கையுறை

என் மனைவி ஒரு கதை சொன்னர். அவர் மாணவியாக இருந்த சமயம் அவருடைய ஆசிரியை யப்பானுக்கு போய் வந்திருந்தார். அங்கே ஒரு ரயில் நிலையத்தில் ஆசிரியை கைப்பையை மறதியாக விட்டுவிட்டு ரயில் ஏறிவிட்டார். இரண்டு மணி நேரம் கழித்து அவர் திரும்பவும் வந்தபோது அந்த கைப்பை வைத்த அதே இடத்தில் இருந்ததாம். யப்பானியர்கள் நாணயமானவர்கள் என்று என் மனைவி தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். ஒருவருடம் முன்பு யப்பானிய அமைச்சர் ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டு உலகச் செய்தியான கதையை நான் மனைவிக்கு நினைவூட்டவில்லை. ஆனால் நான் 'கனேடியர்களும் அப்படித்தான், நாணயமானவர்கள்' என்று சொன்னேன்.

 

எப்பொழுது நான் அப்படிச் சொல்வேன் என்று காத்துக் கொண்டிருந்ததுபோல ஒரு சம்பவம் நடந்தது. மறுநாள் காலை விடிந்தபோது சூரியன் வெளியே வந்திருந்தான், ஆனால் பனிக்குளிரை அவனால் விரட்ட முடியவில்லை. அன்றைய வேலைகள் எனக்கு நிரையாக இருந்தன. நான் அவற்றை ஒவ்வொன்றாகச் செய்துமுடித்தேன். சாமான்கள் வாங்குதல், கார் கழுவுதல், வங்கியில் பணம் மாற்றுதல்,  பெற்றோல் போடுதல் இப்படி பல தொல்லைகள். வீடு வந்து சேர்ந்த பின்னர்தான் இடதுகை கையுறை தொலைந்துபோனது தெரிந்து மனம் திடுக்கிட்டது.

ஏதாவது பொருள் தொலைந்து போனால் அன்றைய என் நடமாட்டத்தை பின்னோக்கி தள்ளி தேடவேண்டும் என்பது என் அம்மாவின் புத்திமதி. அப்படியே செய்தேன். இந்தக் கையுறை சாதாரணமானது அல்ல. என் மகன் பத்து வருடத்திற்கு முன்னர் தனது முதல் சம்பளத்தில் ஆசையாக வாங்கிப் பரிசளித்தது. இளம் வெள்ளாட்டுத் தோலில் பதப்படுத்தி செய்யப்பட்டது. கையுறை அணிந்தது போலவே தெரியாமல் கையோடு ஒட்டிக்கொண்டு கனமில்லாமலும், மிருதுவாகவும் இருக்கும். கறுப்பு அல்ல, கபில நிறமும் அல்ல; இரண்டுக்கும் இடைப்பட்ட கலர். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை இழந்துவிட நான் தயாராக இல்லை.

நான் பெற்றோல் நிலையத்துக்கு போனேன். காசை எடுத்துக் கொடுத்தபோது கையுறையை அங்கே தவற விட்டிருக்கலாம். மேலாளர் இல்லை, அவர் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்றார்கள். நான் நீண்ட மேலங்கியை மெள்ளத் தூக்கிவிட்டு அமர்ந்தேன். தொலைபேசியில் முக்கியமான ஒரு தகவல் காத்திருப்பதுபோல நான் அங்கே காத்திருந்தேன். ஐந்து நிமிடம் என்பது எவ்வளவு பெரிய கால அளவு. ஒரு முழு முகச்சவரம் செய்து கொள்ளலாம். செல்பேசியில் நாலு குறுஞ்செய்திகள் அனுப்பலாம். பாதி தேநீர் தயாரிக்கலாம். காத்திருந்தேன். மேலாளர் எதையோ மென்றபடி வந்தார். என் வலது கையை தன் இரண்டு கைகளுக்கும் இடையில் வைத்து சாண்ட்விச்போல அமத்திப் பிடித்து விசாரித்தார். நான் கையுறை விருத்தாந்தத்தை கூறினேன். சுருக்கமாக அப்படி யாரும் கையுறை விடவில்லையே என்றார்.

ஆறு படிகள் ஏறி நுழையும் வீட்டுக்கு சென்றேன். ஓரங்களில் கிழிந்த தரை விரிப்பும், ஒருபோதுமே கழுவாத திரைச்சீலைகளும் நான் முதல்நாள் பார்த்ததுபோலவே காணப்பட்டன.  வீட்டுப் பெண்மணி பிரசவ அப்பியாசம் செய்துகொண்டிருந்தார். தொலைந்த என் கையுறையைப் பற்றிக் கேட்டேன். அவர் அப்பியாசத்தை நிறுத்தாமல் இல்லை என்றார். வங்கிக்கு போனேன். எந்த நேரமும் நிறைந்த சிரிப்புடன் காணப்படும் பெண்ணிடம் என் கதையை சொன்னேன். அவள் இரண்டு யோசனகளுக்கு நடுவில் நின்றாள். அப்படியிருந்தும் சிரிப்பை சிறிதளவாவது குறைக்காமல் கையுறையை நான்  அங்கே விடவில்லை என்றாள். நான் மறுபடியும் வீட்டுக்கு திரும்பி என் துயரக்கதையை மீட்டி அனுபவித்தேன்.

அடுத்தநாள் இரண்டு அங்குலம் பனி கொட்டியபடியால் நான் வெளியே போகவில்லை. ஆனால் நடு இரவில் ஒரு யோசனை உதித்தது. கார் கழுவிய இடத்தை நான் சோதிக்கவில்லை. கார் சில்லு இரண்டு தண்டவாளத்துக்கு நடுவில் செல்லாமல் ஒன்றில் ஏறி மறுபக்கம் விழுந்துவிட்டது. நான் கீழே இறங்கி சில்லை ஆராய்ந்தது ஞாபகத்துக்கு வந்தது. விடிந்ததும் முதல் வேலையாக அங்கே ஓடினேன். என்ன சொல்வது? நான் காரைவிட்டு இறங்கி பரிசோதித்த அதே இடத்தில் இரண்டு அங்குலம் பனிக்கு கீழே கையுறை எனக்காக காத்துக்கொண்டிருந்தது. அதை ஒருவருமே திருடவில்லை. நீண்ட நாள் பிரிந்திருந்ததுபோல ஆசையுடன் தடவி அணிந்துகொண்டேன். உலகத்தில் ஆகக்கூடிய மகிழ்ச்சியை வள்ளுவர் 'காழில் கனி' என்று சொல்வார். விதையில்லாத பழத்தை உண்ட இன்பத்தை அந்தக் கணத்தில் உணர்ந்தேன்.

யப்பானைப்போல ரொறொன்ரோவும் நாணயமான மக்களால் நிறைந்திருக்கிறது என்றேன். மனைவி 'ஒற்றைக் கையுறையை உலகில் எந்த நாட்டிலும் எந்த திருடர்களும் திருடமாட்டார்கள். நீங்கள் ஒருமாதம் கழித்து சென்றிருந்தாலும் கையுறை விட்ட இடத்திலேயே கிடந்திருக்கும்' என்றார். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் ஒற்றைக் கால் சிலம்பைத்தானே திருடினார்கள் என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. மனைவிகள் எந்தக் காலத்திலும் பொய் உரைப்பதில்லை என்பது நினைவுக்கு வந்தது.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta