சலவை

வாரத்தில் இரண்டு தடவை நான் அங்கு செல்வேன். இடத்தின் பெயர் மேஃபிளவர் உலர் சலவைக்கூடம். என்னுடைய ஊத்தை உடுப்புகளைக் கொடுத்துவிட்டு சலவை செய்த துணிகளை மீட்டுப் போவதுதான் வேலை. அன்றும் அப்படித்தான் சென்றேன். நான் அணுகியதும் காத்திருந்த கறுப்புக் கதவு காட்டு மிருகம்போல ஆவென்று வாய் பிளந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. வெளியே இருந்து என்னோடு கூட வந்த குளிர் காற்றும் உள்ளேயிருந்த சூடான காற்றும் கணத்தில் கலந்துகொண்டன. மிகத் திருத்தமாக ஆடையணிந்திருந்த சீனப் பெண் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று பெரிய பற்களைக் காட்டி சிரித்தாள். தலைமுடியில் வெள்ளைக்கோடு ஒப்பனை செய்திருந்தாள். நான் சலவைச் சீட்டை அவளிடம் நீட்ட முன்னரே ஒரு பொத்தானை அமுக்கினாள். சலவை செய்த உடுப்புகள் தொங்கிய ராட்டினம் உயிர் பெற்று சுழன்று வந்து, என்னுடைய பெயர் தாங்கிய உடுப்புகள் அவளுக்கு முன் வந்ததும் நின்றது. ஒரு பயிற்சி பெற்ற பணிவான நாய்போல அந்த ராட்டின மெசின் வேலை செய்தது. அவள் நின்றபடியே எட்டி என்னுடைய உடுப்புகளை எடுத்து தந்துவிட்டு நான் கொடுத்த வங்கியட்டையை உரசி காசை வரவு வைத்தாள். நான் எடுத்துப்போன ஊத்தை உடுப்புகளுக்கு கணக்குப்போட ஆரம்பித்தாள்.
‘உங்கள் பெயர்?’
’நான் பத்து வருடங்களாக உங்களிடம் சலவைக்கு உடுப்புகள் போடுகிறேன். இன்னும் என்னுடைய பெயர் தெரியாதா?’ என்றேன்.
சீனப்பெண் மெல்லிய உதடுகளை விரித்து முதலில் சிரித்தாள். அவள் இமை வெட்டியபோது சற்று அதிகமாக கண்களை மூடித் திறந்தாள். அவளுடைய உதட்டுச் சாயம் வழிந்து பல்லிலும் ஒட்டியிருந்தது. ‘எங்களுக்கு ஆயிரம் வாடிக்கையாளர்கள். அத்தனை பெயரையும் நினைவில் வைக்கமுடியுமா?’
‘எப்படி நான் கதவைத் திறந்து வந்ததும் சரியாக என்னுடைய பெயரை பொத்தானில் அமுக்கினீர்கள்?’
’உங்கள் பெயரை அமுக்குவதா? அப்படி நீளமான ஒரு பெயரை நான் கண்டதில்லை. அதை எழுதத் தொடங்கினால் ஒற்றையின் ஒரு ஒரத்தில் துவங்கி அடுத்த ஓரத்தில்தான் நிற்கிறது. நான் பெயரின் முதல் எழுத்தைத்தான் மெசினில் அமுக்கினேன். இங்கே வரும் வாடிக்கையாளர்களின் முதல் எழுத்து எனக்குப் பாடம்.’
’என் முதல் பெயர் நாலே நாலு எழுத்துக்கள்தான். ஒரு வருடத்திற்கு ஓர் எழுத்து என்று பாடமாக்கினாலும் நாலு வருடத்தில் என் பெயரை மனனம் செய்துவிடமுடியுமே.’
’அப்படி திறமான மூளை என் தலையில் வைக்கப்படவில்லை. வருடத்துக்கு ஓர் எழுத்து இல்லை. ஆயிரம் வாடிக்கையாளர்கள், ஆகவே ஆயிரம் முதல் எழுத்துக்கள். அது சரி, எதற்காக நான் வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைக்கவேண்டும்? வருமான வரியில் ஏதாவது கழிவு கிடைக்குமா?’
‘அது தெரியாது. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. ஏதோ தோன்றியது, கேட்டேன்’ என்றேன். சம்பாசணை இத்துடன் நின்றிருக்கலாம். அடுத்து வந்த பகுதிதான் எதிர்பாராதது. அவள் கேட்டாள். ‘நீங்கள் பத்து வருடமாக என்னிடம் சலவை செய்ய வருகிறீர்கள். உங்களுடைய இடுப்பு சைஸ் இரண்டுதரம் அகலம் கூடி மாற்றமடைந்து விட்டது. பழைய உடுப்புகள் மறைந்து புதிய பல உடுப்புகள் வாங்கிவிட்டீர்கள்? என்னுடைய பெயர் என்ன, சொல்லுங்கள்?’
சும்மா இருக்க ஏலாமல் வாய் கொடுத்து அவளிடம் மாட்டிவிட்டேன். என்றாலும் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ’மிங் லீ’ என்று  சொன்னேன்.
‘அட, சரியாக இருக்கிறதே. முதல் பெயர் பிழை. ஆனால் கடைசிப் பெயர் சரி’ என்றாள்.
சீனப் பெயரில் எங்காவது ஒரு லீ இருக்குமென நான் நினைத்தது சரிதான்.
END

  

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta