250 டொலர் லாபம்

2

""நீச்சல் தடாகத்தின் வரவேற்பறையில் காத்திருப்பது என்பது ஒருவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயம். இதுபோல உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. சூரியன் முழுப்பலத்துடன் செயல்பட்டான். காலை பத்து மணி இருக்கும். சூரியனின் கிரணங்கள் தடாகத்தில் பட்டு அதை வெள்ளித் தட்டாக மாற்றியிருந்தது. சிற்றலை  எழும்பி  அடிக்கும் ஒளி கண்ணைக் கூசவைத்தது. நிறையப் பெண்கள் வந்தார்கள். நிறையக் குழந்தைகள் குவிந்தார்கள். இளம் பெண்கள் அல்லது தாய்மார்கள். 35 வயதுக்கு கூடிய ஒரு பெண்ணைக்கூட அங்கே காணமுடியாது. ஆண் நீச்சல்காரர்கள்  அங்கே இல்லை. அவர்களுக்கு விடுமுறையோ என்னவோ. பெண்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் அல்லது சாய்மணக்கதிரைகளில் சாய்ந்து ஓய்வெடுத்தார்கள் அல்லது குதித்தார்கள். எல்லோரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல காணப்பட்டார்கள். கயிறு முறுக்கியதுபோல கைகள், எக்கியதுபோல வயிறு. உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் பெண்களுக்கிருந்த அக்கறை. ஆண்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

 

பொஸ்டன் நகரத்து நீச்சல் தடாகத்தின் நீர் அட்லாண்டிக் சமுத்திரத்துக்குள் இருந்து வந்தது; மறுபடியும் திரும்பி போனது.  பெண்களின் நீச்சலையும், குதிப்பையும், குழந்தைகளின் கும்மாளத்தையும் சுவையாக பார்த்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவரும் என்னைப்போல யாருக்காகவோ காத்திருந்தார். ஐந்தரை அடி உயரம். வலுவான உடற்கட்டு. கறுப்பு அரைக்கைச் சட்டை அணிந்திருந்தார். பழுப்பு நிற கட்டை  கால்சட்டை. பார்ப்பதற்கு உடற்பயிற்சியாளர் போல காணப்பட்டார், ஆனால் வயதைக் கணிக்க முடியவில்லை. அறுபதாக இருக்கலாம், எழுபதாகவும் இருக்கலாம்.  வரவேற்பறையில் அவருக்கு என்ன வேலை என்பதுதான் புரியவில்லை.

 

அவர் உட்கார்ந்த பிறகு வரவேற்பறையில் மாறுதல் தென்பட்டது. முதலில், அங்கே வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து பணிந்து கைகொடுத்துவிட்டு போனார். அடுத்து நீச்சல் தடாக மேற்பார்வையாளர் ஓடோடி வந்து  நலம் விசாரித்துவிட்டு சென்றார். நீச்சல் அடித்துக்கொண்டிருந்த ஓர் இளம் பெண் எழுந்து எங்கள் திசையில் நடக்க ஆரம்பித்தார்.. சூரியன் தடாகத்தை விட்டுவிட்டு அவரைத் தொட்டுக்கொண்டே வந்தான். அவர் உடம்பு பொன்மயமாக சுடர்விட்டது. ஒரு பயிற்சி பெற்ற நீச்சல் வீராங்கனைபோல தொடைகள் உரச அசைந்து வந்தார். அவர் முடியிலிருந்து அட்லாண்டிக் சமுத்திரம் சொட்டியது. இந்த மனிதர் ஆசனத்தில் அசையாது அமர்ந்திருந்தார். பெண் குனிந்து மார்புப் பகுதியை இடது கையால் மறைத்துக்கொண்டு வலது கையை நீட்டி கை கொடுத்தார். ‘உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்றார் பெண். மனிதர் ஏதோ மொழியில் ஏதோ சொன்னார். அதற்குப் பெண் மறுபடியும் ஆங்கிலத்தில் ‘இப்படியான வார்த்தைகள் உங்களிடமிருந்து வருவது என் பாக்கியம்’ என்றார். பின்னர் சூரியனைக் கூட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பி நடந்தார். ஒரு மீன் துள்ளிக் குதிப்பதுபோல பாய்ந்து தடாகத்தினுள் மறைந்தார்.

 

இந்தக் காட்சிகளை எல்லாம் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘நீங்கள் அதிபிரபலமானவர் போல இருக்கிறதே. இங்கே எதற்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்றேன். அந்த அடக்கமான மனிதர் என்னுடைய கேள்வியின் முதல் பகுதியை தவிர்த்துவிட்டு இரண்டாம் பகுதிக்கு மட்டும் பதில் சொன்னார். அவர் வார்த்தைகள் புறா சத்தமிடுவதுபோல சங்கீத ஒலியுடன்  வெளியே வந்தன. ‘நான் பல மைல்கள் தூரத்தில் இருந்து ஒருவரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறேன். வேகமாக வந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் வந்துவிட்டேன். அதுதான் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்றார்.

‘எல்லோருக்கும் உங்களை தெரிந்திருக்கிறது. இங்கே அடிக்கடி வருவீர்களா?’ என்றேன்.

‘இல்லை, கடந்த ஒரு மாதமாக ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் போனேன். நிறைய கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள், சந்திப்புகள். என்னுடைய பெயர் டொக்ரர் இகோர் புர்டென்கோ. உடல் பயிற்சிக்கு தண்ணீர் சிகிச்சை முறையை  உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். எனக்கு கைகொடுத்த பெண்மணி அப்படி என்னிடம் பயிற்சிபெற்றவர்தான்’ என்றார்.

 

இகோர் புர்டென்கோ ஒரு ரஸ்யர். உலகப் பிரபலமான பல நீச்சல்வீரர்களுக்கும், தடகள ஓட்டக்காரர்களுக்கும்,  பனிச்சறுக்கு நடன வீராங்கனைகளுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார். ரஸ்யாவில் ரஸ்ய மொழியில் புத்தகங்கள் பல எழுதியிருக்கிறார்.  நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி மருத்துவப் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். 1980ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வாழ்கிறார். அமெரிக்கா வந்த பிறகுதான் அவருடைய தண்ணீர் சிகிச்சை உலகளாவிய புகழ்பெற ஆரம்பித்தது.

 

தண்ணீர் சிகிச்சை வேலை செய்யும் என்பதை அவர் முதன்முதலில் எப்போது உணர்ந்தார் என அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார். ‘எனக்கு அப்பொழுது 11 வயதிருக்கும். என்னுடைய அப்பா இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றிய ராணுவ வீரர். ஜேர்மன் ராணுவம் லெனின்கிராடை சுற்றி வளைத்துவிட்டது. ஹிட்லர் நினைத்தார் லெனின்கிராடை சீக்கிரத்தில் பிடித்துவிடலாம் என்று. அவர் அதற்கு ஒரு புதுப் பெயர் சூட்டுவதற்குகூட தயாராக இருந்தார். அடொல்ப்பேர்க். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. அந்த முற்றுகை 872 நாட்கள் நீடித்தது. உலக வரலாற்றில் ஆக நீண்ட முற்றுகை அதுதான். பத்து லட்சம் ரஸ்யப் போர்வீரர்கள் இறந்த அந்தப் போரில் என்னுடைய அப்பா  நாலு தடவை காயம் பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் மீண்டும் போர்முனைக்கு அனுப்பப்பட்டார். ஐந்தாவது தடவை வயிற்றிலே குண்டுபட்டு சிகிச்சை முடியாமல் வீட்டுக்கு அவரை அனுப்பிவிட்டார்கள்.  அப்பா இரவும் பகலும் வலியில் துடித்தார். ஒரு சிகிச்சையும் பலனளிக்கவில்லை. ஓயாமல் முனகியபடியே பகலில் எப்பொழுது இரவாகும் என்று காத்திருப்பார். இரவில் எப்பொழுது விடியும் என்று விழித்திருப்பார்.

 

ஒருநாள் இரவு கட்டிலில் உட்கார்ந்து காலைத் தொங்கப் போட்டபடியே அவர் சாப்பிட்டார். ஆனால் கண்ணில் இருந்து நீர் கொட்டியது. அந்தச் சம்பவம் என்றைக்கும் மறக்க முடியாத என் சிறுவயதுக் காட்சி. அடுத்த நாள் பகல் பத்து மணியானதும் என் அப்பா என்னிடம் கெஞ்சினார். அவரால் நடக்க முடியாது. அவருடைய காலைப் பிடித்து அவரை தரையிலே நான் இழுத்துச் செல்லவேண்டும்.  நூறு மீட்டர் தூரத்தில் ஒரு குளம் இருந்தது. அப்பாவின் உடல் திடகாத்திரமானது. சின்னப் பையனான நான் அங்கே அவரை இழுத்துச் செல்வதற்கு சிரமப்பட்டேன். குளத்துத் தண்ணீருக்குள் அமிழ்ந்தபடி அப்பா பலவித பயிற்சிகள் செய்தார். பின்னர் நிலத்திலே பயிற்சி, மறுபடியும் தண்ணீர் என இரண்டு மணிநேரம். தண்ணீரில் புவியீர்ப்பு ஏறக்குறைய இல்லை. அவருடைய வலி மறைந்துவிடும். ஆறு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்ததில் வலி முற்றிலும் போய் உடம்பு பூரணமாகக் குணமாகிவிட்டது. அதை நான் என் கண்ணால் பார்த்தேன். அதுதான் தண்ணீர் சிகிச்சை நம்பிக்கையை என்னுள் விதைத்தது.

 

இங்கே அமெரிக்காவில் இதற்கு வரவேற்பு எப்படி?

நான் இங்கே புலம்பெயர்ந்தபோது எனக்கு ஒருவரும் வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. நல்ல காலமாக இங்கே பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றிய புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்திருந்தார். அவர் எனக்கு உதவி செய்தார். அதனால் அமெரிக்காவில் முதன்முறையாக தண்ணீர் சிகிச்சை முறையை உண்டாக்க முடிந்தது. இன்று நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்களுக்கு நான் பயிற்சி கொடுத்திருக்கிறேன்.  பல பயிற்சி மையங்களையும் நாங்கள்  வெற்றிகரமாக இயக்குகின்றோம்.

 

’விளையாட்டு வீரர்களை போட்டிக்கு தயார் செய்வீர்களா?’

’விளையாட்டு வீரர்கள் என்றில்லை. உடல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உடலில் வலி ஏற்பட ஏதாவது காரணம் இருக்கும். விளையாட்டு வீரர்கள் தினம் உடலை வருத்துகிறார்கள். அதன் எல்லையைக் காண உடலைப் பிழிகிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி ஏதாவது விபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.  உரிய சிகிச்சையளித்து அவர்களை போட்டிகளுக்கு தயார்செய்வது எனக்கு முக்கியமான பணியாக இருக்கிறது. நீங்கள் நான்ஸி கெரீகன் (Nancy Kerrigan)  பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்றார்.

’உலகமே கேள்விப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் புகழ் அமெரிக்க பனிச்சறுக்கு நடன வீராங்கனை. அவருடைய நடனத்தை நான்  பலதடவை பார்த்திருக்கிறேன்.’

‘1994ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மும்முரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய எதிரிகள் செய்த சதியால் அவர் முழங்காலை ஒருவர் கட்டையினால் அடித்து நொருக்கிவிட்டார். அந்தப் பெண் வலியில் துடித்து அழுததை தொலைக்காட்சிகளில் உலகம் முழுவதும் பார்த்தது. பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக ஆறு வாரங்களே இருந்தன. அவர் ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நான்ஸி என்னிடம் தண்ணீர் சிகிச்சைக்கு வந்தார். பழகுவதற்கு அருமையானவர். விடாமுயற்சிப்பெண். தினம் பலமணி நேரங்கள் தண்ணீரிலும் நிலத்திலும் அவருக்கு சிகிச்சையளித்தேன். இன்னொருவர் என்றால் மனம் உடைந்து போயிருப்பார். நான்ஸி ஒலிம்பிக்ஸுக்கு தயாராவதை நிறுத்தவில்லை. ஆறுவாரங்கள் கழித்து  நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார்.

 

’பனிச்சறுக்கு வீரர்களுக்கு மாத்திரம்தான் பயிற்சி கொடுப்பீர்களா?’

’நீங்கள் Alexandre Despatie பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

‘நல்லாய்த் தெரியும். கனடா நாட்டின் தலைசிறந்த டைவர். 2008 பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் டைவிங் போட்டியில்  கனடாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றவர். பத்திரிகைகள் அவரைப்பற்றி நிறைய எழுதியிருக்கின்றன. நான் கனடாக்காரன்.’

 

’அப்படியா? மகிழ்ச்சி. அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கு மூன்று மாதம் இருக்கும்போது கால் பாத எலும்பு முறிந்துவிட்டது. அவர் ஒலிம்பிக் போட்டிகளில்  பங்குபெறமுடியாது என அவரைக் கைவிட்டுவிட்டார்கள்.’ ‘அவர் டைவிங் வீரர்தானே. பாத எலும்பு முறிந்தால் அது நீச்சல் குளத்தில் குதிப்பதை பாதிக்குமா?’

‘டைவிங்க என்பது பாலன்ஸ் சம்பந்தப்பட்டது. குதிக்கமுன்னர் இரண்டு காலையும் ஒன்றாக வைத்து உடல் பாரத்தை சமனாகப் பிரித்து, அதன் பின்னர்தான் குதிக்கவேண்டும். அவரால் சமனாக நிற்க முடியவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சையளித்தேன். தினம் தண்ணீரிலும் நிலத்திலும்  3,4 மணிநேர அப்பியாசங்கள். ஒருவராலும் நம்பமுடியவில்லை. விரைவில் குணமாகிய அவருக்கு ஒலிம்பிக் போட்டியில்  வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.’

’ஞாபகம் வருகிறது. கனடா பத்திரிகைகள் அதுபற்றி எழுதியிருந்தன.’

‘ஆனால் எனக்கும் பெரிய ஆச்சரியம் இருந்தது. கனடிய அரசாங்கம் வெள்ளிப் பதக்கத்துக்கு காரணமாக இருந்த எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்தது. ஒலிம்பிக் கமிட்டியின் அனுமதியுடன் எனக்கும் ஒரு விசேட ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது. ஒட்டாவாவில் ஒழுங்கமைத்த பெரிய விழாவில் இந்தப் பதக்கத்தை எனக்கு கொடுத்தார்கள்’  என்று அதைக் காட்டினார். நான் முதல் தடவையாக ஓர் ஒலிம்பிக் பதக்கத்தை தொட்டுப் பார்த்தேன். முழுக்க முழுக்க வெள்ளியினால் ஆன அந்தப் பதக்கம் தூக்குவதற்கு கையில் பாரமாக இருந்தது.

 

’நான்ஸி கெரீகன் போட்டியிட்டபோது அவரை இரண்டாவதாக்கி முதலாவதாக வந்து  தங்கம் வென்ற பெண் உங்கள் நாட்டவர் அல்லவா?’

’நீங்கள் சொல்வது சரி. உக்ரெய்ன் நாட்டுப் பெண். அவர் பெயர் Oskana Baiul. நானும் அவரும் ஒரே நாடுதான். ஆனால் அவருடைய கதை பரிதாபமானது. அவர் ஏழ்மையான  குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் பனிச்சறுக்கு திடலில் நீண்டநேரம் பயிற்சிசெய்து பின்னர் அங்கேயே ஒரு கட்டிலில் படுத்து தூங்கிவிடுவார். 16 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்றபிறகு அவர் பயிற்சி செய்தபோது இன்னொரு பெண்ணுடன் மோதி முழங்கால் உடைந்து தையல்போட வேண்டி நேர்ந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பிறகு உக்ரெய்ன் நாடு மிகவும் கஷ்டமான நிதி நிலைமையில் இருந்தது. ஐஸ் தரை உண்டாக்கும் மெசின் பழுதடைந்தபடியால் அவர்கள் கைகளினால் ஐஸ் தரை உண்டாக்கினார்கள். ஒரு தங்கம் வென்ற பெண்ணுக்கு வசதிகள் செய்துதர அரசாங்கத்துக்கு முடியவில்லை. ஒக்ஸானாவும் என்னைப்போல அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு சிகிச்சை அளித்தேன். அமெரிக்காவில் பல போட்டிகளில் அவரால் பங்குபற்ற முடிந்தது. இப்பொழுதும் பனிச்சறுக்கு நடனங்கள் அவ்வப்போது செய்கிறார்..’

 

’நீங்கள் முக்கியமாக பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களுக்குத்தான் பயிற்சியளித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’

’அப்படியல்ல. பனிச்சறுக்கு பயிற்சியில் அநேக விபத்துக்கள் நடக்கும். அதுவே காரணம். கரோலின் கபெட்டா (Carolyn Capetta) ஒரு மருத்துவ தாதி. 5 குழந்தைகள் உள்ள அவருக்கு நான் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவர் யார் தெரியுமா? 400 மீட்டர் உலக ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றவர்.

Merrill Ashley, இவரைப்பற்றி தெரிய வேண்டுமானால் நீங்கள் இணையத்தில் போய்ப் பார்க்கலாம். இவர்தான் நியூ யோர்க் பாலேயின் Prima Ballerina. முதன்மையான பாலே ஆட்டக்காரி. இவருடைய நாரியும் காலும் இவருக்கு பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருந்தன. அப்படி உடம்பை வருத்தி இவர்கள் எல்லாம் தங்கள் கலைகளை வளர்த்தார்கள். இவரும் என்னிடம் நீண்ட காலம் பயிற்சி எடுத்தவர். இப்பொழுது அவர் ஓய்வெடுத்துவிட்டார். நான் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் ஒருமுறை என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு நிறைய புகைப்படங்களும் ஒளிப்படங்களும் காட்டுவேன். என்னுடைய பெருமைக்காகச் சொல்லவில்லை. தண்ணீர் சிகிச்சையின் முக்கியத்துவத்தை இந்த நாட்டில்  இன்னும் பலர் உணரவில்லை. உலகத்தில் 70 வீதம் பேர் ஒரு சமயத்தில் முதுகு வலியினால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் எல்லோரும் பயன்பெறவேண்டும் என்பதுதான் என் லட்சியம்’ என்றார்.    

 

’நீங்கள் இந்த துறையில் பெரிய நிபுணராக இருக்கிறீர்கள். ஒரு நோயாளி உங்களுடன் ஒரு மணி நேரத்தை கழித்தால் அவர் உங்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும்?’ என்று கேட்டேன். கேட்கக்கூடாத கேள்வியோ தெரியாது, ஆனால் கேட்டுவிட்டேன். அவர் தயக்கமில்லாமல் ‘ஒரு மணித்தியாலத்துக்கு 500 டொலர்’ என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரை மணி நேரம் பேசியிருந்தோம். சொல்லி வைத்ததுபோல அவர் சந்திக்கவேண்டிய ஆள் வந்தார். இகோர் என்னிடம் கைகொடுத்து விடைபெற்று சென்றுவிட்டார்.

 

சரி, இனி என்ன செய்வது என்று நான் மறுபடியும் சூரியன் ஒளிரும்  தடாகத்தை பார்க்கத் தொடங்கினேன். அது எனக்கு அலுப்புத் தராத வேலை. பெண்களும் குழந்தைகளும் தடாகத்துக்கு அழகூட்டிக்கொண்டு இருந்தார்கள். மேலும் காக்க வைக்காமல் மனைவி, தான் போன வேலையை முடித்துவிட்டு, வந்தார். அவருக்கு இங்கே நடந்தது ஒன்றும் தெரியாது. ‘இவ்வளவு நேரமும் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டார். ’250 டொலர் லாபம் ஈட்டினேன்’ என்றேன். மனைவி ஒருவிதமான ஆச்சரியத்தையும் காட்டவில்லை. இது தினம் தினம் நடப்பதுதான் என்பதுபோல வீடு போய்ச் சேரும் வரைக்கும் ‘எப்படி உழைத்தீர்கள்’ என்றோ, ’எங்கே அந்தக் காசை காட்டுங்கள்?’ என்றோ அவர்  கேட்கவில்லை.

 

END

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta