யானையின் படிக்கட்டு

 

இம்முறையும் நான் மொன்ரானா போனபோது ஒரு சம்பவம் நடந்தது. சுப்பர்மார்க்கட்டில் சில சாமான்கள் வாங்கி அவற்றை ஓடும் பெல்ட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். காசாளர் பெண்மணி படு வேகமாக ஒவ்வொரு பொருளாக எடுத்து சிவப்புக் கோட்டில் காட்டி விலையை பதிந்துகொண்டு வந்தார். அவருக்கு ஓர் ஐம்பது வயது இருக்கும். அவர் பொருளை எடுத்து பதிந்த விதம் அவரை அனுபவப் பட்டவராகக் காட்டியது. வேகமாக வேலைசெய்த அவருடைய கைகள் ஒரு பொருளை எடுத்ததும் சிறிது தயங்கின. அந்தப் பொருளின் ரகஸ்யக் கோடு அழிந்திருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பயனில்லை. உடனே அவர் ஞாபகத்திலிருந்து ரகஸ்யக்கோடு எண்ணை அழுத்தியதும் கம்புயூட்டரில் விலை பதிவானது. எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ’எப்படி பொருளின் ரகஸ்ய எண் உங்களுக்கு ஞாபகமிருக்கிறது?’ என்று கேட்டேன். அவர் சிரித்தார். நீண்ட காலமாக அங்கே வேலைசெய்தவர். ’எனக்கு இங்கே விற்பனையாகும் எல்லா பொருள்களின் ரகஸ்ய எண்களும் தெரியும்’ என்றார். ’உண்மையாகவா?’ ’உண்மையாகத்தான். வேண்டுமென்றால் பரீட்சித்துப்பாருங்கள்.’

அன்று அவ்வளவு கூட்டமில்லை. ‘நீங்கள் சொல்வது மனிதனால் முடியாத காரியம். என்றாலும் பார்ப்போம். சரி, முந்திரிப் பருப்புக்கு என்ன ரகஸ்ய எண்?’ என்றேன்.

‘பக்கட்டா அல்லது உதிரியா?’

’உதிரி.’

‘உப்பு போட்டதா அல்லது போடாததா?’

’போடாதது.’

‘உடைந்ததா அல்லது உடையாததா?’

‘உடையாதது.’

அவர் ரகஸ்ய எண்ணை பதிந்தார். உடனேயே விலை வந்தது. அது சரியாகத்தான் இருந்தது. ரகஸ்ய எண் பதினொரு தானங்களில் இருந்தது. இன்னொரு பொருளைச் சொன்னேன். அதற்கும் சொன்னார். இன்னொன்றைச் சொன்னேன். அதையும் சொன்னார். எந்தப் பொருளைச் சொன்னாலும் அதன் ரகஸ்ய எண்ணை தயக்கமில்லாமல் சொன்னார். அந்த சுப்பர் மார்க்கட்டில் 10,000 பொருள்களுக்கு மேலே இருந்தன. 80 வீதம் பொருள்களின் பதினொரு தான எண்கள் அவருக்கு மனப்பாடம். பல வருடங்களாக அவர் அங்கே வேலை செய்கிறார். 1974ல் அமெரிக்காவில் ரகஸ்யக் கோடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுடைய சுப்பர்மார்க்கட்டில் 25 வருடங்களாக இந்த முறை பாவனையில் இருக்கிறது. முதலில் ஒரு விளையாட்டாக எண்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். பின்னர் ஓர் ஆர்வம் வந்தது. அதற்கு பின்னர் ஒரு வெறி. எந்த புதுச் சாமான் சுப்பர்மார்க்கட்டில் வந்தாலும் அதை பாடமாக்கத் தொடங்கினார். ’ஒரு வருடத்தில் குறைந்தது 500 புதுப்பொருட்களின் எண்களை பாடமாக்கிவிடுவேன். ஒருமுறை மனதிலே போட்டால் அதை என்னால் மறக்க முடிவதில்லை’ என்றார். நான் வீட்டுக்கு திரும்பும் வழி முழுக்க அவரையே நினைத்தேன். எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை; பரிதாபம்தான் ஏற்பட்டது. ஒரு மனித மூளை 20 சத வீதம்தான் வேலை செய்கிறது. அந்த மூளைக்குள் இப்படி தேவையில்லாத தகவல்களைப் போட்டு இந்த அம்மா இப்படி நிரப்புகிறாரே என்று தோன்றியது.

 

பக்கத்து வீட்டுச் சிறுமி வந்திருந்தாள்.  அவள் கையிலே ஒரு செல்பேசி இருந்தது. இந்த வயதிலேயே பெற்றோர்கள் அவளுக்கு செல்பேசி ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டார்கள். அதனுடன் எப்பவும் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளை பிரிக்க முடியாது போலிருந்தது.

’உங்கள் பள்ளிக்கூடத்திலே வாய்ப்பாடுகள் மனப்பாடம் செய்ய சொல்லித் தருகிறார்களா?’ என்று கேட்டேன். அவள் தான் ஒன்றுமே மனப்பாடம் செய்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்றாள். அப்படியா என்றுவிட்டு அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்கள் என்னவென்று கேட்டேன். அரை நிமிடம்கூட எடுக்கவில்லை செல்பேசியில் பார்த்துவிட்டு 50 மாகாணங்களையும் அகர வரிசையில் ஓப்புவித்தாள். ’உன்னுடைய கைபேசியில் எல்லாவற்றுக்கும் விடை இருக்கிறதா?’ என்று கேட்டேன். ’இருக்கிறதே’ என்றாள்.

ஒரு பூச்சி இருக்கிறது. அதற்கு ஒரேயொரு காது. அது என்ன பூச்சி?

கும்பிடு பூச்சி.

சனிக்கிரகத்துக்கு எத்தனை சந்திரன்கள் உள்ளன?

62

உக்கிரேய்ன் நாட்டின் தலைவர் யார்?

விக்டர் யானுகோயிச்.

ஒரு கணித நிபுணர் 20 வயதில் இறந்துபோனார். அவர் யார்?

அவர் பிரெஞ்சுக்காரர். பெயர் Evariste Galois.  இன்னொருவருடன் ஏற்பட்ட மானப் பிரச்சினையில் இருவரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டபோது கணித நிபுணர் வயிற்றில் குண்டு பட்டு இறந்துபோனார்.

1962ல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜோன் ஸ்டீன்பெக்.

அடிலேய்ட் நகரத்துக்கும் அடிஸ் அபாபாவுக்கும் என்ன நேர வித்தியாசம்?

ஏழு மணி முப்பது நிமிடம்.

மனிதர்களுக்கு இரண்டு பெயர் என்பது எப்போது, எங்கே ஆரம்பித்தது.

இங்கிலாந்தில், 1066ம் வருடம்.

கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சிறுமி பதில் சொன்னாள். தமிழிலக்கியத்தில் ஒரு கேள்வி கேட்டுப்பார்க்கலாம் என்று தோன்றியது. ’சேக்கிழார் என்பவர் யார்?’ என்று கேட்டேன். சிறுமி அந்தப் பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டச் சொன்னாள். சொன்னேன். உடனேயே ‘சேக்கிழார் என்பவர் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர். 4253 பாடல்கள் கொண்ட பெரிய புராணத்தை இயற்றியவர்’ என்றாள்.

சிறுமியின் கைபேசியில் கிடைக்காத ஒன்றைக் கேட்கவேண்டும் என நினைத்தேன். ‘ஆண்கள் உடையில் பட்டன்கள் வலப்புறம் இருக்கும். பெண்கள் உடையில் அவை இடப்புறம். அது ஏன்?’ அவள் சிறிது செல்பேசியில் எதை எதையோ தட்டினாள். பின்னர் சொன்னாள். ‘பட்டன் உடைகள் வந்த காலம் செல்வந்தர் மட்டுமே அவற்றை அணிந்தனர். ஆண்கள் தாங்களாகவே உடை அணியும் போது பட்டன்களை  பூட்டினர். பெண்களின் பட்டன்களை அவர்களின் ஏவல்காரிகள் பூட்டினர்.  அவை ஏவல்காரியின் வசதிக்காக வலது பக்கம் (பெண்ணின் இடது பக்கம்) பொருத்தப்பட்டன.’

’எதற்காக பானம் அருந்தும்போது இரண்டு நண்பர்கள் கிளாஸ்களை கிளிங் என்று முட்டிக்கொள்கின்றனர்?’ ’ஆரம்பத்தில் அறிமுகமில்லாத இருவர் சந்திக்கும்போது ஒருவர் தன் கிளாஸில் இருந்து சிறிது பானத்தை மற்றவர் கிளாஸில் ஊற்றிய பின்னர் இருவரும் ஒரே நேரத்தில் பானத்தை அருந்துவர். பானத்தில் ஒருவித நஞ்சும் கலக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடு. நாளடைவில் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துகொண்ட நண்பர்கள் கிளாஸ்களை வெறுமனே கிளிங் செய்து தங்கள் நட்பை பேணிக்கொண்டார்கள்.’

எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சிறுமியிடம் பதில் இருந்தது. உலகத்தில் நீளமான ஆறு, உயரமான மலை, அதி வேகமாக ஓடும் மிருகம், ஆகச் சின்ன நாடு, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை, இலக்கியம், சரித்திரம் ஆகிய எல்லா விவரங்களும் அவளிடம் இருந்தன. கேட்டு பிரயோசனமில்லை. உலகத்து தகவலின் கூட்டுத்தொகை அவள் சின்னக் கையில் இருந்தது. செல்பேசியில் இல்லாத ஒரு விசயத்தை கேட்கவேண்டும்.

’அகிலாவின் தாயாருக்கு ஐந்து பெண் குழந்தைகள். அவர்களுடைய பெயர்கள் அம்பா, சம்பா, மும்பா, ரம்பா. ஐந்தாவது பெண் குழந்தையின் பெயர் என்ன? அவளுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அது செல்பேசியில் அகப்படாது. ஐந்தாவது பெண்குழந்தையின் பெயர் அகிலா என்று சொன்னேன். நான் அவளை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி கோபித்துக்கொண்டு ஓடிவிட்டாள்.

செல்பேசி தகவல்களைத் தரும். உங்களுக்காக அது யோசிக்க முடியாது. விடைகளை மனனம் செய்ய வேண்டிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அது தேவையில்லை. உலகத்து அனைத்து தகவல்களும் விரல் நுனியில் கிடைக்கின்றன. அந்த தகவல்களை வைத்து அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. இந்த தகவல் களஞ்சியம் நியூட்டனின் கையிலோ, டார்வினின் கையிலோ அல்லது எடிசனின் கையிலோ கிடைத்திருந்தால் அவர்கள் எத்தனை தூரம் மனித அறிவை எடுத்துப் போயிருப்பார்கள். இனி வரும் காலத்தில் தகவல்களை வைத்து  கேள்விகளை உண்டாக்கத் தெரியவேண்டும்.

நீல நிறத்தில் ஏன் மிருகம் இல்லை?

ஆரம்பத்தில் பூமிக்கு மூன்று சந்திரன்கள் இருந்தனவே? அவற்றில் இரண்டுக்கு என்ன நடந்தது? மூன்றாவது சந்திரன் நிலைத்து நிற்குமா? அது இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

உலகத்தின் முதல் மனிதர்கள் பேசிய மொழி என்ன?

பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது. ஒருகட்டத்தில் அது நின்று மறுபடியும் சுருங்க ஆரம்பிக்குமா?

பூமியின் காந்த முனை வடக்கு தெற்காகவும், தெற்கு வடக்காகவும் மாறும் சாத்தியக்கூறு உண்டா? மாறினால் என்ன ஆகும்?

அநேகமாக எல்லா நாடுகளிலும் சமிக்ஞை விளக்குகள் இருக்கின்றன. இவை ஏன் தாங்களாகவே முடிவெடுப்பதில்லை. உதாரணமாக இரவு இரண்டு மணிக்கு காரோட்டிக் கொண்டு வருகிறீர்கள். ரோட்டிலே ஒரு வாகனமோ பாதசாரியோ கிடையாது. சிவப்பு விளக்கு எரிகிறது. நீங்கள் அரை நிமிடம் நின்றுதான் போகவேண்டும். சமிக்ஞை விளக்குகளுக்கு ஏன் கண்கள் இருக்கக்கூடாது. வாகனங்களையும் பாதசாரிகளையும் எண்ணக்கூடிய சமிக்ஞை விளக்குகள் தேவை. அவை அந்தந்த நேரம் வாகனங்களின் எண்ணிக்கைக்கு தக்கமாதிரி முடிவெடுத்தால் இன்னும் நல்லாயிருக்குமே!

எதிர் காலத்தில் மாணவர்கள் பரீட்சைகளில் கேள்விகளுக்கு விடை எழுத மாட்டார்கள். அவை ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்ததுதான். அவர்கள் கேள்விகளை உண்டாக்குவார்கள். அதுதான் பரீட்சை.

தெரிந்த தகவல்களை வைத்து தெரியாத உண்மைகளை தேடிப்போவதுதான் விஞ்ஞானம். எறாரொஸ்தீனிஸ் என்று ஒரு கிரேக்க விஞ்ஞானி யேசு பிறப்பதற்கு 270 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார். நடு மத்தியானத்தில் ஒருநாள் சூரியனுடைய கிரணங்கள் ஒரு கிணற்றுக்குள் சரி நேராக விழுந்தன. அதே நாள் அதே நடு மத்தியானம் சில மைல்கள் தூரத்திலிருந்த இன்னொரு கிணற்றில் சூரியனுடைய கிரணங்கள் ஒரு கோணத்தில் விழுந்தன. ஆந்தக் கோணத்தை அளந்தார். இரண்டு கிணறுகளின் தூரத்தையும் அளந்தார். அவரிடம் இப்போது இரண்டு உண்மைகள் இருந்தன. இவற்றை வைத்து அவர் மூன்றாவது ஓர் உண்மையை கண்டுபிடித்தார். பூமியின் சுற்றளவு. தன் நாட்டைவிட்டு வெளியே செல்லாமல் பூமியின் சுற்றளவை முதன்முதலாக கணித்த விஞ்ஞானி அவர்தான்.

1639ம் ஆண்டு ஹொறொக்ஸ் என்ற விஞ்ஞானி வெள்ளிக்கிரகம் சூரியனைத் தாண்டி குறுக்காகப் போகும்போது ஒரு புள்ளியாகத் தெரிவதை அவதானித்தார். அந்தக் கறுப்பு புள்ளி சூரியனைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தை அளந்தார். அதை வைத்து பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை அவரால் ஓரளவுக்கு கணிக்க முடிந்தது. அவருக்கு பின்னர் வந்த விஞ்ஞானிகள் அந்தக் கணிப்பை மேலும் மேம்படுத்தினர். உலக அறிவு வளர்வது அப்படித்தான்.

உண்மைகள் இலக்கியவாதியின் கைகளில் எப்படி இலக்கியமாக மாறுகின்றன என்பதை ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் பல இடங்களில் பார்க்கலாம். குறிஞ்சி மலர் 12 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும். இது ஓரு தகவல். ஒரு வண்டின் ஆயுள் 15 நாள். இது இரண்டாவது தகவல். ஜெயமோகனின் வார்த்தைகளில் இந்த உண்மைகள் எப்படி இலக்கியமாக மாறுகின்றன என்பது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ‘குறிஞ்சிமலர் 12 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும். வண்டின் ஆயுள் அதிக பட்சம் பதினைந்து நாள். இந்த வண்டிற்கு தெரியுமா திரும்பவும் இது  இந்த மலர்மீது அமரவே முடியாது. இதன் பலநூறு தலைமுறைகளுக்கு பிறகுதான் இன்னொரு வண்டு இம்மலர் மீது அமர முடியுமென.’

1904ம் ஆண்டு நியூ யோர்க் கிழக்கு ஆற்றிலே நீராவிக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்த விபத்திலே ஏறக்குறைய 1000 பயணிகள் உயிரிழந்தனர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்னர் நியோர்க் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆகக்கூடிய பேரழிவு இதுதான். சரித்திரத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வை சிறிது காலம் சென்றபின்னர் மக்கள் மறந்துவிட்டனர். ஜேம்ஸ் ஜோயிஸின் யூலிஸிஸ் நாவலில் இந்த விபத்தை பற்றிய குறிப்பு வருகிறது. இன்றும் மக்களிடையே இந்த விபத்து நினைவில் இருப்பது ஜேம்ஸ் ஜோய்ஸ் படைத்த அழியா இலக்கியம் மூலமாகத்தான்.

மொன்ரானா பெண்மணி இந்த வருடம் முடிவுக்கு வரும்போது மேலும் 500 பொருட்களின் எண்களை மனனம் செய்து முடித்திருப்பார். இதனால் உலக அறிவின் கூட்டுத்தொகை ஒருபோதும் மாறிவிடப் போவதில்லை. நான் பாகிஸ்தானில் வேலைசெய்த காலத்தில் அக்பர் கட்டிய லாஹூர் கோட்டைக்கு போயிருக்கிறேன். 13 வாசல்களும் இரண்டு கோபுரங்களும் கொண்ட பெரிய அரண்மனை. அரசனுடைய சபா மண்டபத்துக்குள் நுழைய பிரம்மாண்டமான படிக்கட்டுகள் உள்ளன. அவை சாதாரண படிக்கட்டுகள் போன்றவை அல்ல. நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏறி நாலைந்து அடிகள் நடந்த பின்னர்தான் அடுத்த படிக்கட்டில் ஏறவேண்டும். அத்தனை அகலமானவை. மிகவும் சிரமப்பட்டுத்தான் மேலேறிச் செல்லலாம். எதற்காக இப்படி படிக்கட்டுகள் அமைந்திருந்தன என்பது முதலில் எனக்கு புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. அது மனிதர்களுக்கான படிக்கட்டுகள் அல்ல. யானைகளுக்கானவை. அரசனும், மந்திரி பிரதானிகளும் யானைகள் மீது அமர்ந்தபடி சபா மண்டபத்துக்குள்  பிரவேசிப்பதற்கான ஏற்பாடுதான் அந்தப் படிகள்.

இன்றைய மனிதகுல மொத்த அறிவு பழைய காலம்போல சின்னச் சின்ன படிகளாக வளர்வதில்லை.  யானைப் படிக்கட்டுகள்போல பெரும் பாய்ச்சலாக முன்னேறுவது. மனித சரித்திரம் முன் எப்பொழுதும் சந்தித்திராத அற்புதமான புள்ளியில் நாம் இன்று நிற்கிறோம். எங்கள் விரல் நுனியில் ஆதியிலிருந்து சேகரித்த அத்தனை தகவல்களும், மனித மூளை அவற்றை பயன்படுத்தும் கணத்துக்காக காத்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் பல்வேறு துறைகளிலும் மனிதனுடைய அறிவுப் பாய்ச்சல் பிரமிக்கவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இந்த அறிவை மனிதகுல முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவதா அல்லது அழிவுக்கு பயன் படுத்துவதா என்பது மனிதன் கையில்தான் இருக்கிறது.

END 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta