வெடிகுண்டு நாய்

  இந்தச் செய்தியை நான் சமீபத்தில் படித்தேன். அதை எனக்குத் தோன்றியபடி கீழே தருகிறேன்.

 

என்னுடைய மகன் வசிக்கும் மாநிலத்தின் பெயர் மொன்ரானா. அமெரிக்காவில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலம் இது. ஆனால் இங்கே இயற்கை காட்சிகள் கொட்டிக் கிடக்கும். மலைகள், காடுகள், ஆறுகள் நிறைந்த பிரதேசம். அபூர்வமான பறவைகளும், விலங்குகளும் வன காப்பகங்களும் உள்ளன. பூச்சி வீசி மீன்பிடிப்பதற்கும், வனவிலங்கு வேட்டைக்கும், பனிச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர்போன இடம். மற்ற தேசங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வருடத்துக்கு நிறையப் பேர் வந்துபோவார்கள்.

இந்த மாநிலப் பொலீஸாருக்கு ஒரு வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய் தேவைப்பட்டது. பயிற்சி கொடுத்த ஒரு நல்ல நாயின் விலை 20,000 டொலர்கள். ஆனால் இஸ்ரேல் நாடு உபயோகத்தன்மை முடிந்துவிட்ட ஒரு நாயை இலவசமாகத் தருவதாகச் சொன்னார்கள். பொலீஸாரும் அதை வாங்கிவிட்டார்கள்.

ஆனால் அதை வாங்கிய பின்னர்தான் ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியாது. ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்தால்தான் செய்யும். ஒரு பொலீஸ்காரர் மினக்கெட்டு ஹீப்ரு வார்த்தைகளை பாடமாக்கி ஆணை கொடுத்துப் பார்த்தார். அப்பொழுதும் நாய் திரும்பி பார்க்கவில்லை. ஆகாயத்தை நோக்கி முகத்தை வைத்துக்கொண்டு துக்கமாக உட்கார்ந்திருந்தது.

மொன்ரானாவில் யூதர்கள் மிகமிகக் குறைவு. ஆகவே ஹீப்ரு மொழிபேசும் ஒருவரை அங்கே அபூர்வமாகவே காணமுடியும். அதிர்ஷ்டவசமாக யூத பாதிரியார் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்ததும் வெடிகுண்டு நாய் துள்ளித் துள்ளி அவர் கட்டளைகளை நிறைவேற்றியது. பொலீஸாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு பொலீஸ்காரர் பாதிரியாரிடம் சென்று ஹீப்ரு வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை படித்துக்கொண்டார். மூன்று மாதத்திலே நாய் பொலீஸ்காரரின் ஹீப்ரு கட்டளைகளை பட்பட்டென்று நிறைவேற்றியது.

மொன்ரானா மக்களுக்கு தங்கள் மாநிலத்துக்கு ஒரு வெடிகுண்டு நாய் கிடைத்ததில் மிகவும் சந்தோசம். பொலீஸ்காரருக்கு கட்டளைகள் கொடுப்பதில் சந்தோசம். நாய்க்கு கட்டளைகளை நிறைவேற்றுவதில் சந்தோசம்.

இந்த விவகாரத்தில் ஆகச் சந்தோசப்பட்டது யூத பாதிரியார்தான். அந்தப் பெரிய மாநிலத்தில் இவ்வளவு நாளும் பாதிரியாருக்கு ஹீப்ரு பேசுவதற்கு ஒரு நாயும் இருக்கவில்லை. இப்போது இருந்தது.

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta