை மாணவர் தர்க்கபூர்வமாக நிறுவி, பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதில் அளிக்கவேண்டும். மாணவரைப் பார்த்ததும் திகைத்துவிட்டார். அவர் நடுத்தர வயது தாண்டிவிட்ட பெண்மணி. பல வருடங்களுக்கு முன்னர்  ஐஸ்லாந்துக்காரரை திருமணம் செய்து ஐஸ்லாந்துக்கு குடிபெயர்ந்த இலங்கைப் பெண். அவருடைய முனைவர் ஆய்வேட்டு உழைப்பை எப்படி மதிக்காமல் இருப்பது? இப்படி அவருக்கு நேர்ந்த பல சிக்கல்களையும், சம்பவங்களையும் திருமகளுக்கு சொல்லியிருக்கிறார். இது அவருடைய மறுபக்கம். 

 

இருவரும் மொன்ரியல் ஷெரட்டன் ஹொட்டலில் அன்று இரவு தங்கி அடுத்தநாள் விமானத்தில் ரொறொன்ரோ பயணமாவார்கள். அங்கிருந்து செல்வா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’ஞாயிறு திரும்புவேன். திங்கள் உங்களுடன் தொடர்புகொள்வேன்.’ அதுதான் அவரிடமிருந்து கடைசியாக எனக்கு கிடைத்த மின்னஞ்சல்.

 

நாலு மணியாகிவிட்டது. திருமகள் சொன்னார் ’இந்தக் குளிருக்கு ஒரு கோப்பி குடித்தால் நல்லாயிருக்கும்.’ செல்வா ஒன்றுமே பேசவில்லை. ஏதோ காரியமாக வெளியே போவதுபோலப் போய் கடுதாசி குவளையில் அவருக்கு கோப்பி வாங்கி வந்தார். ‘ஆறப்போகுது. குடியும், குடியும்’ என்றார். ’கோப்பி குடித்தால் நல்லாயிருக்கும் என்று சும்மா சொன்னேன். எதற்காக இந்தக் குளிரில் இவ்வளவு தூரம் போய் வாங்கி வரவேண்டும்’ என்று செல்லமாக கடிந்தபடியே திருமகள் கோப்பியை குடித்தார்.

 

’அருமையான தாஜ் இந்திய உணவகம் இருக்கிறது. நடந்துபோனால் ஏழு நிமிடம்தான். இரவு அங்கே சாப்பிடுவோமே. நீங்கள் நடப்பீங்கள்தானே’ என்றார் செல்வா. திருமகள் உடனேயே சம்மதித்தார். நடப்பதற்கு யாருக்கு கஷ்டம் என்பது பின்னால் தெரியவரும். இருவரும் பேசிக்கொண்டே உணவகத்தை அடைந்தார்கள். ஒன்றாக அமர்ந்து உண்ணும் கடைசிப் போசனம் அது. செல்வாவுக்கு ’நான்’ ரொட்டி பிடிக்கும். இருவரும் அதற்கு ஆணை கொடுத்தார்கள். பில் வந்தபோது செல்வா பக்கெட்டை தட்டிப் பார்த்தார். அப்பொழுதுதான் பர்சை ஹொட்டலில் மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. மணமுடித்த 36 வருடங்களில் செல்வா ஒருநாள்கூட பர்சை தவற விட்டது கிடையாது. ‘நீங்கள் இங்கேயே இருங்கள். நான் ஹொட்டலுக்குப் போய் பர்சை எடுத்துவருகிறேன்’ என்றுவிட்டு செல்வா புறப்பட்டார்.

 

போய்த் திரும்பி வர 15 நிமிடம் பிடிக்கும் என திருமகள் கணக்கு போட்டுவிட்டு நிம்மதியாகக் காத்திருந்தார். 15, 20, 30, 35, 40 நிமிடங்கள் கடந்தும் செல்வா திரும்பவில்லை. ஏதோ நடந்துவிட்டது என்று மனது சொன்னது. ஹொட்டலுக்கு போய் திரும்புவதற்கு அத்தனை நேரம் எடுக்காது. எழுந்து நின்றார், மறுபடியும் அமர்ந்தார். அவர் பதற்றத்தைப் பார்த்து ஹொட்டல் பரிசாரகர்கள் ஆறுதல் படுத்தினார்கள். ‘ஏதாவது விபத்து நடந்துவிட்டதா? நான் இங்கே அவருக்கு காத்து இருக்கிறேன் என்பது ஒருவருக்கும் தெரியாதே. நானே நடந்துபோய் ஹொட்டலில் அவரை தேடுவோமா?’ என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

 

அந்த நேரம் செல்வா வந்தார். உணவுக்கான காசை கொடுத்துவிட்டு திரும்பும்போது திருமகள் கேட்டார். ‘என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? நான் பயந்துபோய் விட்டேன்.’ செல்வா ‘நான் பர்சை எடுத்துக்கொண்டு திரும்பியபோது என்னால் நடக்க முடியவில்லை. நெஞ்சை இறுக்கிப் பிடித்தது. நான் காரை எடுத்து வந்திருக்கிறேன். நீங்களும் நடக்கத்தேவை இல்லை. நாங்கள் காரிலேயே திரும்பலாம்’ என்றார். திருமகள் சொன்னார் ‘நாங்கள் முதல் வேலையாக ஒரு டொக்ரரைப் பார்ப்போம்.’ செல்வாவும் நிச்சயம் செய்வதாக உறுதியளித்தார்.

 

ஹொட்டல் வந்தது. கார் நிறுத்தும் இடங்கள் ஹொட்டலுக்கு கீழேதான் அமைந்திருந்தன. காரை கீழ்தளத்துக்கு இறக்கினார். ஆட்கள் நடமாட்டமே கிடையாது. நேரம் 11 மணியை தாண்டிவிட்டது. கார்களும் இல்லை. ஒரே நிசப்தம். முதல் தளத்தில் காரை நிறுத்துவதற்கு இடம் இல்லை. இரண்டாவது தளத்திற்கு காரை ஓட்டினார். இருவரும் இரண்டு பக்கமும் பார்த்தபடியே சுற்றினார்கள். அங்கேயும் இடமில்லை. ஆச்சரியமாக இருந்தது. மூன்றாவது தளத்துக்கு செல்வா காரை செலுத்தினார். திருமகள் இடம் இருக்கிறதா என இரு பக்கமும் கண்களால் தேடியபடியே இருந்தார். கார் பாதியில் நின்றது. ’இங்கே நிறுத்த வேண்டாம். இது பாதையல்லவா?’ என்று சொல்லிக்கொண்டு திருமகள் திரும்பிப் பார்த்தார். அவரின் தலை பின்சீட்டில் சாய்ந்துபோய் கிடந்தது. கண் மூடியிருந்தது. அது பின்னர் திறக்கவே இல்லை.

 

செல்வாவின் கால் பிரேக்கை அழுத்தியபடியே கிடந்ததால் கார் தன் பாட்டுக்கு உருண்டு கீழே போகவில்லை. திருமகள் காரை பார்க்கில் போட்டார். செல்போன் செல்வாவின் பைக்குள் இருந்தது. கைகளை நுழைத்து செல்போனை வெளியே எடுத்து 911 அவசர நம்பரை அழைத்த அதே சமயம் மறு கையால் கார் ஹோர்னையும் ஒலித்தபடியே இருந்தார். ’என்னைவிட்டு போகவேண்டாம், என்னைவிட்டு போகவேண்டாம்’ என்று திருமகள் கதறியது அவருக்கு கேட்கவில்லை. சிறிது நேரத்தில் ஹொட்டல் காவல்காரர்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அம்புலன்ஸ் வண்டியும் வந்தது. 45 நிமிடங்கள் உயிரைக் கொண்டுவர முயற்சித்தார்கள். கார்கள் நிறுத்தும் குளிர்ந்த சிமெந்து தரையில், சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் அந்த நேரத்தில், செல்வாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. வெகு விரைவில் அவர் உடம்பும் சிமெந்து தரைபோல குளிர்ந்து போகும்.

 

பல வருடங்களுக்கு முன்னர் செல்வாவின் அப்பா, தமிழ் பேராசிரியர் செல்வநாயகம் ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் கடைக்கு உரம் வாங்க காரில் புறப்பட்டார். அவரே காரை ஓட்ட பக்கத்தில் அவருக்கு தோட்ட வேலைகளில் உதவுபவர் உட்கார்ந்திருந்தார். பாதி வழியில் கார் நின்றது. அவருடைய தலை சாய்ந்து ஓட்டு வளையத்தின் மேல் வந்து நின்றது. கண் மூடி இருந்தது. அதன் பின்னர் அது திறக்கவே இல்லை. தகப்பனுடைய சாவு போலவே மகனுடையதும் இருக்கும் என யார் நினைத்திருப்பார்கள்?

 

செல்வா தன் சாதனைகளைப் பற்றி பேசுவதே கிடையாது. அபூர்வமாக ஏதாவது போகிற போக்கில் சொல்வார், அவ்வளவுதான். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள்கூட அறிய மாட்டார்கள். செல்வா இறந்த செய்தி கேட்டு இலங்கை கிராமம் ஒன்றில் வயதான சிங்கள மூதாட்டி ஒருவர் நிலத்திலே விழுந்து புரண்டு அழுதுகொண்டேயிருந்தார். செல்வாவின் இறுதி யாத்திரை புகைப்படம் ஒன்று வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்கவேண்டி நேர்ந்தது. அவருடைய பெயர் மெனிக்கே. செல்வா சிறுகுழந்தையாக இருந்தபோது அவரைப் பார்க்க நியமிக்கப்பட்ட தாதி. செல்வா பல்கலைக்கழகம் செல்லும் வரைக்கும் அங்கே வேலைக்கிருந்தார். 40 வருங்களுக்கு மேலாக அவருடன் செல்வா தொடர்பில் இருந்தார். அவர் இரண்டாவது தாய்போல. சில வருடங்களுக்கு முன்னர் அவருக்கு விசாவும் விமான டிக்கெட்டும் அனுப்பி அவரை கனடா வரவழைத்தார். செல்வா வீட்டிலே சில மாதங்கள் அவர் தங்கியிருந்துவிட்டு பல பரிசுப் பொருள்களுடன் வீடு திரும்பினார்.

 

பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவருடைய ஸ்டேசன் வரமுன்னரே இறங்கிவிட்டார். அவர் மனைவிமேல் வைத்திருந்த அன்பும், மதிப்பும் அளவற்றது. மகள் ஷங்கரியை பற்றியோ, மகன் ஜெகனைப் பற்றியோ பேச்சு வந்தால் கண்கள் பெருமையில் மலரும். பேரப்பிள்ளைகள் என்றதும் அவை கனிவாக மாறும். நிலத்துக்கு கீழே இரண்டாவது தளத்துக்கும் மூன்றாவது தளத்துக்கும் நடுவே நின்றுவிட்ட அவருடைய கார்போல நெடுநல்வாடை மொழிபெயர்ப்பு, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்து பதிப்புக்காக மேற்கொண்ட ‘Uprooting the Pumpkin’ எனும் இலங்கை இலக்கியத் தொகுப்பு, தெற்காசிய ஆங்கில இலக்கிய வரலாறு, கவிதை, சிறுகதைகள் மொழிபெயர்ப்பு, இன்னும் பல ஆராய்ச்சிக் கட்டுரை வேலைகளும் பாதியிலேயே நின்றுவிட்டன.

 

அவர் இறந்துபோய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அமைதியான, இனிமையான அவர் குரலைக் கேட்கவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அவருடைய தொலைபேசியை நான் அழைப்பதுண்டு. தகவல் மெசினில் பதிந்த அவர் குரல் ’நான் இங்கே இல்லை’ என்று ஆரம்பிக்கும். அவர் அடிக்கடி வெளிநாடு போகிறவர். வழக்கமாக அவர் வீட்டிலே இல்லை என்று நான் அனுமானிப்பேன். சில நேரங்களில் அவர் கனடாவில் இல்லை என்று எண்ணுவதும் உண்டு. அந்த தகவலை அவர் இந்த உலகத்தில் இல்லை எனவும் விளங்கிக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார்.

END

About the author

1 comment

  • பேராசிரியர் செல்வா கனகநாயகம் :
    Fellow of the Royal Society of Canada விருது அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருந்தது.
    கனடாவில் ஒரு கல்வியாளருக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய கௌரவம் இது. இந்தக் கௌரவம் முதன்முறையாக ஓர் இலங்கைத் தமிழருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    *) கார்கள் நிறுத்தும் குளிர்ந்த சிமெந்து தரையில், சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் அந்த நேரத்தில்….
    *) அவருடைய மனிதநேயத்தின் ஆழத்தை திருமகள் அறிந்த அளவுக்கு பலர் அறியவில்லை.
    We came to know about him through this letter.
    Best one. tears on the eyes. RIP பேராசிரியர் செல்வா கனகநாயகம்.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta