வன்னி வீதி

வன்னி வீதி

அ.முத்துலிங்கம்

 

""

நேற்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது.  கனடாவில் நான் வசிக்கும் மார்க்கம் நகரசபையின் கூட்டத்தில் அது நடந்தது. நகரபிதா ஸ்கெப்பட்டியும்  அங்கத்தவர் லோகன் கணபதியும் உணர்ச்சியுடன் உரையாற்றினார்கள். இறுதியில் ஒரு புது ரோட்டுக்கு  நகரசபை ’வன்னி வீதி’ என்று பெயர் சூட்டியதும் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. உலகில் இரண்டாவது பெரிய தேசமான கனடாவில் முதல் முறையாக ஒரு வீதிக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. திரு லோகன் கணபதியின் முயற்சியால்  2012 ஆண்டு தொடங்கி வரும் எல்லா வருடங்களிலும் 14 ஜனவரி தமிழர் பாரம்பரிய நாள்/ புது வருடம்/ தைப்பொங்கல் எனப் பிரகடனப்படுத்தியது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து இது நடந்திருக்கிறது. வன்னி வீதியில் சனசமூக நிலையம், நூலகம் மற்றும் பூங்கா போன்றவையும் விரைவில் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். கனடாத் தமிழர்களுக்கு இது வன்னி நிலத்தை  நினைவூட்டியபடியே இருக்கும்.

 

வன்னிப் பிரதேசம் இலங்கையின் ஒரு பகுதி. போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது கூட வன்னி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 2000 சதுர மைல் நிலப்பரப்பை பண்டார வன்னியன் ஆட்சி செய்தான். 1803ம் ஆண்டு காக்கை வன்னியன் சதியில் அவன் பிரிட்டிஷாரிடம் தோல்வியுற நேர்ந்தது. அவனைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி பண்டார வன்னியனின் வீரத்தை பாராட்டி அவனுக்கு சிலை அமைத்தான் என்பது வரலாறு.

 

சமீபத்தில் ’வன்னி யுத்தம்’ என்ற நூல் வெளிவந்திருந்தது. இதை எழுதியவர் பெயர் அப்பு. வன்னியில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை அங்கே இருந்தவர். பலமுறை இடம் பெயர்ந்தார். யுத்த காலத்தில் நாட்குறிப்புபோல தினம் அங்கே நடந்த சம்பவங்களை நூலில் பதிந்திருக்கிறார். ஓர் இடத்திலே வீதியிலே இருவர் உரலில் ஏதோ இடித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ஒரு பெண் சுளகில் புடைத்தபடி இருந்தார். அந்த மூவரையும் சுற்றி இரண்டு ஆண்கள், ஒரு பெண் கதைத்துக்கொண்டு நின்றார்கள். சுற்றிலும் நடந்த போர் அவர்களில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. தொடர்ந்து இடித்துக்கொண்டும் கதைத்துக் கொண்டும் இருந்தார்கள். போரின் கடைசிக் கட்டத்தில் சனங்களுக்கு எல்லாமே பழகிவிட்டது. குண்டு விழுவதோ ஆட்கள் சாவதோ ஒன்றும் பெரிய விசயமே இல்லை. அடுத்த கணம் என்ன நடந்ததென்பதை ஆசிரியர் தன் வார்த்தைகளில் கூறுகிறார். ‘திடீரென எங்கிருந்தோ ஓர் எறிகணை சீறிக்கொண்டு வந்து உரலில் இடித்துக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் வீழ்ந்து வெடித்தது. என் கண்ணுக்கு முன்னால் இருந்த ஆறு பேரும் அப்படியே வீழ்ந்தார்கள். அவர்களது தறப்பாள் கொட்டிலுக்கு முன்னால் இருந்த தேநீர்க் கடை வாசலில் நின்றவர்கள் அப்படியே பின்வளமாக வீழ்ந்தார்கள்.’ சகல வளங்களுடனும் இருந்த வன்னிப் பிரதேசம் எப்படி நாளுக்கு நாள் நிலத்தை இழந்து கடைசியில் வீழ்ந்தது என்பதை படிப்படியாக விவரிக்கும் நூல்.

 

என் வீடு மார்க்கம் நகரில் இருக்கிறது. அங்கே நிறைய வகை வகையான மரங்கள் உள்ளன. ’வன்னி வீதி’ என் வீட்டுக்கு சமீபமாக அமைந்திருக்கிறது. என் வீட்டைச் சுற்றி இருக்கும் வீதிகளின் பெயர்களில் பெரும் ஒற்றுமை உண்டு. ரெட் ஆஷ் (red ash),  பிளாக் வால்நட் (black walnut),  வைட் செடார் (white cedar). எல்லாமே மரங்களின் பெயர்கள். இப்பொழுது நாலாவது பக்கத்துக்கு வன்னி வீதியும் வந்துவிட்டது. வன்னி பூப்பூக்கும்  மரம். பாண்டிய மன்னர்களின் குலமரம். நீரில்லாத பாலைவனங்களிலும் 400 வருடங்கள் வாழக்கூடியது. பன்னிரெண்டு வருட வனவாசத்தை முடித்துவிட்டு பாண்டவர்கள் மாறுவேடத்தில் விராடனுடைய ராச்சியத்துக்குள் அஞ்ஞாதவாசத்தை கழிக்க நுழைந்தபோது தங்கள் ஆயுதங்களை மூட்டையாகக் கட்டித் தொங்கவிட்டது ஒரு வன்னி மரத்தில்தான். யுத்தத்ததை நிறுத்திவைப்பதற்காக அல்ல; தள்ளிவைப்பதற்கான ஒரு குறியீடு வன்னி மரம்.

 

இனிமேல் நான் எங்கு புறப்பட்டாலும் வன்னி வீதியை கடந்துதான் போகவேண்டும், வரவேண்டும். ஆகவே நாளாந்தம் வன்னி வீதியை பார்ப்பேன். இந்த வீதியில் காவல் அரண் கிடையாது.  கிரிஷாந்திகள் தினம் பயமின்றி இதைத் தாண்டி பள்ளிக்கூடம் செல்லலாம். வீதியிலே குண்டு விழும் அபாயம் கிடையாது.  நல்ல கோடைகால நிழலில் வீதி ஒரத்தில் உரலில் நெல்லுக் குத்தலாம்; சுளகிலே புடைக்கலாம். இசைப்பிரியா போன்ற ஒலிபரப்பாளர்கள் பயமின்றி வீதியில் நின்று ஒலிபரப்பு செய்யலாம்.

 

இது எங்களுக்கு சொந்தமான வீதி. இதன் பெயரை ‘வலகம்பாகு ஹந்தியா’ என மாற்ற முடியாது. ’இறந்த வீரனின் நடுகல் ஒன்றுதான் தெய்வம். வேறில்லை’ என்று புறநானூறு சொல்லும். அப்படியான மாவீரர் துயிலும் இல்லத்தை சிதைத்ததுபோல இந்த வீதியை ஒன்றும் இலகுவாக சிதைக்க முடியாது. நூலகத்தை எரித்தது போல இதை அழிக்க முடியாது. இது என்றென்றைக்குமாக கனடாவில் ஈழத் தமிழரின் வரலாற்றை நினைவுபடுத்தியபடியே நிற்கும். வன்னி வீதி.

 

END

 

 

About the author

1 comment

  • “என்றென்றைக்குமாக கனடாவில் ஈழத் தமிழரின் வரலாற்றை நினைவுபடுத்தியபடியே நிற்கும். வன்னி வீதி.” +1

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta