இந்த வாரத்தில் 2 நாட்கள்

இந்த வாரத்தில் 2 நாட்கள்
 
அ.முத்துலிங்கம்
 
கார் கத்தியது
 
பெரிய ஹொட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், ‘நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?’ நான் சொன்னேன். ‘நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன.’ அதுதான் நடந்தது.
நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம் இருந்தது. செல்பேசியில் போகும் பாதைக் குறிப்பு இருந்தது. போதாததற்கு காரிலே GPS இருந்தது. ஹொட்டலை விட்டு வெளியே வந்து ஒரேயொரு திருப்பம் எடுத்தேன். பத்து நிமிடத்தில் பெயர் தெரியாத ஓர் ஊரில் நின்றேன். வரைபடம் முன்னெப்பொழுதும் கேள்விப்பட்டிராத ரோட்டின் பெயரைக் காட்டியது.  சரி திரும்புவோமென்றால் எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியவில்லை. தெரிந்த ஒரு ரோட்டின் பெயர் வரும்வரைக்கும் காரை ஓட்டினேன். மிகவும் பரிச்சயமான ஒரு வீதி வந்ததும் காரை அதற்குள் வெட்டினேன். கார் போகப்போக ஒன்று புரிந்தது. சரியான ரோட்டு; ஆனால் பிழையான திசை. 
 
அடுத்து வந்த சைகை விளக்கில் இடது பக்கம் திரும்பினேன். அதுதான் நான் அந்த இரவு விட்ட ஆகப் பெரிய தவறு. இடது பக்கம் ரோட்டே கிடையாது. வலது பக்கம் மட்டும் இருந்தது. என்னுடைய கார் இடது பக்க வீதியில் ஓடியது. எதிரே கார்கள் படுவேகத்தில் வந்தன. வலது பக்க வீதிக்கு மாறவேண்டும். இரண்டு பிரச்சினைகள். பின்னால் கார்கள் வந்துகொண்டேயிருந்தன. நடுவிலே ரோட்டைப் பிரித்து அரை அடி உயரமான சிமெண்ட் தரை இருந்தது. வருவது வரட்டும் என்று காரை அதன்மேல் ஏற்றி மறுபக்கம் வந்து சேர்ந்தேன். பின்னுக்கு வந்த கார் அடிக்காமல் தப்பினேன். நெஞ்சு படபடவென்று அடித்தது. அன்று உயிர் தப்பியது மிகப்பெரிய ஆச்சரியம்தான் 
இரண்டு பக்கமும் கார்கள் இல்லையென்று உறுதிப்படுத்திவிட்டு யூ திருப்பம் எடுத்தேன். இப்போது பாதை பிடிபட்டுவிட்டது. ஆனால் கைகள் நடுங்கியதை நிறுத்த வெகு நேரமாகியது. வீடுவந்து சேர்ந்தபோது இரவு ஒரு மணி. You have reached your destination ( உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்) என்று கார் கத்தியது, 
 
 
பணக்காரன்
 
 
என்னுடைய வங்கிக்கு போனேன். யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார். நெஞ்சு சட்டையில் ‘பயிலுநர்’ என்று குத்தியிருந்தது. வங்கி நடப்புகளை பயில்வதற்காக புதிதாக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார். எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பளிச்சென்று எல்லா பற்களும் மின்னின. என்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார். அவர் சொல்லுவார். ‘ஐயா, எல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. எதற்காக மெனக்கெட வேண்டும். எந்த எந்த பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.’ இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்று பட்டது.
 
’உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?’ ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்சரிப்பதுபோல, கனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்தி சொன்னார். ’உங்கள் பெயர் தெரியவில்லையே?’ என்றேன். அவர் ’அநுபமா’ என்றார். பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாது. நிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில் குத்தலாம். அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும். 
 
அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ் ஆகவும் இருக்கலாம். ஆனால் அவர் புன்னகையை பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோது இலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்கவைத்தது. ‘ஒரு காசோலை வந்திருக்கிறது. அதை வங்கியில் என் கணக்கில் கட்டவேண்டும்’ என்றேன். ‘சரி. மிக்க மகிழ்ச்சியுடன்’ என்று சொன்னார். உடன் அட்டையை மெசினுள் நுழைத்து, என் கடவு எண்ணையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன். அதைப் பெற்றவர் பல்வைத்தியருக்கு தலையை உயர்த்துவதுபோல உயர்த்தி காசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார். அதன் பின் பக்கத்தில் கையொப்பம் வைக்கச் சொன்னார். வைத்தேன். கம்புயூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார். நகங்களில் பொய் நகம் ஓட்டி நீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்துவைத்து பதிந்தார். பின்னர் எழுந்து நின்று சறுக்குவதுபோல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டர். மறுபடியும் இருக்கைக்கு திரும்பி சாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார்.
 
நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன். என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்தது. நான் கொடுத்த காசோலை 2500 டொலர்கள் மட்டுமே. அவர் வரவு வைத்தது 25,001 டொலர்கள். காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டொலரை கணக்கில் சேர்த்திருந்தார். திரும்பவும் அவரிடம் போனேன். குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். ’இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்’ என்றேன். ரசீத்தைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லை. பிழையை சுட்டிக் காட்டினேன். பள்ளிச் சிறுமி செய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார். 
 
பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றை தந்தபோது ’மன்னிக்கவும்’ என்றார். ‘நான் ஏன் மன்னிக்கவேண்டும். நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றேன். அவர் ஒன்றுமே சொல்லாமல் அழகாகச் செதுக்கப்பட்ட புருவத்தை, அதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே என்பதுபோல  உயர்த்தினார். ’இன்று நான் பணக்காரனாகியிருந்தேன். ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன் பணக்காரன்தானே’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டொலர் பெறுமதியான புன்னகை. 
 
END  
 
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta