இலவசம்

 

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் ரொறொன்ரோவின் பிரபலமான பல்கடை அங்காடி ஒன்றுக்குச் சென்றேன். நண்பர் தேடிப்போன பொருள் கிடைக்கவில்லை. உடனே திரும்ப வேண்டியதுதானே. நண்பர் விளம்பரப் பலகையில் கழிவு விலையில் விற்கப்படும் சாமான்களின் விவரங்களைப் படித்து அதனால் கவரப் பட்டார். ’இரண்டு காட்டு அரிசி பக்கெட் வாங்கினால் ஒரு கத்தரிக்கோல் இலவசம்’ என்றிருந்தது. யோசிக்காமலே இரண்டு பக்கெட் காட்டு அரிசி வாங்கினார். அவர்கள் இடது கைக்காரர் பாவிக்கும் கத்தரிக்கோல் ஒன்றை இலவசமாக வழங்கினார்கள். நான் கேட்டேன் ‘இடதுகை கத்தரிக்கோலை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ அவர் சொன்னார் ‘ஒரு வேளை, ஒரு காலத்தில் வலது கை பழுதானால் பாவிக்கலாம்தானே.’ அது ஓர் அருமையான விளக்கமாகத்தான் இருந்தது. சில நாட்கள் சென்று காட்டு அரிசி எப்படி இருந்தது என்று கேட்டேன். ‘அதையேன் கேட்கிறீர்கள்? பாக்கெட் அப்படியே இருக்கிறது. காட்டெருமைதான் அதைச் சாப்பிடும்’ என்றார்.

 

இலவசம் என்றால் எப்படிப் பட்டவர்களும் மயங்கி விழுந்து விடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் சியர்ஸ் விற்பனை நிலையத்தில் நான் கண்ட ஒரு காட்சி.  ஒரு தகப்பன் தன் இரண்டு பையன்களையும் அழைத்து வந்திருந்தார்.  இரட்டைப் பிள்ளைகள், வயது 12 – 13 தான் இருக்கும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி முகத்தோடு இருந்தார்கள். தகப்பனோடு உடுப்பு வாங்க வந்ததில் நெளிந்து அதிருப்தியாகக் காணப்பட்டார்கள். அவர்களுக்கு முதல்தரமான ஜீன்ஸ் கால்சட்டை வாங்குவதுதான் அன்றைய திட்டம். இரண்டு ஜீன்ஸ் வாங்கினால் ஒன்று இலவசம். இரண்டு ஜீன்ஸின் விலை 120 டொலர். இரண்டும் பலதடவை தோய்க்கப்பட்டு, சாயம்போய், உரிய இடங்களில் கிழிந்து காணப்பட்டன. ஒரு ஜீன்ஸ் தயாரிப்பதற்கு 2000 கலன் தண்ணீர் தேவைப்படுமாம். அந்த மனிதர் கையில் 4000 கலன் தண்ணீரை குடித்துவிட்டு இரண்டு ஜீன்ஸும் தொங்கின. ஒன்று முழங்காலில் கிழிந்திருந்தது; மற்றதின் தொடையடியில் ஓர் ஓட்டை இருந்தது. இரட்டைப் பிள்ளைகள் என்ற படியால் கிழியலை வைத்து அவர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

 

நீண்ட வரிசையின் கடைசியில் நான் நின்றேன். தகப்பன் விற்பனைப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ’இரண்டு ஜீன்ஸ் வாங்கினால் ஒன்று இலவசம். எனக்கு இலவசமாக ஜீன்ஸ் வேண்டாம். அதற்கான விலையை கழித்துவிடுங்கள்’ என்றார். விற்பனைப் பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் ஹங்கேரிய மொழியை தலைகீழாகப் பேசியதுபோல அவரைப் பார்த்தாள். பின்னர் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம். அதுதான் விதி. கழிவெல்லாம் கொடுக்க முடியாது’ என்றாள். மனிதர் விடுவதாயில்லை. முழுதூரமும் போவதற்கு தயாராகவிருந்தார். ’நீங்கள் கேட்கும் விலை 120 டொலர். அதற்கு 3 ஜீன்ஸ் தருகிறீர்கள். ஒன்றின் விலை 40 டொலர். இரண்டு ஜீன்ஸுக்கு நான் 80 டொலர்தான் தருவேன்’ என்று நாலாம் வகுப்பு மாணவிக்கு விளங்கப்படுத்துவதுபோல சொல்லி முடித்தார்.  இரண்டு பையன்களும் மெதுவாக நகர்ந்து தங்களுக்கும் தகப்பனுக்கும் இடையில் உள்ள தூரத்தை அதிகப் படுத்தினார்கள். அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. முதல்தரமாக இப்படியான ஒரு வாடிக்கையாளரைச் சந்தித்திருக்கிறாள். மறுபடியும் மறுபடியும் ’விலையில் கழிவுதர எனக்கு அதிகாரமில்லை’ என்று கூறினாள். எனக்கு பின்னால் வரிசை வளர்ந்து கொண்டே போனது. பெண் மனேஜரை தேடிப் போனாள். தராசுபோல இரண்டு கைகளிலும் ஜீன்ஸை தொங்கவிட்டபடி இவர் அந்தப் பெண்ணிற்கு பின்னால் போனார். பிறகு நான் அவர்களைக் காணவில்லை. நீண்ட வரிசை முன்னகர்ந்து அவர்கள் நின்ற இடத்தை நிரப்பியது. ‘புகுவார் அவர்பின் புகுவேன்’ நான்.

 

எனக்கும் 2010ம் ஆண்டு காதலர் தினத்தின்போது இலவச வாய்ப்பு ஒன்று கிடைத்தது. என்னுடைய செல்பேசி நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி. ‘இந்த வருடம் காதலர் தினம் சலுகையாக உங்களுக்கு காதலியுடன் பேசுவதற்கு 100 மணித்தியாலங்கள் இலவசமாகத் தருகிறோம்.’ என்னால் நம்ப முடியவில்லை. நிறுவனத்தை உடனே அழைத்தேன். ‘உண்மையாக எனக்கு 100 மணித்தியாலங்கள் இலவசமாக தருகிறீர்களா?’ அவர்கள் ‘உண்மையாகத்தான். நீங்கள் எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட வாடிக்கையாளர்.’ ‘அப்படியா? தந்திரம் ஒன்றும் இல்லையே!’ ‘நம்புங்கள். தந்திரம் ஒன்றுமில்லை’ என்றார்கள்.

 

என்னுடைய செல்பேசி நிறுவனத்தை எனக்கு நல்லாய்த் தெரியும். இலவசமாக ஒன்றுமே தரமாட்டார்கள். மாறாக நான் பேசாத ஆட்களுடன் பேசியதாகவும், அறிமுகமில்லாத மனிதர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மாதா மாதம் பணம் அறவிட்டுவிடுவார்கள். அவர்களுடன் சண்டை பிடித்து நான் அநேகமாக தோற்பேன். சிற்சில நாட்களில் கணக்கை சரி செய்வேன். ஆகவே உறுதி செய்து கொள்வதற்காக மீண்டும் ‘எனக்கே எனக்கா?’ என்றேன். ‘நம்புங்கள். உங்களுக்குத்தான்.’ எனக்கு உடம்பு பதறியது. அவர்கள் மனம் மாற முன்னர் அத்தனை மணித்தியாலங்களையும் பாவித்துவிட முடிவு செய்தேன்.

 

‘100 மணித்தியாலங்களையும் ஒரே மூச்சில் பேசி முடிக்கவேண்டுமா?’

‘இல்லை, இல்லை. விட்டு விட்டு பேசலாம். உங்கள் விருப்பம்.’

‘இன்னொரு கேள்விமட்டும் இருக்கிறது. கேட்கலாமா?’

‘இதில் என்ன தயக்கம். கேளுங்கள்?’

‘ஒரே காதலியுடன்தான் பேசவேண்டுமா? அல்லது வேறு வேறு காதலிகளுடன் பேச அனுமதிப்பீர்களா?’

‘எத்தனை காதலிகளுடனும் பேசலாம். உச்சபட்சமாக 100 மணித்தியாலங்கள். அத்தனையும் இலவசம்.’

‘தந்திரம் ஒன்றும் இல்லையே?’

‘தந்திரம் ஒன்றும் இல்லை.’

‘100 மணித்தியாலங்களை இலவசமாகத் தருகிறீர்கள். இத்தனை கருணை உள்ளம் கொண்ட நீங்கள் ஒரு காதலியையும் இலவசமாகத் தரலாமே!’

பெரும் சத்தத்துடன் எதிர்ப் பக்கம் டெலிபோன் வைக்கப்பட்டது.

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta