ஆட்டுப்பால் புட்டு

ஆட்டுப்பால் புட்டு

                   அ முத்துலிங்கம்

இதுவெல்லாம் நடந்தது சிலோனில்தான், ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்ய முன்னர். அப்பொழுதெல்லாம் ’தபால் தந்தி சேவை’ என்றுதான் சொன்னார்கள். அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தினம் யாழ்தேவி கொழும்பிலிருந்து சரியாக காலை 5.45க்கு புறப்பட்டு காங்கேசன்துறைக்கு ஓடியது; பின்னர் அதே நாள் திரும்பியது. தபால், தந்தி சேவையில் அதிகாரியாக வேலை செய்த சிவப்பிரகாசம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்தேவியை பிடித்து புறப்பட்டு மதிய உணவுக்கு யாழ்ப்பாணம் போய்விடுவார். பின்னர் ஞாயிறு மதியம் அங்கேயிருந்து கிளம்பி இரவு கொழும்பு திரும்புவார். திங்கள் காலை வழக்கம்போல கந்தோருக்கு அதிகாரம் செய்யக் கிளம்புவார்.

யாழ்ப்பாணத்தில் அவருடைய மனைவி நாற்சார் வீட்டையும், பெரிய வளவையும் பரிபாலித்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய ஒரே மகள் மணமுடித்து சிங்கப்பூர் போய்விட்டாள். வீட்டிலே அவர்கள் வளர்த்த ஒரு மாடு, இரண்டு ஆடுகள், மூன்று நாய்கள், 20 கோழிகளும், வளர்க்காத எலிகள், சிலந்திகள், கரப்பான்பூச்சிகளும் அவர்களை ஓயவிடாமல் வேலை கொடுத்தன.  சிவப்பிரகாசம் அடிக்கடி வருவது மனைவியை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வீடு வளவுகளை பராமரிக்கவும்தான். அப்படித்தான் அவர் மனைவிகூட நினைத்தார். ஆனால் இன்னொரு ரகஸ்யக் காரணமும் இருந்தது.

யாழ்ப்பாணத்திலே தேங்காய் புட்டு பிரபலம். தேங்காய்ப்பால் புட்டு இன்னும் பிரபலம். மாட்டுப் பால் புட்டையும் சிலர் விரும்பி உண்பதுண்டு. ஆனால் சிவப்பிரகாசம் சாப்பிடுவது என்றால் அது ஆட்டுப்பால் புட்டுத்தான்.  தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்டு, அரிசிமாவையும், உளுத்தம்மாவையும் சரிசமமான விகிதத்தில் கலந்து குழைத்து முதலில் புட்டு அவிக்கவேண்டும். அதை இறக்கியவுடன்  சூடாக்கிய ஆட்டுப்பாலில் கிளறி சர்க்கரை இரண்டு கரண்டி சேர்த்து சுடச் சுட சாப்பிட்டால் அதன் ருசியே தனி என்பது சிவப்பிரகாசத்தின் அபிப்பிராயம். மனைவிக்கு ஒத்துவராத கருத்து அது. ஆட்டுப்பாலில் கொழுப்பு குறைவு ஆனால் புரதச் சத்து அதிகம்.  அது காந்தியின் உணவு என்று வாதம் செய்வார் சிவப்பிரகாசம். யாழ்தேவியில் இறங்கி வீட்டுக்கு வந்துசேரும் நேரம் அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டை சுடச்சுட தயாராக வைத்திருக்கத் தவறுவதே இல்லை.

ஒருமுறை அவர் வீட்டு மாடு கன்று ஈன்றுவிட்டது. ’நீங்கள் வந்த நேரம்’ என்று மனைவி. அவரைப் புகழ்ந்தார். மனைவிகள் கணவரைப் பாராட்டுவது அபூர்வமானது. சிவப்பிரகாசத்துக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவசர அவசரமாக கன்றைச் சுற்றிவந்த இளங்கொடியை உமலிலே போட்டுக்கட்டினார். உடனுக்குடன் அதை ஆலமரத்தின் உச்சியில் தொங்கவிட வேண்டும். அந்த ஊரில் இப்படியான வேலைகளைச் செய்வதற்கு ஒருவன் இருந்தான். வேலி அடைப்பது, விறகு தறிப்பது போன்ற வேலைகள். அழகான வாலிபன். அவனுடைய தாய் தமிழாசிரியை. படிப்பு ஓடாதபடியால் அதை நிறுத்திவிட்டு இப்படியான வேலைகளை ஊருக்குள் செய்தான். பெயர் நன்னன்.

’ஆலமரத்தின் உச்சியில் கட்டவேண்டும். அப்பதான் மாடு நிறையப் பால் கறக்கும். வேறு ஒருவருடைய உமலும் அதற்குமேல் இருக்காமல் பார்த்துக்கொள்’ என்றார். அவன் ’தெரியும் ஐயா. இந்த ஊர் முழுக்க பால் கறப்பது என்னால்தான்’  என்று சொல்லியவாறு போய் கட்டிவிட்டு வந்தான். அடிக்கடி  வீட்டுக்கு வந்து அவர் கொடுக்கும் வேலைகளை செய்தான். குணசாலி. குடிப்பது கிடையாது. சீட்டு விளையாடுவது இல்லை. ஒருவித கெட்ட பழக்கமும் அவனிடம் இருப்பதாகச் சொல்ல முடியாது. வேலை முடிந்ததும் காசை வாங்கிக்கொண்டு போவான். எண்ணிக்கூட பார்ப்பதில்லை.

ஒருநாள் சிவப்பிரகாசம் கேட்டார் ’உனக்கு இந்தப் பெயர் யார் வைத்தது?’ அவன் சொன்னான், ‘அம்மாதான். அது பழைய மன்னனின் பெயர்.’ ’அவன் கொடூரமானவன் அல்லவா?’ என்றார்.  அவன் சொன்னான் ’எந்த மன்னன்தான் கொடூரம் இல்லாதவன் என்று அம்மா சொல்வார்.’ பெயர்தான் நன்னன் என்று இருந்ததே ஒழிய அவனுடையது சாதுவான முகம். எப்பொழுதும் ஏவலை எதிர்பார்க்கும் கண்கள். நாளை என ஒன்றிருக்கே என்ற யோசனை அவனுக்கு கிடையாது. கொஞ்ச நேரம் தீவிரமாக சிந்திப்பதுபோல முகத்தை கோணலாகப் பிடித்தபடி நின்றான். பின்னர் அவர் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றைச் சொன்னான். ‘அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்கவேண்டும். இந்த ஊர் ஆலமரத்தை பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று.’

ஒவ்வொரு முறையும் சிவப்பிரகாசம் வரும்போது நன்னனுக்கு ஏதாவது  வேலையிருக்கும். அந்த தடவை அவர் வந்தபோது ’நன்னன் மணமுடித்துவிட்டான்’ என்று மனைவி சொன்னார். அன்று பின்னேரமே அவன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தான். பெண் அழகில் அவனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் இல்லை. கண்களைப் பார்த்தபோது துணுக்கென்று இருந்தது. இமைக்க முடியாத பாம்பின் கண்கள் போல அவை நீளமாக இருந்தன. அதில் கொஞ்சம் தந்திரமும் தெரிந்தது. அவருடைய முதல் நினைப்பு ’இவன் அப்பாவியாக இருக்கிறானே. இவளை எப்படி சமாளிக்கப் போகிறான்’ என்பதுதான். பின்னர் யோசித்தபோது இவள்தான் சரியென்று பட்டது. அப்பாவியானவனை இவள் எப்படியும் முன்னேற்றிவிடுவாள். வெற்றிலையில் காசு வைத்து மணமக்களிடம் கொடுத்து சிவப்பிரகாசம் வாழ்த்தி அனுப்பினார். அவள் முன்னே போக இவன் பின்னால் குனிந்தபடி இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல் அவள் காலடியை மட்டுமே பார்த்து நடந்தான். மணமுடிக்க முன்னர் அவன் எப்படி நடந்தான் என்பது அவனுக்கே மறந்துவிட்டது. அவள் கொஞ்சம் உதட்டைக் குவித்தால் அவன் கிணற்றுக்குள் குதித்துவிடுவான் என்று சிவப்பிரகாசம் எண்ணினார்.

அடுத்தநாள் காலை அவர் முட்டைக் கோப்பியை ரசித்து குடித்துக் கொண்டிருந்தபோது நன்னன் தனியாக வந்தான். அவனைப் பார்க்க வேறு யாரோ போல இருந்தது. அவன் அணிந்திருந்த டெர்லின் சட்டை  பொக்கற்றுக்குள் திரீரோஸஸ் சிகரெட் பக்கட் இருந்தது. தலையை ஒட்ட வாரி மேவி இழுத்திருந்தான். சுருட்டிய தினகரன் பேப்பர் கையிலே கிடந்தது. ’என்ன நன்னா? பேப்பர் எல்லாம் படிக்கிறாய் போல இருக்கு?’ என்றார். ’ஐயா, எல்லாம் பத்துமாவின் வேலை. கையிலே பேப்பர் இருந்தால் ஆட்கள் மதிப்பார்களாம்.’ ’சிகரெட்டும் பிடிப்பாயா?’ ’அதுதான் ஸ்டைல் என்று பத்துமா சொல்கிறா. அவவுடன் வெளியே போகும்போது நான் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும். பழகிக்கொண்டு வருகிறேன்’ என்றான்.

’இப்ப என்ன வேலை செய்கிறாய்?’ ’அதுதான் பிரச்சினை, ஐயா. என்னை  வீட்டு வேலைகள் செய்ய வேண்டாமாம். இப்ப நான் சைக்கிள் கடையில்தான் வேலை பழகுகிறேன். அது மதிப்பான வேலை ஆனால் சம்பளம் குறைவு. போதிய வரும்படி இல்லாவிட்டாலும்  பரவாயில்லை என்று பத்து சொல்கிறா,’ .அவர் வீட்டு பலாமரத்தில் ஒரே சமயத்தில் பழுத்து தொங்கிய. மூன்று பழங்களை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சிவப்பிரகாசம் நன்னனிடம் பலாப்பழத்தை இறக்கித்தரச் சொன்னார். அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு ’ஐயா,  பத்துவுக்கு தெரிந்தால் என்னை கொன்றுபோடுவா. நான் வாறேன்’ என்று புறப்பட்டான். சிவப்பிரகாசம் ’நீ ஒரு பழத்தை எடுத்துக்கொள். இரண்டை எங்களுக்கு தா’ என்று ஆசை காட்டினார். அவன் அதைக் கேட்தாகவே காட்டிக் கொள்ளவில்லை.

வழக்கமாக ஞாயிறு அன்று கொழும்புக்கு பயணமாகும் சிவப்பிரகாசம் திங்கள் மதியம் யாழ்தேவியில் திரும்புவதாக திட்டமிட்டிருந்தார். ஞாயிறு இரவு அவருடைய இரண்டு ஆடுகளில் ஒன்றை யாரோ திருடிவிட்டார்கள். இரவு ஆடு கத்தியது என்ற விவரத்தை மனைவி காலையில் சொல்லி என்ன பிரயோசனம். மூன்று நாய்கள் இருந்தன, ஆனால் அவை ஒன்றுமே குரைக்கவில்லை. சிவப்பிரகாசம் பயணத்தை தள்ளி வைத்தார். ஆடுகட்டிய கயிறு அவிழ்க்கப்படாமல் வெட்டப்பட்டிருந்ததால் ஆட்டை யாரோ களவாடியிருப்பது உறுதியானது. அந்தக் கிராமத்தில் இப்படியான திருட்டு நடப்பதில்லை. எனவே முழுக்கிராமமும் ஆட்டை தேடியது.

ஊர் பெரியவர், ’ஆட்டை திருடியவன் இந்தக் கிராமத்தில் விற்கமாட்டான். அடுத்த கிராமத்திலும் விற்கமாட்டான். இன்று சந்தை கூடும் நாள். ஆட்டை அங்கேதான் விற்பான்’ என்று கூறினார். சிவப்பிரகாசம் ஊர் பெரியவரை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்று தேடினார். அவர் சொன்னது சரிதான். அங்கே அவருடைய ஆடு ஏற்கனவே கைமாறப்பட்டு கசாப்புக் கடைக்கு செல்வதற்கு ஆயத்தமாக நின்றது. அவர் ஆட்டைக்கண்ட அதே சமயம் அதுவும் அவரைப் பார்த்தது. அதன் பழுப்பு கண்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டது போல ஈரமாக மாறின. ஊர் பெரியவர் பொலீசுக்கு அறிவிக்கும் காரியத்தை செய்தார்.

வீடு திரும்பியபோது மூன்று நாய்களும் ஓடிவந்து அவர்மேல் பாய்ந்து புரண்டன. அவற்றின் வால்மட்டும் ஆடாமல் முழு உடம்பும் ஆனந்தத்தில் துள்ளியதைப் பார்க்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. திருடனை விட்டுவிட்டு அவர்மேல் பாய்வதற்கா நாய்களை வளர்த்தார். அவர் விட்டினுள் புகுந்து ஒருவன் ஆடு திருடியதை யோசிக்க யோசிக்க அவர் மனம் சினம் கொண்டது. அந்த ஆடு வேறு குட்டித்தாய்ச்சியாக இருந்தது. இரண்டு ஆடும் மாறி மாறி குட்டிபோட்டு அவருடைய் ஆட்டுப்பால் புட்டுக்கு தடங்கல் வராமல் பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தாய்ச்சி ஆட்டை வெட்டி இறைச்சியாக்குவதற்கு எத்தனை கல்மனசு வேண்டும்.

சென்ற வருடத்து இலைகள் வளவை நிறைத்துக் கிடந்தன. நன்னன் உதவிக்கு வரப் போவதில்லை. மனைவி கூட்டிச் சருகுகளைக் குவித்துவிட சிவப்பிரகாசம் அள்ளி குப்பை கிடங்கில் கொண்டுபோய் கொட்டினார். இரண்டுதரம் கொட்டிவிட்டு மூன்றாவது தரம் வந்தபோது காற்று சுழன்றடித்தது. குப்பை சிதற முன்னர் அள்ளிவிடலாம் என்று ஓடினார். காற்று வென்றுவிட்டது. அந்த நேரம் வெளியே பெரும் ஆரவாரம் கேட்டது. படலையைத் திறந்து வீட்டுக்குள்ளே சனம் வந்தது. பின்னர் ஆடு வந்தது. பின்னால்  பொலீஸ்காரர் வந்தார். அவரைத் தொடர்ந்து கைகளைப் பின்புறம் கட்டிய நிலையில் நன்னனை பிடித்து இழுத்தபடி ஒருத்தன் வந்தான். ’ஐயா, என்னை விட்டுவிடுங்கள். பத்துமா சொல்லித்தான் செய்தனான்’ என்று அவன் கெஞ்சினான். அவன் ஏதோ சிங்களம் பேசியதுபோல சிவப்பிரகாசம் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார். அப்பாவியான ஒருத்தனை சிலமாதத்திற்குள் இப்படி ஒருத்தி மாற்றிவிட்டாளே என்று நினைத்தார். ’ஆடுதான் கிடைத்துவிட்டதே. அவன் பாவம், விட்டு விடுங்கள்’ என்று அவர் வேண்டினார். பொலீஸ்காரர் மறுத்துவிட்டார். ’‘இது பொலீஸ் கேஸ் ஆகிவிட்டது. கோர்ட்டுக்கு போனால் நூறு ரூபா அபராதம் விதிப்பார்கள். அல்லது இரண்டு கிழமை சிறைத் தண்டனை கிடைக்கும்.. அதை அனுபவித்தால்தான் திருடனுக்கு புத்திவரும். நாளைக்கே கோர்ட்டுக்கு ஆட்டை கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பொலீஸ்காரர் நன்னனை இழுத்துப் போனார்.

அன்றிலிருந்துதான் சிவப்பிரகாசத்துக்கு நினைத்துப் பார்த்திராத சிக்கல் ஒன்று முளைத்தது. வெள்ளி அதிகாலை யாழ்தேவியை பிடித்து வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு  கொழும்பு திரும்புகிறவர் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. ’வழக்கு இத்தனையாம் தேதி. உடனே வரவும்’ என்று மனைவி தந்தி கொடுப்பார். சிவப்பிரகாசம் அவசரமாகப் புறப்பட்டு யாழ்தேவியில் வருவார். கோர்ட்டுக்கு மாட்டு வண்டிலில் ஆட்டை ஏற்றிக்கொண்டு போவார்.. வழக்கை தள்ளி வைப்பார்கள். அவர் கொழும்புக்கு திரும்புவார். மறுபடியும் தந்தி வரும். கோர்ட்டுக்கு வருவார். வழக்கை ஒத்திவைப்பார்கள். பலதடவை இப்படி அலையவேண்டி நேர்ந்தது. .

ஒரு முறை கோர்ட்டுக்கு ஆட்டையும் அதனுடைய இரண்டு குட்டிகளையும் வண்டிலில் ஏற்றிப் போனார். வழக்கறிஞர் குட்டிகளையும் கொண்டுவரச் சொல்லி கட்டளையிட்டிருந்ததால் அப்படிச் செய்தார். கோர்ட்டிலே பத்துமாவின் கையில் ஒரு குழந்தையிருந்தது. எட்டாம் வகுப்பு நன்னனும், பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உண்டாக்கிவிட்டார்கள். அதற்கு பட்டப்படிப்பு ஒன்றும் தேவையில்லை. வழக்கை மறுபடியும் தள்ளி வைத்தது சிவப்பிரகாசத்துக்கு ஆத்திரத்தை கொடுத்தது. பத்துமா மரத்திலே சாய்ந்தபடி குழந்தையுடன் நின்றாள். கோர்ட்டுக்கு அவசரமாகப் போனவர்கள் அவளைத் தாண்டும்போது வேகத்தை பாதியாகக் குறைத்தார்கள். அவள் முகம் சந்திர வெளிச்சத்தில் பார்ப்பதுபோல வெளிறிப்போய் காணப்பட்டது. அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நன்னனிடம் ’சாப்பிட்டாயா?’ என்று கேட்டார். அவன் இல்லை என்றான். பாலைவனத்து ஒட்டகம்போல அவள் தலையை அலட்சியமாக மறுபக்கம் திருப்பினாள்.

சாப்பாட்டுக் கடையில் நன்னன் கைக்குட்டையை எடுத்து வாங்குமேலே விரிக்க அவள் உட்கார்ந்தாள். இப்பொழுதுதான் அந்தப் பெண்ணை சிவப்பிரகாசம் நேருக்கு நேர் பார்த்தார். அவள் உடம்பு அசையாமல் இருக்க அவள் தலை மட்டும் ஒரு நடனக்காரியுடையதுபோல இரண்டு பக்கமும் அசைந்தது. அவள் ஓயாமல் பேசினாள். வாய்க்குள் உணவு இருக்கும்போதும், அதை விழுங்கிய பின்னரும், அடுத்த வாய் உணவு வாய்க்குள் போக முன்னரும் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி நிறுத்தாமல் வெளிவந்தன. எல்லாமே கணவனுக்கான கட்டளைகள்தான். அவன் உணவை அள்ளி வாயில் திணித்தபடியே தலையை மட்டும் ஆட்டினான். ’பஸ்ஸுக்கு காசு இருக்கிறதா?’ என்று கேட்டார். அவன் இல்லை என்றான். அதையும் தந்து அவர்களை அனுப்பி வைத்தார். அவர் படும் அவதியிலும் பார்க்க அந்த இளம் தம்பதிகள் அனுபவிக்கும் துன்பத்தை பார்க்க அவரால் முடியவில்லை.

அன்று கோர்ட்டு கலையும் வரை காத்திருந்தார். அரசு வழக்கறிஞர் காரை நோக்கிச் சென்றபோது குறுக்கேபோய் விழுந்தார். ’நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தன். ஆட்டைத் திருட்டுக் கொடுத்ததால் கடந்த 18 மாதங்களாக கொழும்பிலிருந்து வழக்குக்கு வருகிறேன். ஆட்டையும் குட்டிகளையும் வழக்கு நாட்களில் கொண்டு வரவேண்டும் என்பது உத்தரவு. ஆட்டின் விலை அறுபது ரூபா. ஆனல் நான் செலவழித்தது 600 ரூபாவுக்கு மேலே. ஆட்டை திருடியவன்தான் தண்டனை அனுபவிக்கவேண்டும். ஆனால் திருட்டு கொடுத்தவன் திருடனிலும் பார்க்க கூடிய தண்டனை அனுபவிப்பது எந்தவிதத்தில் நியாயம். அடுத்த தடவையாவது வழக்கை முடித்து வையுங்கள், ஐயா.’. வழக்கறிஞர் ஒன்றுமே பேசவில்லை. அவரை விலத்திக்கொண்டுபோய் காரிலே ஏறினார். .

வழக்கு தேதிக்கு இரண்டு நாள் முன்னதாகவே சிவப்பிரகாசம்  கிளம்பி யாழ்ப்பாணம் வந்து விட்டார். வீட்டு வளவு வேலைகளை முடித்துவிட்டு இரவு  ஓய்வெடுத்தபோது மனைவி சொன்னார். ’இப்பவெல்லாம் மாடு முன்னைப்போல கறப்பதில்லை. பால் குறைந்துவிட்டது.’. சிவப்பிரகாசம் ஒரே வெறுப்பில் இருந்தார். ’இந்த வழக்கு என்னை அலைக்கழித்துவிட்டது. . எவ்வளவு நாட்கள் வீணாக ஓடின. எத்தனை காசு நட்டம். அல்லாவிட்டால் இன்னொரு மாடு வாங்கி விட்டிருப்பேனே’ என்றார். அடுத்தநாள் காலை . மாஜிஸ்ட்ரேட் வழக்குக்கு ஒரு நிமிடம் மட்டுமே எடுத்து போதிய சாட்சியங்கள் இல்லாதபடியால் வழக்கை தள்ளுபடி செய்வதாகச் சொன்னார். இதை 20 மாதங்களுக்கு முன்னரேயே செய்திருக்கலாம். இத்தனை அலைச்சலும் தொல்லையும் பணமும் மிச்சமாகியிருக்கும்.

தீர்ப்பான பின்னர் நன்னனில் பெரிய மாற்றம் தெரிந்தது. சிவப்பிரகாசம் நம்பமுடியாமல் தலையை பின்னுக்கு  இழுத்து மறுபடியும் பார்த்தார். அவன் கண்களில் வெளிச்சம் நடனமாடியது. அரும்பு மீசை. திரிரோஸஸ் சிகரெட்  சட்டை பொக்கற்றுக்குள் தெரிந்தது. கையிலே தினகரன் பேப்பரைச் சுருட்டி வைத்தபடி சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்கு வெளியே வந்தான். பத்துமா எங்கிருந்தோ வந்து அவன் கையை டெர்லின் சட்டை முடிந்த இடத்தில் பிடித்து இழுத்தாள். சிவப்பிரகாசத்துக்கு அவர்களைப் பார்க்க சந்தோசமாகவிருந்தது. விடுதலையுணர்வு எல்லோருக்கும் பொதுதானே.

பத்துமா ஒரு குழந்தையை தூக்க ஓடுவதுபோல குனிந்தபடி அவரை நோக்கி ஓடிவந்தாள். காலிலே விழுந்து நன்றி சொல்லப் போகிறாள் என அவர் நினைத்தார். அவள் குனிந்து மண்ணை வாரி எடுத்து வீசி ’நாசமாய்ப்போக’ என்று திட்டினாள். ’உன் ஆடு நாசமாய்ப் போக. உன் மாடு நாசமாய்ப்போக. உன் குடி விளங்காது. இல்லாதவன் என்ன செய்வான்? இருக்கிறவனிடத்திலே தானே எடுக்கவேணும். இதையும் பெரிய வழக்கு என்று கொழும்பிலே இருந்து வந்து நடத்தினாயே. ஆலமரத்து இளங்கொடியை எப்பவோ அறுத்துக் கீழே வீசியாச்சுது. அதுபோல நீயும் அறுந்துபோவாய். உன் அழிவுகாலம் இன்றுதான் ஆரம்பம். நீ புழுத்துச் சாவாய்’ என்று வைதுவிட்டு நடந்தாள். திடீரென்று ஒரு வசவு விடுபட்டுவிட்டதை நினைத்து திரும்பிவந்தவள். அவர் புழுதியிலே குளித்து நின்றதைப் பார்த்து மனதை மாற்றி  ஒன்றுமே பேசாமல் சென்றாள்.

சிவப்பிரகாசம் திகைத்துப்போய் நின்றார். அவர் மேசையில் விரல்களால் சுழற்றும் 3 டெலிபோன்கள் இருக்கும். நாலுபேர் வாசலில் எந்த நேரமும் அவர் கையொப்பத்துக்காக காத்திருப்பார்கள். மந்திரி அவருக்கு கை கொடுத்திருக்கிறார். இருபது வயதை தொடாத இந்தப் பெண்ணின் வாயிலிருந்து வந்த வசவுகளை ஒவ்வொன்றாக  எண்ணிப் பார்த்தார். வண்டில்காரன்  ஆட்டையும் குட்டிகளையும் வண்டிலிலே ஏற்றி தயாராகவிருந்தான். அவன் நடந்ததை பார்த்தாகக் காட்டவில்லை. அடுத்தநாள் ஊரிலே கதை பரவும். இரண்டு நாளில் கொழும்புக்கும் போய்விடும். தலைப் புழுதியை கைவிரல்களினால் தட்டியபடி ஆட்டைப் பார்த்தார். அது தன் பழுப்புக் கண்களால் அவரையே உற்று நோக்கியது. முழுக்கதையையும் அறிந்த அந்த ஜீவன் ஒன்றுதான் அவருடைய ஒரே சாட்சி. வண்டிலில் ஏறி உட்கார்ந்தபோது அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டுடன் காத்திருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

END

.

About the author

18 comments

Leave a Reply to Jayashree Sadagopan Cancel reply

  • //வளர்த்த ஒரு மாடு, இரண்டு ஆடுகள், மூன்று நாய்கள், 20 கோழிகளும், வளர்க்காத எலிகள், சிலந்திகள், கரப்பான்பூச்சிகளும்//
    // மனைவிகள் கணவரைப் பாராட்டுவது அபூர்வமானது. //
    இவை முத்துலிங்கம் குறியீடுகள். அருமை. யாழ்தேவி, இளங்கொடி, ஆலமரம் – மறக்கமுடியாத காலம்.

  • ஏற்கமுடியாது சாபங்கள் எவையும் எந்த தாக்கத்தையும் உண்டாக்குவதில்லை. அருமை. நன்னனின் மனைவிக்கு வெகு சீக்கிரம் வயதான தோற்றம் உண்டாகி இருக்கும்.

  • இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்னபயத்ததோ சால்பு
    என்பதை விளக்கி ய கதை இதுவே

    அய்யா நலமாக இருக்கீங்களா

    கவிஞர் ஆரா

    • கவிஞரே, எனக்கு வேறாகத் தோன்றுகிறது.

      நன்னனின் மனைவியின் குணம், இவருக்கு முன்னதாகவே தெரிந்திருக்கிறது. அவள் வயதிலும் சிறியவள், சட்டென ஒரு பேர் பெற்ற மனிதனை விநாடியில் உடைத்துவிடும் சக்தி அவளிடம் உண்டு என்பது அவர் அறிந்திருக்க கூடியதே.

      சிற்றினம் அஞ்சும் பெருமை [451]

      வறியவர் தானே திருடிக்கொண்டது போகட்டும் என கோட் வாசலில் செய்த சாப்பாட்டு சமரசம் ஆரம்பத்தில் செய்திருக்கலாம். 20 மாத செலவும் கம்மியாக இருக்க கூடும். [என் தர்க்க புத்தி சொல்கிறது]

      ஒருவேளை கதையின் காலத்தில், மக்கள் நேரடியாகப் பிரச்சனையில் பங்கெடுத்ததால் அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லயோ?

      இருப்பினும் ஆட்டுப்பால் புட்டுக்கு ஆசைபட்டு, பிற்காலத்தில் அவமதிக்கப் பட்டாரோ எனத் தோன்றுகிறது.

      வணக்கம்.

  • பேரன்பின் அய்யா வணக்கம் , இந்தக் கதை மிகுந்த ஆர்வத்தினையும் வியப்பினையும் தந்தது.. நன்றிகள் அய்யா .. இன்னும் பெருகட்டும் கதைகளாக …

  • Og i am very happy to read your books. I am going to write my self. My family is in markam. And i am in norway. I was born in Jaffna.

  • i am very happy to read your books. I am going to write my self. My family is in markam. And i am in norway. I was born in Jaffna.

  • சட்டங்கள் இன்னும் அப்படித்தான் இருக்கின்றன!

  • ஆண்டைத் திருடியவன் நன்னனாகத்தான் இருப்பான் என யூகிக்க முடிந்தது.எளிய வறிய மக்கள் அறிமுகமான பணக்காரர்களிடம் திருடுவது இயல்பான ஒன்றுதான்.

  • வளர்க்காத எலிகளின்… அங்கதப்பாணியில் வீட்டின் நிகழ்ச்சியை விவ்ரித்திருப்பது…தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணண் முத்திலிங்கம் அவர்களின் எழுத்து நடையைப் பற்றி ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தது சரியாகவே இருந்தது. இரக்கம் பார்த்து ஏமாந்துபோவோர்கள் மிகவும் அதிகம்.

  • ஐயா,
    ஆட்டுப்பால் புட்டு அருமை.ஒரு நிகழ்வு எத்தனை அழகாய் ஒரு கதையாக வடிவம் பெற்றது.நன்னன்,பாத்து, சிவப்பிரகாசம்,ஆடுகள் எல்லாம் உயிரோடு உலாவுகிறது படித்தபின் நெஞ்சில்.

    –. பொன்மனை வல்சகுமார்
    கன்னியாகுமரி மாவட்டம்

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta