கொக்குவில்
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் பிறந்தேன். ஒரு முழுநாள் அம்மாவை வலியில் துடிக்கவைத்து, கால்களை முதலில் வெளியே தள்ளி, இப்பூமியில் உதித்தேன். ஆனால் மூச்சு விடமுடியாமல் கிடந்தேன். மருத்துவச்சி என்னை தலைகீழாகத்தூக்கி குலுக்கி, நெற்றியிலே பழுக்கக் காய்ச்சிய ஊசியால் சூடு வைத்தபோது என்னிடமிருந்து முதல் அழுகை வெளிப்பட்டது. ஆண்பிள்ளை பிறந்தால் எங்கள் ஊரில் உலக்கையை தூக்கி கூரைக்கு மேலால் எறிவது வழக்கம். ஐயா அப்படியே செய்துவிட்டு என்னை இரண்டு கைகாளாலும் தூக்கி அவர் தலைக்கு மேலே பிடித்தார். ஆண்பிள்ளை என்ற பிரகடனம் அது. என்னுடைய முதல் காட்சி புளியமரம். அதற்கும்மேலே ஆகாயம். கீழே கொக்குவில். அதுதான் நான் பிறந்த ஊர்.
நான் சிறுவனாயிருந்தபோது அம்மா நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன் எங்கள் ஊருக்கு எப்படி கொக்குவில் என்று பெயர் வந்தது என்று. ஏற்கனவே அந்தக் கேள்விக்கு காத்திருந்தவர்போல அம்மா சொல்லத் தொடங்கினார். ராமர் இலங்கைக்கு வந்து ராவணனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திக்கு திரும்பமுன்னர் நடந்தது. ஒரு ரம்மியமான காலை நேரத்தில் சோலை ஒன்றை ராமர் கண்டார். உடனேயே அந்த இடத்தில் வில்லை ஊன்றிவிட்டு அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்தபோது அவர் முன்னே ஒற்றைக்காலில் ஒரு வெள்ளைக் கொக்கு நின்று தவம் செய்தது. ராமர் மனமுருகி கொக்கின் முதுகில் தடவிக் கொடுத்தார். ‘கொக்கையுமா? அதற்கு மூன்று குறி இல்லையே?’ என்றேன். அப்படியல்ல. அணிலுக்கு தடவியதோடு குறிகொடுக்கும் திறன் ராமர் விரல்களுக்கு முடிந்துபோனது. ஆனால் நிறைய கருணை இருந்தது. அன்றிலிருந்து அந்த இடம் ’கொக்குவில்’ என்று அறியப்பட்டது என்றார். அம்மாவிடம் வேறு குறுக்கு கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை நம்புவது என்று தீர்மானித்தேன்.
ராமர் தியானிப்பதற்கு தேர்ந்த இடம் பச்சை நிறமாக இருந்தது. மழை பார்த்திருக்கும் பூமியென்றாலும் பனை, தென்னை, வாழை, கமுகு என்று மரங்கள் சூழ்ந்திருக்கும். நெல்வயல்களில் தண்ணீர் இறைப்பார்கள். இரண்டுபேர் துலா மிதிக்க ஒருவர் இறைக்க இன்னொருவர் பாத்தி கட்டுவார். புழுதி நிறைந்த ஒழுங்கைகள் வளைந்தும் நெளிந்தும் சுழன்றும் போகும். இரண்டு பக்கமும் உயரமான வேலிகள் அடைத்திருக்கும். மாட்டு வண்டிகளையும் ஒன்றிரண்டு குதிரை வண்டிகளையும் காணலாம். அபூர்வமாக ஒரு கார் தென்படும். இரண்டு கரைகளையும் தொட்டு உருளும் காரின் ஃபுட்போர்ட்டில் நின்று ஒருவர் ஹோர்ன் அடித்தபடியே வருவார். தலையிலே சுமையை தூக்கி ஓடுபவர்கள் ஒதுங்கி நிற்பார்கள்.
பார்க்க கண்ணுக்கு அழகாயிருப்பது புகையிலைத் தோட்டம். ஒரு குழந்தை கைகால் நீட்டி படுக்கக்கூடிய அளவு பெரிய இலைகள். அவற்றை வெட்டி புகைபோட்டு உணர்த்துவார்கள். கொக்குவிலின் மணம் என்றால் அது நெல் அவிக்கும் மணம், அல்லது புகைக் குடில்களில் புகைபோடும் மணம். மாமரம், பலாமரம், பப்பாளி மரம் என பலவகை மரங்கள். எங்கள் வீட்டில் 17 மாமரங்களில் 20 வகை மாம்பழங்கள் கிடைத்தன. கொக்குவிலுக்கு ஒரு நிறம் இருப்பதுபோல, மணம் இருப்பதுபோல ஒலியும் உண்டு. நாய்கள் குரைக்கும் ஒலி. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு நாய் உண்டு. 24 மணிநேரமும் ஏதாவது ஒரு தெருவில் ஏதாவது ஒரு நாய் குரைத்துக்கொண்டே இருக்கும். என்னை மூன்று நாய்கள் மூன்று வெவ்வேறு வருடங்களில் மூன்று தெருக்களில் மூன்று இடங்களில் கடித்திருக்கின்றன. காற்றை மணந்து பார்த்து மழை வரும் என்று சொல்லும் ஒருவர் மந்திரிப்பார். வயிற்றினால் சிரிப்பவர் பச்சிலை அரைப்பார். நிழலை அளந்து மணி சொல்பவர் எனக்கு பச்சிலை வைத்து கட்டுவார்.
கொக்குவில் பெருமைப்படும் முதல் அடையாளம் அதன் ரயில் ஸ்டேசன்தான். கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு ரயில்பாதை போடுவதற்கு எங்களை ஆண்ட வெள்ளைக்காரர்கள் ஆலோசித்தபோது கொக்குவிலுக்கு ஊடாக போடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதை ஊர்க்காரர்கள் பெரிதாகக் கொண்டாடினார்கள் என ஐயா சொல்வார். அவருக்கு அப்போது இளவயது. தண்டவாளங்களை ரயில் வேலை செய்பவர்கள் ஓரங்களில் குவித்து வைத்திருப்பார்கள். இரவிலே ஐயாவும் இன்னும் சில இளைஞர்களும் சேர்ந்து அவற்றை தூக்கி விளையாட்டுக்காக வேறு இடத்துக்கு மாற்றிவைத்ததை எனக்கு சொல்லியிருக்கிறார். ராமர் தங்கிய இடம் என்பதால் ரயிலும் தங்கி போகலாம் என வெள்ளைக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும்.
என்னுடைய சிறுவயதில் ரயில்தான் எங்களுக்கு எல்லாம். அதன் ’கூ’ சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடினால் ஸ்டேசன் வந்துவிடும். கொக்குவில் எங்கே தொடங்குதோ அங்கே ரயில் ஊருக்குள் நுழையும். அதன் அழகை வர்ணிக்கமுடியாது. கைகாட்டி சிவப்பிலிருந்து பச்சை விளக்குக்கு மாறும். ஸ்டேசன் மாஸ்டர் கொடியை ஆட்டுவார். அவசரமாக ரயிலில் இருந்து சிலர் இறங்குவார்கள், சிலர் ஏறுவார்கள். ஏறுபவர்களிலும் பார்க்க ஏற்ற வந்தவர்களின் தொகை பத்து மடங்காக இருக்கும். கொக்குவிலுக்கு மணிக்கூடு இல்லை, ரயில்தான் மணிக்கூடு. காலை கொழும்பு ரயில் வரும்போது ஆறு மணி. இரவு திரும்பும்போது 7 மணி. மத்தியானம் சாமான் ரயில் 11 மணிக்கு புறப்படும். இடையில் நேரம் பார்க்க வேண்டுமென்றால் வாசலில் நிற்கும் நாலுமணி பூக்கன்று நேரத்தைச் சொல்லும். இப்படித்தான் அந்தக் காலத்தில் கொக்குவில் இயங்கியது.
ஐயா வியாபார விசயமாக கொழும்புக்கு ஒருமுறை ரயில் ஏறினார். திரும்பிவரும் தேதியை சொல்லிவிட்டுத்தான் பயணம் புறப்படுவார். சொன்ன தேதியில் ஐயா திரும்பவில்லை. மதியநேரம் ஒரு தந்திக்காரன் வந்தான். எங்கள் ஊரில் வீதிகளுக்கு பெயர்கள் கிடையாது. வீடுகளுக்கு நம்பர் கிடையாது. பெயர் ஒன்றை வைத்துக்கொண்டு தந்திக்காரன் விசாரித்து விசாரித்து வந்து சேர்ந்துவிடுவான். தந்திக்காரனைக் கண்டதும் அம்மா உரத்து ஓலமிட்டு அழத் தொடங்கினார். அதுதான் மரபு. ஆங்கிலம் தெரிந்த ஒருவர் தந்தியை படித்துவிட்டு சொன்னார் ’ஐயா வந்த ரயில் கவிழ்ந்து பலர் இறந்துவிட்டார்கள். ஐயா சிறுகாயத்துடன் தப்பினார். விரைவில் ரோட்டு வழியா வருவார்.’ இதைக் கேட்ட அம்மா ஆறுதல் அடைவதற்கு பதில் இன்னும் கூட அழத் தொடங்கினார்.
ஒருநாள் பின்னேரம் ரயில் பிந்திவிட்டது. 7 மணிக்கு வரவேண்டிய ரயில் ஒன்பது மணிக்கு வந்தது. நான் ரயில் ஸ்டேசனில் ரயிலை பார்ப்பதற்காக நின்றேன். ரயில் வந்து உஸ்ஸென்று சத்தம் போட்டு நின்றது. ஆனால் ஒருவரும் இறங்கவில்லை. ஒருவரும் ஏறவில்லை. ஏதோ அபசகுனம் என்று தோன்றியது. சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு ரயில் புறப்பட்டது. எத்தனை பரபரப்பாக ஒருகாலத்தில் ரயில் ஸ்டேசன் இருந்தது. அன்று சூசகமாக எதையோ உணர்ந்தேன். சீக்கிரத்தில் ஐயா தூக்கி விளையாடிய தண்டவாளம் மறைந்துவிடும். ரயில் ஸ்டேசன் ஒழிந்துபோகும். ரயில் போய்விடும் ஆனால் திரும்பி வராது. ஒரு சிறிய கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையே சீக்கிரத்தில் மறைந்துவிடும் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.
கொக்குவிலுக்கு இன்னொரு அடையாளம் இருந்தது. கிணறுகள். கொக்குவில் கிராமத்தில் ஆறுகள் கிடையாது. குளம் இல்லை. கேணி இல்லை. ஆனால் விவசாயக் கிராமம். ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தது. 60 – 70 அடி ஆழமான கிணறுகள். துலாவைப் பிடித்து இழுத்து தண்ணீர் அள்ளுவதுதான் வழக்கம். சில தனிக்கிணறுகள். சில பங்குக் கிணறுகள். வீதியின் நடுவிலே திடீரென்று ஒரு கிணறு இருக்கும். அது பொதுக் கிணறு. நாய்கள் மாடுகள் மனிதர்கள் தவறி விழுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சங்கதி. ஒரு முறை மாடு ஒன்று வண்டில், வண்டில்காரருடன் உள்ளே விழுந்துவிட்டது. ஒரு தடுப்புச் சுவரோ எச்சரிக்கை பலகையோ வைக்கவேண்டும் என ஊர் விவாதிக்கும், ஆனால் நடக்காது.
நேற்றைக்கு மாதிரி இன்றைக்கும் இன்றைக்கு மாதிரி நாளைக்கும் என கிராமங்கள் இயங்கும். கிணற்றில் யாராவது விழுந்தால் காப்பாற்றுவது என்பது கிடையாது. ஆறு குளம் இல்லாத ஒரு கிராமத்தில் நீச்சல்காரரை எப்படி கண்டுபிடிப்பது. என்றாலும் மழைக்காலங்களில் கிணறுகள் நிறையும்போது சில துணிச்சல்காரர்கள். நீச்சல் பழகுவதுண்டு. இரண்டு ஒல்லித் தேங்காய்களை இடையில் இறுக்கிக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தோன்றியபடி கைகளையும் கால்களையும் அடித்துப் பழகுவதுதான். அப்படி பழகி முதல்தர நீச்சல்காரராக வெற்றி பெற்றவர் ஒருவர் இருந்தார். பெயர் ஒல்லித்தேங்காய் சண்முகம். ஒரு முறை அவரை கொழும்பில் சந்தித்து முழு இந்து சமுத்திரத்தையும் அவரிடம் கொடுத்து நீந்தச் சொன்னபோது அவர் வட்டம் வட்டமாக சுற்றினார். வேறுமாதிரி நீந்த அவருக்கு வரவில்லை.
கொக்குவிலுக்கு கோயில்கள் இன்னொரு அடையாளம். காசை சில்லறையாக மாற்றி பொக்கட்டுக்குள் போட்டு கிலுங் கிலுங் என சத்தம் வர கோயிலை சுற்றிக்கொண்டு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி. இரண்டு கோயில்கள் பக்கத்துப் பக்கத்தில் நின்று போட்டிபோட்டன. திருவிழா நடக்கும்போது பள்ளிகளுக்கு விடுதலை. சூரன்போர் ஒரு கோயிலில் முடிந்த பிறகு அடுத்த கோயிலில் ஆரம்பமாகி அங்கேயும் மீசை வைத்து சிரித்த சூரன், தலை துண்டாகிய பிறகும் சிரிப்பான். மேளக்கச்சேரி முடிந்து சதிர்க் கச்சேரி நடுச்சாமத்தில் ஆரம்பமாகும். இந்தியாவில் இருந்து எடுப்பித்த கன்னிகா பரமேஸ்வரியின் ஆட்டத்தை முன்வரிசையிலிருந்து அண்ணாந்து பார்க்க பெரும் போட்டி நடைபெறும். சிறுவர்களான எங்களுக்கு அதில் பிரச்சினை கிடையாது. கன்னிகா பரமேஸ்வரி சுழன்று ஆடும்போது அவருடைய வெள்ளைக் கால்கள் மேலே சந்திக்கும் இடம் தெரியும் அளவுக்கு கிட்டவாக இருப்போம்.
கொக்குவிலில் நான் படித்த பள்ளிக்கூடம் சிறிய கட்டிடமாகத்தான் ஆரம்பித்தது. மேலே கூரை, கீழே மணல். ஆனால் அந்த ஊரில் யாருக்காவது அங்கே படிப்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் மேல் கோபம் வந்தால் பள்ளிக்கூடத்துக்கு தீ வைத்துவிடுவார். இப்படி மூன்றுதரம் நடந்தது. அதன் பின்னர் பணம் சேகரித்து பள்ளிக்கூடம் ஓட்டுக் கூரையாகவும் சிமெந்து தரையாகவும் மாறியது. எங்கள் பள்ளியில் ஆசிரியர் கல்கி வந்து பேசியிருக்கிறார். கிருஷ்ணன், மதுரம் நாடகம் போட்டிருக்கிறார்கள். காந்தியின் அஸ்தி கீரிமலை தீர்த்தத்தில் கரைக்கப்பட முன்னர் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் ரோட்டிலே படுத்து சத்தியாக்கிரகம் செய்து இந்தக் காரியத்தை சாதித்தார்கள்.
என் வகுப்பு பையன் ஒருவன் தினமும் லேட்டாக வருவான். அவனை வகுப்புக்கு வெளியே நிறுத்திவிடுவார்கள். ஏழை விவசாயக் குடும்பம். 2000 புகையிலைக் கன்றுக்கு தண்ணீர் இறைத்துவிட்டுத்தான் அவன் தினம் வரவேண்டும். படிப்பில் அளவற்ற ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து வகுப்புக்கு வந்தான். ஒருநாள் வகுப்பில் மயங்கி விழுந்துவிட்டான். ஆசிரியர் காலை உணவு சாப்பிட்டாயா என்று கேட்டபோது, நேற்று இரவு உணவும் சாப்பிடவில்லை என்றான். அன்றுதான் வறுமை என்றால் என்னவென்று கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொண்ட நாள். சிலநாட்கள் சென்று அவன் படிக்க வருவதை நிறுத்திவிட்டான். பிற்காலத்தில் அவன் வியாபரம் செய்து பெரும் பணக்காரன் ஆனபோது கல்விக்கு நிறைய நன்கொடை வழங்கினான். அவன் சொன்னான், ‘மூடச் சனங்களால் நிரம்பியது எங்கள் ஊர். எங்களுடையது விவசாயக் கிராமம். அரை மணி நேரம் பிந்தி பள்ளிக்கூடத்தை தொடங்கினால் என்ன? நான் படித்து பயன் அடைந்திருப்பேன் அல்லவா? நான் படிக்கவில்லை என்ற துயரம் எனக்கு இன்றைக்கும் இன்றுமிருக்கிறது.’
ஒரு கொலைகாரனிடம் எப்படி பழகவேண்டும் என்ற பயிற்சி எங்களுக்கு சிறு வயதிலேயே கிடைத்தது. எங்கள் ஊரில் சண்டைகளும் கொலைகளும் வெகு சாதாரணம். ஒருமுறை இங்கிலீஸ் பேப்பர் ஒன்றில் ஒரு செய்தி வந்தது. ‘கொக்குவில் கிராமம் கொலைகளுக்கு பேர்போனது.’ எங்கள் அண்ணர் அந்த செய்தி துணுக்கை வெட்டி எல்லோருக்கும் பெருமையாக வாசித்து மொழிபெயர்த்துக் காட்டியதுடன் கதவிலும் ஒட்டி வைத்தார். சண்டியர்கள் என்றால் கொக்குவிலில் மட்டும் 15 சண்டியர்களை நாங்கள் எண்ணியிருக்கிறோம். இன்றைக்கு நடிகர்களைப் பற்றியும் கிரிக்கட் வீரர்களைப் பற்றியும் பள்ளிக்கூடங்களில் பேசுவதுபோல நாங்கள் கொலைகாரர்களைப்பற்றி பேசினோம். சிலர் எங்களுக்கு ஹீரோவாக இருந்தனர். கொட்டடி தெய்வேந்திரன் கொலை செய்யப்பட்டபோது முதல்பக்க செய்தியாக பேப்பரில் வந்தது. அழுக்கடை சண்முகம் என்ற பெயரைச் சொன்னாலே ஊர் நடுங்கும். அவனை ஒல்லிப்பிச்சான் ஒருத்தன் கல் எறிந்து கொன்றுவிட்டான். ஒரு மாதம் முழுக்க இதுதான் பேச்சு. ஆனால் அன்றைய சண்டியர்களில் ஹீரோ புக்கையன்தான். ஒருநாள் பள்ளிக்கூடம் செல்லும்போது நான் அவனை பார்த்திருக்கிறேன். வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சேர்ட் அணிந்த அழகன் அவன். ஹிட்லரின் ராணுவவீரன் நடப்பது போல கால்களை முன்னே எறிந்துதான் நடப்பான். அந்த முழுக்கை சேர்ட்டுக்குள் ஒரு வாளை ஒளித்து வைத்திருப்பான் என்று சொன்னார்கள். வாளை வெளியே உருவினால் ஒருதலை கீழே விழும். ஏற்கனவே நாலு கொலை செய்ததாக பேச்சிருந்தது.
இன்னொரு பிரபலமான சண்டியனும் கொக்குவிலில் இருந்தான், பெயர் ரயிலடி செல்லன். அடிக்கடி மறியல் வீட்டுக்கு போய் வந்தவன். மடியிலே கிறீஸ் கத்தி எந்நேரமும் இருக்கும். இவனையும் பார்த்திருக்கிறேன். புக்கையனுக்கும் இவனுக்கும் தீராத பகை. இவர்கள் நேரிலே சந்தித்தால் ஒருவர்தான் மிஞ்சுவார். இவனைப் பார்த்தால் சண்டியன் என்று சொல்ல முடியாது. உள்வளைந்துபோய் இருப்பான். தடுமாற்றமான நடை. ஆனால் அது பாசாங்கு, எதிரிக்கு போக்குக் காட்டுவதற்காக. அவனுடைய வாய் பற்களை முழுதாக மூடாமல் கொஞ்சம் திறந்திருக்கும். இவனுடைய பிரச்சினை முகத்தில் ஒரு வாய் இருந்ததுதான். ஒருவரைக் கண்டால் அந்த வாயிலிருந்து ஒரு வசையை உதிர்க்காமல் நகரமாட்டான்.
சாவீட்டுக்கு புக்கையனும் வருகிறான் என்ற பேச்சு அடிபட்டது. ஏற்கனவே செல்லன் வந்து கிறிஸ்கத்தியை இடையில் சொருகி வெளியே தெரிய உலாத்திக்கொண்டிருந்தான். அன்று சாவீட்டுக்கு வந்தவர்கள் அழுவதற்கு பயப்பட்டார்கள். காசுக்கு ஒப்பாரி வைக்கும் பெண்கள் அவசரமாக ஓலம் வைத்துவிட்டு ஓடிவிட்டார்கள். பிணத்தை சீக்கிரத்தில் எடுக்கச் சொல்லி அவசரப் படுத்தினார்கள். அன்று ஐயாவும் ஊர்க்காரர்களும் செல்லனுக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கிக் கொடுத்ததில் அவன் குடித்துவிழுந்து தூங்கிவிட்டான். அப்பொழுதும் அவன் வாய் கொஞ்சம் திறந்து கிடந்தது. புக்கையன் வெள்ளத்தில் இறங்குவதுபோல வேட்டியை இரண்டு கைகளாலும் தூக்கிப்பிடித்தபடி சாவீட்டுக்குள் நுழைந்தான். மாமாவின் கைகள் என் தோள்மேல் இருந்தன. அவை நடுங்குவதை நான் உணர்ந்தேன். புக்கையன் செல்லனின் நிலையைப் பார்த்து சிரித்தான். ஒரு கொலைகாரனிடமும் வசீகரமான சிரிப்பு உண்டு.
எங்கள் அண்ணரிடம் அந்தக் காலத்து அரசர்களின் வளைந்த வாள் ஒன்று இருந்தது. அதை அடிக்கடி எண்ணெய்போட்டு தடவி பாதுகாத்தார். ஒருநாள் சந்தைக்கு போனவர் ஒரு சாமானும் வாங்காமல் திரும்பினார். கண்ணீர் ஒழுகுவதுபோல கன்னத்தில் ரத்தம் ஒழுகியது. வாளை உருவி வலது கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு திடீரென்று வீதியில் ஓடத்தொடங்கினார். அம்மா முதலில் துரத்தினார். பின்னர் ஐயா. அதற்கும் பின்னே நாங்கள். எப்படியோ அண்ணரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அம்மாவின் தூர ஓட்டப் பயிற்சியால் ஒரு கொலை தவிர்க்கப்பட்டது. கொக்குவிலின் சண்டியர் எண்ணிக்கை 16 ஆக ஏறும் வாய்ப்பை அன்று இழந்தது.
ஒருநாள் கொக்குவிலுக்கு மின்சாரம் வந்தது. எங்கள் ஊர் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைக்க தயாராக வந்திருந்தார். அப்படி திறந்த பின்னர் எல்லோருக்கும் பலகாரம் வழங்குவார்கள். ஆடல் பாடலும் இடம்பெறும். ஆனால் எம்.பி லீவரை பிடித்து இழுத்தபோது ஒன்றுமே நடக்கவில்லை. ஆயிரம் விளக்குகள் ஒரே நேரத்தில் உயிர்பெற்று பிரகாசமாக ஜொலிக்கவேண்டும். ஆனால் அதே இருள்தான் தொடர்ந்தது. எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்துப்போனார்கள். பிரதான எஞ்சினியர், அவருக்கு மேலானவர் அவருக்கும் மேலானவர் எல்லோரும் நின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தார்களே ஒழிய ஒன்றும் நடக்கவில்லை. ஆகக் கடைசி வேலையாள் ஒருத்தன் இருபதடி உயரமான ரான்ஸ்ஃபோர்மரில் விறுவிறென்று ஏறி என்னத்தையோ சொருகினான். மின்சாரம் வந்தது, ஆனால் அவன் விழுந்துவிட்டான். கைதட்டி பலத்த ஆரவாரம் செய்து, பலகாரம் சாப்பிட்ட பின்னர் அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.
எங்கள் ஊரில் வீடுகளுக்கு வயரிங் செய்பவர் ஒருத்தர் இருந்தார். அவரைப் பிடிப்பதற்கு பெரும் போட்டி நடந்தது. ஒருமுறை வந்து நாள் முழுக்க வேலைசெய்து வீட்டுக்கு வயரிங் அடித்து தந்தார். மெயின் சுவிட்ச் இருந்தது. நடுக்கூடத்தில் கூரையிலிருந்து நீண்ட வயரின் முனையில் அழகான ஒரு பல்ப் தொங்கியது. வெளிவாசலில் ஒன்று, சமையலறையில் ஒன்று என ஆடம்பரம்தான். கைவிளக்கை எறிந்துவிட்டு மேசையை பல்பின் கீழ் இழுத்துப்போட்டு படிப்பதற்கு தயாரானோம். சூரிய ஒளியின் வேகத்தோடு பாயும் மின்சாரம் ரான்ஸ்ஃபோர்மரில் எங்கள் வீட்டுக்கு வர நாலு வருடம் எடுத்தது. அதற்கிடையில் நாங்கள் கொழும்புக்கு குடிபெயர்ந்துவிட்டோம்.
எத்தனை தடவை படித்தாலும் புரியாத புறநானூறுப் பாடல் ஒன்று உண்டு. கபிலர் பாடியது. பாரி ஆண்ட பறம்பு மலை வீழ்ந்துவிட்டது. மூவேந்தர்கள் ஒன்றுகூடி படைதிரட்டி அவனைத் தோற்கடித்திருந்தார்கள். போரில் சிதைந்துபோன மலையை கபிலர் பாடுகிறார். ’கிட்ட நின்று பார்த்தாலும் தெரியும். தூர நின்று பார்த்தாலும் தெரியும். கரும்பை பிழிந்து எறிந்த சக்கைபோல கொடைவள்ளல் பாரியின் குன்று கிடக்கிறது’ என்கிறார். எல்லாம் சரிதான். அது என்ன தூர நின்று பார்த்தாலும் தெரியும், கிட்ட நின்று பார்த்தாலும் தெரியும். தூரத்தில் தெரியும் மலை கிட்டவும் தெரியும்தானே. அத்தனை உயரமானதா பறம்பு மலை? அதன் உயரம் வெறும் 2000 அடிதான். கபிலர் தூரம் என்று சொல்வது காலத்தை. அந்த மலையும் அதன் அழிவும் அன்று மனதில் நின்றதுபோல ஆயிரம் வருடங்கள் கழித்தும் நிற்கும்.
ராமர் வில்லூன்றித் தங்கிய பசுமைப் பிரதேசம் பாரியின் பறம்பு மலைபோல யானை சப்பிய கவளமாய் சிதறிவிட்டது. நான் பிறந்து வளர்ந்து தூங்கி விளையாடிய வீடு அதே வீதியில் அதே இடத்தில் நின்றது. இன்றைக்கும் வீதிக்கு பெயர் இல்லை. வீட்டுக்கு எண் கிடையாது. ஆனால் அதற்கு ஒரு வரலாறு உண்டு. போரின்போது எங்கள் வீட்டில் பல போராளிகள் தங்கியிருக்கிறார்கள். கேர்ணல் கிட்டு சிலகாலம் இருந்தார். கிட்டுவின் குரங்கு எங்கள்வீட்டு கிணற்று நீரில் குளித்தது. பிரபாகரன் சில நாட்கள் அங்கே ஒளிந்து வாழ்ந்திருக்கிறார். நான் குடித்த அதே கிணற்று நீரைக் குடித்திருக்கிறார். நான் நடந்த அதே நிலத்தில் நடந்திருக்கிறார். நான் சாப்பிட்ட அதே மரத்து பலாப்பழத்தை சாப்பிட்டிருக்கிறார்.
நாற்பது வருடமாக நான் என் வீட்டுப்பக்கம் திரும்பவில்லை. வெளிநாட்டிலேயே வாசம். இதுவெல்லாம் மற்றவர்கள் சொல்லித் தெரிந்துகொண்டது. என் எஞ்சிய வாழ்நாளில் ஒருமுறையாவது என்னுடைய கிராமத்துக்கு போகவேண்டும் என ஆசைப்படுகிறேன். முக்கியமாக அவர்கள் எங்கள் ஊர் பெயரை ’கொக்கிறாவ’ என்று மாற்றுவதற்கு முன்னர். புளியமரம் குண்டு விழுந்து பாதியாகிவிட்டது என்கிறார்கள். கிணறு அப்படியே இருக்கிறது. தண்ணீர் அதே ருசி. நான் அண்ணாந்து பார்க்கும்போது பாதி புளியமரம் தெரியலாம். அதற்கும் மேலே அதே அகாயம். கீழே கொக்குவில். அதுதான் என் ஊர்.
END