எழுத்தாளரும் வாசகரும்

 

 

                                       எழுத்தாளரும் வாசகரும்

                                         அ.முத்துலிங்கம்

 

எழுத்தாளரும் வாசகரும் வெவ்வேறு ரயில்களில் பயணிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில். அவர்கள் அநேகமாக சந்திப்பதேயில்லை.

அஞ்செலாவின்  சாம்பல் (Angela’s Ashes) நாவல் சிலகாலத்துக்கு முன் வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. இதை எழுதியவர் ஃபிராங் மக்கோர்ட் என்ற அமெரிக்கர்.  66 வயதில் அவர் எழுதிய முதல் நாவல். இதற்கு புலிட்ஸர் பரிசு கிடைத்து அவர் உலகப் பிரபலமானார். நகைச்சுவையாக எழுதுவார், ஆனால் சிடுசிடுக்காரர். அவரை நான் சந்தித்திருக்கிறேன்.  ஒரு பத்திரிகைக்காரர் மக்கோர்ட்டை பேட்டி கண்டார்.

‘உங்களுடைய Angela’s Ashes புத்தகத்தை உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பாடப்புத்தகமாக வைத்திருக்கிறார்கள். தெரியுமா?”

‘நல்லது. தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் அதில் பரீட்சை வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை ஆயுதம் அல்ல; மகிழ்ச்சியூட்டும் புத்தகம்.’

‘உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப் படிக்கக்கூடாது. நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கவேண்டும்.’

‘அப்படியா? அதைக் கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள.”

எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலை. இதை மக்கோர்ட் பல தடவைகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

 

ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற எழுத்தாளர் ’இரண்டு பகட்டுக்காரர்கள்’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறார்.  கோர்லி தன் காதலியை அழைத்துக்கொண்டு உல்லாசமாக பொழுதுபோக்கப் போகிறான். அவனுடைய நண்பன் காத்திருக்கிறான்.  இவர்களுடைய தொழில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பெண்களைக் காதலித்து அவர்களை எசமானிகளிடம்  திருடச்சொல்லி வரும் அந்தப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான். கோர்லி தன் காதலியுடன் சென்ற பின்னர் நன்பன் தனிமையை போக்க ஓர் உணவகத்துக்குள் நுழைகிறான். மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை சாப்பிட்டு  இஞ்சிச் சோடா குடிக்கிறான்.

இந்தக் கதையை விமர்சித்து வாசகர் ஒருவர் இப்படி எழுதுகிறார். ’பட்டாணி பச்சை நிறத்தில் இருக்கிறது. இஞ்சிச் சோடாவின் நிறம் செம்மஞ்சள். இவை அயர்லாந்து கொடியின் வர்ணங்கள். அயர்லாந்தையும் அதன் வறுமையையும் கோடிகாட்டுவதற்குத்தான்  இந்தச் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது.’

 நம்ப முடிகிறதா?

நான் யோசித்துப் பார்த்தேன். இலங்கையில் நடப்பதாக இப்படி ஒரு கதையை எழுதியிருக்கலாம். ‘இன்று மங்களா உணவகத்துக்குப் போனேன். நல்ல பசி. மதிய உனவு நேரம். வாழை இலையில்   மஞ்சள் சோறு பரிமாறினார்கள். அதற்குமேல்  குழம்பு ஊற்றினார்கள். சாப்பிட்டு முடித்த பின்னர் orange barley குடித்தேன்.’  உணவில் பச்சை, மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள் எல்லாமே வந்துவிட்டன. தேசியக்கொடியின் வர்ணங்கள். அப்படியாயின் இலங்கையின் வறுமையை கோடிகாட்டுவதற்கா அந்தச் சம்பவம் எழுதப்பட்டது.

ரஸ்ய எழுத்தாளர் கோகொல் எழுதிய ஒரு கதை. மூக்கு (Nose) என்று பெயர். ஒருவருடைய மூக்கு காணாமல் போய்விடுகிறது. அவர் அதை தேடித் திரிகிறார். மூக்கும் வீதிகளிலே அலைகிறது. போலீசிலே முறைப்பாடு செய்கிறார். மூக்கை ஒருவராலும் கைதுசெய்ய முடியவில்லை. ஒருநாள் அதுவாகவே வந்து முகத்தில்  ஒட்டிக்கொள்கிறது. இந்தக் கதை ஒருவருக்குமே புரியவில்லை. ஒரு வாசகர் மட்டும் அருமையான விளக்கம் கொடுத்தார். ரஸ்ய மொழியில் மூக்கு என்பதை மாற்றிப்போட்டால் கனவு என்று வரும். ஆகவே இது கனவுதான் என்று தீர்மானமாகச் சொன்னார்.  எழுத்தாளர் என்ன எழுதினாலும் வாசகர் தன்பாட்டுக்கு ஒரு விளக்கம் கொடுத்தபடியே இருப்பார்.

’அகதியே!

நில், நில்,

உள்ளே நுழையாதே.

உனக்கு அனுமதி இல்லை.

சுபிட்சமான வாழ்க்கை  காத்திருக்கிறது.

ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்

யட்சன் கேட்டான்.

’உலகத்தில் நீ வெறுப்பது என்ன?’

’உடம்பில் உள்ளே ஓடும் ரத்தம்

வெளியே ஓடுவதை.’

சரியான பதில்.

உள்ளே வா.

கவிதையை படித்துவிட்டு ஒருவர் சொன்னார். ‘கனடா இமிகிரேசனை இந்தக் கவிஞர் அப்படியே கண்முன்னே கொண்டு வந்துவிட்டார்.’. இந்தக் கவிதைக்கும், கனடாவுக்கும் என்ன சம்பந்தம்?

சரி, விசயத்துக்கு வருவோம். சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை. நான் என்ன படமா வரைந்து பத்திரிகையில் வெளியிட்டேன்? .ஒன்றிரண்டு பேர் கதையை பாராட்டவும் செய்தார்கள். ஆனால் ஒருவராவது அந்தக் கதை எழுத என்ன காரணமாக அமைந்தது என்பதை சிந்தித்தாக தெரியவில்லை.  அதுதான் மனதுக்கு வருத்தம்.

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் தன் இளவயது சம்பவத்தை சொன்னார். அவருடைய தாய் கிறிஸ்தவர். தந்தை முஸ்லிம். இவர் சிறுவயதாயிருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். இவரை வளர்க்க தாயார் மிகவும் கஷ்டப்பட்டார். செல்வந்தர் வீடுகளுக்குப் போய் முழங்காலில் இருந்து அவர்கள் தரையை துடைத்தார். அந்தக் காட்சியை நினைக்கும்போது எல்லாம் அவர் அழுவார். அவர் சொன்னார், ’என்னுடைய அப்பா முஸ்லிம், இன்னும் மூன்று பெண்களை அவர் மணம் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் எனக்கு நாலு அம்மாமார் இருந்திருப்பார்கள். என் அம்மா தனியாக இத்தனை சிரமப்பட்டிருக்கத் தேவை இல்லை.’

எனக்கு அதிர்ச்சி. சிறுகதைக்கு இந்தச் சம்பவம்தான் அடிப்படை ஆனால் ஒருவருமே இதைக் கவனிக்கவில்லை. எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பது அபூர்வம். என்னைக் கேட்டால், அவர்கள் சந்திப்பதே இல்லை என்றுதான் சொல்வேன்.

 

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta