பெயர் சூட்ட வேண்டாம்

பெயர் சூட்ட வேண்டாம்.

அ.முத்துலிங்கம்

 

18 May 2011

President

Amnesty International

1, Easton Street,

London, WC1X0DW

U.K

மேன்மை தங்கிய ஐயா,

என்னுடைய பெயர் விசாலாட்சி கனகரத்தினம். என் விலாசத்தை எழுத முடியாது ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் நான் ஏழு தரம் இடம் மாறிவிட்டேன். நான் கடைசியாக தங்கிய இடம் முள்ளிவாய்க்கால். என் கணவர் குண்டு பட்டு இறந்த பிறகு நானும் மகனும் பிளாஸ்டிக் கூரை போட்ட ஒரு குடிசையில் வாழ்ந்தோம். நல்ல மழை பெய்யாவிட்டால், நல்ல காற்றடிக்காவிட்டால், நல்ல வெய்யில் எறிக்காவிட்டால், நல்ல குளிர் அடிக்காவிட்டால் இதை விட நல்ல வசிப்பிடம் எங்களுக்கு கிடையாது. ராணுவ டாங்கிகள் ஓடும்போது தரை அதிர்ச்சியில் சிலவேளை பிளாஸ்டிக் கூரை பறந்து போய்விடும். மற்றும்படிக்கு நல்ல குடிசைதான்.

என்னிடம் ஒரு கைமெசின் இருந்தது. அதில் உடுப்பு தைத்து அந்த வரும்படியில் காலத்தை ஓட்டினேன். போரின் இறுதிக் கட்டத்தில் உறை தைத்து கொடுத்தேன். இந்த உறையை எடுத்துச் சென்று சனங்கள் மண் நிரப்பி பங்கர்களாக பாவித்தார்கள். போர் உச்சத்தில் இருந்தபோது துணி கிடைக்காமல் தங்கள் தங்கள் சேலைகளைக் கொண்டுவந்து தந்து உறையடித்தார்கள். ஆகக் கடைசியான நேரத்தில் கூறைச் சேலையைக்கூட கொண்டுவந்தார்கள். நான் அதையும் கூசாமல் உறையடித்துக் கொடுத்தேன். குண்டு விழ விழ எனக்கு வரும்படி அதிகமாகியது. அப்படி உழைத்ததை இப்ப நினைத்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

மேன்மை தங்கிய ஐயா, என் மகன் நல்லாய் படிக்கிறவன். இரண்டு வருசமாக படிப்பு இல்லாமல் என்னோடு அலைந்தான். நான் அவனுக்கு கொடுத்ததிலும் பார்க்க அவன் எனக்கு தந்தது அதிகம். என்ரை பிள்ளை 19வது பிறந்த நாளைக் காணவில்லை. அதற்கு 5 நாள் முன்பு காணாமல் போனான். தேதி வேணுமென்றால் சரியாக 2009, மே 12. அன்று காலை பச்சை கட்டம் போட்ட சாரமும், சாயம் போய், தோள்மூட்டடியில் தையல் விட்ட, ரீ சேர்ட்டும் அணிந்து புறப்பட்டான். சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கத்தான்.  அவனுடைய அடையாளம் இடது கண் மேலே ஒரு மச்சம் இருக்கும். இரட்டைச் சுழி.

என் மகனை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள். மன்றாடிக் கேட்கிறேன். இங்கே போனால் அங்கே, அங்கே போனால் இங்கே என்று என்னை அலைக்கழிக்கிறார்கள்.  வேறு கதியில்லாமல் உங்களுக்கு எழுதுகிறேன். அவன் பசி தாங்க மாட்டான். எப்படியும் பின்னேரம் ஆறு மணிக்கு குடிசைக்கு திரும்பிவிடுவான். நான் காத்திருப்பேன் என்று அவனுக்கு தெரியும்.  அன்று வெளிக்கிட்டவன் ஏனோ திரும்பவில்லை. பாதுகாப்புக்காக எப்பவும் கையிலே சுருட்டி ஒரு சிங்களப் பேப்பர் வைத்திருப்பான். ராணுவம் பிடித்தால் அவனை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கை. அவன் தொலைந்து போவதற்கு ஒரு காரணமும் கிடையாது.

மேன்மை தங்கிய ஐயா, செப்டம்பர் 1991ல் இத்தாலி நாட்டின் எல்லையில் ஓர் உடலை உறைந்துபோன நிலையில் கண்டுபிடித்தார்கள் என்று பேப்பரில் படித்தேன். 5300 வருடங்களுக்கு முந்திய உடல் அது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதற்கு ’ஐஸ் மனிதன்’ என்று பெயர் சூட்டினார்கள். இதை அறிந்திருப்பீர்கள்.

1959ம் வருடம் கலிஃபோர்னியா கரையோரத் தீவில் 10,000 வருடங்களுக்கு முந்திய பெண்ணின் எலும்புகளை கண்டுபிடித்தார்கள். அதற்கு ’ஆர்லிங்டன் நீரூற்று பெண்’ என்று பெயர் கொடுத்தார்கள். இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

1974ல் அவுஸ்திரேலியாவில் 60,000 வருடங்களுக்கு முந்திய மனித எச்சங்களைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு ’மங்கோ மனிதன்’ என்று பெயர் வைத்தார்கள். இதுவும் நீங்கள் அறியாததல்ல.

1974ல் எத்தியோப்பியாவின் அவாஷ் பள்ளத்தாக்கில் 3.2 மில்லியன் வருடங்கள் பழமையான மனித எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். அதற்கு லூசி என்று பெயர் தந்தார்கள். இவையெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்கள்தான்.

மில்லியன் வருடங்களுக்கு முந்திய எலும்புகளைக் கண்டு பிடித்து தொல்பொருள் ஆய்வாளர்கள்  பெயர் சூட்டுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்துபோன என் மகனை கண்டுபிடிப்பது அத்தனை கடினமானதா? நிலத்தில் இருந்து கிண்டி எடுத்த ஆயிரக் கணக்கான உடல்களில் இருந்தும், எலும்புக் குவியல்களில் இருந்தும் என் மகனை நான் எப்படி அடையாளம் காண்பேன்? ஒன்பது மாதங்கள் நாங்கள் இருவரும் ஓர் உடலை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் என்னால் அவனை அடையாளம் காண முடியவில்லையே.  நீங்கள் அவனை கண்டு பிடித்து தாருங்கள், ஆனால் பெயர் சூட்ட வேண்டாம். அவனுக்கு ஏற்கனவே ஒரு பெயர் இருக்கிறது. தமிழ் மன்னன். அவன்தான் ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னன். இரட்டைச் சுழி அவனுக்கு. நான் அவனை முறையாக அடக்கம் செய்யவேணும்.

என்றும் தங்கள் கீழ்ப்படிதலான

விசாலாட்சி கனகரத்தினம்.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta