எதிர்பாராமல் வந்தவர்

குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’ என இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி  கேள்வி கேட்டார்.              ’உங்களுக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்?’ உங்களுக்கு பிடித்த புலம்பெயர் எழுத்தாளர் அல்ல, தமிழ் எழுத்தாளர் என்பதுதான் கேள்வி. அரசு பதில் எழுதும்போது ‘எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்’ என்று எழுதிவிட்டார். 99 வீதம் வாசகர்களுக்கு யார் அந்த எழுத்தாளர் என்று தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் துணிந்து பதில் எழுதியிருந்தார். அவருக்கு என்னைத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே பெரும் வியப்பை தந்த பதில் அது. குமுதத்தில் அரசு என்பவர் யார் என்ற மர்மம் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட ஒரு ரகஸ்யம். அதைக்  கண்டுபிடிப்பது அப்படி சுலபமான விசயம் அல்ல.

 

அந்தச் சம்பவம் அத்தோடு முடிந்தது. பல வருடங்கள் கழித்துத்தான் எனக்கு அந்தப் பதிலை எழுதியவர் கிருஷ்ணா டாவின்சி என்பது தெரிய வரும். அப்பொழுது அவர் குமுதத்தைவிட்டு விலகிவிட்டார். அவராகவே எனக்கு கடிதம் எழுதியபோது அந்த ரகஸ்யத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அடிக்கடி எங்களுக்கிடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது. அவர் படித்த புத்தகங்கள் பற்றி எழுதுவார். அவர் எழுதவிருக்கும் கட்டுரைகள் பற்றி கருத்து கேட்பார். விசாலமான அறிவும் நிறைய சுதந்திரமாக சிந்திக்கும் இயல்பு கொண்டவர். மனைவி ஜெயராணியின் இலக்கிய பங்களிப்பு குறித்து பெருமைப்படுவார். மகள் நேயா மீது (அப்பொழுது மூன்று வயது) அவருக்கு உயிர்.

 

ஒருமுறை என்னை தீராநதிக்காக நேர்காணல் செய்தார். அவருடைய கேள்விகளில் இருந்து அவர் நிறைய படித்திருந்தார் என்பது தெரிந்தது. இலக்கியம், சக எழுத்தாளர்கள், அரசியல் என்று கேள்விகள் அகன்ற பரப்பை கொண்டிருந்தன. அவர் ஒரு பிரபலமான பத்திரிகையாளரும் எழுத்தாளரும். எந்த துறையிலும் அவர் அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தது. அந்த நேர்காணலைத் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம். அவர் இலக்கியம், கிரிக்கெட், அரசியல், சினிமா, இசை எல்லாவற்றிலும் புலமையுள்ளவராக இருந்தார்.

 

அரசியல் என்றால் இந்திய அரசியல் மட்டுமல்ல, இலங்கைப் பிரச்சினை, உலக அரசியல் என விசாலமான பார்வை அவரிடம் இருந்தது. ஈழப்போர் சமயத்தில் மக்கள் லட்சக்கணக்காக மடிந்தபோது தன்னுடைய கருத்துக்களை தயங்காமல் வெளியிட்டார். அவருடைய மனம் எவ்வளவு ஆழமாக அந்த மக்களுக்காக துயருற்றது என்பது எனக்கு தெரியும். அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை பெற்று நான் கனடா பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறேன். பீதோவன் பற்றிய அவர் கட்டுரையில் இசையில் அவருக்கிருந்த ஆழமான புலமையை கண்டு நான் வியந்தேன். ஆனால் அவர் ‘அகிலன் சித்தார்த்’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார். ’உங்கள் புகழ் வேறு யாருக்கோ போகிறது’ என்று சொல்வேன். அவரிடமிருந்து பதில் கிடைக்காது.

 

நீண்ட நாட்களாக அவரிடமிருந்து கடிதம் இல்லை. மாதத்தில் ஒரு கடிதமாவது எழுதுவார். 2012 ஆண்டு பிறந்த பின்னர் பிப்ரவரி 12ல் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் பிப்ரவரி 15ல் வந்தது. ‘எனக்கு காலில் அடிபட்டது. அதிலிருந்து மீள முன்னர் rat fever தாக்கியது. ஒருமாதிரி மீண்டு வருகிறேன். உங்கள் புத்தகம் ஒன்று வாசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று நம்பிக்கை தரும் விதமாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அடியோட்டமாக துக்கத்தில் இருக்கிறார் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. மறுபடியும், ‘உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள். நேயா எப்படி இருக்கிறார்?’ என்று விசாரித்து எழுதினேன். பதிலே இல்லை. அதுவே கடைசியாகிவிட்டது. அவர் உடல்நிலை மோசமாகி அவரை ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர கவனிப்பு பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். எனக்கு இது ஒன்றுமே தெரியாது. இத்தனை இளம் வயதில் அவர் வாழ்க்கை முடிந்துவிடும் என்று யார்தான் நினைத்திருக்கக்கூடும்?  

 

கிருஷ்ணா, குமுதத்தை விட்டு விலகிய பிறகு நிறையவே எழுதினார்.  திரைப்படக் கதை, வசனம் என்று பலவிதமான முயற்சிகளில் இருந்தார். அது தொடர்பாக அடிக்கடி பயணங்கள் போனார். ஏதோ பெரிதாகச் செய்வதற்கு கடுமையாக உழைத்தார் என்பது தெரிந்தது. அவரை நான் கண்டதில்லை. முகம் தெரியாது. ஒரு பஸ்ஸிலோ, ரயிலிலோ, வீதியிலோ அவரைச் சந்தித்தால் தெரியாமலே நான் கடந்து போயிருப்பேன். தன் திட்டங்கள் பற்றி எழுதுவார். நேயாவை பற்றிய பெரும் கனவு இருந்தது. இன்று அவர் மனைவிக்கு  யார் ஆறுதல் கூறுவார்கள்?

 

கிருஷ்ணா இறந்த பின்னர் நடந்ததும் நம்ப முடியாதது. ஒரு நண்பர்தான் எழுதினார் ஏப்ரல் 4ம் தேதி இரவு இறந்துபோனதாக.  என்னிடம் கிருஷ்ணாவின் மின்னஞ்சல் இருந்தது. வீட்டு தொலைபேசி இலக்கம் இல்லை. நான் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். அதே சமயம் அவருடைய நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். நான் சந்தை அழைப்பு என்று நினைத்து தொடர்பை துண்டித்துவிட்டேன். எப்படியோ முடிவில் மனைவியை அழைத்து அனுதாபம் தெரிவித்தேன். மூன்று வருடமாக நேயா என் மனதிலேயே வளர்ந்தார். அவரை நினைக்க வேதனையாக இருக்கிறது. அவருடைய அப்பா மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு வருவார் என காத்திருக்கிறார். மனைவி பேசும்போது கிருஷ்ணா கடைசியாக எழுதிய சிறுகதையில் என் பெயரை குறிப்பிட்டிருப்பதாகச் சொன்னார். இறுதி நாட்களிலும், 10,000 மைல் தொலைவில் இருக்கும் என்னை நினைத்திருக்கிறார். நான் ஒன்றுமே செய்யவில்லை.

 

கிருஷ்ணா டாவின்சி ஒரு கவிஞரும்கூட. இது பலபேருக்கு தெரியாது. லவ் பேர்ட்ஸ் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கூண்டில் அடைபட்ட பறவைகளை பார்க்கும்போது அவர் மனம் ஏங்கும். மனது அடிக்கடி கேட்கும். ‘அந்தக் குருவிகளை பறக்க விடலாமா? என்று. அவர் இதயம் ஏதோ பெருந்துயரில் இருந்து விடுபடவே துடித்துக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் கிருஷ்ணா டாவின்சி எதிர்பாராமல் வந்து சேர்ந்தார். எதிர்பாரமல் போய்விட்டார்.

 

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta