சரித்திரத்தில் நிற்கும் அறை

இந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ம் தேதி வந்தபோது நான் பெரிதாக எதிர்பார்த்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு பத்திரிகை ஏதோ முணுமுணுத்தது. வானொலியோ தொலைக்காட்சியோ மூச்சுவிடவில்லை. வார இதழ்கள் மௌனம் சாதித்தன. 17ம் தேதி வந்தது போலவே போய்விட்டது. என்ன மகத்தான தேதி? மனித சரித்திரத்தில் நிலைத்து நிற்கவேண்டிய முக்கியமான நாள் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த வருடத்தின் அதி முக்கியமான நிகழ்வு என்னவென்று தேடிப் பார்த்தபோது பியோன்ஸ் என்ற அமெரிக்க பாடகி கர்ப்பமான செய்தி என்று பதில் வந்தது. ஒரு செக்கண்டுக்கு 9000 துரிதர்கள் அனுப்பப்பட்டனவாம்.

 

போன வருடம், 2010 டிசெம்பர் 17ம் தேதி டியூனிஸியாவில் மொகமட் என்ற 26 வயது ஏழை நடைபாதை பழ விற்பனைக்காரன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டான். அதைத் தொடர்ந்து டியூனிஸியாவில் பெரும் புரட்சி வெடித்தது. அரசு கவிழ்ந்தது ஆனால் புரட்சி அலை நிற்காமல் எகிப்துக்குள் புகுந்து அந்த நாட்டு அரசும் கவிழ்ந்தது. அத்துடன் நிற்கவில்லை. இறுதியில் லிபியா அரசும் வீழ்ந்தது.

 

இதற்கெல்லாம் தொடக்கம் ஃபைடா ஹம்டி என்ற பெண்தான். அவள் டியூனிஸியாவில் சிடிபோஸிட் என்ற சிறிய நகரத்தில் வேலைபார்க்கும் நகரசபை காவலர். சட்டவிரோதமாக நடைபாதையில் பழம் விற்றான் என குற்றம் சாட்டி அந்தப் பெண் மொகமட்டின் கன்னத்தில் அடித்தாள். சந்தையில் பல ஆட்களுக்கு முன்னால் ஒரு பெண் ஆணை அடிப்பதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. பழக்காரன் அவமானப்பட்டு. கவர்னர் மாளிகைக்கு சென்று முறைப்பாடு வைத்தான். ஒருவருமே கவனிக்கவில்லை. அந்தப் பெண் கன்னத்தில் அடித்தது காலை 10.30 மணிக்கு. அவன் தீக்குளித்தபோது நேரம் காலை 11.30.

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் 1802ம் ஆண்டு இலங்கையில் ஒரு சம்பவம் நடந்தது. மிகச் சிறிய ஒரு நிகழ்ச்சிதான். இலங்கையில் அப்போது இரண்டு ராச்சியங்கள் இருந்தன. மலைப்பகுதியில் சிறீ விக்கிரமராஜசிங்கன் ஆண்ட கண்டி ராச்சியம். கரையோரப் பகுதியில் கவர்னர் பிரெடெரிக் நோர்த்தின் கீழ் இயங்கிய பிரிட்டிஷ் ராச்சியம். பிரிட்டிஷ் ராச்சியத்தின் மன்னார் பகுதியில் இருந்து ஒரு பாக்கு வியாபாரி கண்டி ராச்சியத்துக்குள் வியாபாரம் செய்ய நுழைந்தான். அவனை கண்டி ராச்சிய அதிகாரி அடித்து பாக்கு மூட்டையை பறிமுதல் செய்தான். அந்தச் சம்பவத்தை தொடர்ந்து இரு ராச்சியங்களுக்குமிடையில் போர் மூண்டது. சிறீவிக்கிரமராஜசிங்கன் தோற்று முடி இழந்தான். முழு இலங்கையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.

 

28 யூன் மாதம் 1914ம் ஆண்டு ஐரோப்பாவில் ஒரு சம்பவம் நடந்தது. முடிக்குரிய ஆர்க்டியூக் ஃபேர்டினெண்ட் என்பவரை காவ்ரில்லோ பிரின்சிப் என்ற 19 வயது இளைஞன் சுட்டுக் கொன்றான். முதலாம் உலகப் போருக்கான ஆரம்பம் அதுதான். அந்தப் போர் முடிவுக்கு வந்தபோது 2 கோடி மக்கள் இறந்துபோயினர். ஒருகோடி ராணுவம், இன்னொரு கோடி பொதுமக்கள். இதுவே உலகத்தில் போரினால் ஏற்பட்ட ஆகக்கூடிய அழிவு.

 

டியூனிஸியாவில் புரட்சி பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது என்னுடன் ஒருகாலத்தில் வேலை செய்த டியூனிஸிய நண்பர் நினைவுக்கு வந்தார். அவருடைய பெயர் தமிழ் எழுத்துக்களில் எழுத முடியாத  பெயர். இப்போதைக்கு அப்துல்லா என்று வைத்துக்கொள்வோம். பாகிஸ்தானில் பெஷாவார் நகரத்தில் இருவரும் வேலைசெய்தோம். அவருடைய வீடுகூட நான் வசித்த அதே தெருவில்தான் நடக்கும் தூரத்தில் இருந்தது. மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வசித்தார். மூத்த மகளின் பெயர் அமெல். எட்டுவயதுதான், ஆனால் கொழுகொழுவென்று பத்து வயது சிறுமிபோல தோற்றமளிப்பாள்.

 

ஒருநாள் காலை வழக்கம்போல மூன்று பிள்ளைகளையும் அவருடைய பெரிய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்களை பள்ளிக்கூடத்தில் விடுவதற்கு புறப்பட்டார். நண்பருடைய வீட்டு கேட்டுக்கு வெளியே மதில் சுவரில் குதிக்கால்களை வைத்து சாய்ந்துகொண்டு இருவர் நீண்ட துப்பாக்கிகளுடன் வெகுநேரம் நின்றனர். தாடியும், புழுதிபடிந்த சால்வார் கமிசும், கறுப்பு நிற தலைப்பாவுமாக அவர்கள் தோற்றமளித்ததால் ஒருவித சந்தேகமும் எழவில்லை. ஒருவேளை துப்பாக்கி தரிக்காமல் நின்றிருந்தால் சந்தேகம் முளைத்திருக்கும். அப்துல்லா காரை கேட்டுக்கு வெளியே எடுத்ததும் இவர்கள் துப்பாக்கியை நீட்டி வாகனத்தை மறித்து மூன்று பிள்ளைகளையும் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு நண்பரையும் வாகனத்தையும் கடத்த முற்பட்டார்கள். ஆனால் மாவீரன் ஹனிபாலின் தேசத்தில் இருந்து வந்திருந்த அந்த எட்டு வயதுச் சிறுமி பாய்ந்து துப்பாக்கிதாரி ஒருவரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவர்கள் என்ன செய்தும் சிறுமி பிடியை விடவில்லை. கடைசியில் தகப்பனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் வாகனத்தை மட்டும் கடத்திக்கொண்டு போனார்கள். அந்த வாகனத்தை நண்பர் கண்டது அன்றுதான் கடைசி.

 

முகப்புத்தகத்தில் தேடி டியூனிஸிய நண்பரைத் தொடர்பு கொண்டேன். அடிக்கடி மின்னஞ்சல் பரிமாறி்க்கொண்டோம். என்னுடைய முதல் கேள்வி சிறுமி அமெல் பற்றித்தான். பல்கலைக்கழக படிப்பை அமெல் முடித்துவிட்டு மணம் செய்துகொண்டுவிட்டாள் என்றும் தான் விரைவில் தாத்தா ஆகப்போகிறார் என்றும் கூறினார். நம்பமுடியவில்லை. நான் இன்னும் அமெலை சிறுமி என்றே நினைத்திருந்தேன். காலம் எங்களுக்குத்தான் ஓடுகிறது. தூரத்து நண்பர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைப்பது விசித்திரம்தான்.

 

17 டிசெம்பர் 2011 ஒரு வருடம் பூர்த்தியானதும் டியூனிஸா நண்பரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ’இங்கே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் பெயர் மொன்செஃப் மஸுக்கி. அவருடைய மாளிகை என் வீட்டில் இருந்து நாலு மைல் தூரம். எங்கேயும் அமைதியும் சமாதானமும் நிலவுவதைக் காண நம்பமுடியாமல் இருக்கிறது. முக்கியமானது ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது நின்றுவிட்டது. காலையில் எழும்பி தினசரியை பிரிக்கும்போது நான் எங்கேயோ அமெரிக்காவிலோ, கனடாவிலோ, ஜேர்மனியிலோ இருப்பதாக உணர்கிறேன். அப்படியான ஒரு பத்திரிகை சுதந்திரம் நிலவுகிறது. சீட்டுக்கட்டில் ராசா  ஒன்று நிமிர்ந்திருக்கும், ஒன்று தலைகீழாக இருக்கும். இங்கே நிமிர்ந்திருக்கும் ராசா மட்டும்தான்’ என்றார்.  

 

ஒரு சிறிய வன்முறைச் சம்பவத்தில் முதலாவது உலகயுத்தம் ஆரம்பித்தது. இரண்டு கோடி மக்கள் இறந்தனர். ஒரு பாக்கு வியாபாரிக்கு விழுந்த அடியில் ஒரு தேசம் அடிமையாக்கப்பட்டது. சிறைச்சாலை அதிகாரி ஒருவரைக் கொன்று தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சி 40,000 பேர் கொலையான பின்னர்தான் நின்றது.  சிறிய வன்முறை மிகப்பெரிய வன்முறையாக வியாபிப்பதுதான் வழக்கம்.

 

உலக சரித்திரத்தில் முன்னெப்பொழுதும் காணாத ஒரு புதுமை நடந்து முடிந்திருக்கிறது. ஃபைடா ஹம்டி என்ற பெண், தள்ளுவண்டி பழ விற்பனையாளன் கன்னத்தில் அடித்த ஓர் அடி சமாதானத்தை கொண்டு வந்தது. மூன்று கொடுங்கோல் ஆட்சிகள் சரிந்தன. 10 கோடி மக்கள் பெரும் அமைதியையும், சமாதானத்தையும் தங்கள் வாழ்நாளில் கண்டனர்.  

 

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta