முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்

 

முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்

பாலா சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல்

அ.முத்துலிங்கம்

 

 

(மதுரையை சேர்ந்த திரு பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த மாதம் பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூ யோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு ஒப்புதல் பெற்றுவிட்டார். அவருடனான நேர்காணல்.)

 

1.சமீபத்தில் தமிழ் பேசும் உலகத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறீர்கள்.  நியூயோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான ஒப்புதலை பெற்றிருக்கிறீர்கள்.   இது எப்படி சாத்தியமானது?

 

2011ல் எங்கள் மூத்த மகன் இசை மாறன் பிறந்ததிலிருந்து தமிழ் மொழியை இல்லத்தில் எழுதவும் பேசவும் கற்றுக்கொடுத்து வந்தோம். நாளடைவில் சில நண்பர்களின் குழந்தைகளும் எமது புதல்வர்களோடு சேர்ந்து தமிழ் படிக்கத் தொடங்கினர். இதை முறைப்படுத்த வேண்டி, 2011ம் ஆண்டில் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவிக்க நியூயார்க் தமிழ்க் கல்விக்கழகம் என்ற ஒன்றை நண்பர் ஒருவரோடு சேர்ந்து நிர்மாணித்தோம். குழந்தைகள் தமிழ் படிப்பது முக்கியமானது, அதே நேரத்தில் தமிழை ஆழ்ந்து ஆராய்ந்து ஒவ்வொரு இலக்கியத்தின் காலகட்டங்களையும் குறித்து பதிவு செய்யவேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறிவந்தார். இதைப் பற்றி பல தமிழ் ஆர்வலர்களிடம் பேசியதில்  தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரால் மட்டுமே நடுவுநிலைமையான ஆய்வுகளை செய்யமுடியும் என்று தெரிந்துகொண்டேன். 2014ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள்  நடத்த ஆரம்பித்துவிட்டோம்.

 

  1. இந்த இருக்கை ஆனந்தவல்லி என்று உங்கள் அம்மா பெயரிலும், மருத்துவர் ஜி. சுவாமிநாதன் என்று உங்கள் அப்பா   பெயரிலும் நிறுவப்படுகிறது. அதன் பின்னணி என்ன?

 

எனக்கு தமிழ் தாய்மொழி என்ற மட்டோடு விட்டுவிடாமல் தமிழைப் பாடமாக எடுத்தும், கோடை விடுமுறையில் தமிழின் நயத்தை வளத்தை தொன்மையை சிறுவயதிலேயே உணர்ந்திட என் பெற்றோர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரான தங்களது நண்பரிடம் எங்களை கூட்டிச்சென்றனர். அங்கு பாடங்களில் வராத செய்யுள்களையும் பாடல்களையும் கற்று வரும்போது தமிழ் மீதும் தமிழ்ப் புலவர்கள் மீதும் பெருமளவு மதிப்பும் மரியாதையும் வளர்ந்து வந்தது. என் தமிழ் பித்திற்குக் காரணமான, எனக்கு தெய்வமாக வழிநடத்திய பெற்றோர்களின் பெயரில் தமிழ் இருக்கையை அமைப்பது எனக்குக் கிடைத்த நற்பேறு என்றே நம்புகிறேன்.

 

3.நீங்கள் மதுரையில் பிறந்து வளர்ந்ததாக அறிகிறேன். மறக்கமுடியாத சிறுவயது ஞாபகம் ஏதாவது?

 

பல ஞாபகங்கள் வந்து போகின்றன. ஒரு முறை எனது தாயுடன் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தேன், அப்போது எனது தந்தை வீடு திரும்பும் ஒலி (வாகனத்தின் சத்தம்) கேட்கவே வழக்கம்போல் விரைவாக விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டோம். தந்தை வீட்டிற்குள் வந்தவுடன் விட்டுப்போயிருந்த தேர் ஒன்றைப் பார்த்துவிட்டு சதுரங்கத்தை ஏன் பாதியில் நிறுத்தினீர்கள் என்று கனிவோடு கேட்டதும், ஓ அப்படியானால் என்னால் அந்த விளையாட்டின் இறுதி நிலையை மீண்டும் அப்படியே எடுத்து வைக்கமுடியும் என்று நான் சொன்னதும், அப்படியே செய்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது.

 

4.தமிழ் மொழியில் ஈடுபாடு சிறுவயதிலேயே ஏற்பட்டதா? என்னென்ன படித்தீர்கள்?

 

கோடையில் தமிழ் படித்தாலும், சிலப்பதிகாரக் கதையிலும் அதில் கூறப்பட்டிருக்கும் இசை பற்றிய செய்திகளும் சிறுவயதிலேயே என்னை மிகவும் கவர்ந்தன. திங்களைப் போற்றுதும் என்னும் வாழ்த்தும் முதன்முதலில் கேட்டவுடனேயே வியப்பைத் தந்தது–அந்தக் காலத்திலேயே சமயச் சார்பின்றி இயற்கை வாழ்த்தா! வடவரையை மத்தாக்கி என்ற வைணவத் துதியும், ஆனைத்தோல் போர்த்து புலியின் உரி உடுத்து என்ற சிவன் பாட்டும், வேலன் ஆட்டமும் ஒரே இலக்கியத்தில் கண்டு இளங்கோவின் பரந்த மனம் பழங்காலத் தமிழர் மீது பெருமதிப்பை உறுதி செய்தது. ஆண்டாளின் திருப்பாவையில் வரும் சங்க இலக்கியத் தாக்கமும், வாதவூராரின் திருவாசகத்தில் கண்ட இசை நயமும் மேலும் தமிழ் இசையில் யாரேனும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. எனது அம்மாவும் அப்பாவும் திருக்குறளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் குறள் படிக்காத வாரமே இல்லை எனலாம். மிகவும் வறுமையான நிலையிலிருந்து கடின உழைப்பால் ஒரு மருத்துவராக வந்த அப்பா, உதவி கேட்டு வரும் தகுதி உடைய எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவி வந்திருக்கிறார். இன்றும் சிலம்பொலி அறக்கட்டளை என ஒன்றினை அமைத்து அதன் மூலம் மாணவர்களின் படிப்புக்கு பணம் கொடுத்து வருகிறார். அடிக்கடி 212ம் குறளை சொல்வார். யார் தகுதியானவர் என்றால் அதற்கும் ஒரு குறளைச் சொல்லி சரிகட்டுவார், 114ல் அவரவர் செய்கையினால் விளையும் தாக்கத்தை வைத்து அவ‍ரவர் தகுதியை கண்டுகொள்ளலாம் என்று சொல்வார்.

 

5.ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தை தேர்வுசெய்த காரணம் என்ன?

 

அங்குள்ள இசைக் கல்லூரி உயர்தரமானது. என்னுடன் பணிபுரியும் அன்பர்கள் சிலர் அறிவியல் மற்றும் மருத்துவத்துறையில் இருக்கைகளை அமைத்து அவை நல்ல முறையில் நடந்துகொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. நான் பயின்ற செயின்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலையா இல்லை ஸ்டோனி புரூக் பல்கலையா என்று  நானும் என் மனைவி பிரபாவும் எண்ணிக்கொண்டிருந்தோமே அல்லாது, இருக்கை அமைக்க வேண்டும் என்பதில் தடுமாற்றமே இல்லை. நான் வேலை செய்யும் இடத்தின் நிறுவனர் முனைவர். ஜம் சைமன்சு அவர்கள் தானும் மேற்கொண்டு ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் உள்ள இவ்விருக்கைகள் வளர பல வழிகளிலும் உதவுவதாகக் கூறினார். மேலும் அண்மையில் இருப்பதால் வரும் பேராசிரியர் நமது நியூயார்க் தமிழ்க் கல்விக்கழகத்திலும் ஈடுபாட்டோடு செயல்பட்டால் குழந்தைகளுக்கும் தமிழ்க் கல்வி கற்க மேலும் உற்சாகம் வரலாம்.

 

6.ரொறொன்ரோ மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதற்கும்  ஸ்டோனி புரூக் இருக்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

 

ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது பற்றி 2014ல் இருந்து பேச்சவார்த்தை நடந்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தியக் கல்வியியல் மையத்தின் (Center for India Studies) கீழ் இருக்கை அமைக்க ஒப்புதல் கிடைத்தது. ஆனால், இந்தியக் கல்வியியல் மையத்தில் தமிழ் இருக்கை அமைத்தால் தமிழ் மொழியினை இந்திய வரலாறு மற்றும் இந்திய சமய வரையறைக்குள் சுருக்கிவிடுவார்கள் என்ற ஐயம் எனக்கு இருந்தது. கலை, தொல்லியல், இசை, வரலாறு, கவிநயம், இலக்கணத் தொன்மை, கட்டிடக்கலை, மொழி வளம் என்று பன்முகம் உடைத்த தமிழ் ‘கலை மற்றும் அறிவியல்’ துறையின் கீழ் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதன் காரணியாக பல ஆய்வுக் குறிப்புகளையும் விளக்கங்களையும் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்தோம். இதற்கிடையில் சூலைத் திங்களில் பேரவை மாநாட்டில் ஆர்வர்டில் இருக்கை அமைக்க விதை போட்டிருப்பதாக அறிவிப்பு வந்தது. நான் அங்கிருந்து நியூயார்க் திரும்பியதும் கலை மற்றும் அறிவியல் துறையின் மேலாளர் (டீன்) சாசா கோப்பு (Sacha Kopp) என்னை அழைத்து ஆர்வர்டு செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். சில நாட்களிலேயே, ஸ்டோனி புரூக் தமிழ் இருக்கைக்கும் ஒப்புதல் வந்துவிட்டது.

 

  1. எதற்காக இத்தனை இருக்கைகள் என்று கேள்விகள் எழுகின்றன? இவற்றிலே படிப்பதற்கு மாணவ மாணவிகள் வருவார்களா?

 

எனக்குப் பிடித்து ஒரு திரைப்படம் கெவின் கோஸ்ட்னர் நடித்த Field of Dreams. “If you build it, they will come,” (நீங்கள் கட்டினால், அவர்கள் வருவார்கள்) என்று அதில் வரும் கருத்து இங்கு பொருந்தும். மாணவர்கள் படிப்பதற்கு மட்டுமின்றி ஆராய்ச்சி செய்வதற்கும் வருவது மிக முக்கியம். பல இருக்கைகள் இருப்பின், வட அமெரிக்காவில் தமிழுக்கென்று ஓர் ஆராய்ச்சி மாநாடு நடத்த முடியும், தமிழ் இசை உள்ளிட்ட தமிழ்க்கலைகள், பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இசைக் கருவிகள், அரங்கத்தின் அளவுகள் பற்றியும் ஆய்வுகள் என செய்யலாம். ஆசிய கண்டத்தின் மூத்த மொழிகள் எவை என்பன பற்றி வெறும் வாய்வீச்சு இல்லாமல் தகுந்த ஆதாரங்களுடன் விவாதிக்க வழிவகுக்கும்.

 

  1. இது வீண் செலவு. பல்கலைக் கழகங்களால் தமிழை வளர்க்க முடியாது என்று சொல்கிறார்களே?

 

என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேரடியாக தமிழ் வளர்ச்சிக்கு இவை செயல்படுமா என்பது நல்ல கேள்விதான். தமிழ்க் கலைகள், பண்டைத் தமிழ் இலக்கியத்தின் பொது நோக்கு, சிலம்பின் சமயச்சார்பற்ற தன்மை, வள்ளுவனின் நெறி முதலிய உள்ளிட்ட பலவற்றை ஆராயும் போது நாம் கற்றுக் கொள்ளவேண்டிய விதயங்கள் பல வெளிவரும். பல தேர்ந்த அறிஞர்கள் இதைப்பற்றிப் பேசும்போது தமிழ் கற்கும் ஆவல் பலருக்கும் வருவதைத் தடுக்க முடியாது.

 

  1. இன்னும் சிலர் இந்தப் பணத்தை தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை மேம்படுத்த உதவியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

மன்னிக்கவேண்டும். ஆராய்ச்சி என்பது இந்தியாவில் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிகளிலேயே சக‍அறிவியலர் மதிப்பாய்வுரை செய்யக்கூடிய (peer reviewed) ஆய்வுகள் வருவது அத்தி பூத்தாற் போல் தானே. அறிவியலிலேயே இப்படி என்றால் பிற துறைகளில்? தமிழ் பயிற்றுவிப்பது இந்த இருக்கையின் ஒரு சிறு அங்கம் மட்டுமே; தமிழ் மொழி, தமிழ் கலைகள், வரலாறு முதலியவற்றில் ஆராய்ச்சி செய்திடவே இருக்கை ஏற்படுத்தவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ஆயினும், தமிழ்நாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுப் பணிக்கு பரிமாற்ற முறையில் கோடையிலோ அல்லது ஓரிரு ஆண்டுகளோ வந்து இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நுணுக்கமான தரமான ஆய்வு முறைகளை தாய்நாட்டிற்கு கடத்திச் சென்றால் அதுவே ஒரு வெற்றிதான்.

 

  1. தமிழ் இருக்கையை உருவாக்குவது ஒன்று. இதை உருவாக்கிய பின்னர் உங்களால் அதை கண்காணிக்க முடியுமா?

 

முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் நானும் பிரபாவும் இதில் இறங்கியுள்ளோம்.

 

  1. தமிழை வளர்ப்பதற்கு தமிழ் இருக்கை அமைப்பது ஒன்றா சிறந்த வழி?

 

தமிழ் இருக்கை தமிழ் ஆராய்ச்சிக்கு சிறந்தது. தமிழ் வளர்ச்சிக்கு தமிழ் கற்றால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற எண்ணம் மக்களிடையே வரவேண்டும். இதற்கு தமிழ் அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

  1. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் தமிழ் பேசுவதில்லையே. அங்கே தமிழ் எப்படி வளரும்?

 

ஆர்வர்டு, ரொறொன்ரோ, பெர்க்கிலி, ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகங்களில் இருக்கை இருப்பது தமிழின் தனித்தன்மையை உலகுக்குப் பறைசாற்றும். புலம்பெயர்ந்த தமிழர்களிடையும் அவர்தம் அடுத்த சந்ததியினரிடையும் தமிழ் மீதும் தமிழரின் வரலாறு மீதும் பெரு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தும். அது அவர்கள் தமிழை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இரண்டாம் மொழியாக எடுத்து படிக்கத் தூண்டும். அதுவும் தமிழ் வளர்ச்சிதான்.

 

  1. உங்கள் மாணவ வாழ்க்கை எப்படி அமைந்தது? எதிர்காலத் திட்டங்களை அப்பொழுதே வகுத்துக் கொண்டீர்களா?

 

மதுரையில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் தமிழ் ஐயா கதிரவன் அவர்கள் பல செய்யுள்களை பாட்டாகவே படித்துக் காட்டுவார், ஆகையால் உடனே மனதில் பதிந்துவிடும். மேலும் கேள்வி பதில் பாணியில் யாரோ திருவள்ளுவரிடம் கேள்வி கேட்பதாகவும் அதற்கு வள்ளுவன் இரண்டடி கொடுத்து அனுப்பியதாகவும் குறள்களை அவர் கற்றுக்கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. திருச்சி மண்டலப் பொறியில் கல்லூரியில் 1985ல் கணினியியல் படிப்பில் சேர்ந்தேன். அங்கு ஐம்பது விழுக்காடு மாணவர்கள் தமிழகத்திலிருத்தும் ஒரு சிலர் அண்டை நாடுகளிலிருந்தும் ஏனையவர் வெளிமாநிலங்களிலிருந்தும் வருவர். பிறமொழி பேசுவோர் அனைவரும் கூடி இந்தியிலேயே அளவளாவிக்  கொண்டிருப்பதும், ஆங்கிலத்தில் உரையாடினாலும் தமிழ் மாணவர் யாரேனும் வரும் வேளையில் இந்திக்கு மாற்றிப் பேசுவதும் ஒரு பிளவினை இயற்கையாகவே ஏற்படுத்தியது. தமிழர் அனைவரும் இணைந்தாரா இதனால் என்றால் அதுவும் இல்லை–சாதி ஒரு மிகப்பெரிய நச்சுப்பாம்பு. படிப்பில் முழுக்கவனம் செலுத்தி கல்லூரியில் மட்டுமல்ல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெற்றேன். இறுதி ஆண்டில் இதற்காக விருது பெற்றபோது தமிழில் “தமிழே, அமுதே தமிழ்த் தாயே!..

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத்தே உதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்

சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!”

என்று தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட வரிகளைக் கூறிவிட்டே எனது ஒப்புதல் உரையை ஆங்கிலத்தில் வைத்தேன். பல நல்ல தமிழ் உள்ளங்களையும் உட்பகைவர்களையும் அறிய நல்லதொரு நிகழ்வாக அது அமைந்தது. படிப்பு முடிந்ததும் பெங்களூரில் உள்ள நடுவண் அரசு நிறுவிய மேன்மை-கணிணி-வளர்ச்சி மையத்தில் பணியமர்ந்தேன். அப்போது அவ்வூரில் நிறைய தமிழ்பேசும் மக்கள் இருப்பது கண்டு பெருமிதம் அடைந்தேன். ஆனால், பணியில் பலரும் இந்தி பேசவும், மெத்தப் படித்த கன்னடர்களே இந்தியில் அளவளாவுவதையும் கண்டு வேதனை அடைந்தேன். தமிழின் சேய் மொழி என்பதாலோ என்னவோ எனக்கு கன்னடம் சில மாதங்களில் பேச வந்துவிட்டது. நம் தமிழன்னையின் கிளை மொழியையும் இந்தியின் திணிப்பினால் மெதுவாக இழந்து வருவதாக உணர்ந்தேன்.

 

  1. அமெரிக்கா செல்லும் எண்ணம் எப்படி தோன்றியது. அமெரிக்காவில் படித்தது மற்றும் வேலை தேடிக்கொண்ட அனுபவங்கள்.

 

எனது அண்ணன் ஞானசேகரன் அவர்கள் எனக்கு ஒரு வழிகாட்டி. அவரின் ஆலோசனையின் படி  அமெரிக்காவில் செயின்ட் லூயிசு மாநகருக்கு வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு வந்தேன். 1992ல் மிசௌரி தமிழ்ச் சங்கம் தொடங்கியபோது அதன் இணைச் செயலாளராகப் பொறுப்பேற்று, “பார்வையாளராக இருந்த எம்மை பங்கேற்பாளராகச் செய்த சங்கம்” என்று பறைசாற்றியது ஞாபகம் இருக்கிறது. 1995ல் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றேன். பல நிதிநிறுவனங்களில் வேலை பார்த்து தற்சமயம்  நியூயோர்க் நெடுந்தீவில் (Long Island)பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றுகிறேன்.

 

  1. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?

 

சிறு வயதிலிருந்தே தாய் தந்தையருக்கு மிக்க மரியாதை செலுத்திப் பழகியவன் நான். எனது தந்தைக்கு சத்திரப்பட்டியில் ஒரு நண்பர் இருந்தார். என்னுடைய நல்ல காலம், அவருடைய பேத்தி பிரபாவை  எனக்கு மணம் பேசினார்கள்.  1997ல் அவரை திருமணம் செய்து கொண்டேன்.மூன்று ஆண்டுகளுக்கு பின் எங்கள் முதல் மகன் பிறந்தான்.  அவனை இசை மாறன் என்று அழைத்தோம்.  இரண்டாம் மகனுக்கு  கவின் மதி என பெயர் சூட்டினோம்.  எமது குழந்தைகளுக்கு வீட்டில் தமிழ் எழுதவும் பேசவும் சொல்லிக்கொடுத்ததுடன் அவர்கள் முறையாக தமிழ் கற்பதற்காக இரண்டு பேர் சேர்ந்து நியூயார்க் தமிழ்க் கல்விக்கழகம் நிறுவினோம். கடந்த ஈராண்டுகளாக தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூயார்க் கிளையின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறேன். தமிழுக்கும் தமிழ் நிறுவனங்களுக்கும் என்னால் பணிசெய்ய முடிகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் எனது துணைவி பிரபா தான்.

 

  1. தமிழ் ஆர்வம் எப்படி வந்தது?

 

தாய் தந்தையர் தான் முதற்காரணம். எனது அக்கா அறிவழகி, அண்ணன் ஞானசேகரன், தம்பி கண்ணன் ஆகியோர் இன்றும் குறள்மனம் என்னும் புலனக் குழுவில் (வாட்சப்பு) இருக்கறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் இலக்கியம் கடல் போன்றது. நிறையப் படிக்கவில்லை என்றதான் சொல்லவேண்டும். குறுந்தொகை, திருக்குறள், சிலம்பு, கம்பன், திருவாசகம், திருப்பாவை, பாரதிதாசன், பாரதி என்று அங்கங்கு கொஞ்சம் படித்திருக்கிறேன். தினமும் ஒரு குறள் தவறாமல் படித்துவிடுவேன். பேரவையில் ஆண்டுதோறும் நடக்கும் இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சியின் பாடப்பகுதிகளை கூடுமானவரையில் படித்துவிடுவேன். இலக்கியச் சுவை காண்பது ஒரு பக்கம். பாடங்களை படித்ததனால் நிகழ்ச்சியும் மிகவம் அனுபவிக்கத்தக்கதாக இருக்கும்.

 

  1. தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலே ஒருவர் பட்டப்படிப்பு வரை முடித்து வேலையும் தேடிக்கொள்ளலாம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தமிழின் எதிர்காலம் என்ன?

 

உண்மை. தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டியது மிக அவசியம். பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் பயிலுவோரும்,  தாங்கள் கற்கும் கல்வி மக்களுக்குப் பயன்படவேண்டும், மக்களோடு புழங்கவும் வேண்டும் என்னும் நோக்கில்  தமிழ்க்கல்வி வலியுறுத்தப் படவேண்டும்.

ஓர் எளிய யோசனை. 12ம் வகுப்பு முடிந்து பொறியியல்/மருத்துவக்க‍ல்லூரிகளில் நுழையும் தருணத்தில், தமிழ்வழி கற்ற‍ மாணவர்க்கு கூடுதலாக 2 புள்ளிகளும், தமிழைப் பாடமாகப் பயின்றோருக்கு (அதிகபட்சமாக) 2 புள்ளிகளும் அளிக்கவேண்டும். ஒரே ஆண்டில் தமிழைப் பாடமாகப் பயில்வோரின் எண்ணிக்கை நூறு விழுக்காடு ஆகிவிடும், தமிழ்வழிக் கல்வி என்பது “சர்வைவல்” (or, competitive edge) என்று காரணம் காட்டி பரவலாகிவிடும். எனது நண்பர், மறைந்த  கனேடியப் பேராசிரியர் செல்வா கனகநாயகம், ‘பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கற்போர் பள்ளி நாள்களிலேயே குறைந்தது 3 பாடங்களாவது தமிழில் எடுத்திருந்தால்தான் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் விதிமுறைகளை மிக நேர்மையாகக் கொண்டுவர இயலும்’ என்று சொல்வார்.

பேராசிரியர் பொன்னவைக்கோ பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த பொழுது தமிழ்க்கல்வியை வலியுறுத்தி செயற்படுத்தவும் செய்தார். தமிழ்மக்கள் இவற்றை ஆதரிக்க வேண்டும்.

 

  1. நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியுமா?

 

நீட் என்று ஒரு தேர்வைக் கொண்டுவந்து தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவருக்காக இடங்களை கட்டாயமாக ஒதுக்கச் சொல்வது ஒரு வகைப் பொருளாதாரத் திருட்டு. இதை எதிர்கொள்ள, தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் ஓராண்டு கட்டாயமாக தமிழ் படிக்க வேண்டும் என்று விதிமுறைகளை கொண்டுவரலாம். ஆனால் நடுவண் அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்தவக் கல்லூரிகளில் தானே நாம் இந்த விதிமுறைகளை கொண்டுவருகிறோம், ஆனாலும் விடமாட்டார்கள்.

நாடு இல்லாமல், உண்மையான மாநில சுயாட்சி இல்லாமல், ஒரு மொழி வாழமுடியுமா என்றால், மிகக் கடினம் என்றுதான் சொல்வேன். தமிழ் போன்ற தொன்மையான மொழி எப்படியும் வாழும். நல்ல ஆட்சியர் அடுத்து வரத்தான் போகிறார்கள், அவர்களின் தமிழ் ஆர்வம், தமிழ் உணர்வு தமிழை செழிக்கச் செய்யும். அதுவரை, தமிழ் உணர்வுள்ளவர்கள் பல  நாடுகளிலும் பல பல்கலைக்கழகங்களிலும் தமிழப் பேராசிரியர்களை, இருக்கைகளை, துறைகளை உருவாக்க முன் வரவேண்டும்.

 

  1. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. லத்தீன், சமஸ்கிருதம்   போல  தமிழும் எழுத்து மொழியாக மாறிவிடும் அபாயம் உள்ளதா?

 

ஆம், தமிழ் மட்டுமல்ல இந்த ஆபத்து உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உண்டு. இதை நாம் ஏற்றுக்கொண்டால்தான், அதைத் தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும். தமிழக அரசு தமிழைக் கட்டாயப் பாடமாக  அறிவித்து, தமிழ் படித்தோர்க்கு மட்டுமே அரசு வேலை என்றும் அனைத்து தமிழக அரசுத் தேர்வுகளையும் தமிழில் மட்டுமே நடத்தவும் முன்வரவேண்டும்.

 

  1. தமிழ் இருக்கை சரி. அது அமைந்த பின்னர் உங்கள் முயற்சி வேறு எதில் தொடரும்?

 

முதலில் செயின்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைக்கவேண்டும் என்பது எனது அவா. சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரைத் தொடர் நடத்தினோம். மூன்று அறிஞர்கள் தமிழ் சார்ந்த உரிப்பொருளில் சொற்பொழிவாற்றினார்கள். அங்குள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆர்வம், மிசௌரி தமிழ்ச் சமூகத்தின் ஈடுபாடு அனைத்தும் எங்களை மிகவும் ஈர்த்துவிட்டது. அங்கு இருக்கை அல்லது துறை அமைக்க பலர் கூடித்தேர் இழுக்கவேண்டும்.

தமிழ் ஞாயிறு என ஒரு மையத்தை தமிழ் அரசுகள் (தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியசு, ..) துணையுடன் நிறுவி தமிழ்ப் படிப்பைப் பரப்பும் முயற்சியில் இறங்கலாம் என்றும் எண்ணுகிறேன். இது Alliance Francaise போல, மொழியை விருப்பமுள்ளோர்க்குக் கற்றுக்கொடுத்து, தேர்வுகள் நடத்தி, அவர்களின் நிலைக்கு ஏற்றவாறு சான்றிதழ்களை வழங்கி தமிழ் பரப்புரை செய்யும் முயற்சி.

 

  1. 50 வருடங்களுக்குப் பிறகு உலகில் தமிழின் நிலை என்னவாக இருக்கும்.?

 

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று ஈராயிரம் ஆண்டுளுக்கு முன்பே இலக்கியம் படைத்த மொழி தமிழ். உலகம் இதை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழில் இருக்கும் பொதுப் பார்வை இன்றைய மதம் பிடித்த உலகிற்கு மிகவும் தேவையான ஒன்று. உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது. மக்களை சமயம், நிறம், சாதி என்று பிரிப்பவர்களைப் பதடி என்று எள்ளி நகையாடுவார்கள். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் வள்ளுவனின் பொதுமறை உலகத்தின் நீதி நூலாக ஏற்கப்படும். நல்ல ஒழுக்க நெறியை அதன் மூலத்தில் படிக்க, பெரும்பாலானவர்கள் தமிழ் கற்பார்கள் என்றும் நம்புகிறேன்.

 

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta