ஆறாத் துயரம் – 2

http://amuttu.net/viewArticle/getArticle/180

 

புறாக் கதையை ஜோ சொன்ன அன்றைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதியாகிவிடுவார் என்றுதான் நினைத்தி்ருந்தேன். ஆனால் மேலும் சில பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தினமும் ஜோவும் மனைவியும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள். அந்தச் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைத்ததும் இன்னும் பல புதிய சோதனைகளைச் செய்யச் சொன்னார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் வெளிக்கிட்டு போனால் மாலையில்தான் அவர்கள் திரும்புவார்கள். இது சில காலம் தொடர்ந்தது. மருத்துவர்களுக்கு புதிராக இருந்தது. என்ன நோய் என்று தீர்மானிக்கும் வரைக்கும் புதிய சோதனைகளை தொடர்ந்து செய்யத்தான் வேண்டும் என்றார்கள்.

 

ஜோ நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்தார். இந்த நிலைமையில் ஒரு நாள் என்னையும் மனைவியையும் தேநீர் விருந்துக்கு அழைத்தார்கள். நாங்கள் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாயில்லை. ஒருநாள் சம்மதித்து அங்கே போனபோது ஜோ எங்களை எதிர்பார்த்து வாசலில் காத்துக்கொண்டு சற்று குனிந்தபடி நின்றார். உடல் வெளிறிப்போய் இருந்தது. அவருடைய ரத்தத்தில் ஒரு சிவப்பு அணுக்கூட இல்லையென்று பட்டது.  சருமம் அந்த மாதிரி ஒருவரில் பால் வெள்ளையாக இருந்ததை நான் கண்டது கிடையாது. நான் கோட்டைக் கழற்றியதும் அவர் அதை வாங்கி கொழுவினார். பின்னர் மேசையில் எல்லோருமாக அமர்ந்தோம்.

 

மேசையில் கேக்கும், பிஸ்கட்டும் கோவா இலையில் செய்த ஒரு வகையான சாலட்டும் இருந்தன. அந்த சாலட்டை ஜோ காலையிலிருந்து தன் கையால் எங்களுக்காகச் செய்ததாக மனைவி சொன்னார். ஜோ எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். ’இதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள்’ என்றார். அவர் செய்த சாலட் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் ’அபூர்வமான ருசியுடன் இருக்கிறது’ என்றேன். இன்னொரு கரண்டி எடுத்து பரிமாறினார். அவர் ஒன்றுமே சாப்பிடவில்லை. தேநீரும் அருந்தவில்லை. ’சிலகாலமாக பசி எடுப்பதில்லை’ என்றார். நிமிர்ந்து பார்த்தபோது என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர் கண்கள் முகத்துக்குள் புதைந்துபோய் கிடந்தன. நாடியை உயர்த்தி என்ன என்பதுபோல பார்த்தேன். ’தேநீரைக் குடியுங்கள், ஆறப்போகுது’ என்றார். உடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. இதுதான் கடைசி. இனிமேல் இந்த நல்ல மனிதர்களுடன் நான் தேநீர் அருந்தப் போவதில்லை என்று.

 

நாங்கள் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். அவர் என்னுடைய கோட்டை விரித்துப் பிடித்தபடி பின்னால் நின்றார். அந்தச் சின்னச் செயலை அவர் சிரமத்துடன் செய்தார். நிற்பதற்கு உடம்பின் முழுப் பலத்தையும் பாவித்தது அவர் பற்களைக் கடித்துக்கொண்டு நின்றதில் தெரிந்தது. நான் கைகளை நுழைத்து கோட்டை மாட்டி, சிப்பை இழுத்துப் பூட்டினேன். அவர் தழுவினார். பின்னர் கை கொடுத்தார். கையை இறுக்கி அழுத்தினார். அப்படி அழுத்தியபோது வாயால் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

 

அவருடைய கை மரக்கட்டைபோல உறுதியாக சொரசொரவென்று இருந்தது. இளைஞராக அவர் 60 வருடங்களுக்கு முன்னர்  கனடாவுக்கு வந்தபோது உடனே வேலை கிடைக்கவில்லை. பல மாதங்கள் வேலைக்காக அலைந்தார். இறுதியில் வெள்ளிச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. அவர் வாழ்நாளில் பல வருடங்களை பூமிக்கு பல ஆயிரம் அடிகள் கீழே வேலை செய்தபடி கழித்தார். அந்தக் காலங்களில் சூரிய ஒளி தன் உடம்பில் படவில்லை என்று சொல்லியிருக்கிறார். காலையில் சுரங்கத்துக்குள் இறங்கினால் மாலையில்தான் வீடு திரும்புவார். சூரிய வெளிச்சத்தை பல வருடங்கள் தொடர்ந்து இழந்துவிட்டார். சுரங்கத்தில் ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துகளில் இருந்தும் தப்பியிருக்கிறார். இப்பொழுது அவருக்கு வந்திருக்கும் நோய் நீண்ட காலமாக வெள்ளிச் சுரங்கத்து காற்றை சுவாசித்ததால் இருக்கலாம் என்று சில மருத்துவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.

 

எங்கள் நட்பு எப்போது எப்படி உருவானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். பகலில் இருந்து இரவு தோன்றுவதுபோல அது பாட்டுக்கு நடந்தது. அவர் இரண்டாம் உலகப் போர் சம்பவங்களை சொல்வார் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரிடம் நூற்றுக்கணக்கான கதைகள் இருந்தன. அப்படித்தான் ஒருநாள் அவர் புறா வளர்த்த கதையை கூறினார். அது அவருடைய மனைவிக்குகூட தெரியாத கதை. அத்தனை வருடங்களில் அதை மனைவிக்கு சொல்லவேண்டும் என்று அவருக்கு தோன்றவே இல்லை. என்ன காரணமோ என்னிடம் சொல்ல விரும்பினார். சொல்லிவிட்டு 70 வருடத்துக்கு முன் இறந்துபோன புறாவை நினைத்து விக்கி விக்கி அழுதார்.

 

மருத்துவ மனையின் தீவிரப் பிரிவில் கட்டிலில் படுத்திருந்த ஜோவின் உடம்பிலிருந்து பலவிதமான குழாய்கள் பலவிதமான நிறங்களில் வெளியேறின. செயற்கை சுவாச மெசினில் உடல் கிடந்தது. உணவும் குழாய் வழியாகவே செலுத்தப்பட்டது. உடல் கழிவும் குழாய் வழியாகவே வெளியேற்றப்பட்டது. ஓர் உடம்புதான் அங்கே கிடந்ததே தவிர அதன் செயல்பாடுகள் யாவும் வெளியே இருந்து இயக்கப்பட்டன. வலி நிவாரண மருந்து தொடர்ந்து உடலில் செலுத்தப்பட்டு உயிர் செயற்கையாக நீடிக்கப்பட்டது.

 

அவருடைய மனைவி, மகன், உறவினர்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தனர். இப்படியே தொடரவேண்டுமா அல்லது அவருக்கு விடுதலை அளிக்கவேண்டுமா? இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது. மனைவி ஜோவுடன் பேசினார். ஜோவுடைய காது கேட்கும் ஆனால் அவரால் பேச முடியாது. மனைவி ஜோவின் கையை பற்றிக்கொண்டார்.

’இப்படியே தொடரவேண்டுமா அல்லது மெசினில் இருந்து விடுவிக்கவேண்டுமா? தொடரவேண்டுமென்றால் கையை அழுத்துங்கள்?’ அவருடைய கை பேசாமல் கிடந்தது. அடுத்த கேள்வி.

‘வலி நிவாரணம் கொடுத்தால் உங்களுக்கு வலி தெரியாது ஆனால் நினைவு தப்பிவிடும். கொடுக்கவேண்டும் என்றால் கையை அழுத்துங்கள்.’ அவர் அழுத்தினார்.

‘நான் உங்களை நேசிக்கிறேன். மணமுடித்த அன்று நேசித்ததுபோலவே இன்றும் நேசிக்கிறேன். சுகமாக கடவுங்கள். விரைவில் நானும் வந்துவிடுவே.ன்’ அதுவே கடைசி வார்த்தைகள். அவர் கைகளை இறுக்கி அழுத்தி விடை கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஜோவின் உயிர் பிரிந்தது.

 

ஏன் அவரை மறக்கமுடியவில்லை என்று நினைத்துப்பார்க்கிறேன். என்னோடு படித்தவர் அல்ல; என்னோடு வேலை செய்தவர் அல்ல. இலக்கியக்காரர் அல்ல. வாசிப்பவர் அல்ல. சொல்லப்போனால் எனக்கும் அவருக்கும் ஈடுபாடான பொது விசயம் ஒன்றுகூட இல்லை. ஒரு நண்பரை எப்படி உபசரிப்பது என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். அவரை அணுகியதும் அன்பு கூடாரம்போல உங்களைச் சூழ்ந்துகொள்ளும். கைகளைப் பிடித்து குலுக்கும்போது இறுக்கி குலுக்குவார். தழுவும்போது இறுக்கி தழுவுவார். புன்னகைப்பார். விடை கொடுக்கும்போது  உங்கள் ஓவர்கோட்டை உங்களுக்கு பின்னால் விரித்துப் பிடித்து ஒரு பணிவான சேவகனைப்போல காத்திருப்பார். நீங்கள் இரண்டு கைகளையும் நுழைக்கும் வரைக்கும் அசையாது நிற்பார். அப்படி ஒருவரும் இனிமேல் செய்யமாட்டார்கள். என் மீதி வாழ்நாளில் நான் கோட்டை அணியும் சமயங்களிலும் கழற்றும் சமயங்களிலும் அவரை நினைப்பேன். மறக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது.

 

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta