இரண்டு சிறுகதைகள்

அண்டன் செக்கோவின் கண்ணாடி சிறுகதை 1600 வார்த்தைகள்தான். புதுமைப் பித்தனின் மகாமசானம் சிறுகதை 1000 வார்த்தைகள். இவை வார்த்தைகளின் கனதியாலும் வசனங்களின் அமைப்பாலும் சொன்ன விசயத்தினாலு,ம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் படைத்த அன்று கிடைத்த அதே புதுமையுடன் இன்றைக்கும் இருக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. உங்கள் பார்வையை மாற்றுகின்றன. உலகத்தின் ஆகச் சிறிய சிறுகதை என்று ஒன்றைச் சொல்வார்கள். மூன்றே மூன்று வரிகள்தான். ஆனால் ஒருமுறை படித்தால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது. ’ விற்பனைக்கு. குழந்தையின் பூட்ஸ்கள். பாவிக்காதவை.’

 

அண்மையில் நான் ஒரு  சிறுகதை படித்தேன். மூன்று நாட்களாக மனதை அலைக்கழித்தபடி இருக்கிறது. மிகச் சிறிய கதை, 1400 வார்த்தைகள்தான் ஆனால் அது கிளப்பிய அலை அடங்க வெகுநேரமாகியது. யூசுஃப் அல்முகமத் என்பவர் எழுதிய ’சோப்பும் வாசனையும்’ என்ற கதையின் சுருக்கம்தான் கீழே வருவது. ஒரு பெண் சொல்வதாக கதை அமைந்திருக்கிறது.

 

‘என்னுடைய கணவர் எனக்கு ஒன்றும் விட்டுப் போகவில்லை. நான் வசிக்கும் குடிசை இடிமுழக்கத்துக்கு ஆடும்.  அடக்கம் செய்ய முன்னர் பிணங்களைக் கழுவுவதுதான் என் தொழில். அந்த வருமானத்தில் நான் உயிர் வாழ்ந்தேன். ஒருநாள் பின்மதியம் தாடி வைத்த ஒரு மனிதன் வந்து கதவைத் தட்டினான். பிணம் கழுவுவதற்காக என்னை வரச்சொன்னான். காரிலே ஒரு பெண் இருந்ததால் மறுப்பு சொல்லாமல் நான் அவனுடன் புறப்பட்டேன். அவள் இளம் பெண் என ஊகித்தேன். தலையில் இருந்து பாதம்வரை மூடும் கறுப்பு அங்கியை அணிந்திருந்தாள். என்னுடைய வணக்கத்துக்கு அவள் பதில் வணக்கம் சொல்லவில்லை. ஓயாத விரல் அசைவில் அவள் பிரார்த்தனை முணுமுணுக்கிறாள் என்பது தெரிந்தது. அவள் பாதங்கள் மலிவான பிளாஸ்டிக் செருப்பில் வெள்ளையாக காணப்பட்டன. அந்தக் கறுப்பு உடைக்குள் ஓர் ஆண் இருக்கலாமோ என்றுகூட எனக்கு சந்தேகம் எழுந்தது.

 

கார் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. ‘இன்னும் தூரமா?’ என்று மூன்றாவது தடவையாகக் கேட்டேன். ‘அல்லாவில் விசுவாசம் வை, பெண்ணே’ என்றான் அந்த மனிதன். ஒரு பாலைவனத்தின் ஊடாகப் போகும் சாலையில் கார் திரும்பியது. பாதை பழகியவன்போல தயக்கமில்லாமல் அவன் காரை ஓட்டினான். நான் அந்தப் பெண்ணிடம் இறந்துபோன மனுசி அவரின் தாயாரா என்று வினவினேன். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இரண்டு மலைகளுக்கு நடுவில் தெரியும் மண்கும்பியை நோக்கி காரைச் செலுத்தியவன் அது சமீபித்ததும் நிறுத்தினான். அவன் கதவைத் திறந்ததும் கீழ்ப்படிதலுடன் இறங்கிய பெண் அவனுக்கு முன்னே நடந்தாள். கார் கதவை ஒருவரும் சாத்தவில்லை. மண்கும்பியில் ஏறி அடுத்த பக்கம் இறங்கி மறைந்தாள். அவனும் அவள் பின்னால் இறங்கினான்.

 

ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் பாலைவனத்தின் நிசப்தத்தை கலைத்தது. ஒரு வேளை மூன்று சத்தமாகவும் இருக்கலாம். மலைகளின் எதிரொலி என்று நினைக்கிறேன். அந்தச் சம்பவம் நடந்து பல வருடங்களாகியும் இன்றும் அந்த ஒலியை என் கனவுகளில் கேட்டு நான் திடுக்கிட்டு கண் விழித்து விடுகிறேன். சில நிமிடங்கள் கழித்து அவன் எதையோ இழுத்து வருவதுபோல வந்தான். என்னைப் பார்த்து ‘வெளியே வா’ என்றான். பீப்பாய் தண்ணீரை வாகனத்திலிருந்து இறக்கினான். சோப்பு,, வாசனை, எண்ணெய் ஆகியவற்றை எடுத்துவரச் சொல்லி எனக்கு நினைவூட்டினான். நான் அந்தப் பெண்ணின் மார்பில் பூப்போல மலர்ந்த ரத்தத்தை துடைத்து தண்ணீரில் கழுவி உடலை அடக்கம் செய்வதற்கு தயார் செய்தேன். அவன் மணலில் குழி தோண்டினான். அவன் கண்களில் நிறுத்தாமல் வழிந்த நீர் தாடியை நனைத்தது. பிணத்தை புதைத்தபோது கட்டுமீறிக் கதறினான். எனக்கு பயம் பிடித்தது. இருட்டிப்போன  சமயம் என்னை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தான்.’ 

 

கதை முடிந்து போனாலும் மனது அதை மீட்டிக்கொண்டே இருந்தது. உண்மையில் கதை முடிந்த பின்னர்தான் அது ஆரம்பமாகியது; பல கேள்விகளையும் எழுப்பியது. அந்த மனிதன் யார்? தகப்பனா, சகோதரனா, கணவனா அல்லது காதலனா? எதற்காக கொலை செய்தான்? அவள் ஏன் முழுச் சம்மதத்துடன் புறப்பட்டு வந்தாள்? புதைக்கும்போது எதற்காக அழுதான்? அந்த மனிதன் ஒன்றுமே பேசாமல் கார் கதவை திறக்க அவள் இறங்கி முன்னாலே நடந்துபோனாள். தான் இறக்கப்போகும் இடத்தை அவளே தெரிவு செய்தாள். எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொண்டாள்? வாசகர்தான் உரிய விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.  சிறந்த சிறுகதைக்கான அடையாளம் அது.

 

மேலே சொன்ன சிறுகதையை படித்து முடித்த சில நாட்களில் ரஸ்ய மேதை ரோல்ஸ்ரோய் எழுதிய ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தது. ரோல்ஸ்ரோய் எழுதியதில் ஆக நீண்டது என்று சொல்லப்படும் (10,000 வார்த்தைகளுக்கும் மேலே) பிரபலமான சிறுகதை. அதன் தலைப்பு ’காக்கஸில் ஒரு சிறைக்கைதி’ (A Prisoner in the Caucasus). இந்தச் சிறுகதையை படித்து முடித்தபோது அது மனதை உலுக்கவில்லை. ஒரு புதிரும் கிடையாது. கதை முடிந்தபோது எல்லாக் கேள்விகளுக்குமான விடையும் கிடைத்தது. ஆனாலும் கதை எளிமையாகவும், படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆரம்பத்திலிருந்து வாசகரை ஈர்த்தபடி கதை நகர்ந்து முடிவுக்கு வந்தது. அதன் சுருக்கம்தான் கீழே வருவது.

 

ரஸ்ய ராணுவ வீரன் ஒருவன் , பெயர் சிஹிலின், தன் தாயை பார்ப்பதற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு குதிரையில் புறப்படுகிறான். தாயார் அவனுக்கு கிராமத்தில் மணமகள் தேடுகிறாள். போகும் வழியில் டாட்டார் கொள்ளைக்காரர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக துப்பாக்கி வைத்திருக்கும் கொஸ்ட்லின் என்பவனுடன் இணைந்து பயணம் செய்கிறான். ஆனால் எதிர்பாராதவிதமாக டாட்டார் கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தாக்குகிறார்கள். துப்பாக்கி குண்டு குதிரையை துளைக்க குதிரையுடன் கீழே விழுகிறான்  சிஹிலின். அவனைக் கைதுசெய்து கட்டிப் போட்டு தங்கள் கிராமத்துக்கு இழுத்துச் சென்று அங்கே களஞ்சிய அறையில் அவனை சிறை வைக்கிறார்கள்.

 

அடுத்தநாள் அவனை பிணைக்கடிதம் எழுதச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவனுடன் பிடிபட்ட கொஸ்ட்லின் 5000 ரூபிள்களுக்கு பிணைக்கடிதம் எழுதி அனுப்பிவிட்டான். சிஹிலின் அவ்வளவு பணம்தர  தன் ஏழைத் தாயாரிடம் வசதி இல்லையென்று கூறி மறுக்கிறான். இறுதியில்  500 ரூபிள்களுக்கு  பிணைக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சம்மதிக்கிறான். இல்லையென்றால் தன்னைக் கொன்றுவிடச் சொல்கிறான். டாட்டார்கள் வேறு வழியின்றி அவன் சொன்னதை ஏற்கிறார்கள்.. அவன் பிணைக்கடிதத்தை எழுதி தன் தாயாருக்கு அனுப்புகிறான், ஆனால் தவறான முகவரியை வேண்டுமென்றே எழுதிவிடுகிறான். எப்படியும் சிறையிலிருந்து தப்பிவிடலாம் என்று அவன் நினைத்ததுதான் காரணம்.

 

சிறையில் அடைபட்ட பின்னர் டினா என்ற சிறுமியின் நட்பு அவனுக்கு கிடைக்கிறது. சின்னச் சின்ன பொம்மைகள் செய்து அவளுக்கு பரிசளிப்பான். அவள் அவனுக்கு தண்ணீர் கொண்டு வரும் சாக்கில் வெண்ணெய்க்கட்டி, இறைச்சி முதலானவற்றை திருடி வந்து  கொடுப்பாள். ஒருநாள் இரவு சிஹிலினும் கொஸ்ட்லினும் தப்பி ஓடிவிடுகிறார்கள். மலைப் பாதைகளில் ஏறுவது கடினமாக இருந்ததால் பூட்ஸ்களை கழற்றி எறிந்துவிட்டு ஓடுகிறார்கள். விடிவதற்கிடையில் காட்டுக்குள் புகுந்துவிடவேண்டும் என்பது திட்டம். அவ்வாறு வேகமாக ஓடியதில் கால்கள் கற்களில் வெட்டி ரணமாகி ரத்தம் ஓடுகிறது. அப்படியும் கொஸ்ட்லினை முதுகிலே தூக்கிக்கொண்டு சிஹிலின் ஓடுகிறான். டாட்டார்கள் நாயுடன் அவர்களை துரத்தி கிட்ட வருகிறார்கள். ஒரு கட்டத்தில் கொஸ்ட்லின் தன்னை விட்டுவிட்டு ஓடச்சொல்லி சிஹிலினிடம் மன்றாடுகிறான். சிஹிலின் மறுத்துவிடுகிறாண். டாட்டார்கள் அவர்களைப் பிடித்து முன்புபோல கட்டி இழுத்து வருகிறார்கள். கிராமத்தில் சிறுவர் சிறுமியர் அவர்கள்மீது கல் எறிந்து கேலி செய்கிறார்கள்.  கால்களில் விலங்கு பூட்டி இருவரையும் பாதாளக் கிடங்கில் தள்ளிவிடுகிறார்கள்.

 

பாதாளக் கிடங்கு மிக மோசமாக இருக்கிறது. ஒரு விலங்கை நடத்துவதுபோல உணவை கிடங்கினுள் வீசுகிறார்கள். அவ்வப்போது ஒரு வாளியில் தண்ணீரை கீழே இறக்குவார்கள். சிறுமி டினா ஒருநாள் ரகஸ்யமாக வந்து ’இன்னும் 14 நாளில் பிணைப்பணம் வராவிட்டால் உங்களை கொல்லப் போகிறார்கள்’ என்ற செய்தியை சொல்வாள். ’நீ ஒரு நீண்ட தடி தேடிக்கொண்டு வந்து தந்தால் நாங்கள் தப்பிவிடுவோம்’ என்று சிஹிலின் சொல்கிறான்.  அவள் மறுத்துவிடுவாள். ஆனால் சிறுமி அன்றிரவு  நீண்ட கம்புடன் வந்துவிடுகிறாள். கொஸ்ட்லின் தாங்கள் மறுபடியும் பிடிபட்டுவிடுவோம் என நம்பியதால் தப்பி ஓடுவதற்கு மறுத்துவிடுகிறான். சிஹிலின் மாத்திரம் கம்பைப் பிடித்து ஏறி வெளியே வந்துவிடுகிறான். சிறுமி அவன் கால்விலங்கை கல்லினால் உடைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. சிஹிலின் வேறு வழியின்றி சங்கிலியை கையினால் தூக்கி பிடித்துக்கொண்டு ஓடத் தயாராகி விடை பெறுகிறான். சிறுமி திருடிக்கொண்டு வந்து வெண்ணெய்க்கட்டியை அவனிடம் கொடுக்க, இருவரும் பிரிகிறார்கள்.

 

சிஹிலின் முன்புபோலவே ரஸ்ய ராணுவ முகாம் பக்கமாக இரவிரவாக ஓடுகிறான். ஆறு மைல்கள் கடந்த நிலையில் டாட்டார்கள் துரத்த தொடங்குகிறார்கள். ஆனால் ரஸ்ய ராணுவம் அவனைக் காப்பாற்றி விடுகிறது. தான் டாட்டார்களிடம் பிடிபட்ட கதையை சிஹிலின் ராணுவத்திடம் சொல்கிறான். மேலும் ஒரு மாதம் கழித்து கொஸ்ட்லினும் 5000 ரூபிள் பிணைப்பணம் கொடுத்து விடுதலையாகிறான்.

 

கதை முடிந்தது முடிந்ததுதான். வாசித்தவர் அதைப் பற்றி மேலே சிந்திப்பதற்கு ஒன்றுமே இல்லை. கதை எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்கும் கதை முடியும்போது விடை கிடைத்துவிடுகிறது. உண்மையில் கதை பாதி வாசித்த நிலையிலேயே எப்படி முடியப் போகிறது என்பது வாசகருக்கு புலனாகிவிடும். கதையின் வசீகரம் அதன் வர்ணனையிலும் நுட்பமான பார்வையிலும்தான் தங்கியிருக்கிறது.

 

கதையில் ஓர் இடம் வரும். ஒருநாள் கைதி தன் இருட்டு அறையில் அடைபட்டுக் கிடக்கிறான். அந்த சிறைச் சுவரில் ஒரு சின்ன ஓட்டை உண்டு. அதன் மூலம் கைதி வெளியே பார்க்கிறான். ஒரு டாட்டார் பெண் நடந்து போகிறாள்.  ஒரு சில விநாடிகளில் பெண் கடந்து போய்விட்டாலும் கதாசிரியரால்  அந்த இடத்தை இலகுவில் கடக்க முடியவில்லை. வர்ணித்துக்கொண்டே போவார். ’அவள் ஓர் இளம் டாட்டார் பெண். நீளமான தொளதொளவென்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிந்து, அதற்கு கீழே உயரமான பூட்ஸும் கால்சட்டையும் அணிந்திருக்கிறாள். ஒரு மேலங்கியை தலைக்குமேலே எறிந்து அதன் மேலே பாரமான உலோக பானை ஒன்றில் தண்ணீர் ஏந்தி நடக்கிறாள். ஒரு கையால் பானையையும் மறுகையால் மேல்சட்டை மட்டுமே அணிந்து மொட்டைபோட்ட  ஒரு சிறுவனையும்  பிடித்திருக்கிறாள். தண்ணீர் பானையை தலையில் சமநிலை குலையாமல் பிடித்துப்போன அவள் பின் கழுத்து தசைநார்கள் துடிக்கின்றன.’ இவ்வளவு காட்சியையும் ஒரு சிறு கணத்தில் களஞ்சிய அறைச் சுவரில் உள்ள சின்னத் துளை வழியாக சிறைக்கைதி பார்க்கிறான். கழுத்து தசைநார்கள் துடிப்பதுகூட அவனுக்கு துல்லியமாகத் தெரிகிறது. இது எப்படி சாத்தியம்? ரோல்ஸ்ரோயால். ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக வர்ணிக்காமல்  நகரமுடியாது. சிறைக் கைதி பார்த்தானோ இல்லையோ அவர் வர்ணித்துத்தான் தீருவார்.

 

சில நீண்ட கதைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட சுருக்கமான கதைகள்  மனதை  ஆக்கிரமித்துவிடும். ரோல்ஸ்ரோயின் எழுத்தில் அவசரமில்லை. ஒவ்வொரு காட்சியையும் நிதானமாக சொல்லிக்கொண்டே போகும்போது கதையின் வேகம் மட்டுப்படுகிறது.  யூசுஃப் அல்முகமத்தை படிக்கும்போது வேகம் முக்கியமானதாகிறது. வர்ணனைகள் கிடையாது. படிக்கும்போது மனம் அதிர்கிறது. படித்த பின்னர் மனதை அலைக்கிறது. மனித வாழ்வை பரிசீலிக்கச் சொல்கிறது.  ஒவ்வொரு வசனமும் அதற்கு முந்தைய வசனத்தின் தொடர்ச்சி. இங்கே அங்கே கவனம் சிதறாமல் கதையை நகர்த்துவதுதான் ஆசிரியரின் முக்கிய நோக்கம். ஆகவே வேகத்தை தடுக்கும் எதுவும் கிடையாது, முக்கியமாக வர்ணனைகள். ஒரு கோட்டுச் சித்திரக்காரர் எப்படி ஒன்றிரண்டு கோடுகளில் ஓர் உருவத்தையும், உணர்ச்சியையும் கொண்டு வந்துவிடுகிறாரோ அது போலத்தான். ஒரு நிலத்தை வர்ணிக்கும்போது வசனம் வசனமாக எழுதி வாசகருக்கு தொல்லை கொடுக்கமாட்டார். ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது அவளுடைய கூந்தல், மூக்கு, கண்கள், உடை,, அதை உடுத்தியிருக்கும் விதம் என்றெல்லாம் எழுதமாட்டார். ஒரு வரியிலேயே முழு உருவமும் வந்துவிடும்.

 

யூசுஃப்பின் கதையில் வரும் கொலைசெய்யப்பட்ட பெண்ணை அவர் இப்படி வர்ணிப்பார். ’முழு உடலையும் மூடி கறுப்பு ஆடை. அவள் விரல்களில் ஒரு சின்ன மோதிரம். வெள்ளைப் பாதங்களில் மலிவான பிளாஸ்டிக் செருப்பு.’ அவ்வளவுதான். கொலை செய்த மனிதனை வர்ணிக்கும் போது ’நரைத்துப்போன தாடி வைத்த மனிதன்’ என்பதற்கு மேலாக வேறு விவரங்கள் இல்லை.  பிணத்தை கழுவும் பெண்ணின் குடிசையை ’இடி முழக்கத்திற்கு ஆடும் குடிசை’ என்று  வர்ணித்திருப்பார்.

 

ரோல்ஸ்ரோயின் கதை மிக மெதுவாக நகர்கிறது. கிராமத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்வதுபோல சாவகாசமாக கதை அவிழ்கிறது. போகும் வழியில் ஒரு குளம் வரும், ஆறு வரும், புல்வெளி வரும், பூங்கா, மலை முகடு என ஒவ்வொரு காட்சியாக ரசித்து செல்வதுபோல விஸ்தாரமான வர்ணனையுடன் கதை நகரும். கதை அரைவாசி முடிந்தவுடனேயே அது எப்படி முடியப் போகிறது என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். ஆகவே கதையின் முடிவு ஓர் உச்சகட்டமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

 

யூசுஃப்பின் கதை அப்படியல்ல. கடைசி வசனம் வரும்வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. கடைசி வரியை நோக்கியே ஒவ்வொரு வசனமும் எழுதப்பட்டிருக்கும். ஒரு காரிலே பயணம் செய்வதுபோல. இலக்கை வேகமாக அடைவதுதான் முக்கியம். அதே நேரத்தில் சொகுசுக் கார் பயணம் போல வாசிப்பு இன்பமாயும் இருக்கும்.  

 

ரோல்ஸ்ரோயின் கதையை உயர்த்துவது அவருடைய நுண்ணிய பார்வை. அது அழியாத சித்திரத்தை மனதில் உண்டாக்கும் அதே நேரம்  நம்பகத்தன்மையை கூட்டும். கொள்ளைக் காரர்கள் சிஹிலினின் குதிரைய சுட்டு வீழ்த்திவிடுவார்கள். குதிரையின் சேணத்தை ஒருவன் ஓடிச் சென்று அகற்றி அதை தோளிலே சுமப்பான். மற்றவன் குதிரையின் மூச்சுக் குழாயை வெட்டி அதன் அவஸ்தையிலிருந்து அதற்கு விடுதலை கொடுப்பான். சிறுமி டினா எப்படி உட்கார்ந்திருக்கிறாள் என்று வர்ணிக்கும்போது ’அவளுடைய முழங்காலும் அவளுடைய தலையும் ஒரே உயரத்தில் இருந்தன’ என்று சொல்வார். கதையின் இறுதியில் டாட்டார்கள் துரத்த சிஹிலின் ரஸ்ய ராணுவ வீரர்களை நோக்கி ஓடும்போது ‘சகோதரர்களே, சகோதரர்களே’’ எனக் கைகளை விரித்துக் கத்திக்கொண்டே ஓடுவான். அந்தக் காட்சி அப்படியே மனதில் நிற்கும்.

 

யூசுஃப்பின் கதை ரோல்ஸ்ரோயிடம் கிடைத்திருந்தால் அதை 4000 வார்த்தைகளுக்கு நீட்டியிருப்பார். உடலை மறைத்து கறுப்பு அங்கி அணிந்த பெண்ணைக்கூட எப்படியும் அங்கம் அங்கமாக வர்ணித்துவிட்டுத்தான் அந்தப் பக்கம் போயிருப்பார். யூசுஃப்பின் கதையில் உச்சக் கட்டம் கடைசியில் வரும். ரோல்ஸ்ரோயின் கதையில் அது கிடையாது. ஆனால் கதை முழுக்க சின்னச் சின்ன உச்சக் கட்டம் வந்து வந்து போகும். இரண்டுமே சிறுகதை. இரண்டிலுமே அழகு உண்டு. வெவ்வேறு.

 

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta