திருட்டுப் போகும் புகழ்

என்னுடைய நண்பர் ஒருவர் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர். அவர் கனடாவின் வட புலத்துக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றார். வடதுருவ வட்டத்திற்கு கிட்டவாகப் போனால் குளிர் -50 பாகை செண்டிகிரேட் தொடும். அதனிலும் கீழே கூடப் போகும். அவர் அதற்கெல்லாம் தயாராகத்தான் இருந்தார். பாலைவனங்களுக்கும், வானாந்திரங்களுக்கும் மலைமுகடுகளுக்கும் பயணம் செய்தவர். தகுந்த உடைகளையும், காலணிகளையும் அவர் தேர்வு செய்தபோது நான் ’இந்தப் பிராந்தியத்துக்கு தங்கம் தேடிச்சென்ற ஜாக் லண்டன் எழுதிய என்றுமே அழியாத ’தீ மூட்டுவது’ சிறுகதை ஞாபகம் இருக்கிறதல்லவா?’ என்று கேட்டேன். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதி, இன்னும் புதிதாகத் தெரியும் அந்தச் சிறுகதை நண்பருக்கு தெரியவில்லை.

 

’அந்த மனிதன் நாயுடன் நடந்துபோனான். சுற்றிலும் மூன்றடி புதையும் பனிப்பிரதேசம். சூரியனைப் பார்த்து பலநாட்கள் ஆகிவிட்டன. அவனுடைய உடை -50 பாகை செண்டிகிரேட் குளிரை தாங்கப் போதுமானதாகத் தெரியவில்லை. இதே வேகத்தில் நடந்தால் மதியமே நண்பர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்கு அவன் போய்ச் சேர்ந்துவிடுவான். இதற்கு முன் என்றுமே அனுபவித்திராத குளிரில் அவன் துப்பியபோது அது வெடித்து விழுந்தது. அவன் மீசை தாடியெல்லாம் பனிக்கட்டியாகி நட்டுக்கொண்டு நின்றன. ஒரு மரத்தின்கீழ் சற்று நெருப்பு மூட்டி காய்ந்து போகலாம் என்று சுள்ளிகள் பொறுக்கி சிரமத்துடன் நெருப்பு மூட்டினான். அது பற்றி எரியத்தொடங்கியதும் மரத்திலிருந்து பனிக்குவியல் விழுந்து நெருப்பு அவிந்துபோனது. தன் முட்டாள்தனத்தை திட்டிக்கொண்டு மறுபடியும் நெருப்பை பற்றவைக்க  முயன்றபோது தீக்குச்சிகள் பனியில் கொத்தாக விழுந்துவிட்டன. கை விரல்கள் விறைத்துக்கொண்டு விட்டபடியினால் பல்லினால் குச்சியை பிடித்து தீ மூட்ட முயன்றான். அதிலும் தோல்வி. இப்பொழுது அவன் தேகத்தின் நுனிகள் விறைத்து ஏறத்தொடங்கின. ஒரேயொரு நம்பிக்கைதான் மிஞ்சியது. நாயை தந்திரமாக கிட்ட அழைத்து, உடலை கத்தியால் கிழித்து அதன் ரத்தத்துக்குள் கைகளை நுழைத்து சூடு உண்டாக்குவது. நாயை அருகில் கூப்பிட்டபோது அதற்கு எப்படியோ தெரிந்து வர மறுத்தது. தன் பிணத்தை நண்பர்கள் கண்டு பிடிப்பதை கனவு கண்டபடி மயக்கமானான். நாய் அருகில் வந்து அவன் உடம்பில் மரணம் இருப்பதை முகர்ந்து உணர்ந்தது. இரவு படிய முன்னர் அது மனிதர்களையும் நெருப்பையும் தேடி விரைந்தது.’

 

இதுதான் கதை. இதைக் கேட்ட நண்பர் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் புறப்பட்டார். ஒரு மாத காலமாக அவர் வருவாரென ஆவலுடன் காத்திருந்தேன்.  அத்தனை ஆபத்தான இடத்துக்கு  போயிருந்தவர் பல புதிய கதைகளை கொண்டுவருவார்.  தன்னுடைய இலக்கக் காமிராவில் ஆயிரம் படங்கள் பிடித்துக்கொண்டு அவர் திரும்பியிருந்தார். அவர் போனது யூகோன் நதி பிராந்தியத்திலிருந்து தேலோன் நதி பிராந்தியத்துக்கு. இரண்டுமே வடதுருவ வட்டத்துக்கு அண்மித்தவைதான். பல சம்பவங்களை விவரித்தார். அபாயகரமான பல கட்டங்களைத் தான் எப்படிக் கடந்தார் என்பதைச் சொன்னார். ஒரு சம்பவம்கூட ஜாக் லண்டன் விவரித்த திகில் தரும் நிகழ்வாக இருக்கவில்லை. ஆனால் ஆதிவாசிகள் குடிசைகளில் அவர் பார்த்த காட்சி ஒன்றை சொன்னபோது என்ன காரணமோ அது என் மனத்தில் இடம் பிடித்துவிட்டது.  மிகச் சாதாரணமான சம்பவம்தான்.

 

ஓர் ஆதிவாசிப்  பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. அவர் ’தேலோன்’ என குழந்தைக்கு நதியின் பெயரைச் சூட்டினார். இங்கே யமுனா, காவேரி, கங்கை என்று நதியின் பெயரை சூட்டுவது போலத்தான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இன்னொரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அவரும் தன்பிள்ளைக்கு ’தேலோன்’ என பெயர் சூட்டினார்.  அங்கேதான் பிரச்சினை முளைத்தது. முதல் பெண் அந்தப் பெயரை சூட்டக்கூடாது என்று வாதாடினாள். அடுத்த பெண் விட்டுக் கொடுக்கவில்லை. அந்த நதி அவளுடைய தாத்தாவின் சொத்தா? யாரும் அந்தப் பெயரைச் சூட்டலாம் என்று அவர்கள் மொழியில் வைதாள். வாய்ப்பேச்சு முற்றி ஓர் எல்லையை தொட்டதும் ஒருவரை ஒருவர் எட்டிப் பிடித்தார்கள். அடுத்த நிமிடம் இரண்டு பெண்களும் ஒருவர் தலை முடியை மற்றவர் பிடிக்க பனியில் உருளத் தொடங்கினார்கள். உலகில் எங்கே போனாலும் பெண்களின் ஆயுதம் அவர்கள் கூந்தல்தான். படிப்பறிவில்லாத ஆதிவாசிகள்கூட ஒருவருடைய பெயர் இன்னொருவருக்கு இருப்பதை விரும்புவதில்லை. உடனே விரோதியாக மாறிவிடுகிறார்கள்.

 

உலகத்தில் இன்னொருவருக்கு தன்னுடைய பெயர் இருப்பது ஒருவருக்கும் பிடிப்பதில்லை. அப்படி இருந்தால் அவர் சத்துருதான். இதை நான் என் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே உணர்ந்திருக்கிறேன். எங்கள் வகுப்பில் இரண்டு கந்தசாமிகள் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்து தின்ன தயாராயிருந்தார்கள். வாத்தியார் ஒருவனைக் கூப்பிட்டால் அடுத்தவன் எழுந்து செல்வான். இந்தக் குழப்பத்தை தீர்க்க வாத்தியாரே ஓர் உபாயம் செய்தார். ஒருத்தனை ’நெடுவல் கந்தசாமி’ என்று அழைத்தார். மற்றவனுக்கு ’பலாப்பழம் கந்தசாமி’ எனப் பெயர். அதற்கும் காரணம் இருந்தது. ஒருநாள் பள்ளிக்கூட பலாமரத்தில் பலாப்பழம் பழுத்து தொங்கியது. இவன் ஒருத்தருக்கும் தெரியாமல் அதை வெட்டி விழுத்தி கூறுபோட்டு பாடம் நடக்கும் சமயம் கடைசி வாங்கிலிருந்து தின்றிருக்கிறான். வகுப்பிலே கடலை, இனிப்பு, புளியங்காய் போன்றவற்றை மறைவாக சாப்பிடலாம். ஆனால் முழுப் பலாப்பழத்தை யாராவது சாப்பிடுவார்களா? பிடிபட்டுவிட்டான். அவனுக்கு ’பலாப்பழம் கந்தசாமி’ என பெயர் சூட்டப்பட்டது. அவன் பள்ளிக்கூடத்தை விட்ட பின்னரும் அந்தப் பட்டம் மறையவில்லை. இந்த அவமானத்துக்கு காரணமாயிருந்த மற்ற கந்தசாமி மேல் அவனுக்கிருந்த கோபமும் குறையவில்லை.  

 

ஒரேயொரு பெயரை இருவருக்கு சூட்டுவது  இதிகாச காலத்திலேயே விரோதச் செயலாகத்தான் கருதப்பட்டது. பலருக்கு இது தெரியாது, தெரிந்தாலும் மறந்திருப்பார்கள். இருவருக்கு ஒரு பெயர் அமைந்ததனால்தான் மகாபாரதப் போர் நிகழ்ந்தது. சந்தனு அரசனுக்கும் மீனவப் பெண் சத்தியவதிக்கும் பிறந்தது இரண்டு மகன்கள். சித்திராங்கதன் மூத்தவன், விசித்திரவீரியன் இளையவன். சித்திராங்கதனுக்கு யுவராசா பட்டம் கட்டிய பின்னர் பெரிய பிரச்சினை ஒன்று உருவானது. கந்தர்வ அரசன் ஒருவனுக்கும் பெயர் சித்திராங்கதன். தன்னுடைய பெயரை கேவலம் ஒரு மானுடனுக்கும் சூட்டியிருந்தது அவனுக்கு அவமானமாகப் பட்டது. ஒருநாள் அவன் யுவராசா சித்திராங்கதனை போருக்கு அழைத்தான். அந்தக் காலத்தில் ஒருவர் போருக்கு அழைத்தால்  அதை மற்றவர் ஏற்று சமர் புரியவேண்டும். சித்திராங்கதன் இளைஞன். அவன் சவாலை ஏற்று போர் புரிந்தபோது கந்தர்வன் அவனை கொன்றுவிட்டான். அதன் பின்னர்தான் அவன் தம்பி விசித்திரவீரியனுக்கு பட்டம் சூட்டி பீஷ்மர் இரண்டு பெண்களைக் கட்டிவைத்தார். பாரதக் கதை இப்படி வேறுவழியாகப் பிரிந்து முடிவில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டு அழிவு ஏற்பட்டது. சித்திராங்கதனுடைய பெயரை விசித்திராங்கதன் என்று சூட்டியிருந்தால் மகாபாரதமும் இல்லை; போரும் இல்லை; அழிவும் இல்லை.

 

சமீபத்தில் முன்பின் பழக்கமில்லாத ஒருவரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தது. ‘திரு எஸ் .ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைத் தளத்தில் Third Class Ticket என்ற நாவல் பற்றி எழுதியிருக்கிறார். நாவலாசிரியர் கனடாவில் இருக்கிறார். அந்த நாவலை தமிழில் திரைப்படமாக்க  விரும்புகிறேன். அந்த நாவலாசிரியரின் தொலைபேசி எண்ணை தரமுடியுமா?’ இதுதான் மின்னஞ்சல். நம்பமுடிகிறதா?  கனடா உலகத்தின் இரண்டாவது பெரிய நாடு. இந்த நாட்டிலே அந்த எழுத்தாளர் எங்கே இருக்கிறார் என்பதை தேடிக்கண்டுபிடித்து  மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு பதில் எழுதவேண்டும். இந்திய நண்பர் என்மீது அத்தனை பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.  

 

அந்த நாவலாசிரியர் ஒரு பெண்மணி. பெயர் Heather Wood. எப்படி தேடியும் அவருடைய தொடர்பு எண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய கணவரும் ஓர் எழுத்தாளர் என்ற தகவல் கிடைத்தது. அவரைத் தொடர்புகொண்டு அவர் மூலம் மனைவியுடைய தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டேன். நாவலசிரியரை அழைத்து அவருடைய நாவலை தமிழ் திரைப்படமாக்க விருப்பப்படுகிறார்கள் என்று சொன்னபோது அவர் பரபரப்பானார். மகிழ்ச்சி பொங்க எந்த நாவல் என்று கேட்டார். நான் Third Class Ticket. என்று சொன்னேன். சிறிது நேரம் பேச்சே இல்லை. மறுபடியும் அவர் பேசியபோது குரல் வடிந்துபோய் விட்டது. ’அது நான் இல்லை. அவர் இன்னொரு Heather Wood. அவர் கலிஃபோர்னியாவில் இருக்கிறார்’ என்றார்.

 

மறுபடியும் தேடல் தொடங்கியது. எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள் போலும். அவர்களை இலகுவில் தொடர்புகொள்ள முடியாது. ஒருவழியாக இந்த நாவலாசிரியர் வேலைசெய்த நிறுவனத்தை கண்டுபிடித்து அந்த நிறுவனத்தினருக்கு எழுதினேன். அதிசயத்திலும் அதிசயமாக அவர்கள் பதில் போட்டார்கள். கடைசியில் உண்மையான ஹெதர் வுட்டை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னபோது அவர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். 1969ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு பயணத்தை பின்னணியாக வைத்து 1980ல் எழுதிய நாவலை இப்பொழுது கண்டுபிடித்து திரைப்படம் எடுக்கிறார்கள் என்றால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஹெதர் வுட்டின் தொலைபேசி எண்ணை இந்திய நண்பருக்கு அனுப்பிவைத்தேன். ’மூன்றாம் வகுப்பு டிக்கெட்’ என்ற தலைப்பில் தமிழ் சினிமா விரைவில் வெளிவரலாம். அதிலே கடைசியில் எறும்பு எழுத்தில் ’நன்றி’ என்று என் பெயரை போட்டிருப்பார்கள். பார்க்கத் தவறக்கூடாது.

 

இதையெல்லாம் ஏன் எழுதினேன் என்றால் பெயர் செய்த குழப்பம்தான். இருவர் பெயருமே Heather Wood. இருவருமே கனடாவில் பிறந்தவர்கள். இருவருமே நாவல் எழுதியிருக்கிறார்கள். ஒருவர் புகழ் மற்றவருக்கு போய்விடும் என்று நித்தமும் பயந்தபடி அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

 

மற்றவர்களுக்கு வேடிக்கைதான் ஆனால் இந்தப் பெயர் குழப்பம் என்னை கோர்ட்டு வரைக்கும் இழுத்திருக்கிறது என்று சொன்னால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். சில வருடங்களுக்கு முன்னர் கடன் அறவிடும் கம்பனி ஒன்று என்னை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து மிரட்ட ஆரம்பித்தது. என்ன விசயம் என்றால் பத்து வருடம் முன்பு யாரோ என் பெயர் உள்ள ஒருவர் கடன் அட்டையில் சாமான்கள் வாங்கிவிட்டு அந்தக் கடனை அடைக்காமல் தலைமறைவாகிவிட்டார். பல வருடங்கள் கழித்து எப்படியோ என் பெயரை தேடிப்பிடித்து கடனை செலுத்தும்படி தொல்லை கொடுத்தார்கள். அவன் நானில்லை என்று எவ்வளவு சொல்லியும் பிரயோசனமில்லை. பின்னர் கடிதங்கள் வர ஆரம்பித்தன. நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டிலேயே இல்லை என்ற வாதத்தை ஏற்க ஒருவரும் தயாராக இல்லை. ’உங்கள் பெயரும் அந்தப் பெயரும் ஒன்றாக இருக்கிறது. ஆகவே நீங்கள்தான் அவர்.’ இதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்கள் கேட்ட தொகையில் பாதியை வழக்கறிஞருக்கு கொடுத்து வாதாடி அவர்தான் என்னை சிறைக்கு போகாமல் காப்பாற்றினார்.

 

ஆனால் சிறையே பரவாயில்லை என்று என்னை நினைக்க வைத்த சம்பவம் அடுத்து நடந்தது. கடந்த சில வருடங்களாக என்னுடைய புகழ் எல்லாம் வேறு யாருக்கோ போய்க்கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்தது. அவர் ஒரு கவிஞர். அவருக்கும் என் பெயர்தான். நீண்ட நீண்ட வசனங்களை எழுதி சுள்ளி முறிப்பது போல அவற்றை முறித்து அடுக்கி கவிதையாக்கிவிடுவார். அவருடைய முகப்புத்தகம் பிரபலமானது என்று அதைப் பார்த்தவர்கள் சொல்வார்கள். ’காப்பியாற்றுக் காப்பியனார்’ என்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்ததால் காப்பி குடிக்கும் பழக்கம் அப்போதே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்பதை ஆதாரத்தோடு தன் கட்டுரையில் நிறுவியவர். ஏறக்குறைய 4000 நண்பர்கள் அவருக்கு. ஒருநாள் அவர் முகப்புத்தகத்தில்  ‘மேப்பிள்மரம்’ என எழுதுவார். 16 பேர் ’பிடித்தது’ என்று பதில் போடுவார்கள். இன்னொருநாள் ’புதன்கிழமை’ என்று எழுதுவார். உடனேயே 22 பேர் ’பிடித்தது’ என்று எழுதிவிடுவார்கள். ஒரு முறை ’தமன்னா’ என்று எழுதினார். அவரால் நம்பமுடியவில்லை 117 பேர் உடனுக்குடனே ‘பிடித்தது’ என பதிவுசெய்தார்கள். அந்த மகிழ்ச்சியில் மூன்று கவிதைகள் தொடர்ச்சியாக எழுதி தள்ளிவிட்டார்.

 

ஒரு கூட்டத்திலே அவரை ஒருவர் தூரத்திலிருந்து அடையாளம் காட்டியபோது நான் திடுக்கிட்டேன். அவர் என்னைப்போலவே இருப்பார் என நினைத்தேன். முற்றிலும் வேறு மாதிரி தோற்றமளித்தார். நடு உச்சி பிரித்து இரண்டு பக்கமும் வாரிவிட்ட தலைமுடி காதை மறைத்து தொங்கியது. தலைவழியாக நுழைந்துகொள்ளும் நீளச் சட்டை அணிந்து அது முழங்கால் அளவுக்கு நீண்டிருந்தது. உணவகத்தில் சேவகன் இடுப்பில் துணி தொங்க விடுவதுபோல இவரும் ஏதோ தொங்கவிட்டார். ஒற்றைக் காதிலே கடுக்கன் மினுங்கியது. ’உங்கள் கவிதைகளை நான் படித்திருக்கிறேன்’ என்றேன். அடுத்த வசனத்தை அவர் என்னைப் பேசவிடவில்லை. அளவு மீறிய சந்தோஷத்துடன் பாய்ந்து என் கையைப் பிடித்து குலுக்கினார். ’அடுத்த வாரம் தினக்கதிரை கட்டாயம் படியுங்கள். தமிழில் முதன்முதல் வெளிவரும் புதுவிதமான கவிதை’ என்றார். அப்படி என்ன புதுமை என்று விசாரித்தேன். உயிர் எழுத்து வராமல் ஒரு முழுக் கவிதை எழுதியிருக்கிறேன். முதல் வரி இப்படி போகும். ’கோபக்காரனுக்கு புத்தி மட்டு’. பார்த்தீர்களா, இதிலே உயிரெழுத்து இல்லை. முழுக்கவிதையும் இப்படித்தான் இருக்கும். ( நான் அடுத்த வரியை மனதுக்குள் ஊகித்துக்கொண்டேன். சாபக்காரனுக்கு தலையில் குட்டு.)

 

’எப்படி உங்களுக்கு இந்த அருமையான யோசனை தோன்றியது?’ என்று வினவினேன். ’ஆங்கிலத்திலே ஒருத்தர் Gadsby என்று 50,000 வார்த்தை நாவல் எழுதியிருக்கிறார். அதில் e என்ற எழுத்து கிடையாது. அப்படி ஏதாவது  புதுமையாகச் செய்யவேண்டும் என்று எனக்கும் தோன்றியது. தமிழை வளர்ப்பதுதானே என் கடமை.’ ‘இந்தப் புதுமையை ஏற்கனவே செய்துவிட்டார்களே. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ’ஙி’ எழுத்து கிடையாது. அதேபோல சாண்டில்யன் எழுதிய கடல் புறாவில் ’ஞெ’ எழுத்து இல்லையே’ என்றேன். ’நீங்கள் கேலி செய்வதுபோல படுகிறது. நான் 86 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 100 இலக்கத்தை தொட்டதும் புத்தகமாகப் போடுவேன்’ என்றார். எனக்கு துணுக்கென்றது. ’எதற்காக நூறு வரைக்கும் காத்திருக்கவேண்டும்? உடனேயே போடலாமே’ என்றேன்.

 

சுவரிலே ஒட்டியிருக்கும் நோட்டீசை வாசிப்பவர்போல கழுத்தை நீட்டி என் முகத்துக்கு கிட்டவாக வந்து ரகஸ்யக் குரலில் ‘இதற்கெல்லாம் அவசரப் படக்கூடாது. இரண்டு வருடம் போகட்டும். இங்கே என்னுடைய பெயரில் வேறு யாரோ ஒருவர் எழுதுகிறார். எனக்கு வரவேண்டிய புகழ் எல்லாம் அவருக்கு போகிறது. கொஞ்ச காலம் சென்றால் தூசி அடங்கி உண்மை வெளியே தெரியவரும். அது சரி. உங்கள் பெயர் என்ன? சொல்லவில்லையே’ என்றார்.

 

நான் ’சித்திராங்கதன்’ என்று சொன்னேன். தலையிலே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு நடப்பதுபோல மிக மெதுவாக நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.  

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta