சின்ன ஏ, பெரிய ஏ

சின்ன ஏ, பெரிய ஏ

 

அ.முத்துலிங்கம்

 

’இன்னும் எப்வளவு நேரம்?’ என்றார். ’மூன்று நிமிடம்’ என்றேன் நான். காசாளரிடம் சென்று பணத்தை கட்டிவிட்டு வந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் அவசரமில்லை. வீட்டிலே போய்க் கயிற்று ஏணையில் படுப்பதுதான் வேலை. அவ்வப்போது வருவார். இன்று 12 அடி நீளம், 6 அங்குலம் அகலம், 2 அங்குலம் தடிப்பான மரம் வேண்டுமென்றார். அவர் கொடுத்த அளவுக்கு மரத்தை வெட்டும்வரை காத்திருந்தார். ’இன்னும் எவ்வளவு நேரம்?’ ’ஒரு நிமிடம்’ என்றேன். மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் சமுத்திரத்தை பார்த்திருக்கும் ஒரு சிறிய நாட்டில் இந்தச் சம்பாசணை நடந்தது.

 

அவருடைய பெயர் ஜோசப் மடிங்கோ. கழுத்தில் தொடங்கி கால்வரை நீண்ட அங்கி அணிந்திருந்தார். வயிறு முன்னுக்கு கொஞ்சம் தள்ளிக்கொண்டு நிற்பதால் அவருடைய முன்பக்க உடை தூக்கி நின்றது. கால்களில் பிளாஸ்டிக் செருப்பு. தலையிலே மணிகள் வைத்து வன்னவேலை செய்த தொப்பி. சிறிய கட்டட வேலைகளுக்கு ஒப்பந்தம் எடுப்பார். வீடுகளும், களஞ்சியங்களும் கட்டிக் கொடுப்பார். ஒன்றிரண்டு மரம் தேவைப்படும்போது வந்து வாங்குவார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம்.

 

ஒரு தள்ளுவண்டியில் அவரை நோக்கி மரம் வந்தது. இதை எப்படி கொண்டுபோவார் என நான் யோசித்தபோது அத்தனை நேரமும் நிலத்திலே குந்தியிருந்த ஒரு கறுத்த சிறுவன் எழுந்து நின்றான். அவனுக்கு 11 வயது இருக்கும். கிழிந்த அரைக்கால் சட்டை. புழுதி படிந்த சுருட்டை மயிர். இரண்டுபேர் மரப்பலகையை தூக்கி அவன் தலையில் வைத்தார்கள். கழுத்து அரை அங்குலம் கீழே இறங்கியது. மரத்தின் புவியீர்ப்பு மையம் தலையின் நடுவில் வரும்படி கொஞ்சம் சரி செய்தான். பையன் முன்னே நடக்க இவர் பின்னே தொடர்ந்தார். சட்டென்று திரும்பிய மடிங்கோ என்னிடம் ஓடிவந்து  ’கட்டாயம் என்வீட்டுக்கு ஒருமுறை வரவேண்டும்’ என்று அழைக்க மறக்கவில்லை. அது ஐந்தாவது அழைப்பு என்று நினைக்கிறேன்.

 

இரண்டு வாரம் போயிருக்கும். ஜோசப் மடிங்கோ தன் காரை ஓட்டிக்கொண்டு என் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். நேரம் ஐந்து மணி இருக்கும். ’இன்று நிச்சயம் என் வீட்டுக்கு வரவேண்டும். கார் கொண்டுவந்திருக்கிறேன்’ என்றார். ஆப்பிரிக்க சூரியன் மறைவதற்கு முன்னால் அதி வெப்பத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.. மடிங்கோவோ குளிர்கால ஆடையில் என் முன்னால் உயரமாக நின்றார். அவரிடம் சொல்வதற்கு உடனடியாக ஒரு சாக்கும் கிடைக்கவில்லை. அவருடன் புறப்பட்டேன்.

 

எனக்கு பழக்கமில்லாத வீதிகளில் கார் வளைந்து வளைந்து ஓடியது. சிறுவர் சிறுமியர் கும்பலாக மண் நிற சீருடை அணிந்து எதிரில் காணப்பட்டார்கள். சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கவேண்டும். புத்தகங்களை தலையில் சுமந்தவண்ணம் நண்பர்களுடன் பேசுவதும், சிரிப்பதும், ஒருவருக்கொருவர், அடிப்பதும்  விளையாடுவதுமாக வீதியை கடந்தார்கள். கார் காட்டுப் பகுதியை கடந்தபோது ரோட்டு கல்லு வீதியாக மாறி பின்னர் அதுவும் சுருங்கியது. ஓர் இடத்தில் இனிமேல் கார் போகமுடியாது என்று தோன்றியது. மடிங்கோ சட்டென்று காரை விட்டு இறங்கி நடக்க நான் பின் தொடர்ந்தேன்.

 

தூரத்தில் ஆறு ஒன்று ஓடியது. எங்கே இவர் போகிறார், ஆட்களையே காணவில்லை என நான் நினைத்த சமயம் ஒரு பெண் தோன்றினாள். தலையிலே காவிய தட்டில் வாழைப்பழங்கள் நிரையாக அடுக்கியிருந்தன. இரவுச் சந்தையில் விற்பதற்கு போகிறாள் போலும். முதுகிலே கட்டியிருந்த  குழந்தை. அது  பாட்டுக்கு கழுத்து கீழே சரியத் தூங்கியது. மடிங்கோ பெண்ணிடம் என்னவோ கேட்டார் அதற்கு அவள் கையை ஒரு பக்கமாக நீட்டிக் காட்டி அவர்கள் மொழியில் ஏதோ சொல்லிவிட்டு அகன்றாள். தன் வீட்டுக்கு போவதற்கே இவர் வழி கேட்கிறாரே என்று எனக்கு நடுக்கம் பிடித்தது. என் மனதில் ஓடியதை படித்த அவர் சொன்னார் ‘அந்தக் காணி விலைக்கு வருகிறது. நான் வாங்கப் போகிறேன்.’ ’எதற்காக?’ என்று கேட்டேன். ’சினிமாக் கொட்டகை கட்டத்தான்’ என்றார்.

 

ஆப்பிரிக்காவில் சினிமாவில் நல்ல லாபம் எடுக்கலாம். இந்திய சினிமாக்கள் வருடக் கணக்காக ஓடியிருக்கின்றன. சுனில் டத்தும், நர்கீஸும் நடித்த மதர் இந்தியா படத்தை பார்த்து அழுதபடியே சனங்கள் வெளியேறியதை இப்பொழுதும் நினைவுகூருவார்கள். ’அவாரா’ படம் பலவருடங்கள் தொடர்ந்து தியேட்டர்களில் ஓடியது. திடீரென்று ’நீங்கள் திலிப் குமாரைச் சந்தித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். வைஜயந்திமாலாவுடன் அவர் நடித்த ’கங்கா யமுனா’ படம் அப்பொதுதான் அங்கே வந்து ஓடிக்கொண்டிருந்தது. ’இல்லை. ஆனால் அவர் வீடு என் வீட்டுக்கு எதிரில்தான்’ என்றேன். சினிமா சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் பொய் சொன்னால்தான் ஆப்பிரிக்காவில் மதிப்புடன் வாழமுடியும். அவர் கொஞ்சமும் ஆச்சரியப்படாமல் ’ராஜ்கபூர்?’ என்றார். ’அவர் வீடு நாலு வீதி தள்ளி இருக்கிறது’ என்று சொன்னேன்.

 

இன்னும் வேறு கேள்விகள் கேட்பார் என நினைத்தேன். ஆனால் அதற்கிடையில் வீடு தூரத்தில் தெரிந்தது. அவருடைய மூன்றாவது மனைவியின் வீடு அது என்று சொன்னார். ’மூன்றாவது மனைவியா? அது எப்படி? நீங்கள் கிறிஸ்தவர் அல்லவா?’ என்றேன். ’இல்லை என்னுடைய அம்மாதான் கிறிஸ்தவர். அப்பா முஸ்லிம். அவர் எனக்கு ஐந்து வயது நடக்கும்போதே இறந்துபோனார். என் அம்மா என்னையும் தம்பியையும் வளர்க்க தனியாளாகப் பட்டபாட்டை இன்றைக்கும் என்னால் நினைக்க முடியாது. என் சிறுவயது ஞாபகம் எல்லாம் பசிதான்.  அப்பொழுது பலதடவை நினைத்திருக்கிறேன் என் அப்பா இன்னும் இரண்டு பெண்களை மணமுடித்திருந்தால் அம்மா தனியாக கஷ்டப்பட்டிருக்க மாட்டாரே. என்று.  அம்மா இரண்டு கால்களில் நின்றதை நான் காணவே இல்லை. முழங்காலில் பிரார்த்திப்பார் அல்லது ஒரு பணக்கார வீட்டு தரையை முழங்காலில் உட்கார்ந்து துடைப்பார். அவர் வாழ்க்கை முழுக்க முழந்தாளில்தான் கழிந்தது.  நான் அந்த வயதில் ஒரு சபதம் எடுத்தேன். பசி என்னை நினைவுபடுத்தக்கூடாது. நான்தான் பசியை நினைவுபடுத்துவேன்.’

 

மூன்றாவது மனைவி அழகியாகவும் இளமையானவராகவும் இருந்தார். முடியை சிறு சிறு பின்னல்களாகப் பின்னி தொங்கவிட்டிருந்தார். நனைந்த நிலக்கரி போன்ற கண்கள். பளீரென்ற வெள்ளையான பற்கள். புத்திசாலித்தனமாக எனக்கு அவரை மடிங்கோ முதலிலேயே அறிமுகம் செய்துவைத்து விட்டபடியால் நான் அவரை மகள் என்று தப்பாக நினைக்கவில்லை. அவர் லப்பாவை இடையிலே சுருக்கமில்லாமல் கட்டியிருந்தார். ’என்ன வேண்டும்?’ என்று கேட்டார் ஆனால் நான் பதில் சொல்ல முன்னரே திரும்பிவிட்டார். இறுக்கமான லப்பாவில் அவருடைய பின்பகுதி கலிலியோவின் பெண்டுலம் போல இடமும் வலமும் அசைந்தாடியது.

 

ஆப்பிரிக்க வீடுகளில் கோப்பி தேநீர் கிடைக்காது. பாம் மரத்தில் எடுக்கும் வைன் உண்டு. கோக் அடுத்தது. மூன்றாவது ஸ்டார் பியர். வைன் குடிக்க  நல்லதுதான் ஆனால் சுத்தமில்லாத தண்ணீர் கலந்து விடுவார்கள் அதனால் ஆபத்தானது. கோக் ருசியாயிருக்கும். பற்களால் கடித்து மூடியை திறப்பார்கள். ஸ்டார் பியர்தான் உத்தமமானது. விரலால் திறக்கலாம். அதுதான் வந்தது. நான் ஒவ்வொரு மிடறாக பருகத் தொடங்கினேன்.

 

திடீரென்று எதிர் திசையில் ஏதோ அசைந்தது. கறுத்த பூதாகரமான உருவம் ஒன்று எழுந்து நின்றது. அத்தனை நேரமும் அந்த உருவத்தை என் கண்கள் காணவில்லை. ’என் மாமனார்’ என்றார் மடிங்கோ. உருவம் அசைந்து எனக்கு கிட்ட வந்தது. நான் கைகளை நீட்டினேன். அவர் கையை பிடிக்காமல் என்னை அணுகி கட்டிப்பிடித்தார். ஆப்பிரிக்கக் கண்டமே என்னைக் கட்டிப்பிடித்ததுபோல எனக்கு இருந்தது. அவர் உடலுக்குள் நான் மறைந்துபோனேன். ‘அரசாங்கத்தில் பெரிய வேலையில் இருந்தார். ஆனால் வேலை பிடிக்காமல் விட்டுவிட்டார்’ என்றார் மடிங்கோ.

‘ஏன் வேலையை விட்டார்?’ ஆப்பிரிக்காவில் ஒருவரும் அரசாங்க வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வருவதில்லை.

‘ஒரே வேலையை திருப்பி திருப்பி செய்ய பிடிக்கவில்லை. அலுத்துப்போனதாம்.’

‘என்ன வேலை?’

‘தினம் அலுவலகத்துக்கு வரும் கடிதங்களின் விவரங்களை ஒரு நாளேட்டில் எழுதிவைப்பது.

‘அவ்வளவுதானா?’

அவ்வளவுதான்.’

‘சரி. இப்ப என்ன வேலை செய்கிறார்.’

‘வேலை தேடுகிறார். அதுதான் டைப்பிங் தானாகக் கற்கிறார்.’

 

அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு மேசையில் சதுரமான அண்டர்வுட் தட்டச்சு மெசின் இருந்தது. அதற்குமுன் மாமனார் உட்கார்ந்து டக் டக் என அடிக்கத் தொடங்கினார். பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் மாறி மாறி அடித்தார். ஒரு விசையை அழுத்தியதும் சின்ன எழுத்து பெரிய எழுத்தாக மாறிவிடும். அந்த வரி முடிவுக்கு வந்ததும் டிங் என்ற இனிமையான ஒலி எழும்பும். பின்னர் அடுத்த வரிக்கான ஆயத்தம் நடக்கும்.

 

பியரை முழுவதுமாக குடிக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு மரியாதைக்காக இரண்டு மிடறு குடித்துவிட்டு புறப்படுவதுதான் திட்டம். நாடகத்தில் பாத்திரங்கள் வருவதுபோல ஒவ்வொன்றாக உருவங்கள் தோன்றின. படுக்கை விரிப்பை திரைச்சீலையாக மாற்றி மறைத்த கதவுக்கு பின்னே ஒருவர் என்னையே பார்த்தபடி  கம்புபோல நேராக நின்றார். அவருக்கு 70 வயது இருக்கலாம். கடுமையான எலும்பைக் கடிப்பதுபோல அவர் முகம் கோணலாயிருந்தது. சிரிப்பாக இருக்கலாம். என் மீது எரிச்சலோ தெரியவில்லை. போர்க்களத்தில் எதிரியிடம் சரணடையப் போவதுபோல இரு கைகளையும் உயர்த்தியபடி மெதுமெதுவாக என்னை நோக்கி முன்னேறினார். மடிங்கோ என் பக்கம் குனிந்து திருடர்கள் பேசுவதுபோல ரகஸ்யக் குரலில் ‘என் மாமனாரின் தகப்பன். கண்பார்வை இல்லை’ என்றார். கிழவர் உடுப்பில் துளை மாறி பொத்தானை மாட்டியிருந்தார்.. வாயின் இருபக்கமும் துப்பல் காய்ந்து ஒட்டியிருந்தது. அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். ’அவருக்கு இரண்டு வருடமாக ஆற்று நோய்’ என்றார் மடிங்கோ. ‘ஆறுகளுக்கு அண்மையில் வாழும் கறுப்பு இலையான் பரப்பும் நோய். இலையான் கடித்ததும் கிருமி ரத்தத்தில் கலந்து மூளைக்குப் போய் கண்பார்வையை செயலற்றதாக்கிவிடும்’ என்றார்.

 

கிழவர் வெள்ளைக்காரரிடம் படித்து ஆசிரியராக வேலை பார்த்தவர். ‘என் சிறுவயதில் இந்தக் கிராமத்தில் பலருக்கு இந்த நோய் வந்ததைக் கண்டிருக்கிறேன். எனக்கு வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை’ என்றார்.’ மடிங்கோ சொன்னார். ’ஆற்றிலே இருந்து பரவும் நோய் இது. நாம்தான் ஆற்றுக்கு ஏதாவது செய்யவேண்டும்.’ ’அது எப்படி முடியும்?  500 மில்லியன் ஆண்டுகளாக ஆறு இங்கே ஓடுகிறது. மனிதனுடைய வயது 200.000 ஆண்டுகள் மட்டுமே’ என்றார் கிழவர். அவர் மெள்ள மெள்ள நடந்து புறப்பட்ட இடத்துக்கு ஊகமாகத் திரும்பினார்.

 

பியர் கிளாசை மேசையில் வைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். இன்னும் பல முகங்களும் கால்களும் திரைச்சீலையின் பின்னால் தெரிந்தன. ஒரு நாளில் மூன்று புது அறிமுகம் போதும் என்று பட்டது. எழுந்து நின்றேன். ’புறப்பட்டு விட்டீர்களா?’ என்றார் மடிங்கோ. மாமனார் உடலைத் தூக்கிக்கொண்டு மறுபடியும் என்னை நோக்கி வந்தார். நான் கிலி பிடித்து பின்னுக்கு நகர்ந்தேன். என்னை கட்டிப்பிடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். அவர் தன் தலை மயிரில் குத்திவைத்த பேனாவை எடுத்து ஒரு கடித உறையில் என்னுடைய மூன்று எழுத்துப் பெயரை இரண்டு பிழைகளுடன் எழுதி என்னிடம் நீட்டினார். நான் ’என்ன?’ என்று அலறினேன். மடிங்கோ பதில் சொன்னார். ’அது வேலைக்கான விண்ணப்பம்.’. ’யாருக்கு? ’மாமனாருக்குத்தான்.’. ’என்ன வேலை?’ ’என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. அவர் கடுமையான உழைப்பாளி. சொன்ன வேலையை கிரமமாக முடித்துக் கொடுப்பார். நீங்கள் தயவு செய்யவேண்டும்.’ நான் கடித உறையை வாங்கி பைக்குள் வைத்தேன். எனக்கு பின்னால் விசுவாசமான மரங்கொத்தியின் விடாமுயற்சிபோல டக் டக் என்ற ஒலி மீண்டும் கேட்கத்தொடங்கியது.

 

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக விண்ணப்பத்தை மறந்துபோனேன். ஆனால் மடிங்கோவின் மூன்றாவது மனைவியின் நிலக்கரி கண்கள் நினைவுக்கு வந்தன. அவரும் ஒரு காலத்தில் கண் பார்வையை இழப்பாரா? யாரால் சொல்லமுடியும். இரண்டு நாள் கழிந்தது. அலுவலகத்துக்கு மடிங்கோ அவசரமாக வந்தார். ’விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைக்க மறந்துவிட்டோம். பிறப்புச் சாட்சிப் பத்திரம், கல்வித் தகைமைகள், நன்னடத்தை கடிதங்கள் எல்லாம் இருக்கின்றன. அவற்றை நகல் எடுத்து இன்னும் இரண்டே நாளில் கொண்டுவருகிறேன்’ என்றார். அப்பொழுதெல்லாம் நகல் எடுக்கும் மெசின் அரிதிலும் அரிது. தலைநகரத்தில் ஒன்று இருந்தது. இவர் அங்கே போய்த்தான் நகல்கள் எடுத்து வரவேண்டும். அவர் செயல்படும் முறையை பார்த்தபோது மனிதர் வேலை உறுதி என்று நினைத்துவிட்டார் என்ற கலக்கம் எனக்கு உண்டானது.

 

அன்று மாலை வீட்டிலே தேநீர் அருந்தும்போது திடீரென்று மடிங்கோவின் மாமனாரின் நினைவு வந்தது. அவர் தட்டச்சு மெசினுக்கு முன் முக்காலியில் உட்கார்ந்த சமயம்  முக்காலி முற்றிலும் மறைந்துபோனது ஞாபகம் வந்து மெல்லச் சிரித்தேன். எதிரில் உட்கார்ந்திருந்த என் மனைவி ‘என்ன சிரித்தீர்கள்?’ என்றார். நான் ‘இல்லையே. காற்றடித்ததே. அதாயிருக்கும்’ என்றேன்.

 

ஒரு வாரமாகிவிட்டது. விண்ணப்பத்தை திறந்து பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அன்று. சாவகாசமாக உட்கார்ந்து கடித உறையை பிரித்து விண்ணப்பத்தை முதன்முதலாக வெளியே எடுத்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவி இரவு உணவு சாப்பிட அழைத்தார். உலகத்து மனைவியர்போல ஏதாவது வேலை ஆரம்பிக்கும்போது அவர் அப்படி செய்வது வழக்கம். விண்ணப்பம் இரண்டு பக்கங்களில் கைகளால் மைப்பேனாவினால் எழுதப்பட்டிருந்தது. அவருடைய பெயர், முகவரி, வயது, படிப்பு என்று நிரையாக விவரங்கள் தந்திருந்தார். உயரம் கொடுத்ததை மன்னிக்கலாம். எடையையும் பெரிய எழுத்தில் எழுதியிருந்தார். விண்ணப்பத்தின் பின்பக்கத்தை பார்த்தேன். ஆங்கிலத்தில் சின்ன ஏ, பெரிய ஏ என்று தாள் முழுக்க டைப் அடிக்கப்பட்டிருந்தது. அடுத்த தாளைப் பார்த்தேன். அங்கேயும் சின்ன ஏ பெரிய ஏ என்று முழுத்தாளையும் நிரப்பி  அச்சடித்திருந்தது. 26 ஆங்கில எழுத்துக்களில் முதல் அட்சரமான ’ஏ’ என்ற எழுத்துக்கு திறமான அப்பியாசம் நடந்திருப்பது தெரிந்தது. தட்டச்சு பயிற்சிக்கு வைத்திருந்த தாள்களை மிச்சம் பிடிப்பதற்காக விண்ணப்பத்தை அந்த தாள்களின் பின்னால் எழுதி அனுப்பியிருக்கிறார்.

 

மனைவி காத்திருந்தார். ஒருவாரமாகியும் சான்றிதழ் நகல்கள் வரவில்லை. நான் காத்திருந்தேன். மடிங்கோவின் சதுரமான அண்டர்வுட் தட்டச்சு மெசினின் மீதி 25 எழுத்துக்களும் தங்கள் முறைக்காக காத்திருந்தன.

 

END  

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta