இன்னொரு வாரம்

இன்னொரு வாரம்

 

அ.முத்துலிங்கம்

 

எச்சரிக்கை

 

வீட்டிலே பொருத்தியிருந்த அபாய மணி வேலை செய்யவில்லை. கதவு மணி, புகை மணி, யன்னல் மணி எல்லாமே வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வீட்டிலே நெருப்பு பிடிக்கலாம். திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லலாம். ஒருவித பாதுக்காப்பும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம்.

 

அபாய மணி கம்பனிக்கு முறைப்பாடு செய்தேன். அவர்கள் அதைத் திருத்துவதற்கு ஓர் ஆளை அனுப்பி வைத்தார்கள். என்னவோ தெரியவில்லை திருத்த வேலைக்கு அனுப்பும் மனிதர்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு சைஸில் இருப்பார்கள். கதவினால் நேராக நுழைந்து உள்ளே வரமுடியாது. பக்கவாட்டில் திரும்பித்தான் நுழைய முடியும்.

 

இரண்டு மணி நேரம் வேலை செய்தார். ஒருவித முன்னேற்றமும் இல்லை. ஒன்றில் இவர் வேலை பழகுபவராக இருக்கவேண்டும் அல்லது  எங்கள் வீட்டு அபாயமணி அதி சிக்கல்கள் நிறைந்ததாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். நிலவறைக்கு போவார். ஏதோவெல்லாம் வயர்களை சிக்கலெடுத்து திருத்தவேலை நடக்கும். மேலே ஏறிவந்து கதவை திறந்து பார்ப்பார். அது சத்தம் போடவேண்டும். ஆனால் போடாது. மௌனமாக இருக்கும்.

 

மனிதர் மறுபடி கீழே போவார். வயர்களை பிடுங்கி மாட்டுவார். இளைக்க இளைக்க படிகளில் ஏறிவந்து கதவைத் திறப்பார். அது சத்தம் போடாது. இப்படி கீழே போவதும் மேலே வருவதுமாக 10 தடவைக்கு மேலே இது நடந்தது. ஒரு முறை என்ன நடக்கிறதென்று நான் எட்டிப் பார்த்தபோது அவர் கதவுடன் பேசிக்கொண்டிருந்தார். உற்றுக் கேட்டபோது அது ஆங்கிலம் அல்ல, ஸ்பானிஷ் மொழி என்பது புரிந்தது. போகப்போக அவர் மேலே ஏறிவந்து கதவை ஸ்பானிய மொழியில் திட்டினார். பின்னர் மறுபடியும் கீழிறங்கினார்.

 

கடைசி முறையாக ’ஆசு ஆசு’ என்று பழையகால புகையிரத வண்டிபோல மூச்சு விட்டுக்கொண்டே  மேலே வந்தார். அவர் முகத்திலிருந்து வியர்வை பெருகி ஓடியது. மேலே கதவைத் திறந்ததும் அது சத்தமே போடவில்லை. மௌனமாக நின்றது. இவருக்கு கோபம் பொறுக்க முடியவில்லை. ஆங்கிலத்தில் திட்டித் தீர்த்தார். நம்பமாட்டீர்கள். அடுத்த நிமிடம் எல்லாமே சரியாகிவிட்டது.

 

வாத்திய இசை மேதை

 

மிகப் பிரபலமான வாத்திய இசைக்கலைஞர் ஒருவர் ரொறொன்ரோவுக்கு வருகை புரிந்தார். உலகம் முழுக்க அவரைத் தெரியும். வழக்கமாக ரொறொன்ரோவில் நடக்கும் இசைக்கச்சேரிகளுக்கு நான் போவதில்லை. இரண்டு மணிநேரம் பிந்தி தொடங்குவார்கள். அந்த இரண்டு மணி நேரம் எனக்கு முக்கியமானது.  நண்பர் இந்த இசைக்கச்சேரி சொன்ன நேரத்துக்கு தொடங்கும் என்று உத்திரவாதம் தந்ததால் சென்றேன்.

 

மண்டபம் நிரம்பியது. சரியாக ஆறு மணிக்கு விழா தொடங்கியது. தொடக்கத்திலிருந்து முடிவுவரை சினிமாப் பாட்டாக இசைத்து தள்ளினார். ஓர் உலகப் பிரபலமான கர்நாடக வாத்தியக் கலைஞர் ஒன்றிரண்டு கர்நாடக இசையை வாசித்திருக்கலாம். ஒன்றுமே கிடைக்கவில்லை. அடிக்கடி சபையோரிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ’சினிமா சினிமா’ என்று கத்தி சத்தம் போட்டார்கள். சினிமாவே கிடைத்தது.

 

ஒரு பெரிய இசை மேதை அப்படிச் செய்யலாமா? சினிமாப் பாட்டு கேட்டு பழகியவர்களுக்குகூட ஒன்றிரண்டு உயரிய இசையை தருவது அவர் கடமையல்லவா? ஆயிரம் பேரில் நாலு பேராவது கர்நாடக இசையின் பெருமையை உணர்ந்தால் அது லாபம்தானே. அவருக்கும் ஒரு குற்றவுணர்வு இருக்காது. இரண்டு நாள் ஆறாயிரம் மைல்கள் பயணம் செய்தது வெறும் சினிமா இசையை வாசிப்பதற்கா?

 

கோயில்களில் யானை இருக்கும். காட்டிலே பெரிய மரக்குத்திகளைக் காவும் யானையிடம் தேங்காயை கொடுப்பார்கள். அது தேங்காயை காவும். இன்னும் சிறந்த உதாரணம் வேண்டுமென்றால் அவிவேக பூரணகுருவும் பரமார்த்த சீடர்களும் கதையை ஞாபகப் படுத்தலாம். குருவின் பின்னே ஊசியை இரண்டு சீடர்கள் காவி வருவார்கள். சினிமாப்பாட்டை வாசிப்பதற்கு இசைமேதை எதற்கு? ஊசியை பனை மரக்கட்டையிலே குத்தி காவுவது போலத்தான்.

 

உண்மைச் சம்பவம்

 

நாஜி ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு யூதக் குடும்பம் பற்றிய உண்மைக் கதை. அவர்கள் பெரும் செல்வந்தர்களாக ட்ரெஸ்டன் என்ற நகரத்தில் வாழ்ந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபோது யூதர்களைக் கைது செய்து வதை முகாமில் போட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்  எப்படியோ சுவிட்சர்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டான். அங்கிருந்து பயணப்பட்டு அமெரிக்கா வந்து சேர்ந்தான். என்ன நேர்ந்தாலும்  படிக்கவேண்டும் என்பது அவனது பேரவா. அவனுக்கு அப்போ வயது 16. பல்கலைக்கழகத்து  அதிகாரியை சென்று நேரில் பார்த்து அனுமதி கேட்டான். அவர் பத்திரங்களைக் கேட்டார். பிறப்பு சாட்சி பத்திரம், பரீட்சை சான்றுகள், பள்ளிக்கூட பதிவுகள் இப்படி. நாஜிகளிடம் தப்பி ஓடியவன் உயிரைக் கையிலே பிடிப்பானா, பத்திரங்களைப் பிடிப்பானா? அவனிடம் ஒன்றுமே இல்லை.  அதிகாரி ஆவணம் ஒன்றும் இல்லாமல் அனுமதி தரமுடியாது என்று மறுத்துவிட்டார்.

 

இளைஞனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. அமெரிக்காவில் படிக்கவேண்டும் என்பது அவன் கனவு. அவன் துக்கத்தோடு திரும்பியபோது அறைச் சுவரில் மலிவான நகல் ஓவியம் ஒன்று மாட்டியிருந்ததைக் கண்டான். அதை உற்றுப் பார்த்துவிட்டு ‘ஓ, இது பிரபல ரஸ்ய ஓவியர் காண்டின்ஸ்கி வாஸிலி வரைந்தது. அதனுடைய நகல்’ என்றான். அதிகாரி திடுக்கிட்டுவிட்டார். அவருடைய அறைக்குள் வாரத்தில் ஆயிரம் பேர் வந்து போனார்கள். இத்தனை வருடத்தில் ஒருவருமே அந்த ஓவியத்தைப்பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. காண்டின்ஸ்கியின் ஓவியங்கள் உலகப் பிரபலமானவை. சமீபத்தில் ஒன்று 23 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.

 

அதிகாரி கேட்டார். ‘உனக்கு எப்படித் தெரியும். அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாயே?’ ‘இது நகல். ஏனென்றால் அசல் எங்கள் ட்ரெஸ்டன் வீட்டில் தொங்கியது.’   அந்த மாணவனுக்கு பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைத்தது. இன்று அவன் வயது 83. பெயர் ஹென்றி ஆர்னோல்டு. அமெரிக்காவின் அதிசெல்வந்தர்களில் ஒருவர். பெரும் ஈகையாளர். இந்தக் கதையை அவர் ஒரு நண்பருக்குச் சொல்ல அவர் எனக்கு சொன்னார்.  

 

மருத்துவ பரீட்சை

 

கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு தமிழ் மருத்துவரை சமீபத்தில் சந்தித்தேன். இவர் இங்கிலாந்தில் மருத்துவராக பல வருடங்கள் வேலைசெய்து பின்னர்  20 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர். அவரிடம் நான் கேட்டேன். ‘நீங்கள் கனடா வந்த புதிதில் நிலைமை எப்படி இருந்தது. திரும்பவும் மருத்துவப் பரீட்சை எழுத வேண்டி நேர்ந்ததா?’ அவர் சொன்ன பதில் இது.

 

’அப்பொழுதெல்லாம் இங்கே பெரிதாக பரீட்சைகள் இல்லை. நான் ஏற்கனவே லண்டனில் மருத்துவராக வேலை பார்த்திருந்தேன். ஒரு பரீட்சகர் இருப்பார். அவர் முன்னே ஒரு நோயாளியை நான் சோதித்து நோயை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை முறையை சொல்லவேண்டும். அவ்வளவுதான். பரீட்சை தினம் அன்று நான் அறைக்குள் நுழைந்தேன். ஒரு பெண்மணி அழகாக உடை உடுத்தி காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு தன்னுடைய கைப்பையை தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். இன்னொரு பெண்மணி அவருக்கு பக்கத்தில் கலைந்த தலையும், கசங்கிய ஆடையுமாக அமர்ந்திருந்தார். நான் கலைந்த தலைப் பெண்மணியிடம் நோய் விவரங்களைக் கேட்டு நோட்டுப் புத்தகத்தில் எழுத ஆரம்பித்தேன். அவர் பெயர். அவர் வயது.  நோயின் அறிகுறிகள் என்று கேட்டுக்கொண்டு போக அழகாக உடை உடுத்திய பெண் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தார். அவர்தான் நோயாளி. கலைந்த தலை பெண்மணி என் பரீட்சாதிகாரி. எப்படியோ சமாளித்து நோயாளிப் பெண்மணியை சோதித்து சரியாக நோயை கண்டு பிடித்து சிகிச்சை முறையையும் சொன்னேன். நான் பரீட்சையில் பாஸ். அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் அந்தப் பரீட்சாதிகாரியின் பெருந்தன்மை என்னை வியப்புக்குள்ளாக்கும்.’

 

 

தோல் தா

 

வைதேகி ஹெர்பர்ட் புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஹவாயிலிருந்து எனக்கு அனுப்பியிருந்தார். அது இன்று வந்தது. புறநானூறில் எந்தப் பாடலையும் படிக்கலாம். சும்மா புத்தகத்தை திறந்தேன். புறநானூறு பாடல் 300. பாடியவர் அரிசில் கிழார்.

 

தோல் தா தோல் தா என்றி, தோலொடு

துறுகல் மறையினும் உய்குவை போலாய்;

நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி

அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்

பேரூர் அட்ட கள்ளிற்கு

ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

 

’கேடயம் தா, கேடயம் தா’ என்று தேடுபவனே. நீ எங்கே சென்றும் ஒழிய முடியாது. நீ கொன்றவனின் தம்பி உன்னை கொல்வதற்கு வந்துகொண்டிருக்கிறான். அகல் விளக்கில் குன்றிமணிபோல சுழலும் கண்கள் அவனுக்கு. நல்ல கள் இருக்கும் வீட்டை தேடுவதுபோல வெறிபிடித்து உன்னை தேடுகிறான்.

 

போரிலே கொல்லப்பட்டவனின் தம்பி கொன்றவனை தேடி அலைகிறான். கொன்றவனோ தன்னைக் காப்பாற்ற கேடயத்தை தேடுகிறான். என்ன அருமையான காட்சி. பாடலைப் படிக்கும்போதே அது கண்முன்னே விரிகிறது. இதிலே இரண்டு உதாரணங்கள் பிரமிக்க வைப்பவை. அகல்விளக்கில் ஒளிரும் குன்றிமணிபோல கண்களை பயங்கரமாகச் சுழற்றிக்கொண்டே தேடுகிறான். நல்ல கள் இருக்கும் இடத்தை போதை அடிமை எத்தனை வெறியோடு தேடுவானோ அதேபோல கொலைகாரனை தம்பி தேடுகிறான். கொன்றவன் கையில் ஒரு கேடயம் இருந்தால் தப்பிவிடுவான். ’கேடயம் தா, கேடயம் தா’ என்று அவன் அலறுகிறான்.

 

உடனே நினைவுக்கு வருவது சேக்ஸ்பியரின் ரிச்சார்ட் III நாடகம். 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட ரிச்சார்ட் மன்னன் போரில் குதிரையை இழந்து களத்தில் தன்னந்தனியனாக நிற்கிறான். ஒரு குதிரை கிடைத்தால் அவன் தப்பிவிடுவான். ‘ஒரு குதிரை, ஒரு குதிரை. சாம்ராஜ்யத்துக்கு ஒரு குதிரை.’ என்று அலறுகிறான். அந்தக் காட்சியும் புறநானூறு காட்சியும் ஒன்றேதான். புறநானூறு பாடப்பட்டு 1600 வருடங்களுக்கு பின்னர் வந்த சேக்ஸ்பியரும் அரிசில் கிழார் போலவே சிந்தித்திருக்கிறார். என்ன ஒற்றுமை!

 

அப்படியே ஆகட்டும்

 

இன்று ஒரு தகவல் படித்தேன். சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா பற்றியது. இவர் சிறுமியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அடிக்கடி கட்டளை இடுவார். ஸ்டாலின் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அதை நிறைவேற்றுவாராம். இந்தப் பெண் வளர்ந்த போது இவருடைய உள்நாக்கை அகற்றவேண்டி ஓர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆஸ்பத்திரியில் ஒரு கம்யூனிஸ்ட் இந்தியரும் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடைய பெயர் பிரஜேஷ் சிங். இவர்கள் இருவரும் ரவீந்திரநாத் தாகூர் கவிதைகளைப் படித்து விவாதித்து மகிழ்ந்தார்கள். அவர்களுக்கிடையில் காதலும் மலர்ந்தது. இந்தச் செய்தி அப்பொழுது பிரிமியராக இருந்த அலெக்சேய் கோசிஜினுக்கு எட்டியது. அவர் ஸ்வெட்லானாவை அழைத்து அறிவுரை வழங்கினார். ‘இந்தக் காதலை மறந்துவிடு. இந்துக்கள் மனைவிகளை மோசமாக நடத்துவார்கள்.’ அந்த அறிவுரையை ஸ்வெட்லானா ஏற்றுக்கொண்டாரா தெரியாது. அவர்கள் ரகஸ்யமாக திருமணம் செய்துகொண்டார்கள் என்றுதான் இன்றைக்கும் சிலர் நம்புகிறார்கள்.

 

பிரஜேஸ் சிங்குக்கு மூக்கினுள்ளே விழுதுபோல சதை வளரும் வியாதி. அந்தக் கால வழக்கப்படி மூக்குச் சதையை அட்டையை கடிக்க வைத்து சிகிச்சை செய்தார்கள். சிங் இறந்துவிட்டார். அட்டை தப்பியது. இறக்க முன்னர் சிங் அட்டையை கொல்லவேண்டாம் என்று வேண்டியிருக்கிறார். மிகுந்த இரக்க சுபாவம் உடையவர் சிங். அவருடைய சாம்பலை கங்கையில் கரைக்கவேண்டும் என்று அனுமதி பெற்று ஸ்வெட்லானா இந்தியா பயணமானர். அஸ்தியை கரைத்தபின்னர் அங்கே அமெரிக்க தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார். அவர்கள் திகைத்துவிட்டார்கள். ஸ்டாலினுக்கு ஒரு மகள் இருப்பது அவர்களுடைய உளவுப் பிரிவுக்கு தெரியாது. தஞ்சம் கிடைத்து அமெரிக்கா போனார்.

 

ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் பிரபலமாகிவிட்டார். நூல்கள் எழுதி நிறைய சம்பாதித்தார். அவர் அடிக்கடி கூறிய புகழ்பெற்ற வாசகம். ‘ரஸ்யர்கள் ஒருகையால் சந்திரனை தொட முயற்சிக்கிறார்கள். மறுகையால் 100 வருடங்களுக்கு முன்னர் செய்ததுபோல உருளைக்கிழங்கை கிண்டி எடுக்கிறார்கள்.’ அவருடைய புது வாழ்க்கை நிலைக்கவில்லை. வரவிலும் கூடிய செலவு. முதுமையில் ஏழையாக முதியோர் காப்பகத்தில் வாழ்ந்தார். ஒரு முறை அவருக்கு புத்தகத் தட்டு தேவைப்பட்டது. ஒரு வீட்டில் பழைய சாமான்கள் விற்றார்கள். அங்கேயிருந்த பழைய புத்தகத்தட்டை அவருக்கு சொற்பவிலைக்கு தர சம்மதித்தார்கள். ஸ்வெட்லானா சொன்னார். ‘என்னிடம் 25 டொலர் மட்டுமே இருக்கிறது. இதை வைத்து இந்த மாதத்தின் மீதி நாட்களை நான் சமாளிக்கவேண்டும். அடுத்த மாதம் பணம் தரமுடியுமா?’ அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

 

நவம்பர் மாதம் அவருக்கு பிடிக்காது. ஒவ்வொரு வருடமும் அந்த மாதம் வரும்போது அச்சப்படுவார். சிறுவயதாயிருந்தபோது நடந்த சம்பவங்களை நினைத்துப்பார்ப்பார். அவருடைய தந்தை பின்னாளில் சோவியத் யூனியனின் தலைவரானார். ஹிட்லரை துரத்தியடித்ததோடு பெர்லினையும் கைப்பற்றினார். சோவியத் யூனியனை உலகத்தின் இரண்டாவது பலமான தேசமாக மாற்றினார். இரும்புத்திரை விழக் காரணமாயிருந்தார். ஒரு நாளில் 500 பக்கங்கள் வாசித்து தள்ளக்கூடிய திறமைசாலி அவருடைய அப்பா. ’அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்’ என சிறுவயதில் ஸ்வெட்லானா இட்ட கட்டளைகளை நிறைவேற்றியவர். கடைசிக்காலத்தில் ஸ்வெட்லானா சொல்வதைக் கேட்க ஒருவருமே இருக்கவில்லை. 85வது வயதில் ஒரு நவம்பர் மாதம் தன்னந்தனியாக இறந்துபோனார்.

 

 

 

படித்தது

 

சமீபத்தில் நான் படிக்கத் தொடங்கிய புத்தகம் In The Light of What We Know என்பது. மின்நூல் என்றபடியால் வேகமாக பக்கங்களைத் திருப்பி படிக்கமுடியாது. இன்னும் 100 பக்கத்தைகூட தாண்டவில்லை. புத்தகத்திலே நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

 

ஆப்கானிஸ்தான் படைக்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் இடையில் நடந்த முதல் யுத்தம் 1842ல் முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் படைக்கு தலைமை தாங்கியவர் ஜெனரல் எல்பின்ஸ்டன்.  அவருடைய படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு திரும்பியபோது கடுமையான பனிக்குளிர். பிரிட்டிஷ் படைவீரர்கள் முழங்கால் மட்டும் புதையும் பனியில் ஒடுங்கிய மலைவழிப்பாதையில் ஒருவர் பின் ஒருவராக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஆப்கானிஸ்தான் படை மறைந்திருந்து ஒவ்வொருவராக கொன்று தீர்த்தது. 16,000 பேர் இறந்தபின்னர் ஒரேயொருவர் தப்பினார். அவருடைய பெயர் வில்லியம் பிரைடன். தலையிலே பெரிய வெட்டுக் காயத்துடன் அவர் தன்னந்தனியாக ஜலாலபாட்டில் உள்ள பிரிட்டிஷ் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருமித்து கேட்ட கேள்வி ’எங்கே பிரிட்டிஷ் ராணுவம்?’ வில்லியம் பிரைடனின் புகழ்பெற்ற பதில் இதுதான். ‘நான்தான் ராணுவம்.’

 

END

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta