என்ன ஊர் இது?

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை. என்றாலும் ஒவ்வொரு வருடம் பிறந்ததும் முதலில் வாங்குவது நாட்குறிப்பு புத்தகம்தான். அதில் முதல் மூன்று நாட்களும் தவறாமல் ஏதாவது எழுதிவைப்பேன். அத்துடன் அந்த வருடத்திற்கு எழுதியவை போதும் என்ற நினைப்பு வந்துவிடும். மீதி பக்கங்கள் எழுதாமல் வெறுமையாக இருக்கும்.

ஒருநாள் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு வந்தபோது ஒரு கவிதை கண்ணில் பட்டது. நான் எழுதியது அல்ல. வேறு யாரோவுடைய கவிதை ஒன்றை மொழிபெயர்த்து வைத்திருந்தேன். ஆப்பிரிக்கக் கவிதையாக இருக்க வேண்டும். ஆனால் அந்தக் கவிதையை எழுதியவரின் பெயரைக் குறித்து வைக்க மறந்துவிட்டேன். கவிதை இதுதான்.

என்ன ஊர்?

ஓ, என் அம்மாவே!

உன் மருமகன் இங்கே இல்லை

மழை வருகிறது.

பிய்ந்துபோன இந்த ஊரில்

தன் கணவனை

ஓர் இரவுக்கு கடன் தர

ஒரு பெண்ணுக்கும்

சம்மதமில்லை.

என்ன இழவெடுத்த ஊர்?

இதைப் படித்தபோது எனக்கு சிரிப்பு வந்ததோடு குறுந்தொகைப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தது. இந்த உலகத்தில் எந்த மூலையில் ஒரு காதல் கவிதை கண்ணில் தென்பட்டாலும் அதில் ஒரு கூறு பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறுந்தொகையில் ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதை கண்டு வியப்பேற்படும்.

குறுந்தொகை – 28

பாடியவர் – ஒளவையார்

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

ஓரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு

’ஆஅ! ஒல்’ எனக் கூவுவேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்ப, என்

உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

 

முட்டுவேனா அல்லது

என்னை நானே தாக்குவேனா

ஆ ஊ என்று கூவுவேனா

காற்று அலைக்கழிக்கும்

என் நோயைப் பற்றிய கவலை

சிறிதும் இல்லாமல்

அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்

இந்த ஊர்

என்ன ஊர்?

 

இரண்டு பாடலிலும் தன் காதல் நோயைப் பற்றி கவலைப் படாமல் தூங்கும் ஊரின் மீது பெண்ணுக்கு எரிச்சல் வருகிறது. இதுவென்ன இழவெடுத்த ஊர் என்று திட்டுகிறாள்.

பெண்களின் இயல்பு, எங்கேயும், எந்தக் காலத்திலேயும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறது போலும்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta