காந்தியின் கடிதம்

 

'எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணமேனன் வந்திருக்கிறார்' என்றார் நண்பர்.
'எங்கள் வீட்டுக்கு சுபாஷ் சந்திரபோஸ் வந்திருக்கிறார்' என்றேன் நான்.
'எங்கள் வீட்டுக்கு விஜயலட்சுமிபண்டிட் வந்திருக்கிறார்' என்றார் நண்பர்.
'எங்கள் வீட்டுக்கு மவுண்ட்பேட்டன் வந்திருக்கிறார்' என்றேன் நான்.
எங்கள் வீட்டுக்கு நேரு வந்திருக்கிறார்' என்றார் நண்பர்.
'எங்கள் வீட்டுக்கு வின்ஸ்டன் சேர்ச்சில் வந்திருக்கிறார்' என்றேன் நான்.
'எங்கள் வீட்டுக்கு காந்தி வந்திருக்கிறார்' என்றார் நண்பர்.
'எங்கள் வீட்டுக்கு ஆறாம் ஜோர்ஜ் மன்னர் வந்திருக்கிறார்' என்றேன் நான்.

 

நான் சொன்னது எல்லாம் பொய்; நண்பர் சொன்னது அத்தனையும் உண்மை. நேற்று நண்பர் தான் சொன்னதை நிரூபிப்பதற்காக நாலாக மடிக்கப்பட்ட பொலிதீன் பையில் 16 கறுப்பு வெள்ளை புகைப்படங்களை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்திருந்தார். அந்த புகைப்படங்களில் காந்தி இருந்தார். நேரு இருந்தார். மற்றும் அவர் சொன்ன கிருஷ்ணமேனன், விஜயலட்சுமி பண்டிட் எல்லோரும் இருந்தனர். ஒரு படத்தில் நேரு இரண்டாக வளைந்து குனிய ஒரு சிறுவன் நேருவுக்கு மாலை அணிவிக்கிறான். அந்தச் சிறுவன் என் நண்பர்தான். இது போதாது என்பதுபோல சாணித்தாள் கடித உறையில் பாதுகாத்து வைக்கப்பட்ட தபால் அட்டை ஒன்றை நண்பர் வெளியே எடுத்தார். அது காந்தி அவருடைய தாத்தாவுக்கு எழுதியது. என் நண்பருடைய பெற்றோர் மணமுடித்தபோது அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்துத்தான் அந்தக் கடிதம். காந்தி தன்னுடைய கையெழுத்தில் தம்பதிகளை வாழ்த்துகிறார். தேதி 8 டிசெம்பர் 1934, சரியாக 75 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் ஒரு வரி இப்படி வருகிறது. 'தம்பதிகளுக்கு, நீண்ட மகிழ்ச்சியான சேவை வாழ்க்கை அமையட்டும்.' வாழ்த்து அட்டையிலும் காந்தி சேவையைப் பற்றியே பேசுகிறார்.

காந்தி அவருடைய புகழ்பெற்ற பச்சை மையினால் எழுதியிருக்கிறார். முகவரியும் அவருடைய கையெழுத்தில்தான் இருக்கிறது. பெறுநரின் பெயரை எழுதும்போது சிறீ என்ற அடைமொழியையும் சேர்த்துக்கொள்கிறார். அதன் பின்னர் வீட்டு எண்ணை எழுதி, வீதியின் பெயரையும் எழுதி கீழே கொழும்பு என்று எழுதி முடிக்கிறார். அவ்வளவுதான்.  அவருடைய காரியதரிசி மகாதேவ் தேசாய் 'சிலோன்' என்று கறுப்பு மையினால் எழுதி விலாசத்தை பூர்த்திசெய்கிறார்.

காந்தியின் சிக்கனம் உலகறிந்தது. அவரையும் மிஞ்சுவார் மகாதேவ் தேசாய். அவர் 50 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து திடீரென்று தாக்கிய இருதய நோயில் இறந்துபோனவர். தேசாய் வாழ்ந்த 50 வருடங்களில் சரி பாதியை, 25 வருடங்கள், காந்திக்கு பக்கத்து பக்கத்தில் இருந்து காந்தியின் தேவைகளைக் கவனிப்பதில் செலவழித்தார். தபால் அட்டையின் பின்பக்கம் வீணாக வெறுமையாக இருக்கிறது. தேசாயும் ஒரு வாழ்த்தை அந்த வெற்று இடத்தில் எழுதி நிரப்பி அனுப்புகிறார். கறுப்பு மையில் எறும்பின் கண்களிலும் பார்க்க சிறிய எழுத்துக்களில் அட்டையின் ஓர் ஓரத்தில் இருந்து மறு ஓரம் வரைக்கும் குறுக்கி குறுக்கி நீண்ட கடிதம் எழுதி நிரப்புகிறார். அதில் டெலிப்பதி பற்றியும் வருகிறது. 'நீங்கள் கடிதம் எழுதிய அதே நாள் நானும் உங்களுக்கு கடிதம் போட்டிருக்கிறேன். கடிதம் கிடைத்ததா? இருவரும் ஒரே சமயம் மற்றவரைப் பற்றி சிந்தித்திருக்கிறோம். நீங்கள் என்னை மறக்காதபோது நான் எப்படி உங்களை மறக்கமுடியும்.'

இரண்டு பக்கங்களிலும் இரண்டு நிற மைகளினால் எழுதப்பட்ட இரண்டு வாழ்த்துக்களை காவியபடி அந்த  முக்கால் அணா தபால் அட்டை 1200 மைல்கள் பிரயாணம் செய்தது. இன்று வாழ்த்து அனுப்பிய இருவரும் இல்லை. யாருக்காக வாழ்த்துகள் அனுப்பப்பட்டனவோ அவர்களும் இல்லை. காந்தியின் பச்சை மையும் தேசாயின் கறுப்பு மையும் பக்கத்து பக்கத்தில் அவர்கள் அன்று இருந்ததுபோல இன்றைக்கும் சீவித்திருக்கின்றன.

 
 
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta