கூஸ்பெர்ரிஸ்

""ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னர் நான் அந்தக் கதையை படித்தேன். அன்ரன் செக்கோவ் எத்தனையோ சிறுகதைகள் எழுதினார். அதில் ஒன்றுதான் அவருடைய Gooseberries. நல்ல சிறுகதை ஆனால் ஆகச் சிறந்தது என சொல்லமுடியாது. சமீபத்தில் நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் அழைத்து  அந்தச் சிறுகதை பற்றி பேசினார். அதை இன்னொருமுறை திரும்பவும் படிக்கச் சொன்னபடியால் படிக்க நேர்ந்தது. நண்பர் சொன்னது சரி. சில விமர்சகர்கள் கூறியதும் உண்மைதான். இதுதான் செக்கோவ் எழுதியவற்றில் ஆகச் சிறந்த சிறுகதை என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

 

நான் கனடா வந்து இத்தனை வருடங்களாகிவிட்டன. இன்றுவரை  செக்கோவ் குறிப்பிட்ட கூஸ்பெர்ரி பழத்தை சாப்பிட்டது கிடையாது. நான் வழக்கமாகப் போகும் சுப்பர்மார்க்கெட்டில் பழங்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியில் தேடினேன். இந்தப் பழம் எப்படி தோற்றமளிக்கும் என்பதுகூட எனக்கு தெரியாது. பழம் கிடைக்கவில்லை. பலநாள் தேடிய பின்னர் மனேஜரிடம் சென்று ‘உங்கள் பழப்பிரிவில் கிரான்பெர்ரி, ஸ்ட்ரோபெர்ரி, புளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி எல்லாம் கிடைக்கிறது. ஆனால் கூஸ்பெர்ரி கிடைப்பதில்லையே.  ஏன், ஒருவரும் அதை இங்கே சாப்பிடுவதில்லையா?’ என்றேன். 

 

மனேஜர் என்னை விநோதமாகப் பார்த்தார். ‘வருடத்தில் இரண்டு மாதங்கள்தான் கனடாவில் கூஸ்பெர்ரி கிடைக்கும். அதுவும் சிலநாட்கள் மட்டுமே. அதிகம் பேர் சாப்பிடுவதில்லை என்பதால் நாங்கள் பெரிய சிரமமெடுப்பதில்லை. ஏப்ரல், மே மாதங்களில் சிலவேளைகளில் கிடைக்கலாம்’ என்றார்.  ஏப்ரல் மாதம் பிறந்தவுடனேயே இதே வேலையாக தினம் தினம் போய் கூஸ்பெர்ரி வந்துவிட்டதா என்று கேட்டு தொந்திரவு செய்யத் தொடங்கினேன். அவரும் இல்லை இல்லை என்று சொல்லி அலுத்துவிட்டார். நான் கிட்டத்தட்ட தேடுதலை கைவிட்ட சமயம் ஒருநாள் வழக்கம்போல சுப்பமார்க்கெட்டின் உள்ளே நுழைந்ததும் மனேஜர் கைகளை உயரத் தூக்கி அசைத்து என்னை அழைத்து பழங்கள் வந்துவிட்டன என்று சத்தமாகச் சொன்னார். நிறைய பழவகைகள் அங்கே இருந்தன. ஆனால் நான் தேடுவது எப்படி இருக்கும் என எனக்கு தெரியவில்லை. நான் கற்பனை செய்துவைத்த பழம்போலவே அது இல்லை. ஒரு றம்புட்டான் பழ சைஸில், சருகுபோன்ற பச்சை நிற கோதுடன் காட்சியளித்தது. வீடு வந்து கோதை உரித்தபோது உள்ளே பழம் சிவப்பாக உருண்டையாக இருந்தது. வாயிலே போட்டதும் விதை இல்லாத பழம் என்பதினால் உடனேயே கரைந்தது. ஆகவே விதையை துப்பும் சங்கடம் இல்லை. கடித்தவுடன் முதலில் புளிப்புச் சுவைதான் தெரிந்தது. வாயில் கரையும்போது இனிப்பு தூக்கலாகி விழுங்கும்போது மெல்லிய கைச்சல் சேர்ந்தது. மூன்று சுவையும் கொண்டது, அதுதான் அதன் பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன்.

 

சமீபத்தில் உலகத்தின் பல பாகங்களிலுமிருந்து 25 புத்துஜீவிகள் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றை அமெரிக்காவின் அஸ்பென் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.. 1949ல் ஆரம்பிக்கப்பட்ட அஸ்பென் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் உள்ளது. உத்தமமான மானுட சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு தனிமனித தலைமைத்து ஆற்றலை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம் அது. அங்கே அண்டன் செக்கோவ் எழுதிய Gooseberries சிறுகதை விவாதத்திற்கு எடுக்கப்படது என்பது செய்தி. அந்தச் சிறுகதையின் சுருக்கம் இதுதான்.

 

இவானும் அவருடைய நண்பனும் ஒரு பண்ணை முதலாளியின் வீட்டில் இரவைக் கழிக்கிறார்கள். அப்பொழுது இவான் தன்னுடைய தம்பியின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். மற்ற இருவரும் கேட்கிறார்கள்.

 

’நாங்கள் குடியானவர்கள், ஏழைகள். நானும் தம்பியும் சிறுவர்களாக இருந்தபோது பண்ணைச் சூழ்நிலையிலேயே வளர்ந்தோம்.  என் தம்பி தன்னுடைய 19 வயதில் அரசாங்கத்தில் ஒரு சின்ன வேலையில் சேர்ந்தான். தம்பி வேலையை வெறுத்தான். ஒரு பணக்கார பண்ணை வாழ்வுக்கு திரும்பிவிட வேண்டும் என்பதுதான் அவன் லட்சியம். பண்ணை வாங்குவதற்காக சிறிது சிறிதாக காசு மிச்சம்பிடித்தான். பிச்சைக்காரன் போல உடையணிந்தான். பாதிவயிறு சாப்பிட்டான். பண்ணை வீடு வாங்குவதுதான் கனவு. நான் சில வேளைகளில் பணம் கொடுப்பேன், அவன் அதையும் சேமிப்பு வங்கியில் போட்டுவிடுவான். எந்த நேரம் அவனிடம் பேசினாலும் பண்ணைவீடு வாங்கவேண்டும். அதில் ஒரு குளம் இருக்கும். அதில் வாத்து நீந்தும். கூஸ்பெர்ரி தோட்டத்தில் நிறைய பழங்கள் தொங்கும் என்பான்.

 

என் தம்பிக்கு 40 வயது ஆனபோது பேப்பர்களில் விளம்பரங்களை படிக்கத் தொடங்கினான். ஓர் அழகில்லாத வயதான பணக்கார விதவையை  மணந்தான். அவளை அரைப்பட்டினிபோட்டு கொன்றுவிட்டான். அவள் சொத்தும் இவனுக்கு சேர்ந்தது. ஐந்து வருடம் தேடி இறுதியில் 300 ஏக்கர் பண்ணை வீட்டை என் தம்பி வாங்கினான். அவன் நினைத்ததுபோல வாத்து நீந்தும் குளம் இல்லை, கூஸ்பெர்ரி தோட்டம் இல்லை. ஆனால் ஆறு இருந்தது. என் தம்பி தயங்காமல் கூஸ்பெர்ரி தோட்டம் ஒன்றை உண்டாக்கினான்.

 

கடந்த வருடம் நான் என் தம்பியை பார்க்கப் போனேன். நான் போனபோது அவன் பின் மதியத் துக்கத்தில் கிடந்தான். அவன் படுக்கையறைக்கு போனேன். முழங்கால்வரை கம்பளியால் போர்த்தியபடி நித்திரையில் ஆழ்ந்துபோய் கிடந்த அவனைக் கண்ணுற்றேன். கொழுத்துப்போய், கன்னங்களில் தசைகள் இழுபட, உதடுகள் தொங்க, ஏறக்குறைய கிழப்பருவம் எய்தியிருந்தான். தான் மிகவும் மகிழ்ச்சியாயிருப்பதாகச் சொன்னான். அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனை ’மேன்மைதங்கிய கனவானே’ என்று அழைத்தார்கள். அவன் அதைப் பெரிதும் விரும்பினான். அந்தப் பிராந்தியத்தில் அவன் அரசன்தான். அவனுடைய பிறந்த நாளின்போது அரைவாளி வொட்கா மதுவை கிராமத்தினருக்கு இலவசமாக அளித்தான். அது பெரிய கொண்டாட்டம். அவன் அரசாங்க உத்தியோகத்திலிருந்தபோது ஓர் அபிப்பிராயம் சொல்ல நடுங்குவான். இப்பொழுது நிறைய அபிப்பிராயங்கள் அவனிடம் இருந்தன.

 

என்னுடைய மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்றான். என் விரல் அசைந்தால் என் விருப்பம் நிறைவேறும் என்று பெருமைப்பட்டான். அன்று மாலை சிற்றுண்டி வழங்கியபோது சமையல்காரி தோட்டத்தில் முதன் முதலாக பழுத்த கூஸ்பெர்ரி பழங்களையும் பரிமாறினாள்.  என் தம்பி அவற்றை இரண்டு முழு நிமிடங்கள் உற்றுப் பார்த்தான். கண்களில் நீர் துளிர்த்தது. அவனால் பேசமுடியவில்லை. பழங்களை வாயில் போட்டால் ஒரே புளிப்பு. ஆனால் தம்பி ‘ஆஹா என்ன ருசி’ என்று சொல்லி சாப்பிட்டான். இரவிரவாக தூங்காமல் படுக்கையிலிருந்து நடந்து நடந்து மேசைக்கு வந்து பழங்களை எடுத்து தின்றபடியே இருந்தான்.’

 

தன் தம்பியின் கதையை இப்படி இவான் சொல்லி முடித்தார். நண்பனும் பண்ணை முதலாளியும் கதையை முழுவதுமாக கேட்டனர். இவான் தொடர்ந்தார் ‘என்னுடைய தம்பியின் வாழ்க்கையில் சோம்பேறித்தனமும் அகந்தையும் இருந்தது. அந்த ஏழைக் குடியானவர்களின் அறியாமையையும் விலங்குகள் போன்ற கேவலமான வாழ்க்கையையும் என்னால் மறக்கமுடியவில்லை. அவர்கள் ஒரே வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாக வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்நாளை குடியில் கழிக்கிறார்கள்; குழந்தைகள் பசியில் இறக்கிறார்கள். ஒரு மனிதன் சந்தோசமாய் இருந்தான் என்றால் அதன் காரணம் அது இல்லாதவர்கள் மௌனமாக இருப்பதுதான். ஏழைகள் காத்திருக்க வேண்டும். காலம் கனியும் என்று நான் சொல்வதுண்டு. ஆனால் ஏன் அவர்கள் காத்திருக்க வேண்டும்? இப்பொழுதெல்லாம் எனக்கு செல்வந்தர் வீட்டு யன்னல்களைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது. அவர்கள் உணவு மேசையை சுற்றி அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்கிறார்கள். அதைக் காண வெறுப்பு மேலிடுகிறது.’

 

‘நான் மட்டும் இளைஞனாக இருந்தால். நான் மட்டும் இளைஞனாக இருந்தால்’ என இவான் பிதற்றினார். பின்னர் எழுந்து நின்று தன் நண்பனையும் பண்ணை முதலாளியையும் பார்த்து சொன்னார். ‘நீ செல்வந்தனாக, இளவயதினனாக, இருக்கும்போதே நல்லது செய்யத் தவறாதே. இங்கே ஒரு சொட்டு நன்மை. அங்கே ஒரு சொட்டு உதவி அல்ல. ஏதாவது பெரிதாகச் செய். மிகப்பெரிதாக.’

 

மூன்று பேரும் திடீரென்று மௌனமாகி தங்கள் படுக்கைகளுக்கு போனார்கள். பண்ணை முதலாளி கீழ்  படுக்கையறையில் படுத்துக் கொண்டார். நண்பர்கள் இருவரும் மேல் மாடியில் தங்கள் தங்கள் அறைகளில் படுத்தார்கள். இவான் போர்வையை இழுத்து மூடித் தூங்கினார். அவருடைய சுங்கானில் இருந்து கிளம்பிய புகை மணம் அடுத்த அறையில் படுத்திருந்த அவருடைய நண்பனை தொந்திரவு செய்தது. இந்த மணம் எங்கேயிருந்து வருகிறது எனத் தெரியாமல் தூங்காமல் வெகு நேரம் உழன்றார் நண்பன்.

 

கடந்த பிப்ரவரி மாதம் ஜோர்டன் நாட்டில் மடபா நகரில் நடந்த கருத்தரங்கில் இந்தக் கதையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டார்கள். அதை  25 புத்துஜீவிகள் அரைநாளாக விவாதித்தார்கள். அவர்கள் முடிவு என்னவென்று கேட்டேன். ‘உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஏழைகள் இருக்கும் சமுதாயத்தில் செல்வந்தர்களும் இருப்பார்கள். அவர்கள் கடமை ஏழைகளின் நிலையை உயர்த்துவது. ஆனால் சின்னச் சின்ன உதவிகளால் பிரயோசனம் இல்லை; பெரிதாக ஏதாவது செய்யவேண்டும். ஈகைக்கு வயது தடையில்லை. இளமையிலும் உதவலாம். முதுமையிலும் உதவலாம்.

 

விவாதம் நடந்தபோது வேறொருவரும் நினைக்காத  ஒன்றை ஒருவர் கூறினார். சிறுகதையின் கடைசி வசனம். இவானின் சுங்கானில் இருந்து கிளம்பிய புகை நண்பனின் அறையை அடைந்து அவனை தொந்திரவு செய்தது. அவனால் தூங்க முடியவில்லை. ஆனால் எங்கேயிருந்து இந்த மணம் வந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. ஒருவருடைய இன்பம் மற்றவருக்கு துன்பம். அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததுதான் ஆகப் பெரிய அவலம்.  இதைத்தான் பாரதியார் ’கஞ்சி குடிப்பதற்கிலார். அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்’ என்று சொன்னார்.

 

செக்கோவினுடையது ஐந்து பக்க சிறுகதை. அதில் ஒரு பக்கம் முழுக்க உபதேசம். ஆனால் உபதேசம் என்று தெரியாதபடி சாமர்த்தியமாக புனைவுடன் பின்னியிருப்பார். செக்கோவும் ரோல்ஸ்ரோயும் நண்பர்கள். ரோல்ஸ்ரோய் செக்கோவிலும் பார்க்க 32 வயது மூத்தவர். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. செக்கோவ் மரணப்படுக்கையில் கிடந்தபோது ரோல்ஸ்ரோய் சென்று அவரைப் பார்த்திருக்கிறார். செக்கோவின் எழுத்தை அவ்வப்போது அன்புடன் கடிந்து கொள்வார். உன்னுடைய பாத்திரங்கள் இங்கேயிருந்து அங்கேயும், அங்கேயிருந்து இங்கேயும் நகர்ந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் உன்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பதல்லவா முக்கியம். இப்படியெல்லாம் சொல்வார். ரோல்ஸ்ரோய்  எழுத்தாளனுடைய படைப்பில் அறம் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியவர். செக்கோவினுடைய ஆரம்பகாலக் கதைகளில் அற விசாரம் கிடையாது; அதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை.  செக்கோவ் இறப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்தக் கதையை எழுதினார். ரோல்ஸ்ரோயுடைய தாக்கத்தில் பிறந்தது இந்தக் கதை என்பதை பலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

’தேவைக்கு அதிகமாக உன்னிடம் இருந்தால் அது மற்றவர்களிடம் இருந்து திருடியது.’ இதைத்தான் ரோல்ஸ்ரோய் சொன்னார். மகாத்மா காந்தியும் அதையே சொன்னார். ஒரு நல்ல சிறுகதை வாசிக்க வாசிக்க புதிய பொருள் கொடுக்கவேண்டும். மனதிலே வாழ்க்கை பற்றிய விசாரணையை எழுப்பியபடியே இருக்கவேண்டும். ஆவி படிந்த கண்ணாடியை துடைத்துவிட்டதுபோல ஒரு சிறுகதையை படித்து முடிந்ததும் மனது துலக்கமாக வேண்டும். அதை இந்தச் சிறுகதை செய்கிறது.

 

நான் கூஸ்பெர்ரி வாங்கிய அன்று காசாளரிடம் பணம் கட்டியது நினைவுக்கு வந்தது. எனக்கு தெரிந்த அந்தப்  பெண் தன் மகனுடன் தனியே வாழ்ந்தார். புருசன் விட்டுவிட்டுப் போய்விட்டதால் வீட்டிலே கஷ்டமான சூழ்நிலை. நான் வரிசையில் நின்று என்னுடைய முறை வந்ததும் வண்டியில் உள்ள சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்து ஓடும் பெல்ட்டில் வைத்தேன். காசாளர் மந்திரக் கோடுகளை மெசினில் காட்டி விலையை பதிந்துகொண்டு வந்தவர் கூஸ்பெர்ரியை தூக்கி கண்ணுக்கு கிட்டவாக பிடித்து ‘இது என்ன பழம்?’ என்று கேட்டார். ’உங்களுக்கு தெரியாதா? எத்தனை வருடங்களாக இங்கே வேலை செய்கிறீர்கள்?’ என்றேன். ’பதினைந்து வருடங்களாக’ என்றவர் ‘இந்தப் பழங்கள் வருடத்தில் சில நாட்களே இங்கு விற்பனைக்கு வரும். வாங்குபவர்களும் குறைவு’ என்று முடித்தார்.

 

’நீங்கள் இந்தப் பழத்தை சாப்பிட்டிருப்பீர்களே’ என்றேன். ’இல்லை, அது எப்படி இருக்கும்?’ என்றார்.  நான் ‘தெரியாது. இன்றுதான் வாங்கிப் போகிறேன். பல நாட்களாக  மனேஜரிடம் பழம் வந்துவிட்டதா என்று நச்சரித்துக் கொண்டே இருந்தேன். வீட்டுக்கு போய்த்தான் ருசித்துப் பார்க்கவேண்டும்’ என்றேன். ’ஏன், இதில் என்ன விசேஷம்? ஏதாவது வியாதியை குணப்படுத்துமா?’ என்று கேட்டார். நான் ’அப்படி ஒன்றுமில்லை. இந்தப் பழத்தை பற்றி 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு சிறுகதையில் படித்திருக்கிறேன்.  சுவை எப்படியிருக்கும் என்று அறிய ஓர் ஆசை. அவ்வளவுதான்’ என்றேன்.

 

’சரி, இங்கே வேலை செய்துகொண்டு இந்தப் பழத்தை சாப்பிடாமல் இருப்பது எப்படி? இன்றே நானும் கொஞ்சம் பழங்கள் வாங்கிப் போவேன்’ என்று சொல்லிவிட்டு விலைப் பட்டியலில் அதன் விலையை படித்தார். நான் கடன் அட்டையை கொடுத்து காசை கட்டிவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே போவதற்கு தயாராக இருந்தேன். காசாளர் மெசினிலிருந்து எனக்கு தரவேண்டிய சாமானின் பட்டியலை கிழித்து தந்தார். பின்னர் ‘நான் இங்கே மேலும் பத்து வருடங்கள் வேலை பார்த்தாலும் என் சம்பளப் பணத்தில் இந்தப் பழத்தை வாங்கி தின்பதற்கு  கட்டுபடியாகாது’ என்றார்.

 

‘இதைத்தான் செக்கோவ் 110 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்தார்’ என்று சொல்லிவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டு தானாக திறக்கும் கதவை நோக்கி நகர்ந்தேன். நான் ஏதோ உக்கிரேனியன் மொழி பேசியதுபோல ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் என்னையே பார்த்துக்கொண்டு நின்றார் அந்தப் பெண்மணி.

 

END

 

 

 

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta