78 ஆணிகள்

7
78 ஆணிகள்
 
அ.முத்துலிங்கம்
 
""33 நாள் பயணம். குடிவரவு அதிகாரி கேட்கிறார் ‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ ‘3000 ஆண்டு சிலுவை.’ ‘வேறு என்ன?’  ‘30 ஆணிகள்.’ ‘அப்படியா, உள்ளே வா.’ சிலுவையில் தன்னை அறைந்துகொள்ள அவனுக்கு புது நாடு ஒன்று கிடைத்துவிட்டது. செல்வம் அருளானந்தம் எழுதிய கவிதை இது. இப்படி 78 கவிதைகள் தொண்ட தொகுப்பு நூல் கனடாவில் வெளியாகியுள்ளது. உலகத்து சமகால தமிழ்க் கவிகளின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து IN OUR TRANSLATED WORLD ( எமது மொழிபெயர் உலகினுள் ) என்ற தலைப்பில் நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் சிறப்பு அதில் தமிழ் கவிதையும் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் பக்கத்து பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பதுதான். 
 
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான இந்நூலில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகள் அடங்கியுள்ளன. இந்த நூலுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து கவிதைகள் தெரியப்பட்டுள்ளன. எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செல்வா கனகநாயகம் தொகுப்பை மேம்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக இப்படியான இருமொழி நூல் ஒன்றுக்கு ஒன்ராறியோ ட்ரில்லியம் அமைப்பு நிதியுதவி வழங்கி ஆதரித்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைவி சாவி சிங் நூலை ரொறொன்ரோவில் 9 மார்ச் 2014 அன்று நடந்த விழாவில் வெளியிட்டு வைத்தார். விழாவில் பேராசிரியர் செல்வா கனகநாயகம், பேராசிரியர் சாஷா எபெலிங், பேராசிரியர் அனுஷ்யா ராமஸ்வாமி, முனைவர் மைதிலி தயாநிதி, வழக்குரைஞர் மனுவல் ஜேசுதாசன், கவிஞர் சேரன், கவிஞர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். 
 
ஜேர்மன் கவியான ரெய்னெர் மாரியா ரில்கே அவர்களின் கவிதையிலிருந்து எடுத்த IN OUR TRANSLATED WORLD என்ற வரி நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. ’மிருகங்கள்கூட மாற்றமடைந்த ஓர் உலகில் சௌகரியமாக இருப்பதில்லை’ என்கிறார் கவி. இந்த நூலின் பொதுத்தன்மை மாற்றமடையும் உலகில் வாழும் மனிதர்களைப் பற்றியது. அவர்களின் அவலங்கள், இழப்புகள், ஏக்கங்கள் நூலின் அடிநாதமாக ஓடுகிறது. மாறும் உலகில் அமைதியின்மை மனிதனை அலைக்கழிக்கிறது.  
தேர்வு செய்த கவிஞர்களில் பெண்கள் 20; ஆண்கள் 58. தொகுப்பிலிருக்கும் அத்தனையும் மனதிலே தைத்து நிற்கும் கவிதைகள். 78 ஆணிகள்.
END
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta