பழுப்பு இனிப்பு

 

எங்கள் வீட்டு குழாயில் நீர் கொட்டியது. அதுதானே அதன் இயல்பு எனச் சிலர் நினைக்கலாம்., ஆனால் குழாயை இறுக்கிப் பூட்டிய பின்னரும் அது ஒழுகியது. மணிக்கூடு நேரத்தை அளப்பதுபோல குழாயின் வாயிலிருந்து தண்ணீர் டக் டக்கென்ற ஒலியுடன் விழுந்தது.

 

ரொறொன்ரோவில் மஞ்சள் பக்க புத்தகத்தை வீடு வீடாக இலவசமாக தந்திருப்பார்கள். நான் அப்படிக் கிடைத்த புத்தகத்தை திறந்து குழாய் திருத்துபவரை அழைப்பதற்காக பெயர்களை தேடினேன். அதிலே இருந்த ஒரு பெயர் என்னை ஆச்சரியப்படுத்தியது. மகிழ்நன். இன்னொருமுறை படித்தேன். மகிழ்நன். என்ன அருமையான பெயர் இது. பெயரிலேயே மகிழ்ச்சி இருந்தது. இவருடைய பெற்றோர் எத்தனை எதிர்பார்ப்புடன் இந்த பெயரை வைத்திருப்பார்கள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு பணியை அல்லவா அவர் செய்தார். தொலைபேசியில் அவரை அழைத்து பிரச்சினையை சொன்னதும் இரண்டு மணி நேரத்தில் வருவதாகச் சொன்னார். அப்படியே வந்தார்.

 

வீட்டு மணியை அடித்தவுடன் கதவை திறந்தேன். அவருக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். தலைமயிர் பக்கவாட்டில் வளர்ந்துகொண்டு போனது. உதட்டுக்குள் இருந்து வெளிவந்து உடனேயே மறைந்துபோன ஒரு சின்னச் சிரிப்பு.  பலவிதமான ஆயுதங்களை ஒரு பெட்டியில் காவிக்கொண்டு வாசலில் நின்றார். உள்ளே நுழைந்தவுடன் என் பெயர், ஊர், எங்கே படித்தேன், எங்கே வேலை செய்கிறேன், எப்பொழுது கனடாவுக்கு வந்தேன் ஆகிய சகல விருத்தாந்தங்களையும் கேட்டு அறிந்துவிட்டார். தன்னுடைய வேலைச் சப்பாத்துகளை கழற்றி வாசலில் விட முன்னரே என்னுடைய மெய்கீர்த்தியில் பாதியை தெரிந்துகொண்டார். அதன் பின்னர்தான் எந்தக் குழாய், எங்கே, எப்படி ஒழுகுகிறது என்ற கேள்வியை கேட்டு விடையையும் பெற்றார்.

 

படுத்துக்கிடந்தபடி ஆயுதம் ஒன்றினால் எதையோ திருக முயன்றார். பல நிமிடங்கள் ஆகியிருக்கும்., அப்படியே கிடந்தார். என்ன நினைத்தாரோ உருண்டு எழும்பி இது சரியான ஆயுதம் அல்ல, போய் வேறு எடுத்து வருகிறேன் என்று புறப்பட்டார். நான் சரி என்றேன். வீட்டிலே பாதி அறையை அடைத்து அவருடைய ஆயுதங்கள் ஒடியல் காயப்போட்டதுபோல பரவிக் கிடந்தன. புதிய ஆயுதத்தை கொண்டுவந்து திறக்க வேண்டியதை திறந்தார். குழாயைக் கழற்றி ஆராய்ந்துவிட்டு இந்தப் பாகம் உடைந்திருக்கிறது என்று சொல்லி அதை வாங்கி வரப் புறப்பட்டார். நான் சரி என்றேன். புதிய உதிரிப்பாகத்தைக் கொண்டுவந்து பூட்டினால் அது பூட்டுப் படவில்லை. ‘இது பழங்காலத்துக் குழாய். சரியான உதிரிப்பாகம் கிடைக்கவில்லை. நான் வேறு இடத்தில் பார்க்கிறேன்’ என்றுவிட்டு கிளம்பினார். நான் சரி என்றேன். அன்றைய காலையிலிருந்து பல சரிகளைச் சொல்லியபடியே நின்றேன். கடைசியாகக் கொண்டுவந்த பாகம் பொருந்திப் போனது என நினைக்கிறேன். மகிழ்நன் வேலை முடிந்ததென மகிழ்ச்சியுடன் பகர்ந்தார். ’எவ்வளவு?’ என்று கேட்டேன். தூரத்துச் சத்தத்தை உற்றுக் கேட்க முயல்வதுபோல தலையை சாய்த்து பிடித்து யோசித்துவிட்டு என் வருமானத்தில் பாதியை கேட்டார். பின்னர் இரங்கி என்னுடைய ஊர் அவருடைய ஊரிலிருந்து 17 மைல் தூரம் மட்டுமே என்பதால் ஒரு சின்னக் கழிவு தந்தார். நானும் காசைக் கொடுத்து அவரை அனுப்பிவைத்தேன்.

 

அவர் சென்ற சிறிது நேரத்தில் ஒரு சின்னப் புயல் அடித்து முடிந்ததுபோல சேதமுற்றுக் கிடந்த அறையை கூட்டி துப்புரவாக்கினேன். ஒரு சிறிய ஆயுதத்தை மறந்துபோய் விட்டுவிட்டுப் போனது தெரியவந்தது. அவசரமாக அவருடையப் செல்பேசியை அழைத்தேன். பார்த்தால் மணி வீட்டுக்குள்ளேயே அடித்தது. அவர் செல்பேசியையும் மறந்து  வைத்துவிட்டுப் போய்விட்டார். வேறு வழியில்லாதபடியால் அவர் அழைக்கும்வரை காத்திருந்தேன். அன்றைய நாள் முடிவதற்குள் அவர் திரும்பவும் வந்து செல்பேசியையும் ஆயுதத்தையும் மீட்டுச் சென்றார்.

 

எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் நேர்த்தியோடும் கச்சிதமாகச் செய்துமுடிப்பதற்கு சிலபேரால் மட்டுமே முடியும். இவர்கள் வேலை செய்யும்போது பாடிக்கொண்டு செய்வார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வேலை அது. பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கும். ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்.

 

பல வருடங்களுக்கு முன்னர் கனடாவில் பிரபலமான நாடக இயக்குநர் டீன் கில்மோரை ஒருமுறை சந்தித்தேன். அவருடைய நாடகத்தில் ஒரு பாத்திரம்  செங்கல்லை எடுத்து வீசுவான். அது மேடையில் சரியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்து நிற்கும். 200  தடவைக்கு குறையாமல் செங்கல்லை எறிந்து ஒத்திக்கை பார்த்ததாக  அந்த இயக்குநர் கூறினார். மேடையில் சற்று தள்ளி அது விழுந்தால் என்ன ஆகும்?’ என்று நான் கேட்டேன். அவர் சொன்னார், ’ஒன்றுமே ஆகாது. சபையில் ஒருவருக்குமே அது தெரிய வராது, ஆனால் எனக்கு தெரியுமே’ என்றார். எடுத்த எந்த ஒரு காரியத்தையும் உத்தமமாகச் செய்யவேண்டும். மற்றவர்களுக்காக அல்ல. அது உனக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவேண்டும். அதுவே லட்சியம்.

 

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதுவதில் உடனே திருப்தி அடைந்துவிடுவதில்லை. ரோல்ஸ்ரோய் தன்னுடைய புகழ்பெற்ற ’போரும் அமைதியும்’ நாவலை ஏழு தரம் திருத்தி எழுதினார். அவர் திருத்தங்களைச் செய்து வைக்க அவருடைய மனைவி சோஃபியா நாவலை மறுபடியும் முதலில் இருந்து எழுதிவைப்பார். மறுபடியும் ரோல்ஸ்ரோய் திருத்துவார். இப்படி 1400 பக்க நாவலை அவர் மனதுக்கு திருப்தி தோன்றும்வரை திருப்பி திருப்பி எழுதினார். சுந்தர ராமசாமி ஒருமுறை அவருடைய ’குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் வெளிவந்த காலத்தில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். ஒரு 500 பக்க நாவல் எழுதுவதற்கு தான் 5000 பக்கங்கள் எழுதுவதாக. ரேமண்ட் கார்வருடைய எழுத்தை 40 வீதம் வெட்டிவிட்டுத்தான் பிரசுரிப்பார்கள். ஹெமிங்வே கூட அப்படித்தான். அவர் சில பக்கங்களை 20, 30 முறை திருப்பி திருப்பி எழுதியிருக்கிறார். பிரபல இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் கார் கதவு சாத்துவதை  70 தடவை படம் பிடித்தார் என்று படித்திருக்கிறேன். சாதாரணமாக  ஒரு கார் கதவைச் சாத்துவதை எதற்காக 70 தரம் படம்பிடிக்கவேண்டும் என்று கேட்கலாம். அவர் மனதிலே ஏற்கனவே இந்தக் காட்சி உட்கார்ந்திருந்தது. அது கிடைக்கும்வரை அவர் அப்படித்தான் திருப்பி திருப்பி அந்தக் காட்சியை எடுப்பார்.

 

எஸ்.ராமகிருஷ்ணனின் ’துயில்’ நாவலில் ஓர் இடம் வரும். ‘என்னை ஞாபகம் வைச்சிருக்கிற ஆளுகூட இருக்காங்களா?’ ஒரு முக்கியமான பெண் பாத்திரம் இப்படிக் கேட்கும். நாவலில் அதைத் தொடர்ந்து வந்த வசனம்தான் உச்சமானது. ‘அந்த ஆதங்கத்தில் அவளுடைய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.’ மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரேயொரு வசனத்தில் கொண்டுவந்திருப்பார் ஆசிரியர்.  இந்த இடத்தை எஸ்.ரா எப்படி எழுதியிருப்பார்? எழுதிக்கொண்டு போகும்போது சாதாரணமாக வந்து விழுந்த வார்த்தைகளா? அல்லது திருப்பி திருப்பி செதுக்கி எழுதிய எழுத்தா? எப்படி இவ்வளவு கச்சிதமாக, சொற்ப வார்த்தைகளில் ஒரு பெண்ணின் வாழ்நாள் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்க முடிந்தது?

 

சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அமெரிக்க ஆசிரியர் எழுதிய முதல் நாவலுக்கு வாசிங்டன் புத்தகப் பரிசு கிடைத்தது. ஆசிரியருடைய பெயர் ஜொனாதன் எவிசன். பத்திரிகைகள் அவரை overnight success என்று புகழ்ந்து தள்ளின.. நிருபர் அவரை பேட்டி கண்டபோது ’உங்களை ஓர் இரவு வெற்றி என்று சொல்கிறார்களே, அது உண்மையா?’ என்று கேட்டார். ஆசிரியர் ‘ஆமாம், 20 வருட ஓர் இரவு வெற்றி’ என்று கூறினார். அவர் ஆறு வயதில் இருந்தே தான் எழுத்தாளராக வரவேண்டும் எனக் கனவு கண்டவர். நாள் கூலியாக வேலைசெய்துகொண்டு இரவுகளில் தொடர்ந்து எழுதியவர். அவருடைய வெற்றி இலகுவாகக் கிடைத்த ஒன்றல்ல. வெற்றிக்கு பின்னால் அத்தனை உழைப்பு இருந்திருக்கிறது. எஸ்.ரா போகிறபோக்கில் அந்த வசனத்தை எழுதியிருந்தால்கூட அதற்கு பின்னர் இருபது, முப்பது வருட பயிற்சி இருப்பது தெரியும். 525 பக்க நாவலில் அந்த வரிகளை மாத்திரம் மறக்க முடியவில்லை என்றால் காரணம் செதுக்கி செதுக்கி அப்படி அழகூட்டப்பட்டிருந்தது. நல்ல படைப்பின் அடையாளம் அது.   

 

குறுந்தொகையில் ஒரு பாடல். தலைவி தோழியிடம் சொல்கிறாள். ‘பார் என் நிலைமையை. அவர் பாட்டுக்கு என்னை சுகித்துவிட்டு போய்விட்டார். நான் இப்படி ஆகிவிட்டேன். யானை முறித்த கிளைபோல தொங்கிக்கொண்டு கிடக்கிறேன்.’  மரக்கிளை முன்புபோல இல்லை; முறிந்து நிலத்திலும் விழவில்லை. அதுபோல தானும் பாதி உயிரோடு இங்குமங்குமாக ஊசலாடிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறாள். (குறுந்தொகை 112). புலவர் இந்த உவமையை எப்படி எழுதியிருப்பார். எழுதும்போது அப்படி வந்ததா அன்றி நிறைய யோசித்து பின்னர் எழுதினாரா? இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் அந்த வரிகள் இன்னொருவரால் நகல் செய்ய முடியாதவாறு இருக்கும் ரகஸ்யம் வியப்பைத்தான் தருகிறது.

 

 

சேக்ஸ்பியரின் புகழ் இன்றுகூட ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி ஏற்கனவே வந்துவிட்டன. இனிமேலும் வந்துகொண்டே இருக்கும். சமீபத்தில்கூட என்னுடைய நண்பர் ஒருவர் எழுதிய ‘For the Love of Shakespeare’ என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. நண்பர் தன்னுடைய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது. எப்படியும் சேக்ஸ்பியரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது அவர் வாழ்நாள் கனவு. சேக்ஸ்பியரைப்போல அவருக்கு முந்தி எழுதியவரும் கிடையாது, பிந்தி எழுதியவரும் கிடையாது. அவர் தரும் சொற்சித்திரத்தை படிக்கும்போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படி தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக்கொண்டே போகும். Tempest நாடகத்தில் ஓர் இடம். புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்துவிட்ட ஓர் அரசன் என்ற உண்மையை சொல்கிறான். அவளால் நம்பமுடியவில்லை, அதிர்ச்சியடைகிறாள். ‘Your tale, Sir, would cure deafness’ என்று சொல்கிறாள். ‘’உங்களுடைய கதை, ஐயா செவிட்டுத் தன்மையை குணமாக்கும்.’ என்ன ஒரு சொல்லாட்சி!  இந்தக் கற்பனையையும், கவித்துவத்தையும் முழுமையாக செரித்துக்கொள்ள நீண்ட நேரம் தேவைப்படும்.

 

’ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூ பூத்தது. மூன்று குடம் தண்ணீர் ஊற்றி மூன்று பூ பூத்தது.’ இப்படி ஒரு பாடல் இருக்கிறது. எத்தனை குடம் தண்ணீர் ஊற்றினாலும் ஐந்து இதழ் பூ ஆறு இதழாக மாறுவதில்லை. எட்டு இதழ் பூ ஒன்பது இதழ் பூவாக மாறாது. பூ இதழ்கள்கூட ஒரு கணக்காகத்தான் பூக்கின்றன. இயற்கைகூட ஒரு கணக்குப்படிதான் வேலைசெய்கிறது. ஒரு இதழ், இரண்டு இதழ், மூன்று இதழ், ஐந்து இதழ், எட்டு இதழ் , 13 இதழ், 21 இதழ் ( அடுத்தது 34, அடுத்தது 55, அடுத்தது 55+34 = 89) என்று அதுவும் ஓர் இயற்கை நெறிப்படி கூடிக்கொண்டு போகிறது. இதை Fibonacci தொடர் என்று சொல்கிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். எதற்காக இப்படி என்று கேட்டால் விஞ்ஞானிகளிடம் பதில் இல்லை. ’எல்லாமே ஒரு பிரபஞ்ச நியதியின்படிதான் இயங்குகிறது. பிரபஞ்சம் ஓர் உத்தமத்தை நோக்கிய அமைப்பு. எங்குமே அழகியல் நிறைந்து கிடக்கிறது.’ என்று பதில் வருகிறது.

 

பிரபஞ்சமே அழகாய்த்தான் சிருட்டிக்கப்பட்டிருக்கிறது. கிரகங்கள் ஓர் ஒழுங்குடன் கதி மாறாமல் சுற்றி வருகின்றன. கிரகங்களும் சந்திரன்களும் வால்நட்சந்திரங்களும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்வதில்லை. ஒரு பறவை கூடு கட்டும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கவனம் எள்ளளவும் பிசகுவதில்லை. எத்தனை சிக்கனம், எத்தனை நேர்த்தி. ஒரு சிறுத்தை வேட்டையாடும்போது அதன் உடல் அசைவுகளில் வெளிப்படும் கலைத்தன்மை வேறு ஒன்றிலும் தென்படுவதில்லை. ஒரு யானை நடக்கும்போதும் அதுதான். ஒரு கோலாக்கரடி தூங்கும்போதும் அதுதான். ஆனால் மனிதன் ஒரு வேலை செய்யும்போது அநேகமாக அவன் முழுமனமும் அங்கே இருப்பதில்லை. அதில் நேர்த்தியும் இல்லை; கலையும் இல்லை.

 

குழாய் திருத்தக்காரரை நான் அழைத்தபோது நடந்தது அதுதான். நான் அவரிடம் சொன்னதெல்லாம் அவர்மேல் உருண்டுகொண்டு போனது. நேர்த்தியாக வேலை செய்யும் தகுதி அவரிடம் இல்லை. மகிழ்நன் என்ற பெயரைப் பார்த்து நான் ஒரு முடிவு எடுத்தேன். அது தவறானது. நல்ல பெயர் உள்ளவர் நல்ல வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? ஒரு மருத்துவரிடம் போகமுன்னர் இவர் நல்ல மருத்துவரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு ஏதாவது சோதனை செய்யவேண்டும்.  ஒரு புத்தகம் வாங்க முன்னரே அது எப்படியான புத்தகம் என்று தெரிந்து வாங்குவது எவ்வளவு அவசியம். புத்தகத்தை வாங்கிய பின்னர் 20 பக்கங்கள் படித்துவிட்டு அதை தூக்கிப்போடுவது சரியாக ஆராய்ச்சி செய்து புத்தகத்தை வாங்காத படியால்தான்.

 

எண்பதுகளில் அமெரிக்காவில் பிரபலமான ஓர் இசைக்குழு இருந்தது. பெயர் வான் ஹெலன் இசைக்குழு. இவர்களின் இசைத்தட்டுகள் ஒரு கோடி விற்பனை செய்து சாதனை படைத்தவை. இந்தக் குழு அமெரிக்காவின் பிரபல நகரங்களில் எல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறது. இவர்களின் மேடை உபகரணங்கள். மேடை அமைப்பு சாமான்கள், இசை வாத்தியங்கள் போன்றவை 18  ட்ரக் வண்டிகளில் இவர்கள் போகும் இடங்களுக்கு போகும். அப்படியென்றால் இவர்களின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம்.

 

ஆனால் ஒப்பந்தம் போட்டவர்களிடமிருந்து இந்தக் குழுவினருக்கு சில வேளைகளில் போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அப்படியான சமயங்களில் இசை நிகழ்ச்சிகள் தோல்வியில் முடியும். இவர்கள் எவ்வளவுதான் திறமையாக இசைநிகழ்ச்சியை நடத்தினாலும் இவர்களை அழைத்தவர்களின் முழு ஒத்துழைப்பும் இல்லாமல் போனால் தோல்வி ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே இப்படியான தோல்விகளை தவிர்க்க இந்தக் குழுவின் தலைவர் ஒரு புதுவிதமான ஒப்பந்தத்தை உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் விழக்காரர்கள் செய்யவேண்டிய நிபந்தனைகளை நீண்ட பட்டியலாகப் போட்டது. அதில் ஒன்று இப்படி இருந்தது. ‘இசைக்குழு தங்கும் ஹொட்டல் அறையில் 5 றாத்தல் எம் & எம் இனிப்பு வகை எல்லா நிறங்களிலும் ( பச்சை சிவப்பு மஞ்சள் நீலம்) இருக்கவேண்டும். ஆனால் பழுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது.’ இதுதான் அந்த நிபந்தனை.   இசைக்குழுவுக்கும் இந்த நிபந்தனைக்கும் என்ன தொடர்பு. என்பது ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

 

குழுவின் தலைவர் ஹொட்டலுக்கு வந்ததும் செய்யும் முதல் வேலை ஐந்து றாத்தல் இனிப்பு எல்லா நிறங்களிலும் இருக்கிறதா என்று பார்ப்பது.. பின்னர் பழுப்பு நிற இனிப்பு ஒன்றாவது அகப்படுகிறதா என்பதை கிளறிக் கிளறிப் பார்ப்பார். தப்பித் தவறி ஒரு பழுப்பு நிற இனிப்பு அகப்பட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு போய்விடுவார். பலருக்கு இது ஏன் என்று அப்போது புரியவில்லை. இசை நிகழ்ச்சிக்கும், ஒரு பெறுமதி இல்லாத பழுப்பு நிற இனிப்புக்கும் அப்படி என்ன சம்பந்தம். பல வருடங்களுக்கு பிறகு இந்தப் புதிரை இசைத்தலவர் விடுவித்தார்.   ’‘நாங்கள் கொடுக்கும் இசை நிகழ்ச்சி உத்தமமாக இருக்கவேண்டும். எங்களுக்கு திருப்தியாக அமையவேண்டும். ஆனால் அழைப்பவர்களின் மேடை ஒத்துழைப்பு இல்லாமல் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் நிகழ்ச்சி வெற்றிபெறுவதில்லை. ஆகவே இதைத் தவிர்ப்பது எப்படி? அதற்காகத்தான் பழுப்பு இனிப்பு நிபந்தனை. பழுப்பு இனிப்பு தட்டுப்பட்டால் நிகழ்ச்சியை நடத்தமாட்டோம். அவர்கள் ஒப்பந்தத்தை நுணுக்கமாக படிக்கவில்லை என்று அர்த்தம். ஒரு சின்னக் காரியத்தை செய்ய முடியாதவர்கள் ஒரு பெரிய காரியத்தை எப்படி சரியாகச் செய்வார்கள்? இந்த விதியை ஒப்பந்தத்தில் புகுத்திய பிறகு எங்களை அழைப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட ஆரம்பித்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளும் வெற்றி பெற்றன.’

 

’பழுப்பு இனிப்பு பரீட்சை’ என்றால் அமெரிக்கர்கள் பலருக்கு இன்றைக்கு  அது என்னவென்று தெரியும். எங்களுக்கு தேவை ஒரு பழுப்பு இனிப்பு பரீட்சை. அப்படியான பரீட்சை இருக்குமாயின் நாங்கள் வாங்கும் புத்தகம் திருப்தியானதாக அமையும். பார்க்கப் போகும் நாடகம் மனதுக்கு பிடிக்கும். சினிமாவுக்கு போய் ஏமாற்றமுடன் திரும்பத் தேவை இல்லை. முக்கியமாக குழாய்க்காரரை அழைக்கும்போது அவருடையை திறமையை அவருடைய பெயரின் இனிமையை வைத்து தீர்மானிக்கமாட்டோம்.

 

இனிமேல் ஒப்பந்தம் செய்வதற்கு ஒரு நல்ல பெயர் மட்டும் போதாது. ஏதாவது பரீட்சையிலும் அவர் தன் தகுதியை நிரூபிக்கவேண்டும். எதிர்வரும் காலங்களில் மகிழ்நன், கபிலர், தமிழ் பற்றாளன், பொற்தாமரைக் கண்ணன், இனியதோழன், அன்புக்கனி போன்ற எந்தப் பெயரை பார்த்தாலும் எச்சரிக்கையாக இருப்பேன். தமிழ் பற்றுக்கும் வேலைத் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது. .

 

முதலில், மறுபடியும் ஒழுகத் தொடங்கிய குழாயை நிற்பாட்ட ஏதாவது செய்யவேண்டும்.

 

END

 

 

 

 

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta