பெயர்கள்

பெயர்கள்

அ.முத்துலிங்கம்

இப்பொழுது சில காலமாக புதுவிதமான கடிதங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரு மின்னஞ்சல் நண்பர் தனக்கு ஆண் குழந்த பிறந்திருக்கிறதென்று எழுதிவிட்டு நல்ல பெயர் ஒன்று சூட்டச் சொன்னார். நான் அவருக்கு மூன்று நான்கு பெயர்களை எழுதி அனுப்பினேன். அவர் என்ன பெயர் வைத்தார் என்பது தெரியாது.

 

இன்னொருவர் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று எழுதினார். சுத்த தமிழ் பெயராக இருக்கவேண்டும். ஆனால் ’குந்தவி, குழலி, குணவதி’ போன்ற பெயர்கள் வேண்டாம் என்று நிபந்தனை போட்டுவிட்டார். நான் பெயர் சூட்டும் மண்டபம் ஒன்று வைத்து நடத்துகிறேன் என்று அவர் நினைக்கிறார்.

 

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் விதம் விதமான பெயர்களை வைத்தார்கள். இப்பொழுது அப்படியான பெயர்களைக் காணமுடியாது. சடங்கு, குருத்து, பழந்தின்னி, படைக்கலம் போன்ற பெயர்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. கூந்தலழகி, கண்ணழகி போன்ற பெயர்களும் இருந்தன. ஆனால் மூக்கழகி, இமையழகி, புருவஅழகி, கழுத்தழகி, நாக்கழகி போன்ற பெயர்கள் இல்லை. கூந்தலுக்கும் கண்ணுக்கும்தான் இடமிருந்தது. மற்ற அவயவங்கள் பெயர்களுக்கு உசிதமாகப் படவில்லை. ’முழங்கை அழகி’ எத்தனை முக்கியம். ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோய் ஒருநாள் கனவில் அழகான முழங்கை ஒன்றைக் கண்டார் . அதிலிருந்து பிறந்ததுதான் அவருடைய புகழ்பெற்ற நாவல் அன்னா கரீனினா என்று சொல்வார்கள். முழங்கை, முழங்கால் கணுக்கால் முதுகெலும்பு ஒன்றும் பெயர் வைக்க உதவாத அங்கங்கள்.

 

நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் ஊர் ஓர் அரசியல்வாதியின் பிடியில் இருந்தது. அவர்தான் குழந்தைகளுக்கு பெயர் வைத்தார். ஆரம்பத்தில் நல்லாகத்தான் இருந்தது. கபிலர், பரணர், ஒளவை, நற்கீரன், வளவன் என்றெல்லாம் தொடங்கி பெயர்களின் இருப்பு குறைய குறைய தாழ்வாரம், உசாத்துணை, முறிமருந்து, ஆரத்தழுவி என்றெல்லாம் பெயர் சூட்டத் தொடங்கிவிட்டார். கிராமம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. பேய்க்கு சாப்பாடு போட்டால் நீண்ட அகப்பை வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அந்தப் புத்திமதியை அங்கே ஒருவரும் கேட்கவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு ’மாருதப்புரவீகவல்லி’ என்று பெயர் சூட்டினார். அதுவே கடைசி என்று நினைக்கிறேன். அந்தப் பெண் ஏழு வயதுக்குப் பின்னர் பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்துவிட்டாள். பிள்ளைகளின் கேலி தாங்க முடியாமல் படிப்பையே விட்டுவிட்டாள் என்று கேள்விப்பட்டேன்.

 

என்னிடமும் நல்ல பழங்காலத் தமிழ் பெயர்கள் உள்ளன. அந்தக்காலத்துப் புலவர் பெயர்கள் அவருடைய ஊரைச் சொல்லும் அல்லது அவருடைய உருவத்தை சொல்லும். கோவூர் கிழார், மாங்குடி மருதனார் என்பன ஊரைச் சொல்லும்.  இரும்பிடர்த்தலையனார், கழாத்தலையர், ஓர் ஏர் உழவனார் போன்றவை புலவரை வர்ணிக்கும். மற்றவர்களிடம் ஐந்தாறு ஏர்கள் இருந்திருக்கும். இவரிடம் மாத்திரம் பாவம் ஏழை, ஓர் ஏர்தான் இருந்திருக்கவேண்டும். இப்பொழுது ஒருவருக்கு ’நரிவெரூஉத்தலையார்’ என்று பெயர் சூட்டினால் எப்படியிருக்கும். பா என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கேட்டு என்னிடம் யாராவது வந்தால் ‘பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பெயரைச் சூட்டுவதற்காக நெடுங்காலமாக காத்திருக்கிறேன்.

 

சில நாட்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் ஓர் இளைஞரைச் சந்தித்தேன். அவருடைய பெயர் என்னவென்று கேட்டேன். அவர் ’அஷ்’ என்றார். மீதி எங்கே என்று வினவினேன்.  (கமலஹாசனின் அபூர்வசகோதரர்கள் படத்தில் குள்ள கமலைப் பார்த்து நாகேஷ் ‘பாக்கி எங்கே ஐயா?’ என்று கேட்பார்.) இந்தப் பையன் இதுதான் முழுப்பெயரும் என்றான். என்ன பொருள் என்றேன். அம்மாவிடம் கேட்டேன் அவருக்கு தெரியவில்லை. ’நான் நினைக்கிறேன் சிறு குழந்தையின் தும்மலாகவிருக்கும்’ என்று பதில் கூறினான்.

 

இப்பொழுது இரண்டெழுத்து, மூன்றெழுத்துப் பெயர்கள்தான் பிரபலம். எமி என்றால் தனிமை. ஐது என்றால் அழகு. சிதர் என்றால் மழைத்துளி. இவை எல்லாம் பழங்காலத் தமிழ் சொற்கள். வைதேகி ஹேர்பர்ட் (Vaidehi Herbert) தன்னுடைய வலைத்தளத்தில் நிறைய குழந்தைகள் பெயர்களை இட்டிருக்கிறார். எல்லாமே 2000 வருடம் பழமையான தமிழ் பெயர்கள். தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு போன சொற்களும் உள்ளன. கீழே வருவதுதான்  அவருடைய வலைத்தளம். அந்தப் பக்கம் போகும்போது அவருடைய சங்கப்பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்துப் பாருங்கள். அங்கேயே அசந்துபோய் நின்றுவிடுவீர்கள்.

http://puretamilbabynames.wordpress.com/pure-tamil-baby-names-for-girls/

நான் இன்றுடன் பெயர் சூட்டும் கடையை மூடிவிட்டேன்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta