ஜன்ம சாபல்யம்

என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சி பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. ஆனால் என் வீட்டின் ஒரு மூலையில் இருந்து பல வருடங்களாக தன் காரியத்தை சரியாகச் செய்தது இந்த தொலைக்காட்சி பெட்டி. ஒரு ஐந்து வயதுக் குழந்தை டிவியின் முன்னால் நின்றால் அது முழுவதுமாக மறைந்துவிடும். அவ்வளவு சின்னது ஆனாலும் சளைக்காமல் வேலை செய்தது.

தொலைக்காட்சியில் பல ஆங்கில சானல்களும் நாலு தமிழ் சானல்களும் இருந்தன. தமிழ் சானலில் எதைப் போட்டாலும் ஓரு பாட்டுப் போட்டி அல்லது நடனப் போட்டி அல்லது இரண்டும் நடந்துகொண்டிருக்கும். ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு எழும்பினேன். வெளியே பனிப்புயல் அடித்துக்கொண்டிருந்தது. சரி, என்னதான் நடக்கிறது என்று தொலைக் காட்சியை இயக்கியபோது அங்கே ஒரு சங்கீத யுத்தம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலை மறுபடியும் போட்டுப் பார்த்தேன். அப்போதும் ஒரு சங்கீதப் போட்டி நடந்தது. மூன்று பிரபலமான பாடகர்கள் நடுவிலே உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை சங்கீதப் போர்களை ஒருவர் கேட்கமுடியும்? காலையில் இருந்து இரவு படுக்கும் வரை அவை என்னைத் துரத்தின. சில சமயங்களில் என்னுடைய டிவி தானாகவே அவஸ்தை தாங்கமுடியாமல் நின்றுவிடும். தலையில் ஒரு தட்டு தட்டியவுடன் மறுபடியும் ஆரம்பிக்கும். எல்லாமே சினிமாப் பாடல்கள். சிவாஜி காலத்தில் ஆரம்பித்து ரஜினியின் சிவாஜிவரை தொடர்ந்தன. எத்தனை வகையான பாடல்கள் இருக்கின்றனவோ அத்தனை பாடல்களும் அத்தனை குரல்களில் அத்தனை பிழைகளுடன் பாடப்பட்டன. இவைகளைக் கேட்கும்போது எத்தனை வகையான பிழைகள் இருக்கின்றன என்ற அறிவு எனக்கு கூடிக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் விளம்பர இடைவேளைகள் வந்தபோது அவசரமாகப் போய் என் வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். பின்னொரு கட்டத்தில் அவர்கள் பாடும்போதும் போய் என்னுடைய அலுவல்களை முடித்துவிட்டு வந்து நடுவர்களின் தீர்ப்பு கட்டம் வரும்போது அவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் கருத்துகளும் தீர்ப்புகளும் சுவை குறையாமல் இருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஏதாவது ஒரு புதுவிதமான குறையை கண்டுபிடித்து சொன்னார்கள். அந்தப் பாடகரின் முகம் சரிந்து போவதை பார்ப்பதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது தெரிய வந்தது.

மூன்று நடுவர்களில் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டு இருப்பார். என்ன எழுதுகிறார் என்பது தெரியவில்லை. அவருடைய கருத்தை சொல்லும் முறைவரும்போது ஒன்றிரண்டுவரிகளில் பேசி முடித்துவிடுகிறார். இவர், வேறு யாரோ காசு கொடுத்து கிடைக்கும் நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை எழுதுகிறாரோ என்னவோ. மற்றவர் ஒரு பெண். ஒரு காலத்தில் பிரபலமான பாடகியாய் இருந்தவர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சேலை உடுத்தி புதிய நகை அணிந்து புதிய ஒப்பனையுடன் வீற்றிருப்பார். ஒட்டியாணம் மட்டும் கிடையாது, ஆசை இருந்தது ஆனால் அவர் இடுப்பளவு ஒட்டியாணம் கடைகளில் கிடைக்காது என நினைக்கிறேன்.  புகைப்படத்துக்கு சிரிப்பது போல புன்னகையுடன் எந்நேரமும் காட்சியளிப்பது அவர் வழக்கம். இவர் ஒருவர்தான் போட்டியாளர் எவ்வளவு மோசமாக பாடினாலும் தலையை ஆட்டி தாளம்போட்டு ரசித்தபடி இருப்பார்.

மூன்றாவது நடுவர் ஏன் அங்கே உட்கார்ந்திருக்கிறார் என நான் குழம்பிப்போய் இருக்கிறேன். நாலு பேர் இவரை இழுத்துப் பிடித்து  வந்து உட்காரவைத்தது போல உட்கார்ந்திருப்பார். அவருடைய உடம்பும் மூளையும் அங்கே இல்லை. கைகள் இரண்டையும் மேசையில் ஊன்றிப் பிடித்தபடி எந்த நேரமும் எழும்பி ஓடுவதற்கு தயாரானவர் போலவே காட்சியளிப்பார். சிரிப்பதற்கு பத்து தடவை யோசிப்பார். ஆனால் தற்செயலாக அவர் கவனத்தை ஈர்க்கும்விதமாக ஏதாவது வேடிக்கையாக நிகழ்ந்துவிட்டால் மனிதர் தலையை மேசையில் குனிந்து குனிந்து அடித்து சிரிப்பார்.

நான் என்ன வேலையில் இருந்தாலும் நடுவர்கள் சொல்லும் தீர்ப்புகளைக் கேட்க தொலைக்காட்சிக்கு முன்னால் வந்துவிடுவேன்.

நடுவர்களின் பழக்கம் என்னவென்றால் முதல் இரண்டு நிமிடங்களும் பாடியவரை புகழ்ந்து தூக்குவார்கள். பின்னர் தள்ளிவிடுவார்கள். அன்றைக்கு பாடிய பையனின் பெயர் சுரேஷ். வயது இருபதை தாண்டாது. முழங்கால்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து உத்தமபுத்திரனில் சிவாஜி நடந்துவருவதுபோல அசைந்து வந்து மேடையின் நடுவில் நின்றார். அவரிடம் y குரோமசோம்கள் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டன.  மைக்கை எடுத்துப் பிடித்தவகையில் ஏதோ புதுசாக வரப்போகிறது என்று நினைத்தேன்.  ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் ஒன்று436வது தடவையாக அந்த மேடையில் அரங்கேறியது. மாட்டிலே பால் கறப்பதுபோல ஒரு கையை மேலேயும் கீழேயும் ஏற்றி இறக்கி பாடினார். பாத்திரம் நிறைந்ததும் பாட்டும் முடிந்தது.  நடுவர் பெண் சொன்னார். ‘சுரேஷ், மிக அழகாகப் பாடினீர்கள். உங்கள் குரல் இந்தப் பாட்டுக்கு என்று செய்ததுபோல பொருத்தமாக அமைந்துவிட்டது. அங்கங்கே சுருதி கொஞ்சம் பிசகிவிட்டது. சரணத்துக்கு வந்தபோது தாளமும் இப்படியப்படி தவறிவிட்டது. தமிழ் சொற்கள் உச்சரிப்பை உருண்டையாக்குங்கள். அதில் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம்.. மற்றும்படிக்கு மிக அழகாக render பண்ணியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.’

அவரைத் தொடர்ந்து நோட்டுப் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கும் நடுவர் சொன்னார். ‘உங்கள் குரல் ஆட்களை மயக்கவல்லது. அப்படி ஒரு கவர்ச்சி இருக்கிறது. நான் நடுவராக இருப்பதால் ஏதாவது சொல்வதற்காக சொல்லவில்லை. உங்கள் பாட்டு excellent ஆக இருந்தது. நீங்கள் பயிற்சி செய்தால் சின்னச் சின்ன பிழைகளைக் களைந்துவிடலாம். முக்கியமாக தாளத்தோடு இணைந்து பாடுவது, அது பல இடங்களில் தனியாகப் போய்விட்டது. ஆனால் சங்கதிகள் எல்லாம் amazing. சினிமாவில்கூட இந்தச் சங்கதிகள் இத்தனை அழகோடு வெளிப்படவில்லை.’

வேண்டா வெறுப்பு நடுவர் முகத்தில் முதல் தடவையாக ஒரு புன்னகை தோன்றியது. இருப்பதில் ஆகச் சின்ன சில்லறைக் காசை எடுத்து பிச்சைக்காரனுக்கு எறிவதுபோல சொன்னார். ‘சுரேஷ், அருமையான பாட்டுத் தெரிவு. இப்படியான போட்டிகளில் உங்கள் குரலுக்கு ஏற்ற பாடலை தெரிவு செய்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். கண்ணை மூடிக்கொண்டு கேட்டபோது எஸ்.பி.பி பாடியதுபோலவே இருந்தது. உங்கள் பிரச்சினை என்னவென்றால் மேடையில் நிற்கும்போது உங்களுக்கு வேண்டாத டென்சன் வந்துவிடுகிறது. ஒரு பரீட்சைக்கு பாடுவதுபோல பாடுகிறீர்கள். அதுதான் எதிர்பாராதஇடங்களில் சறுக்குகிறது.’ அவர் பாராட்டினாரா அல்லது அதற்கு எதிரானதைச் செய்தாரா தெரியவில்லை.

அடுத்து ஒரு பெண் பாடுவதற்கு வந்தாள். சாரியும் இல்லை. சுரிதாரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வகையான உடை. மார்பில் பச்சை குத்தியிருந்தாள், அதில் பாதி வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்தது. முழுவதையும் பார்க்கும் ஆசையையும் தூண்டியது. தோள் மூட்டிலும் பச்சை குத்தியிருந்தார். கண் மடல்களில் பூசியிருந்த இளஞ்சிவப்பு பூச்சு அவர்  கண்களை மூடியபோதெல்லாம் தெரிந்தது. கண்களைத் திறந்ததும் மறைந்துபோனது.பிரபலமான குத்துப் பாட்டு ஒன்றை ஆரம்பித்தார். பாடினார், குதித்தார் பின்னர் ஆடினார். பாட்டின் இறுதியில் நோட்டு புத்தகம் எழுதும் நடுவரும் எழுந்து மேடைக்குச் சென்று அவருடன் ஆடினார். அவரால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய இருக்கைக்கு திரும்பியதும் பரபரவென்று ஏதோ எழுதினார்.

பாட்டு முடிந்ததும் வழக்கம்போல நடுவர்களின் தீர்ப்பு நேரம். நடுவர் பெண்மணி சொன்னார். ’நீங்களும் நல்லாகப் பாடினீர்கள். சும்மா இருப்பவரையும் எழும்பி ஆட வைக்கும் பாட்டு. அது இசை அமைத்தவரின் திறமை. சரியான இடங்களில் பாட்டின் உணர்ச்சிகள் வெளிப்படவேண்டும். அது பாடகர் செய்ய வேண்டிய வேலை. அது எல்லாம் நல்லாய் வந்திருக்கிறது. ஆனால் dynamics போதாது. மேடையில் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது. உங்களுக்குள் இருக்கும் முழுத் திறமையும் வெளியே வரவில்லை.’

மற்ற நடுவரும் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார். ’ரொம்ப அருமை. ஆனால் feelings பற்றாது. இன்னும் கொஞ்சம் பாடலுக்கு உள்ளே போயிருக்கலாம். எனக்கு என்னவோ ஒரு ஸ்கேல் மேலே பாடியிருக்கலாமோ என்றுகூட படுது.’ வேண்டா வெறுப்பு நீதிபதி ஒரு குண்டை தூக்கி போட்டதுபோல சொன்னார். அந்தப் பெண் அவ்வளவு துள்ளியதும், பாடியதும், நெளிந்ததும் நடுவரை கொஞ்சமும் அசைக்கவில்லை. வழக்கம்போல பாடியவரை இரண்டு நிமிடம் புகழ்ந்த பின்னர் இப்படிச் சொன்னார்.

‘என்ன அம்மா, இந்த தடவையும் அபஸ்வர கிரீச்சிடல் வந்துவிட்டதே. போனதடவை இனிமேல் வராது என்று சொன்னீர்கள். சரி, அது கிடக்கட்டும். நீங்கள் தமிழ்தானே. எதற்காக ஹிந்திக்காரர் தமிழ் உச்சரிப்பதுபோல நீங்கள் உச்சரிக்கவேண்டும். இது ஹிந்தி பேசும் ஒருவர் பாடிய தமிழ் பாட்டு. ஆகவே நீங்களும் அவர்விட்ட பிழைகளை விடத்தேவையில்லை. உங்கள் மூளை சொல்வதை உங்கள் வாய் கேட்க மறுக்கிறது. மேலே போகும்போது நிதானத்துடன் போகும் நீங்கள் கீழே வரும்போது glide பண்ண வேண்டும். மேடையில் குதிப்பது வேறு. பாடும்போது குதிக்க முடியாது. மெதுவாக கீழே இறங்கவேண்டும்.’ பெண்ணுக்கு கண்கள் பளபளத்தன. அடிக்கடி மென்சிவப்பு கண்களை வெட்டி நீரைத் தடுக்கப் பார்த்தார்.

இப்படி நடுவர்களின் பிரசங்கங்களை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தபோது நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. என்னுடைய டிவிப்பெட்டி என்ன நினைத்ததோ அதிலிருந்து ஒலி வந்தது. ஆனால் படம் இல்லை,கோடுகள் மட்டும் ஓடின. ஒரு பெண் பாடினார், பாட்டுக் கேட்டது. பெண்ணைத் தெரியவில்லை. நான் தொடர்ந்து டிவிப் பெட்டியில் கோடுகளைப் பார்த்தபடி பாடலைக் கேட்டேன். பாட்டு முடிந்ததும்நடுவர்கள் ஒவ்வொருவராக பேசத்தொடங்கினர். குரலில் இருந்து என்னால் யார் பேசுகிறார் என்பதை ஊகிக்க முடிந்தது.

முதலில் நோட்டுப் புத்தகம் எழுதுகிறவர் பேசினார். ‘எல்லாம் தட்டையாக இருந்தது. மகிழ்ச்சியாகப் பாடவேண்டிய பாட்டை நீங்கள் எப்படியோ சோகமயமாக மாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு இன்னும் நிறையத் தூரம் இருக்கிறது.’ அந்தப் பெண்ணினுடைய முகம் எப்படி வாடிப் போயிருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. டிவியில் கோடுகள்தான் தெரிந்தன. புன்னகை நடுவர் பேசினார். ‘பல்லவி பாடியபோது நல்ல பயிற்சி தெரிந்தது. ஆனால் அப்புறம் என்ன நடந்தது? உங்களுடைய சொந்தச் சங்கதிகளை நீங்கள் வைக்கலாம் ஆனால் ஒரு பிரபல பாடகரின் பாடலை எடுத்துப் பாடும்போது அவர் பாடிய சங்கதிகளில் ஒன்றாவது உங்கள் பாட்டில் வந்திருக்கலாமே என்றுபட்டது.’

வேண்டா வெறுப்பு நடுவர் ஆரம்பித்தார். அவர் முகம் பேசும்போதுஎப்படியிருக்கும் என என்னால் கற்பனை செய்ய முடிந்தது. ’மைதிலி, உங்களுக்கு என்ன நடந்தது? எத்தனையோ தடவை எங்களுக்கு முன் நின்று பாடிய பிறகும் உங்களுக்கு மேடை பயம் வந்துவிட்டதே. இந்தச் சனங்களை மறவுங்கள். நடுவர்களை மறவுங்கள். நீங்கள் பாத்ரூமுக்குள் பாடுவதை கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு மாத்திரமே நீங்கள் பாடுகிறீர்கள். எல்லோரையும் இப்போது மறந்துவிட்டீர்களா? ‘ஆம், மறந்துவிட்டேன்.’ ‘இப்போ எங்கே நிற்கிறீர்கள்?’ ’பாத்ரூமுக்குள்.’

‘சரி, அந்தச் சரணத்தை ஒருக்கால் பாடுங்கள்.’ அவர் பாடினார்.

’திறந்து பாடுங்கள். திறந்து பாடுங்கள், அம்மா. இல்லை, இல்லை. ஐயோ தொண்டையை  திறந்து பாடுங்கள்.’

இப்பொழுது சத்தமும் இல்லை. படமும் இல்லை. டிவி ஒரேயடியாக வாழ்க்கையை முடித்துக்கொண்டது.

குறுந்தொகையில் ஒரு தலைவி ‘கண்டனையோ, கண்டார்க் கேட்டனையோ’ என்று புலம்புவாள். கனடாவில் 300,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அன்று அந்த நிகழ்ச்சியை 30,000 பேராவது பார்த்திருப்பார்கள். அந்தப் பெண் என்ன செய்தாள் என்பதை நான் பார்க்கவில்லை. பார்த்தவர்களும்  சொல்லவில்லை. அது தெரியாவிட்டால் எனக்கு தலை வெடித்துவிடும். தெரிந்தால்ஜன்ம சாபல்யம் அடைவேன்.

END

 

 

 

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta