தீயோர் உலகம்

நான்இன்றுபொஸ்டனில் ஒருவிஞ்ஞானியைசந்தித்தேன்.  ரகஸ்யமான  ஆராய்ச்சிஒன்றில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடையஆய்வுநிறுவனம் பலபாதுகாப்புஅடுக்குகளைக்கொண்டது என்றும்,அங்கே வேலைசெய்யும்விஞ்ஞானிகளைத்தவிரவேறுயாரும் உள்ளே  நுழையமுடியாது என்றும் அவர் கூறினார். நிறுவனத்தின்தலைவர்கூடஉள்ளேசெல்லமாட்டார்.  30 உயர்தரவிஞ்ஞானிகளுக்குமட்டும்தான்அனுமதி உண்டு.

 

விஞ்ஞானிகள்முதல்காவல்அரணைபாதுகாப்புஅட்டையைஉரசிதாண்டுவார்கள்.  அதற்குப்பின்னர்இரண்டாவதுஅடுக்கில்  ரகஸ்யகடவுஎண்ணைக்கொடுத்தும்,  மூன்றாவதில்கைரேகையை உறுதிசெய்த பின்னரும்தான்  உள்ளேஅனுமதிக்கப்படுவர்.  விஞ்ஞானிகளுக்குவேலைநேரம்இல்லை. எப்பொழுதுவேண்டுமென்றாலும்வரலாம், போகலாம். எவ்வளவுநேரம்வேண்டுமென்றாலும்தொடர்ந்துவேலைசெய்யலாம். 24 மணிநேரமும்ஓய்வில்லாமல்வேலைசெய்யும்விஞ்ஞானிகளும்இருந்தார்கள். குளிக்காமல்,உடுப்புமாற்றாமல்ஆய்வுக்கூடமே கதி என்று கிடப்பவர்களும்உண்டு. அவர்களுக்குசனி, ஞாயிறுஇல்லை, விடுமுறைகள்இல்லை. திடீரென்றுயாராவதுஇரவுஇரண்டுமணிக்குஆய்வுக்கூடத்துக்குள்நுழைந்துபார்த்தால்4, 5 விஞ்ஞானிகளாவதுவேலையில்ஆழ்ந்துபோய்இருப்பதைக் காணலாம்.

 

ஒவ்வொருவிஞ்ஞானியும்தனிப்பட்ட ஓர் ஆராய்ச்சியில்ஈடுபட்டிருப்பார். ஒருவர்என்னதுறையில்வேலைசெய்கிறார்என்பதுமற்றவருக்குதெரியாது. அத்தனைரகஸ்யமாகஆராய்ச்சிகள்நடந்தன. சிலவேளைகளில்ஒருவர்இன்னொருவரைகலந்துஆலோசிப்பதுஉண்டு. ஆனால்ஆராய்ச்சியின்திசையும்,கிடைக்கும்பெறுபேறுகளும்

ஆராய்ச்சிசெய்யும்விஞ்ஞானிக்குமட்டுமேவெளிச்சமானஒன்று.

 

நான் சந்தித்து பேசிய மனிதரை முதலில் பார்த்தபோது இவர் விஞ்ஞானியாக இருக்கலாம் என்று ஊகித்தேன். அது சரியாகிப் போனது. விஞ்ஞானிகளுக்கென்று ஒரு தோற்றம் இருந்தது. அவர் தாடி வைத்து, முழங்கையில் தோல் தைத்த கோட் ஒன்றை அணிந்திருந்தார். கடல் நிறத்தில் ஊடுருவும் கண்கள். புஜங்கள் இரண்டும் முன்னே தள்ளி எங்கோ புறப்படத் தயாரானதுபோல இருந்தன. பழைய புத்தக மணம் அவரிடமிருந்து வீசியது. புருவங்கள் கீழிறங்கி கண்களை மறைத்தன. மகாபாரதத்தில் பகதத்தன் என்ற கிழட்டு வீரன் கீழே விழும் புருவத்தை துணியினால் இழுத்துக் கட்டியிருப்பான் என்று படித்தது ஞாபகத்துக்கு வந்தது.

 

சில நாட்களுக்கு முன்னர் அவர் வேலை செய்யும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த சம்பவத்தை அவர் விவரித்தபோது எனக்கு வியப்பாகிப்போனது. ஒரு விஞ்ஞானியை பற்றிய சம்பவம் ஆனால் அவர் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார். ஆகவே டேவிட் என்று ஒரு பெயரை வசதிக்காக சூட்டுவோம். டேவிட் ஆறு வருடங்களாக மிக முக்கியமான ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மற்றைய விஞ்ஞானிகளுக்கு அதன் நுட்பமான விவரங்கள் தெரியாது ஆனால் மேலோட்டமாக என்ன திசையில் அவருடைய ஆராய்ச்சி செல்கிறது என்ற கணிப்பு இருந்தது.

 

டேவிட்டின் ஆராய்ச்சி இறுதி நிலையை நெருங்கியதால் ஆய்வுக்கூடத்தில் கொஞ்சம் பரபரப்பு நிலவியது. ஆராய்ச்சி முடிவுகள் சாதகமாக அமையும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். டேவிட்டுக்கும் ஆராய்ச்சி வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அது வெற்றி பெற்றால்  உலகத்தில் பத்தில் ஒருவருக்கு பயனுள்ளதாக அமையும். காரணம் அது நோய் தீர்க்கும் ஆராய்ச்சி. உலகத்தில் பத்தில் ஒருவர் அந்த நோயினால் துன்புற்று வருகிறார்கள். நான் என்ன நோய் என்று கேட்டபோது விஞ்ஞானி அதற்கும் மறுமொழி சொல்ல மறுத்துவிட்டார். டேவிட்டின் ஆராய்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டால் அவருக்கு உலகப் புகழ் வந்து குவியும். நோபல் பரிசுகூட கிடைக்கலாம். டேவிட்டுடன் வேலை பார்த்த ஏனைய விஞ்ஞானிகள் அவர் தன் முடிவுகளை வெளியிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

 

ஒருநாள் டேவிட் இரவு இரண்டு மணிவரை வேலைசெய்தார். பின்பு வீடுபோய் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் காலை வழக்கம் போல ஏழு மணிக்கு ஆய்வுக் கூடத்துக்கு வந்தார். தன்னுடைய அறைக்குள் நுழைந்த அவர் அப்படியே அதிர்ச்சியுற்று நின்றார். அவருடைய அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிடந்தது. யாரோ வேண்டுமென்று வயரை இணைப்பிலிருந்து உருவி விட்டிருந்தார்கள். எச்சரிக்கை மணியும் செயலிழந்திருந்தது. அவர் ஆறு வருடகாலமாக வளர்த்த உயிரிகள் எல்லாம் இறந்து போயிருந்தன. இனிமேல் ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியாது, மறுபடியும் முதலில் இருந்து தொடங்குவதுதான் ஒரே வழி. இன்னொரு ஆறு வருடம் அவர் வாழ்நாளை இதற்காக அர்ப்பணிக்க வேண்டும்.

 

இணைப்பு துண்டிக்கப்பட்ட காரணத்தை டேவிட்டால் ஓரளவுக்கு ஊகிக்கமுடிந்தது. இந்த நாச வேலையை வெளியிலிருந்து உள்ளே நுழைந்து யாரோ செய்யவில்லை. விஞ்ஞான அறிவை ஓர் அலகு முன்னே நகர்த்துவதற்காக  இரவு பகலாக அவருடன் சேர்ந்து பாடுபடும் 29 விஞ்ஞானிகளில் ஒருவர் இதைச் செய்திருக்கிறார். அவரால்  நம்பமுடியவில்லை. அவருடைய ஆராய்ச்சி பாழாகிப் போன துயரத்திலும் பார்க்க ’டேவிட் புகழ் அடைந்து விடுவாரே, உலகம் அவரை பாராட்டப் போகிறதே’ என்று பொறாமையில் புழுங்கி ஒரு சகவிஞ்ஞானி சதி வேலையில் ஈடுபட்டது அவர் மனதை புண்படுத்தியது.  அன்று முழுக்க தலையில் கைவைத்தபடி குனிந்து தரையை பார்த்துக்கொண்டே டேவிட் இருந்தார். யாராலும் அவரை அணுகமுடியவில்லை.

 

இந்தக் கதையை கூறிவிட்டு விஞ்ஞானி தான் அந்த நிறுவனத்திலிருந்து விலகப்போவதாகச் சொன்னார். அந்த முப்பது விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர். ‘நாங்கள் எல்லோரும் அறிவியலில் புதிதாக ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் வெற்றிபெற முடியாது. சமீபத்தில் ஒருவர் வேலையிலிருந்து இளைப்பாறினார். அவர் முப்பது வருட காலமாக தொடர்ந்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு வருடம் மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒருவர் பெரும் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தலாம். ஓர் உண்மையான விஞ்ஞானி இன்னொருவருக்கு கிடைக்கும் வெற்றியை தன் வெற்றிபோல கருதி மகிழ்வார். பொறாமையால் புழுங்கும் ஒரு விஞ்ஞானியின் பக்கத்தில், அவர் யாரென்று தெரியாவிட்டாலும்கூட,  என்னால் வேலை செய்யமுடியாது’ என்றார்.

 

‘யாரோ ஒருவருக்காக உங்கள் ஆராய்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு போகமுடியுமா?’ என்று அவரிடம் கேட்டேன்.

 

அவருடைய தாடி துடித்தது. சொண்டுகளைக் கடித்தார். மௌனமாக்கப்பட்ட செல்பேசி உறுமுவதுபோல உறுமினார். ‘சாதாரணமான அவமானமா? எத்தனை பெரிய இழப்பு? எத்தனை பெரிய சதி? ஒரு மனிதனுடைய சதி அல்ல. இது மனித குலத்துக்கு எதிரான சதி’ என்றார்.

 

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்களுடைய ஆசிரியர் ஜோசப் பிரீட்ஸ்லி (Joseph Priestly) என்ற விஞ்ஞானியைப் பற்றி படிப்பித்தார். இவர் மிகப்பெரிய தத்துவ ஞானியும்கூட. பிராணவாயுவை கண்டுபிடித்தது இவர்தான். வீடு நிறைய அருமை அருமையாக ஆய்வுசெய்து எழுதிவைத்த குறிப்புகள் இவரிடம் இருந்தன. ஒரு நாள் எதிரிகள் இவருடைய வீட்டுக்கு தீ வைத்ததால் இவர் எழுதிப் பாதுகாத்த குறிப்புகள் எல்லாம் சாம்பலாகிவிட்டன. அப்பொழுது இவர் ‘என் வாழ்நாள் முழுக்க எழுதிச் சேகரித்தத குறிப்புகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் என்னால் உருவாக்க முடியாது. எதற்காக இந்த அக்கிரமம் செய்தார்கள். நான் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைத்ததில்லையே’ எனக் கதறி அழுதார். அந்தப் பெரிய விஞ்ஞானிக்கு ஒரு சிறிய உண்மை தெரியவில்லை. தீமை செய்யத் துணியும் ஒருவனுக்கு யாரும் தீங்கு இழைக்க வேண்டும் என்றில்லை. அவன் இயல்பு தீமை செய்வது. 

 

அந்தக் காலத்தில் அறிவுத்தேடலில் நாட்டம் உள்ளவர்கள் இருந்தார்கள். எதிரிகளும் இருந்தார்கள். இந்தக் காலத்திலும் அறிவைத் தேடுபவர்கள் இருக்கிறார்கள். அழிப்பவர்களும் இருக்கிறார்கள்.

 

அறிவைத் தேடுவதிலும் பார்க்க கடினமானது ஒன்று உண்டு. தீயவர்கள் இல்லாத ஓர் உலகத்தை தேடிக் கண்டுபிடிப்பது.

 

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta