ஜேசியும் வேசியும்
அ.முத்துலிங்கம்
கால்பந்து என்று இப்பொழுது சொல்கிறோம். நான் சிறுவனாய் இருந்தபோது உதை பந்தாட்டம் என்றே அழைத்தார்கள். அதுவே சரியான பெயர் என்று நான் நினைக்கிறேன். அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி, பந்தை உதைக்கிறார்களோ இல்லையோ ஆளை உதைக்கிறார்கள். ஒருவன் ஜேசியை பிடித்து இழுத்து எதிராளியை விழுத்த நினைக்கிறான் அல்லது அவன் வேகத்தை கட்டுப்படுத்த பின்னாலே போய் உதைக்கிறான். அடிக்கிறார்கள். நடிக்கிறார்கள். சமீப காலங்களில் கடிப்பதும் அதிகரித்திருக்கிறது. ஆனால் முழுவீச்சுடன் ஒவ்வொருவரும் செய்வது. எதிராளியையும் நடுவரையும் ஏமாற்றுவதுதான்.
உச்ச ஏமாற்று வேலை என்றால் அது மாரடோனா செய்ததுதான். அவர் ஆர்ஜெண்டீனாவில் ஒரு சிறு கடவுள். அவருடைய 1986 உலகக் கோப்பை கால் இறுதி ஆட்டத்தை பலர் இன்றும் யூட்யூப்பில் பார்க்கிறார்கள். இந்தப் போட்டி இங்கிலாந்துக்கும், ஆர்ஜெண்டினாவுக்கும் இடையில் நடந்தது. இதிலே மாரடோனா கையினால் பந்தைத் தட்டி கோல் போட்டுவிட்டார். அவருடைய சக விளையாட்டு வீரர்கள் அவரைக் கட்டிப் பிடிக்காமல்
திகிலடித்துப் போய் நின்றார்கள். மாரடோனா ‘கட்டிப்பிடி, கட்டிப்பிடி’
என்று மும்தாஜ்போல கத்தினார். நடுவர் ஆர்ஜெண்டினா வெற்றிபெற்றது என்று அறிவித்துவிட்டார், ஆனால் போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் மாரடோனாவைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘உங்களுடைய கை அந்தப் பந்தை தட்டியதா?’
மாரடோனா உலகப் புகழ்பெற்ற அவருடைய பதிலை அப்போது
கூறினார். ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்ல
வில்லை, ‘அது கடவுளின் கை’ என்றார். அதே போட்டியில் அவர் இரண்டாவதாகப் போட்ட கோலும் பிரபலமானது. இன்றுவரை அது பற்றி கால் பந்தாட்ட ஆர்வலர்கள் பேசுவார்கள். காலிலே பந்தை எடுத்த மாரடோனா நீண்ட தூரத்துக்கு ஒருவர் உதவியில்லாமல் ஓடினார். ஐந்து ஆங்கில வீரர்களை வெட்டி, வெட்டி, விழுத்தி எடுத்து தனியாகாக் கொண்டுபோய் கோல் போட்டார். பத்திரிகைக்காரர்கள் அதற்கு தாங்களாகவே ஒரு பெயர் சூட்டினார்கள், ‘கடவுளின் கால்.’
கடிப்பதை பிரபலமாக்கியது லூயிஸ் சுவாரெஸ் என்னும் உருகே நாட்டு வீரர்தான். .பந்தை அடிப்பதிலும் பார்க்க கடிப்பதில் வல்லவர். 2014 உலகக் கோப்பையில் சுவாரெஸ் இத்தாலிய வீரர் சியலினியின் தோள்மூட்டை கடித்துவிட்டார். நடுவர் பார்க்கவில்லை ஆனால் ஆயிரம் காமிராக்கள் படம் பிடித்தன. சுவாரெஸ் சொன்னார் ‘நான் ஒன்றும் கடிக்கவில்லை. அவருடைய தோள்மூட்டுத்தான் என் பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டது.’ இதற்கு முன்னரும் பல விளையாட்டு போட்டிகளில் கடிக்கும் தொழிலைச் செய்திருக்கிறார் சுவாரெஸ். ஒரு முறை எதிராளியின் காதை கடித்துவிட்டார். நடுவர் அவர் அடுத்துவரும் 9 போட்டிகளில் பங்குபற்றக்கூடாது என தண்டனை விதித்தார். ’ஒன்பது காதுகள் தப்பின’ என்று பத்திரிகைகள் எழுதின.
கால்பந்து விளையாட்டு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. மகாபாரதத்தில் கால்பந்து பற்றி ஒரு குறிப்பு வருகிறது. துரோணர் முதல் தடவையாக அஸ்தினாபுரம் வந்தபோது ஒரு காட்சியை காண்கிறார். குரு வம்சத்துப் பிள்ளைகள் கிணற்றைச் சுற்றி நிற்கிறார்கள். பந்து கிணற்றுக்குள்ளே விழுந்துவிட்டதால் அதை எடுக்க வழிதெரியாது திண்டாடிக் கொண்டு நின்றனர். துரோணர் ஒரு புல்லை எடுத்து வீச அது பந்திலே போய் ஒட்டிக்கொண்டது. இன்னொரு புல்லை வீசினார். அது பந்திலே ஒட்டிய புல்லில் ஒட்டிக்கொண்டது. அடுக்கடுக்காக புற்களை வீசி சங்கிலித் தொடர் உண்டாக்கி பந்தை மீட்டார் என்று மகாபாரதம் சொல்கிறது. ஆகவே கால்பந்து அப்பொழுதே அரசகுமாரர்களின் விளையாட்டாக இருந்திருக்கிறது.
கால்பந்தை தற்காலத் தேவைக்கு ஏற்ப வளர்த்த நாடு இங்கிலாந்து என்றும் தெரிகிறது. 1417ம் ஆண்டு நாலாம் எட்வர்ட் மன்னன் கால்பந்து ஆட்டத்தை தடைசெய்தான் என்ற குறிப்பு சரித்திரத்தில் காணப்படுகிறது. வீதிகளில் ஆட்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததால் அம்பு எய்து போர்ப் பயிற்சி எடுக்கும் ஆட்கள் குறைந்து போனார்கள். போரிலே போதிய பயிற்சி இல்லாது போனால் தோற்க நேரிடும் என்று எண்ணிய மன்னன் கால்பந்தை தடை செய்தான். அதன் காரணமோ என்னவோ அரசன் ஒரு போரிலும் பின்னர் தோல்வி அடையவில்லை.
கால்பந்தாட்டத்தைப் பற்றி சேக்ஸ்பியருடைய .லியர் மன்னன் நாடகத்திலும் குறிப்பு வருகிறது. ’கீழ்த்தரமான கால்பந்து விளையாட்டுக்காரன்’ என்று ஓரிடத்தில் வர்ணிக்கிறார். இன்னொரு நாடகத்தில் ட்ரோமியோ என்னும் பாத்திரம் ‘நீயும் உதைக்கிறாய். அவனும் என்னை உதைக்கிறான். இரண்டு பக்கமும் உதை வாங்கி நான் உருண்டையான பந்துபோல ஆகிவிட்டேன்’ என்று புலம்புவான்.
சேக்ஸ்பியர் காலத்தில் கால்பந்து விதிகள் எப்படி இருந்தனவோ தெரியாது. ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்து விதிகள் இப்போதெல்லாம் கிடையாது. பல மாற்றங்கள் புகுத்தப்பட்டு விட்டன. மஞ்சள்,, சிவப்பு அட்டைகள் அந்தக் காலத்தில் இல்லை. 2014 உலகப் போட்டி கால்பந்து விளையாட்டின்போது 187 மஞ்சள் அட்டைகளும் 10 சிவப்பு அட்டைகளும் கொடுக்கப்பட்டன. இப்படியான கட்டுப்பாடுகளும் கண்டிப்பான நடுவர்களும் அந்தக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
நான் சிறுவனாய் வளர்ந்த கிராமம் உதை
பந்தாட்டத்தில் பெரும் ஆர்வம். கொண்டது. மாலை ஐந்துமணிப்
போட்டிக்கு காலையில் இருந்தே கிராமம் தயாராகி விடும். அது
விவசாயக் கிராமம் என்பதால் சனங்கள் மாட்டுக்கு தண்ணி
வைத்து, ஆட்டுக்கு குழையடித்துக் கிளம்பி, பல மைல்கள்
தூரமுள்ள முற்றவெளிக்கு ஏதோ விழாவுக்கு போவதுபோல கூட்டம்
கூட்டமாக நடந்து போவார்கள். எனக்கு ஞாபகமிருக்கும் ஒரு பெயர் ராவணேஸ்வரன். ஆறடிக்கு மேலான உயரம்; உருண்டு, திரண்ட மேனி. பத்து தலைகளில் இருக்கவேண்டிய தலை முடி
ஒரே தலையில் இருந்தது. அவர் தலையைச் சிலுப்பினால் அது
சூரியனை மறைத்துவிடும். அவரைத் தாண்டி கோல் போடுவது
அருமையிலும் அருமை. காலிலே பந்து பட்டால் அது உயரே
எழும்பி, எல்லோரையும் கழுத்தை வளைத்து ஆகாயத்தைப் பார்க்க
வைக்கும். யார் தோற்றாலும், யார் வென்றாலும் அடுத்த நாள்
பள்ளிக்கூடத்தில் ராவணேஸ்வரன் அடித்த பந்தின் உயரம் பற்றித்தான்
பேச்சு நடக்கும்.
இன்னொருவருடைய பெயர் ‘பொந்தன்.’ அப்பொழுதுதான்
பொந்துக்குள் இருந்து புறப்பட்ட பிராணிபோல இருப்பார். குள்ளமான
உருவம், பூசணிக்காய்போல உருண்டையான வடிவம். ஒரு பெருச்சாளியைப் போல
பந்தை உருட்டிக்கொண்டு ஓடுவார். இவர் பந்தைப் பறிப்பதில்
மன்னர். எதிராளிகளிடம் இருந்து மட்டுமல்ல தன் சைட்டில்
இருந்தும் பறித்துவிடுவார். பறித்தால் ஓட்டம்தான். இவர் ஓடினால்
பிடிக்கமுடியாது, அவ்வளவு வேகம். பக்கத்திலேயே மூச்சு இரைக்க
ஓடிவரும் தன் டீமின் கால்களுக்கு பந்தை பாஸ் பண்ணவே
மாட்டார். நேராக கோல் கம்பங்களுக்கிடையே மட்டும் அடித்து
கோலாக்குவார். நூற்றுக் கணக்கான கோல்களை தன்னந்தனியாக அடித்த கல்நெஞ்சக்காரர். ஒருமுறை வெற்றியீட்டிய பின்னர் அவருக்கு நடந்த மரியாதையைப்போல முன்னும் நடந்த
தில்லை; பின்னும் நடந்ததில்லை. அவரை ஒரு ரிக்சாவில் ஏற்றி
பெரியகடை வீதிகளில் இழுத்து வந்தார்கள். ஒவ்வொரு கடை
வாசலிலும் நிறுத்தி நிறுத்தி உபசாரம்; உத்தரியம் போட்டார்கள்;
மாலை அணிந்தார்கள்; ஆலத்தி எடுத்தார்கள். ராச மரியாதைதான்.
மறக்க முடியாத போட்டி என்றால் அது யாழ் இந்துக் கல்லூரிக்கும்
சம்பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் நடந்த போட்டிதான்.
கடைசி நேரத்தில் நடுவர் சம்பத்திரிசியார் கல்லூரிக்கு சாதகமாக
ஒரு பெனால்டி கொடுத்துவிட்டார். அவர்களும் கோல் அடித்து
போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார்கள். சனங்கள் மைதானத்துக்குள்
நுழைந்து நடுவரை அடிக்க முற்பட, அவர் பொந்தனே வியக்கும்
வண்ணம், குதி பிடரியில் பட ஓடி மறைந்தார். போட்டி குழம்பினா
லும் முடிவில் மாற்றமில்லை. அன்று ஊர் முழுக்க
அழுதது. உடனுக்குடனேயே ஒரு நோட்டீஸ் அடித்து விநியோகித்தார்கள்.
தலைப்பு ‘அம்பயரின் அநியாயம்.’ அப்போதெல்லாம் நடுவரை
அம்பயர் என்றே அழைத்தார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த
நோட்டீஸை வாசித்து தங்கள் மனக்குறையை ஆற்றிக்கொண்டார்கள்.
எங்கள் வீட்டில் கை விளக்கின் ஒளியில் பெரியண்ணர் வாசிக்க
நாங்கள் எல்லோரும் கேட்டோம். ஐயா கட்டிலின் மேலே இருந்தார்.
அம்மா நிலத்திலே இருந்தார். நாங்கள் சுற்றிவர நின்றோம். அதிலே
ஓர் இடத்தில் ‘கோறணை மாடும் போச்சு; உழுத கலப்பையும்
போச்சு’ என்ற வரிகள் வரும். அப்பொழுது அம்மாவின் கண்களில்
கண்ணீர் வழிந்தது.
இப்பொழுது நடைபெறும் போட்டிகளில் எனக்கு புரியாத பல அம்சங்கள்
இருக்கின்றன. எப்பொழுது ஒருவர் எதிர் டீம் ஆளை இடித்து விழுத்தினா
லும் அவர் உடனே நடுவரிடம்போய் கெஞ்சத் தொடங்குவார்.
தனக்கு மஞ்சள் அட்டை கிடைக்கக்கூடாதென்று பிரார்த்திப்பார்.
அவர் எவ்வளவுதான் கெஞ்சினாலும் நடுவர் மனம் மாறுவதில்லை.
அவருடைய தீர்ப்பு தீர்ப்புத்தான். இருந்தாலும் இவர் கெஞ்சுவதை
நிறுத்துவதில்லை. நடுவரும் கெடுபிடியை விடுவதில்லை.
ஒருவர் தலை குப்புற விழுந்தவுடன் உயிர் போய்விட்டதுபோல
வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுழலுவார். உருளுவார். ஓவென்று
சத்தமிட்டு அலறுவார். எல்லோரும் அவரைச் சுற்றி கூடிவிடுவார்கள்.
நடுவர் எதிராளிக்கு தண்டனை கொடுத்ததும் வேதனையில் துடித்த வீரர் துள்ளி எழுந்து விளையாட்டில் கலந்துகொள்வார்.
விளையாட்டில் இப்படி அப்படி இருந்தாலும் நடிப்புக் கலையில்
வீரர்கள் எல்லோரும் ஜொலித்தார்கள்.
தன்படை வெட்டிக் கொல்லுதல் என்பது போரில் நடக்கும். விளையாட்டிலும் சிலர் தன் பக்கமே கோல் போடுவார்கள். 2006 உலகக்கோப்பை
கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியும், பராகுவே
அணியும் மோதிக்கொண்டன. இங்கிலாந்து அணி 1 – 0 என்று வென்றது. அந்தக் கோலை போட்டது இங்கிலாந்தின் லம்பார்ட் அல்ல, ரூனி அல்ல, ஜோஜோ அல்ல
எதிர் அணியை சேர்ந்த கார்லோஸ் கமரா. இவர் இந்தக் கோலைப்
போட்டிருக்காவிட்டால் இங்கிலாந்தின் கதி என்னவாகியிருக்குமோ
தெரியாது. கார்லோஸ் செய்த சேவைக்கு இங்கிலாந்தின் அரசி
அவருக்கு சேர் பட்டம் கொடுப்பார் என்று பேசிக்கொண்டார்கள். அவருக்கு கிடைத்ததோ இல்லையோ தெரியாது.
குருட்டு அதிர்ஷ்டத்தில் இங்கிலாந்து வென்றாலும் அந்த நாட்டின் மீது எல்லோரும் பரிதாபப்பட்டார்கள். கடந்த 50 வருடங்களாக அவர்கள் உலகக் கோப்பையில் வெற்றி பெறவே இல்லை. 1966ல் வெற்றி பெற்றதோடு நிறுத்திக் கொண்டார்கள். எல்லோருடைய ஏளனத்துக்கும் பகிடிக்கும் அவர்கள் இலக்கானார்கள். கதை இப்படிப் போகிறது. ஒருநாள் ஒருவன் கடவுளை நோக்கி கடும் தவம் செய்தான். கடவுள் தோன்றி என்ன வேண்டும் என்றார். அவன் சாகாவரம் வேண்டும் என்றான். கடவுள் ’இப்பவெல்லாம் அப்படி வரம் கொடுப்பதில்லை’ என்றார். ’அப்படியானால் சாகும் வரம் கேட்கலாமா?’ என்றான். கேள் என்றார் கடவுள். ’அடுத்த தடவை இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்லும் அன்று நான் இறக்கவேண்டும்.’ ‘ஓ, சூழ்ச்சிக்காரா! நீ என்னை மாட்டிவிட்டாய்’ என்று கத்திக்கொண்டே தலையை தன் சொந்தக் கைகளால் அடித்தபடி கடவுள் ஓடி மறைந்தார்.
மிக மோசமான ஒரு நிகழ்வு என்றால் 2014 உலகக் கோப்பையில் பிரேசிலுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நடந்த போட்டிதான். பிரேசில் நாட்டில் இது நடந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பிரேசில் நாட்டில்தான் உலகத்தில் தோன்றிய அத்தனை கால்பந்தாட்ட வீரர்களிலும் அதி சிறந்தவன் என்று அனைவராலும் போற்றப்படும் பெலே பிறந்திருந்தார் பிரேசில் நாடுதான் 5 தடவை உலகக்கோப்பை வெற்றிக் கிண்ணத்தை பெற்றிருந்தது. ஆனால் பிரேசில் மிக மோசமாக விளையாடி ஜேர்மனியிடம் 7 – 1 என்று தோற்றது. பிரேசில் வீரகள் புயல் வேகத்தில் விளையாடிய ஜேர்மன் வீரர்களின் ஜேசியை பிடித்தார்களே ஒழிய பந்தை தடுத்து பிடிக்க முடியவில்லை. பல பிரேசில் பார்வையாளர்கள் அவமானம் தாங்க முடியாமல் பாதியிலே எழுந்து போய்விட்டார்கள். சில பெண்கள் அழுதார்கள். அழுத பெண்ணின் புகைப்படம் ஒன்று உலகப் புகழ் அடைந்தது. இரண்டு நாட்கள் உலகம் இந்த தோல்வியை பற்றியே பேசியது. அமெரிக்க தொலைக்காட்சி பிரபலர் டேவிட் லெட்டர்மான் பகிடியாக இப்படிச் சொன்னார். ’ஜேர்மனி போட்ட கோல்களில் இரண்டு ஜேர்மனி அதிபர் அஞ்செலா மார்க்கெல் போட்டது.’
எத்தனையோ உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்தாகிவிட்டது. ஆனால் 2006 உலகக்கோப்பை கொடுத்த விறுவிறுப்பை வேறு எந்த போட்டியும் கொடுக்கவில்லை. போட்டி ஜேர்மனியில் நடந்தது. இத்தாலியும் பிரான்சும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. இத்தாலியின் முதல்தர வீரர் மார்க்கோ மட்டராசி. உலகத்துச் சிறந்த ஐம்பது வீரர்களில் ஒருவர். பிரான்சு நாட்டு முக்கிய விளையாட்டு வீரர் சினடீன் சிடானே. இவரும் உலகத்து 50 திறம் வீரர்களில் ஒருவர். போட்டி இரண்டு நாட்டுக்கும் இடையில் அல்ல. இரண்டு வீரர்களுக்கும் இடையில்தான். அர்ஜுனன் கர்ணனிடம் போரிட்டது போல. ஹோமரின் இலியட்டில் ஹெக்டரும் அச்சில்லேயும் போர் புரிந்ததுபோல.
இரண்டு டீமும் சமமான பலம் கொண்டவை. முதலில் இரண்டு டீமும் ஆளுக்கு ஒரு கோல் போட்டனர். இறுதியில் விளையாட்டு நேரத்தை நீட்டித்தார்கள் அப்பொழுதும் ஒரு கோலும் ஒருவரும் போடவில்லை. பெனால்ட்டி அடியின்போது இத்தாலி 5 – 3 என வெற்றியீட்டியது.
ஆனால் இன்னொரு போட்டியும் நடந்தது. சிடானேக்கும் மட்டராசிக்கும் இடையேயான போட்டி. விளையாட்டு மும்முரமாக போய்க் கொண்டிருந்தபோது இத்தாலியை சேர்ந்த மட்டராசி பிரான்ஸ் வீரர் சிடானேயின் ஜேசியை பிடித்து இழுத்தான். அதற்கு சிடானே பொறுமையாகச் சொன்னான். ’உனக்கு என் ஜேசி வேணுமா.? கொஞ்சம் பொறு; போட்டி முடிந்ததும் நானே கழற்றித் தருகிறேன்.’ அதற்கு மட்டராசி ஏதோ சொன்னான். சிடானேக்கு கோபம் பொங்கி முகம் சிவந்தது ஒரே பாய்ச்சலில் கிட்ட வந்து தலையினால் மட்டராசியின் நெஞ்சில் இடித்தான். மட்டராசி கீழே விழுந்தான். சிடானேக்கு அம்பயர் சிவப்பு அட்டை கொடுத்து அவனை வெளியே அனுப்பினார்.
மட்டராசி அப்படி என்ன சொன்னான்? முழு உலகமும் தவித்தது. அவன் மோசமான வசவை சொல்லியிருக்கவேண்டும். பத்திரிகையாளர்கள் தங்கள் ஊகங்களை எழுதினார்கள்.. இறுதியில் மர்மம் துலங்கியது. மட்டராசி இதைத்தான் சொன்னான். ‘எனக்கு ஜேசி வேணாம். உன்னுடைய வேசி தங்கைதான் வேணும்.’
END
I have fun with, lead to I discovered exactly what I used to be taking a look for. You have ended my four day lengthy hunt! God Bless you man. Have a great day. Bye
Great – I should definitely pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs and related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your customer to communicate. Nice task.
Do you have a spam problem on this site; I also am a blogger, and I was wondering your situation; we have developed some nice methods and we are looking to swap strategies with others, why not shoot me an email if interested.
Merely wanna say that this is extremely helpful, Thanks for taking your time to write this.
Very interesting info !Perfect just what I was looking for! “We are shaped and fashioned by what we love.” by Johann von Goethe.
you’ve an awesome weblog right here! would you prefer to make some invite posts on my blog?
This is a very good tips especially to those new to blogosphere, brief and accurate information… Thanks for sharing this one. A must read article.