கம்புயூட்டரின் வேகம்

 சில வேளைகளில் எதிர்பாராமல் எனக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிப்பதுண்டு. இந்த வருட பனிக்கால ஆரம்பத்தில்  வீட்டை சூடாக வைத்திருக்க தேவையான உலைக்கலன் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசீலிப்பதற்காக  வழக்கம்போல அதன் பராமரிப்பாளரை அழைத்தேன். அதிசயமாக அவர் அழைத்த அன்றே வந்தார். உலைக்கலனின் கீழே அதை வணங்குவதற்கு வந்தவர்போல படுத்திருந்தபடியே வேலை செய்தார். பின்னர் மல்லாக்காகப் படுத்து ஒவ்வொரு பகுதியாக நீக்கி ஆராய்ந்தார். தன் இடுப்பிலே கட்டியிருந்த ஆயுதத்தை எடுத்து சில இடத்தில் திருகினார். சில பகுதியை பிரித்து எடுத்து தூசி தட்டி மீண்டும் பொருத்தி உலைக்கலனை ஓடவிட்டார். அவர் முகம் திருப்தியடையவில்லை. பிறகு இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி தவழ்ந்து புழுதியோடு எனக்கு முன்னால் எழுந்து நின்றார். என்னுடைய சிறுநீர் பரிசோதனை முடிவை கேட்பதற்காக மருத்துவர் முன் நிற்பதுபோல நெஞ்சு படபடவென்று அடிக்கத் தொடங்கியது. ஒரு பிரார்த்தனையை விரைவாகச் சொல்லி முடித்துவிட்டு அவர் முகத்தை பார்த்தேன். அவர் 'உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது' என்றார்.

 

'முதலில் கெட்டதைச் சொல்லுங்கள்' என்றேன்.
'உங்கள் உலைக்கலன் பழுதாகிவிட்டது. நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றபடியால் என்னை இன்று கூப்பிட்டிருக்கிறீர்கள். அதை உடனே பழுது பார்க்காவிடில் அது கொலைக்கலனாக மாறிவிடும். எந்த நிமிசமும் விஷவாயுவை கக்கியிருக்கும். அதற்கு மணமும் இல்லை, நிறமும் இல்லை. நல்ல காலம் தப்பிவிட்டிர்கள்' என்றார். கீழ்ப்பாகத்தையும் மேல்பாகத்தையும் சேர்த்து தைத்த ஓர் உடையை அணிந்திருந்த அவர், உடுப்பிலே படிந்திருந்த தூசியை மூன்று விரல்களாலும் தட்டியபடியே என்னைப் பார்த்தார். 'பழுதுபட்ட உதிரிப்பாகத்தை மட்டும் மாற்ற முடியாதா?' என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.'மாற்றலாம், உத்திரவாதம் தரமுடியாது. முழுக்கலனையும் மாற்றினால்தான் சேமம்' என்றார்.
'என்ன விலை வரும்?' என்றேன்.
அவர் கூசாமல் '5300 டொலர்' என்றார். நான் முகத்தில் என்ன உணர்ச்சியை காட்டலாம் என்று தீர்மானிக்குமுன் 'நல்ல செய்தி ஒன்றும் இருக்கிறது. அதை நீங்கள் கேட்கவில்லையே' என்றார்.
'சொல்லுங்கள்' என்றேன்.
'நீங்கள் ஒரு புது உலைக்கலன் பூட்டினால் அரசாங்கம் உங்களுக்கு 1300 டொலர் திருப்பி தரும். உண்மையில் உங்கள் கைச்செலவு 4000 டொலர்தான்' என்றார்.
என் நண்பர் ஒருவர் அடிக்கடிசொல்வார், கத்தியை வயிற்றிலே ஐந்து அங்குலம் குத்திவிட்டு மூன்று அங்குலம் வெளியே இழுத்து சகாயம் செய்வதுபோல என்று.
வேறு வழியில்லாமல் சரி என்று நான் சொல்ல அவர் மூன்று நாட்கள் கழித்து வந்து ஒரு புது உலைக்கலனை பூட்டிவிட்டு முழுக்காசையும் பெற்றுக்கொண்டு போனார். பல நிறமான பத்திரங்களை நிரப்பி அவர் காட்டிய இடத்தில் கையெழுத்து வைத்து அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எனக்கு 1300 டொலர் திருப்பி அனுப்பும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மூன்று மாதமாகிவிட்டது. தெற்கே போன பறவைகள் வடக்கு நோக்கி வர ஆரம்பித்துவிட்டன. என்னுடைய காசோலை வரவில்லை. ஒருநாள் அரசாங்கத்துக்கு நினைவூட்டி மின்னஞ்சல் போட்டேன். உடனேயே பதில் வந்தது.
'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. எங்கள் இணையதளத்தில் போய் அதற்கான பாரத்தை இறக்கி நிரப்பி கையெழுத்து வைத்து அனுப்பவும். விரைவில் கவனிப்போம்.'
நான் அப்படியே மீண்டும் அதே பாரங்களை பூர்த்திசெய்து கையொப்பம் வைத்து அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.
மீண்டும் நினைவூட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கும் உடனே பதில் வந்தது.
'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. எங்கள் இணையதளத்தில் போய் அதற்கான பாரத்தை இறக்கி நிரப்பி கையெழுத்து வைத்து அனுப்பவும். விரைவில் கவனிப்போம்.'
எத்தனைதரம்தான் ஒரே பாரத்தை நிரப்பி அனுப்புவது; நான் அனுப்பவில்லை. பொறுத்திருந்தேன். ஒருநாள் பார்த்தால் தபாலில் எனக்கு 1300 டொலர் வந்து சேர்ந்தது. நான் கடிதம் எழுதினேன்.
'அன்புள்ள அம்மையாரே.
பணம் 1300 டொலர் காசோலை இன்று கிடைத்தது. மிக்க நன்றி'
அதற்கும் உடனே கம்புயூட்டரில் இருந்து பதில் வந்தது. 'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. ……'
அதற்குப் பிறகு நடந்ததைத்தான் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் ஒரு கடிதம் எழுதினேன்.
'அன்புள்ள அம்மையாரே,
உங்களை மணமுடிக்க விரும்புகிறேன்.'
'உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் குறிப்பிடும் விண்ணப்பம் கிடைக்கவில்லை. ……'

END 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta