ஒன்றுக்கும் உதவாதவன்

எனக்குத் தெரியும், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கும் தெரியும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன். வாழ்க்கையில் ஒன்றிரண்டு முறை தொலைந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு தொழிலாகச் செய்வது நான்தான் என நினைக்கிறேன். ஒன்பது வயதாயிருந்தபோது கிராமத்தில் பக்கத்துக் கடைக்கு ஏதோ வாங்கப் போன நான் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை. என்னைத் தேடி ஆட்கள் புறப்பட்டு ஒன்றரை நிமிடத்தில் பிடித்துவிட்டார்கள். அன்று தொடங்கி வைத்தது இன்றும் தொடர்கிறது.

சரியாக மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டேன். ரொறொன்ரோவின் காலநிலை அன்று நல்லாயிருக்கும் என்று வானொலி சொல்லியிருந்தது. காற்றில் பனிக்காலத்துக் குளிரின் மீதி இருந்தது. நடைபோகும்போது அணியும் மெல்லிய கோட்டை அணிந்துகொண்டேன். மறுபடியும் நண்பர் தொலைபேசி மூலம் சொல்லிய வழிக்குறிப்புகளை நினைவு படுத்தினேன். என் வீட்டிலிருந்து வேகமாக நடந்தால் 15 நிமிடத்தில் நண்பர் வீட்டுக்கு போய்விடலாம். மெதுவாக நடந்தால் 20 நிமிடம் எடுக்கலாம்.என் வீட்டிலிருந்து நேராகப் போய் இரண்டு இடது பக்க திருப்பம், ஒரு வலது பக்கம், மறுபடியும் ஒரு இடது பக்க திருப்பம். அவ்வளவுதான். வீட்டு எண் 22. தொலைந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது. இடது, வலது திருப்பங்களை மாத்திரமல்லாமல் ரோட்டுப் பெயர்களையும் மனப்பாடம் செய்தாகிவிட்டது.

ஒவ்வொரு வீதியாகத் தாண்டி திரும்ப வேண்டிய திருப்பங்களில் இடது வலது பக்கங்கள் சரியாகத் திரும்பி, கடைசியில் இருக்கும் வீதிக்கு வந்துவிட்டேன். ஆனால் நான் தேடும் வீதியின் பெயரில் ஒரு வீதியும் இல்லை. ஒன்றிரண்டு வீதிகளின் பெயர்ப் பலகைகளை காணவில்லை. வேறு வழி இல்லாத நிலையில் ஒவ்வொரு வீதியாக ஊகித்து எல்லைவரை சென்று நண்பரின் வீட்டை தேடினேன். அந்த வீதிகள் எல்லாம் மேலே ஏறிப்போவதும், சடாரென்று கீழே இறங்குவதாகவும் இருந்தன. ஏறி இறங்கி, ஏறி இறங்கி தேடியதால் மூச்சு வாங்கியது. மூச்சை வெளியே விடுவது சுலபம், மறுபடியும் காற்றை உள்ளே இழுப்பதுதான் சிரமமாக இருந்தது. எல்லா வீதிகளும் இருந்தன. நான் தேடியது மட்டும் இல்லை.

நல்ல காலமாக செல்பேசி கையில் இருந்தது. நண்பரை அழைத்தேன். அவர் வீட்டுக்கு போகாவிட்டால் பரவாயில்லை. முக்கியமான ஒரு விசயமும் இல்லை; சும்மாதான் போகிறேன். ஆனால் எப்படியும் நான் என் வீட்டுக்கு திரும்பவேண்டுமே! நண்பர் செல்பேசியில் அழைப்பை ஏற்கவில்லை. தவறிய அழைப்புகளின் பட்டியலில் ஓர் இலக்கம் அதிகரித்தது. அவர் மாலை ஐந்து மணிக்கு பின்னர் செல்பேசி அழைப்பை ஏற்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தார் என்பது எனக்கு பின்னால் தெரியவரும். மணி அடித்துக்கொண்டே போனது. எடுப்பார் இல்லை. சரி வீட்டுக்கு போகலாம் என்று எண்ணி திரும்பினால் நான் வந்த ரோட்டு மறைந்து விட்டது. அவ்வளவு நேரமும் அங்கேதான் இருந்தது. மேலும் கீழுமாக அலைந்ததுதான் மிச்சம்.

அப்பொழுது பார்த்து ஒரு பெண் மிக வேகமாக நடந்து வந்தார். வயது முப்பது மதிக்கலாம். குளிருக்கு அணியும் பச்சை நிறத் தொப்பி, கம்பளிக்கோட்டு, நடைச் சப்பாத்து. முழங்காலின் கீழ் நீண்டிருக்கும் குளிருக்கு பொருத்தமில்லாத மெல்லிய ஸ்கேர்ட். இரண்டு கைகளையும் வளைக்காமல்  நேராக வீசி வீசி நடந்தார். ஓர் இசைக்கு ஆடுவதுபோல நீண்ட பாவாடை எழும்பி எழும்பி விழுந்தது. நான் ஒன்றுமே பேசவில்லை. அவர் போக உத்தேசித்திருந்த பாதையின் நடுவில் நின்றேன். அவர் ஒரு விமானம் நிற்பதுபோல உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டு நின்றார். ‘மன்னிக்கவேண்டும். பொஸ்வெல் வீதி எங்கே இருக்கிறது தெரியுமா?’ என்று கேட்டேன்.

இப்பொழுது அந்தப் பெண்மணி முற்றிலும் மாறிவிட்டார். முகம் வேறு ஒரு பெண்ணின் முகம்போல கருணை உள்ளதாக மாறியது. புகைப்படக்காரருடைய பல்ப் வெடித்ததுபோல முகத்தில் வெளிச்சம் கூடியது. தன்னுடைய வேலையை மறந்துவிட்டு அன்று முழுக்க நான் அவர் முன்னே நிற்கப் போகிறேன் என்பதுபோல பச்சைத் தொப்பியை எடுத்து கையிலே தட்டிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். அந்த வீதி அங்கேதான் எங்கேயோ இருக்கிறது ஆனால் அது அவருக்கு சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை. நான் ’நன்றி, சிரமத்திற்கு மன்னிக்கவும்’ என்று சொல்லிவிட்டு கிளம்பியபோது இரண்டு கைகளாலும் நின்றுபோன காரைத் தள்ளுவதுபோல முன்னுக்கு நீட்டிப் பிடித்து  தடுத்தார். என்னை அவர் விடுவதாயில்லை.

அடுத்துஅவர்செய்ததுநான்எதிர்பார்க்காதது. பையில்இருந்துசெல்பேசியைஎடுத்துதன்மகனைஅழைத்தார். அவர்கள்மொழியில்ஏதோபேசினார். தமிழைபின்பக்கமாகப்பேசுவதுபோலஅதுஒலித்தது. ஒருநிமிடம்கூடஆகியிராது. அவர்செல்பேசியைகாதிலேபிடித்துக்கொண்டிருந்தார். நான்அவர்முகத்திலேமாறும்உணர்ச்சிகளைஅவதானித்துக்கொண்டுமுன்னால்நின்றேன். அவர்செல்போனைமடித்துவைத்துவிட்டுசொன்னார். ‘உங்களுக்குபின்னால்இருக்கும்வீதிதான்பொஸ்வெல்வீதி. பெயர்ப்பலகைஉடைந்திருக்கிறது. நேராய்ப்போனால்வீட்டுஎண்22 இடதுபக்கம்வரும். வீட்டுக்குமுன்னால்அழகானஒருபேர்ச்மரம், அதைச்சுற்றிவட்டமாகவெண்கற்கள்பதித்திருக்கும்.’   

நான் திகைத்துவிட்டேன். ‘நன்றி, எப்படி? என்றேன்.

‘என் மகன். அவனுக்கு வயது 9. அவனுடை டெல் கம்புயூட்டருக்கு முன்னால் எந்நேரமும் வசிக்கிறான். இத்தனை விவரங்களையும் கூகிள் வரைபடத்தை பார்த்துச் சொன்னான்’ என்றார். நான் மறுபடியும் நன்றி கூறிவிட்டு புறப்பட்டேன்.  ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், பக்கத்திலா?’ என்றார். சொன்னேன், அவரும் சொன்னார். அவர் செல்பேசியை வெளியே எடுத்தார். நானும் எடுத்தேன். உலகக் கோப்பை உதை பந்தாட்ட வீரர்கள் தங்கள் சீருடைகளை எதிரணியினருடன் மாற்றிக்கொள்வதுபோல  நாங்களும் எங்கள் முகவரிகளை மாற்றிக்கொண்டோம். ’சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்றேன். அவர் பச்சைத் தொப்பியை தலையிலே தரித்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து நடையை தொடங்கினார். அவருடைய மெல்லிய பாவாடையும் தன்னை விடுவித்துக்கொண்டு அவருடன் புறப்பட்டது.

அந்தப் பெண் சொன்ன மாதிரி வீடு அதே ரோட்டில் இடது பக்கத்தில் இருந்தது. கதவு மணி அடித்ததும் நண்பரின் முகம் கண்ணாடி வழியாக மூன்றில் ஒரு பங்கு தெரிந்தது.  பொறுங்கள் என்று கையை காட்டிவிட்டு திறப்பை எடுத்து நடனமாடியபடியே வந்து கதவைத் திறந்தார். அவருடைய ஒரே மகள் மங்கிய வெளிச்சத்தில் எதையோ வாசிக்க முயன்று கொண்டிருந்தாள். என்னை அறிமுகப்படுத்தியதும் கிக்கி என்று விக்குவதுபோல சிரித்தாள். மகள் பெயர் முத்துநகை என்றார். முத்துப் போன்ற பற்களால் சிரிப்பதால் அந்தப் பெயரா அல்லது முத்து ஆபரணம் போன்றவள் என்பதால் அந்தப் பெயரை வைத்தாரா என்பது தெரியவில்லை. வழி தவறியதையும் என்னை ஒரு பெண்மணி  மீட்டார் என்பதையும் நான் கூறவில்லை. மகள் போட்டு தந்த இஞ்சிக்கோப்பியை குடித்துவிட்டு திரும்பினேன்.

இருட்டுப்பட முன்னர் வீட்டுக்கு போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று வேகமாக நடந்தேன்.  இனி வரும் எல்லா வருடங்களிலும், லீப் வருடம் உள்பட, ஒருவர் வாயினால் சொல்லும் வழிக்குறிப்புகளை வைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு போகக்கூடாது என்று தீர்மானித்தேன். வழியில் எதற்காக எனக்கு இப்படி நடக்கிறது என்று யோசித்தேன். எப்பொழுதும் தொலைந்து விடுகிறேன். பிரபல இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கல்வினோ எழுதிய கதை ஒன்று ஞாபகத்துக்கு  வந்தது. அதன் தலைப்பு ’ஒன்றுக்கும் உதவாதவன்’. அந்தக் கதையில் ஒரு மனிதன் வருவான். அவனுக்கு சப்பாத்துக் கயிறு கட்டத் தெரியாது. ஒரு வழிப்போக்கன் அவனிடம் சொல்வான் ’உங்கள் சப்பாத்து கயிறு அவிழ்ந்துபோய்விட்டது.’  அந்த மனிதன் அதே இடத்தில் குனிந்து கயிற்றைக் கட்டுவான்.  ஒரு சில நிமிடங்கள் கழிந்து மறுபடியும் அதே வழிப்போக்கன் வழியில் தென்படுவான். ‘பாருங்கள், உங்கள் சப்பாத்துக் கயிறு கட்டப்படவில்லை’ எனக் கத்துவான். மறுபடியும் மனிதன் சப்பாத்தைக் கட்டுவான். இந்த தடவை மிகத்திறமாக முடிச்சை போடுவான். அப்படியும் சிறிது நேரத்தில் முடிச்சு அவிழ்ந்துபோகும். மறுபடியும் வழிப்போக்கன் எச்சரிப்பான். இப்படியே அந்த மனிதன் போகும் இடமெல்லாம் வழிப்போக்கனும்  வந்து கொண்டேயிருப்பான். ’கயிறு அவிழ்ந்துவிட்டது’  என்று சொல்லுவான். இவன் மறுப்பு சொல்லாமல் தொடர்ந்து கட்டுவான். 

இறுதியில்அலுத்துப் போய்மனிதன்சொல்வான், ’என்னசெய்வது. எப்படிமுயன்றாலும்என்னால்சப்பாத்துலேஸைகட்டமுடியவில்லை. சிறுவயதில்நான்நல்லபயிற்சிபெறவில்லை. அதுஅவிழ்ந்து கொண்டேயிருக்கிறது. ’

‘அப்படியா? உங்கள் பிள்ளைக்கு லேஸ் கட்டுவதை யார் சொல்லித் தருவார்கள்?

‘அவன் வேறு யாரிடமிருந்தாவது கற்றுக் கொள்ளவேண்டும்.’

‘அது எப்படி? ஒரு நாள் உலகம் முழுவதும் அழிந்துபோய் நீங்கள் மட்டுமே எஞ்சியிருந்தால் அப்போது என்ன செய்வீர்கள்? பிள்ளைக்கு யார் சொல்லிக்கொடுப்பார்கள்?’

‘உலக முடிவில் தப்புவிப்பதற்கு கடவுள் என்னையா தெரிவு செய்வார்? எனக்கு சப்பாத்து கயிறுகூட கட்டத் தெரியாதே.’

அதற்கு அந்த வழிப்போக்கன் சொன்னான். ‘இந்த உலகம் இயங்குவது அப்படித்தான். ஒருவருக்கு லேஸ் கட்ட வராது. ஒருவருக்கு மரம் சீவத் தெரியாது. இன்னொருவர் ரோல்ஸ்ரோயை படித்திருக்கமாட்டார். வேறு ஒருவர் விதைப்பது எப்படி என்று பழகவே இல்லை. உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் ஒருவருமே இல்லை. மக்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து  வாழ்ந்தால்தான் வாழமுடியும். ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்பதுதான் சமுதாயம். அதுதான் வாழ்க்கை.’ இப்படிச் சொன்ன வழிப்போக்கன் மறைந்துவிடுவான்.

 

அந்தக் கதை வெகு பொருத்தமாக இருந்தது. குற்றம் குறை இல்லாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள். அந்தப் பச்சை தொப்பி பெண்மணியிடம்  உதவி கேட்டதும் அவர் எவ்வளவு மகிழ்ந்துபோய் காணப்பட்டார். செல்பேசியை எடுத்து மகனை அழைத்து  வழி காட்டினார். அதை அவர் தவிர்த்திருக்க முடியும். நல்லவர்களால்தான் உலகம் நடக்கிறது. புறநானூறு 182ம் பாடலும் அதைத்தான் சொல்கிறது. 50 வருடத்துக்கு  முன்னர் இட்டாலோ கல்வினோ சொன்னதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற புலவர் ’உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ற பாடலில் சொல்லிப் போயிருக்கிறார்.   

ரோட்டு பெயர்கள் எல்லாம் பாடமாகியிருந்ததால் திரும்பும்போது பிரச்சினை இல்லை. நான் வசிக்கும் வீதி சீக்கிரமே வந்தது. ஒரே மாதிரி உடையணிந்து ஒப்பனை செய்த 12 மணப்பெண் தோழிகள் போல இரண்டு பக்கமும் தேவதாரு மரங்கள் ஒரே உயரத்தில் ஒரே பருமனில் வளர்ந்து  அழகாகக் காட்சியளித்தன. வாத்துக்கள் நீந்தும் குளம் வந்தது. பூங்கா வந்தது. வீடு வந்தது. கதவு எண் மாறவில்லை, அதேதான். வீட்டின் முன்னே ட்யூலிப் பூ ஓர் இதழ் கூடியிருந்தது.  மனைவி இரவுச் சாப்பாட்டு ஆயத்தங்களைச் செய்து முடித்துவிட்டு எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் ‘என்ன தொலைந்துவிட்டீர்களா?’ என்று கேட்டார். ’தேநீர் ஆறிவிட்டதா?’ என்று கேட்கும் சாதாரணக் குரல். நான் முகத்தை மாற்றாமல் ‘வீடு கண்டுபிடிப்பது ஈசி, இரண்டு இடது பக்கம், ஒரு வலது பக்கம், மீண்டும் இடது பக்கம். வீட்டுக்கு முன்னே அழகான பேர்ச் மரம் துளிர் விட்டுக்கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வட்டமாக வெள்ளைக் கற்கள் அலங்காரம்’ என்றேன்.

எனக்கு வழிகாட்டியது ஒரு பச்சைத் தொப்பி மனுசியும், அவருடைய செல்பேசியும், ஒன்பது வயது மகனும், டெல் கம்புயூட்டரும், கூகிளும், பூமியை ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் மூன்று செய்மதிகளும் என்பதை நான் ஏன் சொல்லப்போகிறேன்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta