ஒன்றைத் தொடு

 

 மகாபாரதத்தில் நச்சுப்பொய்கை ஒன்று வரும். பஞ்சபாண்டவர்கள் தண்ணீர் குடிக்க வரும்போது அந்த பொய்கையை காக்கும் யட்சன் கேள்விகள் கேட்பான். அதற்கு தருமர் புத்திசாலித்தனமான பதில்கள் சொல்லி தண்ணீர் குடிப்பதற்கு அனுமதி பெற்றுவிடுவார். அப்படி யாரும் இப்பொழுது கேள்விகள் கேட்பது இல்லை. என்னிடம் யாராவது உலகத்தில் அழகானது என்ன என்று கேள்வி கேட்டால் சொல்வதற்கு தயாராக ஒரு பதில் வைத்திருக்கிறேன். 'மகளும் மகளும் நடந்து வருவது.' அதனிலும் அழகான காட்சி உலகில் உண்டா?

 

என் மகளின் மகளுக்கு பெயர் அப்ஸரா. ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளிலிருந்து ஒரு மாற்றம் தெரிகிறது. பேன் ஓடுவதுபோல கால்களுக்கால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். பிடிபட்டால் கால்கள் காற்றில் ஓடுகின்றன. சமீபகாலமாக தீவிரமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுலபமான ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறாள். இரண்டு விரல்களை நீட்டுவாள். அதில் ஒன்றைத் தொடவேண்டும். நான் தொட்டேன். 'ஆ, இன்றைக்கு பால் குடிக்கத் தேவையில்லை' என்றாள். இன்னொருநாள் விரலை நீட்டினாள், நான் தொட்டேன். ' ஆ, என்னை முதுகில் காவிக்கொண்டு நீங்கள் மாடி ஏறவேண்டும்.' நான் தொடாமல் விட்ட மற்ற விரலில் என்ன ரகஸ்யம் ஒளிந்திருக்கிறது என்பதை என்னால் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாது.

முன்பு நான் பார்த்த ஒரு தமிழ் படத்திலும் கதாநாயகி அடிக்கடி இரண்டு விரல்களில் ஒன்றைத் தொடச் சொல்லி பெரும் பிரச்சினைகளை எல்லாம் சுலபமாகக் கடந்து செல்வார். ஒருமுறை யாரை மணப்பது என்பதில் சிக்கல். அவள் கோயிலில் பூக்கட்டி தொட்டு அதைத் தீர்த்தாள். பூவைத் தொடுவதும் விரலைத் தொடுவதும் ஒன்றுதான்.

ஆனால் சமீபத்தில் என்னை பார்க்க வந்த  தம்பதிகள் செய்ததுதான் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் என்னிடம் பேசியதிலும் பார்க்க தங்களுக்குள் பேசியதுதான் அதிகம். அடிப்பதும் கிள்ளுவதுமாக விளையாடினர்.
திடீரென்று அந்த இளம் நண்பர் என் பக்கம் திரும்பி இரண்டு விரல்களை நீட்டினார். உண்மையில் விரல்கள் கூரையைப் பார்த்து நின்றன. கனடாவில் ஒரு விரலை இப்படிக் காட்டினால் வசை என்பது பொருள். இரண்டு விரல்கள் என்றபடியால் இரட்டிப்பு வசையாக இருக்குமோ என்று நினைத்தேன். அப்படியில்லை. இவரும் அப்ஸராவைப்போல ஒரு விரலை தொடச் சொன்னார். நான் அதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தேன். தொட்டேன். 'என் மனைவி கர்ப்பம்' என்றார். நான் 'மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்' என்றேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் போனார்கள்.

அவர்கள் போனபிறகுதான் நான் யோசித்தேன். நான் மற்ற விரலைத் தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? தன்னுடைய மனைவி கர்ப்பம் இல்லை என்று சொல்லியிருப்பாரா? அல்லது என்னுடைய மனைவி கர்ப்பம் என்று சொல்லியிருப்பாரா?

யாராவது விரல் தொட்டுப் பார்க்கும் சாத்திரத்துக்கு தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும். உலகம் பெரும் புதிராக மாறிக்கொண்டு வருகிறது.

 
 
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta