அதுவாகவே வருகிறது
அ.முத்துலிங்கம்
ஒரு வெள்ளைக்காரர் கும்பகோணம் சந்நிதித் தெருவில் அலைந்து திரிந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். வருடம் 1988. அரைக்கை சட்டை அணிந்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை ஓடியது. ‘யாரை தேடுகிறீர்கள்?’ ‘நான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். என் பெயர் ரொபர்ட் கானிகல். சுந்தரேசன் என்பவரைச் சந்திக்கவேண்டும்.’ ‘அப்படியா? சுந்தரேசன் என்னுடைய தகப்பனார். அவர் இறந்துவிட்டார். நான் அவருடைய மகன்; பெயர் சம்பந்தம். நான் அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறேன். விடுமுறையில் இருக்கிறேன். என்னால் உதவ முடியுமா?’ ‘நிச்சயமாக. கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜனைப் பற்றி புத்தகம் எழுதுகிறேன். அதற்கான விவரங்களை திரட்ட வந்திருக்கிறேன்.’
அப்படித்தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மருத்துவர் சம்பந்தம் வேறு யாருமில்லை. சமீபத்தில் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை கொடுத்து ஹார்வார்ட் தமிழ் இருக்கையை ஆரம்பித்து வைத்த இரண்டு மருத்துவர்களில் ஒருவர். ராமானுஜனைப் பற்றிய புத்தகம் 1991 ல் வெளிவந்தபோது அந்தப் புத்தகத்தில் மருத்துவர் சம்பந்தத்துக்கு நன்றி கூறப்பட்டிருக்கிறது.
ரொபர்ட் கேட்ட உதவிகள் ஆச்சரியப்பட வைத்தன. ராமானுஜன் படித்த பள்ளிக்கூடத்திற்குப் போய் அங்கே சில நிமிடங்கள் உட்கார்ந்தார். ராமானுஜன் வழக்கமாகப் போகும் கோயிலுக்குச் சென்று அங்கும் சில மணி நேரங்கள் அமர்ந்திருந்தார். அவர் நடந்திருக்கக்கூடிய வீதிகளில் நடந்தார். பஸ்சில் பயணித்தார். ரயிலில் போனார். காற்றை மணந்தார். மரங்களைப் பார்த்தார். பறவைகளையும் மிருகங்களையும் உன்னிப்பாகக் கவனித்தார். அது தாங்காமல் ஒரு மாடு அவர் பின்னால் வந்து அவரை முட்டியது. எந்த ஒரு சின்ன விசயத்தையும் தவறவிடக்கூடாது என்ற கவனத்துடன் குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டார்.
இறுதியில் ஓர் ஆசை இருந்தது. தயக்கத்துடன் கேட்டார். ராமானுஜன்போல தரையில் சப்பணம் கட்டி அமர்ந்து வாழை இலையில் கையினால் பிசைந்து உண்ணவேண்டும். அவரை உட்கார்த்தி சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என்று பரிமாறினார்கள். ரசம் ஊற்றியபோது அது வாசலை நோக்கி ஓடியது. மறித்து அள்ளிக் குடித்தார். ராமானுஜத்துக்கு ரசத்தில் அலாதிப் பிரியம். ரொபர்ட்டும் ரசித்து சாப்பிட்டார்.
ஐந்து வாரங்கள் இந்தியாவில் சுற்றி அலைந்தார் ரொபர்ட். அவர் படித்த கல்லூரி, வாழ்ந்த வீடுகள், வேலை பார்த்த இடங்கள் என் சகலதையும் பார்த்தார். நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்து பேசி தகவல்கள் சேகரித்தார். அவர் எழுதிய புத்தகம் The Man Who Knew Infinity 1991ல் வெளிவந்தது. அதில் ஓர் இடத்தில் இப்படி எழுதியிருப்பார்.’ கொடுமுடியில் ஓர் அறையில் பல்லியுடன் வாசம் செய்தேன்.’
ராமானுஜனுடைய தாயார் பெயர் கோமளத்தம்மாள். 22 டிசெம்பர் 1887ல் ராமானுஜன் பிறந்தார். மூன்று வயது மட்டும் ராமானுஜன் பேசவே இல்லை. சாரங்கபாணி சந்நிதித் தெருவில் அவர்கள் வீடு இருந்தது. இரண்டு வயதில் அவருக்கு அம்மை போட, வேப்பிலை படுக்கையில் வைத்து இரவு பகலாக வைத்தியம் பார்த்து கோமளத்தம்மாள் அவரை காப்பாற்றினார். பள்ளிக்கூடத்தில் படிக்க ஆரம்பித்ததுமே அவருடைய கணிதத் திறமை வெளிப்பட தொடங்கியது. கணிதத்தில் ஒவ்வொரு தடவையும் அவருக்குத்தான் ஆகக்கூடிய மதிப்பெண். ஒரு முறை வகுப்பு பையன் ஒருவன் ஒரு மார்க்கில் அவரை முந்திவிட்டான். ராமானுஜன் பின்னர் அவனுடன் பேசவே இல்லை.
வாத்தியார் ஒருமுறை நீண்ட கணிதம் ஒன்றை இரண்டு கரும்பலகைகளை நிறைத்து நீளத்துக்கு செய்துகொண்டே போனார். ராமானுஜன் இரண்டு வரிகளில் கணிதத்தை முடித்து வைத்தார். வகுப்பிலே முக்கோணவியல் ஆரம்பித்தபோது ராமானுஜனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படி ஒரு பாடம் இருப்பதே அவருக்கு தெரியாது. ஆர்வம் தாங்காமல் புத்தகம் முழுவதையும் சிலநாட்களிலேயே படித்து முடித்துவிட்டார். செங்கோண முக்கோணம் அல்லாத சாதாரண முக்கோணத்துக்கும் அவர் தேற்றங்களை புதிதாகக் கண்டுபிடித்து மகிழ்ந்தார். 150 வருடங்களுக்கு முன்னரே யூலர் என்ற ஸ்வீடன் நாட்டுக்காரர் அவற்றை கண்டுபிடித்துவிட்டார் என அறிந்தபோது அதிர்ந்துபோனார். பெரிய வகுப்புக்காரர்களிடம் புதிய கணிதப் புத்தகங்களை கெஞ்சி வாங்கிப் படிப்பார். அவர் பசிக்கு ஒன்றுமே போதவில்லை. ஜி.எஸ் கார் என்பர் எழுதிய புத்தகத்தில் உள்ள 5000 தேற்றங்களும் அவருக்கு மனப்பாடம். மெல்ல மெல்ல அதி உயர் கணித உலகுக்குள் நுழைந்தார்.
கும்பகோணம் அரசு கல்லுரியில் சேர்ந்து படித்தபோது இவருடைய திறமைக்கு உதவிப் பணம் கிடைத்தது. ஆனால் கணிதம் மட்டும் போதாதே. இவர் மற்றப் பாடங்களை படிக்கவே இல்லை. பரீட்சையில் தோல்வி. உதவிப் பணம் நிறுத்தப்பட்டது. அவமானத்தை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடினார். 6 செப்டம்பர் 1905 இந்துப் பேப்பரில் ஓரு விளம்பரம் வந்தது. ’சிறுவனைக் காணவில்லை.’ எப்படியோ அவர் மறுபடியும் வீடுவந்து சேர்ந்தார்.
அடுத்து வந்த வருடங்கள்தான் அவருடைய வாழ்க்கையில் மிக மோசமானவை. ஆனால் கணித ஆராய்ச்சியை அவர் நிறுத்தவில்லை. பேப்பரை மிச்சம் பிடிப்பதற்காக சிலேட்டிலே எழுதி எழுதி சிறுவர்கள் செய்வதுபோல முழங்கையால் அழித்தார். அவர் முழங்கை கறுத்துப்போயிருக்கும். பின்னர் தேற்றங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பாதுகாப்பார். சில சமயங்களில் அவருக்கு பேப்பர் தட்டுப்பாடு. அப்போதெல்லாம் கறுப்பு மையினால் நிரப்பப்பட்ட தாள்களில் சிவப்பு மையினால் எழுதுவார். அவர் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வார். ’எனக்கு ஏதாவது நடந்தால் என்னுடைய நோட்டுப் புத்தகங்களை இங்கிலாந்து பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் ஒருவருக்கு அனுப்பிவையுங்கள்.’ அவருடைய நோட்டுப் புத்தகங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் அவருக்கு சந்தேகமே இல்லை. பணம் இல்லை. பட்டப்படிப்பு இல்லை. வேலை இல்லை. கோமளத்தம்மாளிடம் பெரிய பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகள் இருந்தன. 22 வயது ராமானுஜனுக்குத் திருமணம் செய்து வைத்தார். பெண்ணின் பெயர் ஜானகி, வயது 10. ஆனால் மணமுடித்த பின் அந்தக் கால வழக்கம்போல பெண் மறுபடியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார்.
ராமானுஜனுக்கு 25 வயதானபோது ’அவரைப்பிடித்து இவரைபிடித்து’ ஒரு வேலை சம்பாதித்தார். துறைமுகச் செயலகத்தில் மாதம் 30 ரூபா சம்பளத்தில் எழுத்தர் வேலை. ஓய்வு நேரங்களில் அவரால் நிறைய தேற்றங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. தாயாரையும் மனைவியையும் அழைத்து வைத்துக்கொண்டார். ஆனால் ஜானகி அவரை நெருங்க தாயார் அனுமதிக்கவில்லை. பெயருக்குத்தான் மனைவியே ஒழிய கோமளத்தம்மாள்தான் மகனை கவனித்துக்கொண்டார்.
ராமானுஜன் வாழ்க்கையில் இது முக்கியமான கட்டம். நிம்மதியான வாழ்க்கை. அவர் விரும்பிய சாதமும் சாம்பாரும் ரசமும் தினம் கிடைத்தன. இரண்டு பெண்கள் கவனிக்க இருந்தனர். கணிதங்களை அவர் எழுதிக்கொண்டு இருக்கும்போதே அவர் சிந்தனை தொடர் அறாமல் கோமதியம்மாள் சாதத்தை பிசைந்து உருட்டி வைப்பார். ராமானுஜன் இங்கிலாந்தில் அப்பொழுது பிரபலமான கணிதப் பேராசிரியர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார். அந்தக் கடிதங்களுடன் தான் கண்டுபிடித்த தேற்றங்களையும் அனுப்ப மறக்கவில்லை. பதில் வரவே இல்லை.
அவருடைய வாழ்க்கையை மாற்றப்போகும் கடிதத்தை கேம்ப்ரிட்ஜில் அதிபுகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் ஹார்டிக்கு 16 ஜனவரி 1913 அன்று அனுப்பினார். கடிதம் இப்படி ஆரம்பித்தது.
அன்பார்ந்த ஐயா,
நான் மதராஸ் துறைமுகத்தில் கணக்குப் பிரிவில் வேலை செய்யும் ஓர் எழுத்தராக என்னை மன்றாட்டத்துடன் அறிமுகம் செய்கிறேன். எனக்கு வயது 23 ஆகிறது. வருடச் சம்பளம் 20 பவுண்டுகள். பல்கலைக்கழக படிப்பு எனக்கு கிடையாது; வெறும் பள்ளிக்கூட படிப்புத்தான். ஓய்வுநேரத்தில் கணிதங்கள் செய்வதில் ஈடுபட்டிருப்பேன் …….
இத்துடன் நான் அனுப்பியிருக்கும் தேற்றங்களில் ஏதவது உண்மை இருக்கிறது என்று நீங்கள் கருதும் பட்சத்தில் அவற்றை வெளியிட விரும்புகிறேன். நான் ஏழை; வசதியில்லாதவன். அனுபவம் வேறு கிடையாது. உங்கள் மேலான புத்திமதிகளுக்கு காத்திருக்கிறேன். தொந்திரவுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் கீழ்ப்படிந்த. உண்மையான
எஸ்.ராமானுஜன்
ஹார்டி தேற்றங்களைப் படித்து திகைத்துவிட்டார். பட்டப் படிப்பு இல்லாத எழுத்தர் ஒருவர் அனுப்பியவற்றை உதாசீனம் செய்ய முடியவில்லை. பல பேராசிரியர்களுக்கு பல நாட்கள் தேவைப்படும் தேற்றங்களை சர்வ சாதாரணமாக பழுப்புத் தாள்களில் நிரை நிரையாக எழுதி அனுப்பியிருந்தார். நிரூபணங்களை அனுப்புங்கள் என்று ஹார்டி எழுதினார். ராமானுஜன் அனுப்பவே இல்லை. ஆனால் மேலும் புதிய புதிய தேற்றங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். ஒரு முறை ஹார்டி ஹங்கேரிய பேராசிரியர் ஒருவரை ராமானுஜனின் தேற்றங்களை பார்வையிடச் சொன்னார். அவர் ஒரு பார்வையிலேயே மிரண்டுபோனார். ‘இவற்றை நிரூபிப்பதில் என் வாழ்நாள் முழுக்க கழிந்துவிடும். நான் புதிதாக கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன’ என்று நழுவிவிட்டார்.
இறுதியில் ராமானுஜன் எழுதிய கடிதம் நிலைமையை மாற்றியது. ‘ஐயா, நான் அரைப்பட்டினியில் கிடக்கிறேன். என்னுடைய மூளையை பாதுகாக்க எனக்கு உணவு வேண்டும். அது எனக்கு முக்கியம். கருணை உள்ளம் கொண்டு பல்கலைக்கழக உதவிப் பணமோ, அரசாங்க உதவிப்பணமோ கிடைக்க ஏற்பாடுசெய்தால் வசதியாக இருக்கும்.’ ஆரம்பத்தில் இருந்தே ஹார்டிக்கு ராமானுஜனின் மேதமையில் சந்தேகம் கிடையாது. ஆனால் ராமானுஜனை இங்கிலாந்துக்கு அவர்கள் பணச் செலவில் வருவிப்பதற்கு எதிர்ப்பு இருந்தது. இருந்தாலும் உறுதியாக ராமானுஜனை வரவழைத்தார்.
கோமளத்தம்மாளுக்கு ராமானுஜன் இங்கிலாந்து போவதில் சம்மதமே இல்லை. ’நீ பிராமணன். எப்படி கடல் கடக்கலாம்? எங்களை தள்ளிவைத்து விடுவார்களே’ என்று வாதாடினார். அவர்கள் குலதெய்வமான நாமக்கல் நாமகிரி அம்மன் கோவிலுக்குச் சென்று மூன்று நாட்கள் ராமானுஜன் உள்பிரகாரத்தில் விழுந்து கிடந்தார். இறுதியில் சம்மதம் கிடைத்தது என்று சொல்லி குடுமியை வெட்டி விட்டு நெவாசா என்ற கப்பலில் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். அவருடன் உடுப்புகளும், சமையல் பொருட்களும் அவர் வணங்கும் கடவுளரின் உருவங்களும், 120 தேற்றங்களும் பயணித்தன.
ஒரு சின்னக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த ராமானுஜனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டம் தாங்க முடியாததாக இருந்தது. இங்கேதான் நியூட்டன் படித்தார். அவர்கள் பழக்கவழக்கங்களும் உடையும் உணவுகளும் ஒத்துவரவே இல்லை. ஒருமுறை கேம்பிரிட்ஜில் படிக்க வந்த ஓர் இந்தியர் ராமானுஜனின் அறைக்கு வந்தார். ராமானுஜன் நடுங்கியபடியே உட்கார்ந்திருந்தார். அவரால் குளிர் தாங்க முடியவில்லை. தினமும் மேலங்கியுடன் தூங்கப் போவதாகச் சொன்னார். அவருடைய படுக்கையின்மேல் விரித்த கம்பளிகளுக்குள் நுழைந்து படுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவமானமாகிவிட்டது.
ஹார்டியுடனும் இவர் வேலை சுமுகமாகப் போகவில்லை. ராமானுஜன் கண்டுபித்த பல தேற்றங்கள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவருடைய தேற்றங்களை ஹார்டி நிரூபிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தார். ராமானுஜனுக்கு அது பிடிக்கவில்லை. ’அவை உண்மையானவை. அவற்றை நிரூபிக்கும் நேரத்தில் நான் இன்னும் நாலு தேற்றங்களை கண்டுபிடித்துவிடுவேனே’ என்றார். இதற்கிடையில் முதலாம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டதால். ராமானுஜனுக்கு இன்னும் பிரச்சினை அதிகமாகியது. சாமான்களுக்கு தட்டுப்பாடு. இங்கிலாந்து உணவு அவருக்கு சரிவரவே இல்லை. தானாகவே சமைக்கப் பழக்கிக்கொண்டார். மரக்கறி பால் தயிர் சாதம் இவைதான் உணவு. ஒரு நாளைக்கு இரண்டு தரம் குளிப்பார். நீண்டநேரம் பிரார்த்தனை செய்தார்.
இங்கிலாந்துக்கு வந்து இரண்டு வருடம் சென்றபிறகு சோதனை எடுக்காமலே இளங்கலை பட்டம் கிடைத்தது. கும்பகோணம் கல்லூரியில் முடிக்காமல் விட்ட பட்டப்படிப்பு ஒருவாறு பூர்த்தியானது. அவருக்கு அளவற்ற சந்தோசம். அவருடைய தேற்றங்களும் அவர் எழுதிய கட்டுரைகளும் பெரும் வரவேற்பை பெற்றன. ஆரம்பத்தில் இந்தியன் என்று இருந்த வெறுப்பு கொஞ்சம் நீங்கியது. London Mathematical Socity அங்கத்தவர் ஆக்கப்பட்டபோது அவர் அதை உணர்ந்தார்.
ஒருநாள் சட்டர்ஜி என்ற அவருடைய நண்பரும் அவர் காதலியும் அவர் வீட்டுக்கு விருந்துண்ண வந்திருந்தனர். ராமானுஜன் கோப்பையிலே ரசம் வழங்கினார். இருவரும் குடித்தார்கள் இன்னொருமுறை வழங்கினார். அப்பொழுது நன்றாயிருக்கிறது என்று குடித்தார்கள். மூன்றாவது முறை கேட்டபோது பெண் வேண்டாமென்றுவிட்டார். சட்டென்று உள்ளேபோன ராமானுஜன் வெளியே வரவில்லை. இருவரும் பலமணி நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்பினார்கள். மூன்று நாட்களாக ராமானுஜனை காணவில்லை. தேடினார்கள். நாலாவது நாள் திரும்பினார். அந்தப் பெண் ரசத்தை குடிக்காதது அவருக்கு அவமானமாகிவிட்டது. 80 மைல் தொலைவிலுள்ல ஓக்ஸ்போர்ட்டுக்கு ஓடிப்போய்விட்டதாகச் சொன்னார்.
கோமளத்தம்மாளிடம் இருந்து கடிதங்கள் வந்தன. ஆனால் ஜானகியிடமிருந்து கடிதமே இல்லை. ராமானுஜன் எத்தனை கடிதம் எழுதினாலும் ஜானகி பதில் எழுதவில்லை. கோமளத்தம்மாள் ஜானகி எழுதும் கடிதங்களை தடுத்துவிட்டார் என்பது அவருக்கு தெரியாது. ஜானகி தன்னை மறந்துவிட்டாள் என்றே நினைத்தார். காசநோய்வேறு தாக்கியதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயிருந்த கட்டுப்பாடுகள் அவருக்கு பிடிக்கவில்லை. குளியலறையில் உட்கார்ந்து தேற்றங்களை எழுதியபடியே நேரத்தை போக்கினார்.
மிகவும் குழம்பிய மனநிலையில் ஒருநாள் ஓடும் ரயிலுக்கு முன்னால் பாய்ந்தார். ரயில் ஓட்டுநர் எப்படியோ ரயிலை நிற்பாட்டி ராமானுஜனை காப்பாற்றிவிட்டார். ஆனால் போலீஸ் பிடித்துவிட்டது. தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம். ஹார்டி பொலீஸாரிடம் வாதாடி அவரை விடுதலை செய்யவேண்டி நேர்ந்தது. சிறிது நாட்களில் ராமானுஜன் எதிர்பாரத சம்பவம் ஒன்று நடந்தது. ஹார்டிகூட எதிர்பார்க்கவில்லை. முப்பது வயது ராமானுஜனுக்கு, எண்களின் கோட்பாடு தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக , Fellow of the Royal Society அதியுயர் பட்டம் வழங்கப்பட்டது. இது மிகப் பெரிய கௌரவம். அத்தனை இளவயதில் அந்தப் பட்டம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.
மருத்துவ மனையில் இருந்தபோது ஹார்டி ராமானுஜனை பார்க்க வந்தார். அவருடைய வாடகைக் காரின் நம்பர் 1729. உடனேயே ’அற்புதமான எண்’ என்றார் ராமானுஜன். ஹார்டிக்கு ஒன்றும் புரியவில்லை.
1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3.
இப்படி எழுதக்கூடிஒய ஆகச் சிறிய எண் இது என்றார். இன்றைக்கும் இந்த எண்ணை ’ராமானுஜனின் எண்’ என்றே அழைக்கின்றனர்.
ஐந்து வருடம் கழித்து, 1819ல் ராமானுஜன் இந்தியா திரும்பினார். ஜானகிக்கு 19 வயது. விவரம் தெரிந்த பெண். ஆனாலும் கோமளத்தம்மாள்தான் வீட்டுக்கு பொறுப்பு. அவரே முடிவுகள் எடுத்தார். ஒருநாள் எல்லா பிரச்சினைகளும் சேர்ந்து வெடித்தன. ஆவணி அவிட்டம் அன்று ராமானுஜன் காவேரிக்கு போகவேண்டும். ஜானகியும் வருவேன் என்றார். தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ராமானுஜன் தாயார் சொல்லை மீறி ஜானகியை அழைத்துச் சென்றார். முதன்முதலாக தாயார் சொன்னதை எதிர்த்தது அன்றுதான். அதன் பிறகு எல்லாமே மாறியது.
ஜானகியும் ராமானுஜனும் சந்தோசமாக இருந்த நாட்கள் இவை. இங்கிலாந்திலே நடந்த கதைகளை ராமானுஜன் நகைச்சுவையுடன் விவரிப்பார். ஜானகி விரிந்த கண்களுடன் கேட்பார். தான் சமைத்ததையும், அவர்கள் உறைப்பு தாங்கமுடியாமல் சுழன்றதையும் சொல்லிச் சிரிப்பார். ஜானகி எண்ணெய் பூசி முழுகிவிட்டு ஈரக்கூந்தலுடன் வந்து தலையை உலர்த்த இங்குமங்கும் அசையும் காட்சி ராமானுஜனை பரவசப்படுத்தும். அவர் தொடர்ந்து கணிதங்களை எழுதிக்கொண்டே இருந்தார். காசநோய்க்கான மருத்துவமும் ஒரு பக்கத்தில் நடந்தது. சிகிச்சைக்கு தஞ்சாவூர் போகலாம் என்று சொன்னபோது ‘தன் சா ஊர்’ தஞ்சாவூர். அங்கேயெல்லாம் போகக்கூடாது என்றார். சேத்துப்பட்டுக்கு போகலாம் என்றபோது ’அது சட்டுபுட்டென்று முடிந்துபோகும்’ என்றார். பின்னர் அங்கேதான் போனார்கள்.
ஒருவருக்கும் தெரியாமல் கோமளத்தம்மாள் பிரபலமான சோதிடர் ஒருவரிடம் போனார். சாதகத்தை கேட்டபோது ஞாபகத்திலிருந்து கிரகங்களின் நிலையை சொன்னார். சோதிடர் கணக்கிட்டு பார்த்துவிட்டு ’இந்தச் சாதகர் புகழின் உச்சியை எட்டும் அதே சமயம் இறந்துவிடுவார்’ என்றார். ’யாருடைய சாதகம்?’ என்றதற்கு கோமளத்தம்மாள் ’ராமானுஜனின் சாதகம்’ என்றார். ’மன்னியுங்கள். அவருடைய சொந்தக்காரர்களுக்கு இது பற்றி சொல்ல வேண்டாம்’ என்று கூறிவிட்டு ’நீங்கள் யார்?’ என்றார். ’நான் அவருடைய அம்மா’ என்றார்.
ஜானகியும் ராமானுஜனும் மகிழ்ச்சியாக இருந்தது சேத்துப்பட்டு வீட்டில்தான். ராமானுஜன் படுத்த படுக்கையாக கிடந்தாலும் கணித ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. ஒருநாள் ஜானகியிடம் சொன்னார் ’என்னிடம் 5000 ரூபா இருக்கிறது. உனக்கு வைரத்தோடும், தங்கஓட்டியாணமும் செய்வதற்காக வைத்திருக்கிறேன்.’ அவருடைய கால் வீக்கத்துக்கும் நெஞ்சு வீக்கத்துக்கும் ஜானகி சுடுநீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்தார். நல்ல உணவு சமைத்து ஊட்டுவார். சாம்பார், ரசம் என்று அவருக்கு பிடித்த உனவுவகை. ’நீ என்னுடன் இங்கிலாந்து வந்து சமைத்து தந்திருந்தால் இப்படி நோய் எனக்கு வந்திராதே’ என்று சொல்லி அந்த நாட்களில் கலங்குவார். கோவலனும் கண்ணகியும் கழித்த கடைசி நாட்கள்போல அவை இருந்திருக்கும். இறுதிக் கணங்களில் கட்டிலில் கிடந்த தாள்களை தள்ளிவிட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து வாயில் பால் பருக்கியபடியே இருந்தார் ஜானகி. 26 ஏப்ரல் 1920 காலையில் உலகத்தை வியக்கச்செய்த ஒப்பரிய கணிதமேதை இறந்துபோனார். அவருக்கு வயது 32.
ராமானுஜன் இறந்த பின்னர், 21 வயது ஜானகி புதிதாகத் தையல் பழகி அந்த வருமானத்தில் சீவித்தார். சில காலம் சென்று அவருக்கு ஓய்வூதியமும் கிடைத்து, 94 வயதுவரை வாழ்ந்தார். 1987ல் ரங்கஸ்வாமி என்ற பத்திரிகையாளர் ராமானுஜத்தின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜானகியை சந்தித்தபோது அவருக்கு வயது 87. நாற்காலியை கவிழ்த்துப்போட்டு அதை நடைவண்டிபோல தள்ளிக்கொண்டு வெளியே வந்து அவரைப் பார்த்தார். 67 வருடத்துக்கு முன்னர் அவர் கடைசியாக ராமானுஜனுடன் வாழ்ந்த சேத்துப்பட்டு வீட்டு நிழல்படத்தை அவரிடம் காட்டியபோது விம்மி விம்மி அழுதார். ராமானுஜனோடு அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தது அந்த எட்டே எட்டு மாதங்கள்தான். முதிய வற்றிப்போன கண்களில் நீர் வழிந்தது. என்ன அவர் மனதில் ஓடியதோ? ராமானுஜனுடைய கணித தேற்றங்களை ஒற்றை ஓற்றையாகப் பொறுக்கியதை நினத்திருப்பாரோ. சாம்பாரும் ரசமும் தயிருமாக சாதம் பிசைந்து ஊட்டியதை நினைத்திருப்பாரோ. 5000 ரூபா காசில் வைரத்தோடும், தங்க ஒட்டியாணமும் வாங்கித் தருவதாகச் சொன்னதை நினைத்திருப்பாரோ.
ராமானுஜன் இறந்த மறுநாள் ஓர் அரசாங்க எழுத்தர் அவருடைய இறப்பை மரண ஏட்டிலே 228 என்ற எண்ணின் கீழ் பதிந்தார். ராமானுஜன் உயிருடன் இருந்திருந்தால் அந்த எண்ணிலே பல அற்புதங்களை கண்டிருப்பார். ராமானுஜன் கணித உலகுக்கு எத்தனை முக்கியமானவரோ அதில் காலளவாவது ஜானகியும் முக்கியமானவர்தான். நோய்ப்படுக்கையில் இருந்த படி கடைசி நாட்களில் ராமானுஜன் எழுதிக்குவித்த அத்தனை தேற்றங்களையும் அவர் ஒரு பெட்டியில் சேகரித்தார். அந்தப் பெட்டி கேம்பிரிட்ஜில் ஒருவர் கண்ணிலும் படாமல் 56 வருடங்கள் இருந்தது. கடைசியில் ஜோர்ஜ் அண்ட்ரூஸ் என்ற அமெரிக்க கணித நிபுணர் அவற்றை தற்செயலாகக் கண்டு பிடித்தார். 87 பக்கங்கள், 600 புதுத்தேற்றங்கள். எட்டு வருடங்களாக அவரும் இன்னொரு பேராசிரியரும் சேர்ந்து அத்தனை தேற்றங்களையும் நிரூபித்து பிரசுரித்தனர்.
ஒருநாள் ஹார்டி அன்றைய உலகத்து பிரபலமான கணிதவியலாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினார். உலகில் அதி உச்சத்தில் மதிக்கப்பட்ட டேவிட் ஹெர்பர்ட்டுக்கு 80 மதிப்பெண். ஹார்டி தனக்குத் தானே அளித்தது 25 மதிப்பெண். ஆனால் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண். ஹார்டிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ராமானுஜன் சொல்வார் ‘கடவுளின் சிந்தனையை வெளிப்படுத்தாத எந்த தேற்றமும் எனக்கு பொருள் இல்லாத ஒன்று.’ ஹார்டிக்கு வியப்பு மேல் வியப்பு. ஒரு தேற்றத்தை ராமானுஜன் கொண்டுவந்து நீட்டுவார். அதை பாதி படிக்க முன்னரே இன்னொரு புதிய தேற்றம் உருவாக்கிவிடுவார். ஹார்டி ஒரூநாள் ஆற்றமுடியாமல் கேட்டார். ’எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்?’ ராமானுஜன் சொன்னார். ’நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. அதுவாகவே வருகிறது.’
· * *
மேலே சொன்ன கட்டுரையை எழுதி முடித்த பிறகு ரொபர்ட் கானிகலைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பதினைந்து நிமிடம் ஒதுக்குவதாகச் சொன்னார். நான் அவர் தங்கியிருந்த ஹொட்டலுக்கு, குறிப்பிட்ட நேரத்திலும் பார்க்க 15 நிமிடம் முன்பாகவே சென்று காத்திருந்தேன். ஐந்து நிமிடம் இருக்கும்போது அவரை அழைக்கலாம் என்பது என் எண்ணம். ஆனால் சில நிமிடங்களிலேயே ஓர் உயரமான வெள்ளைக்காரர் புன்னகையுடன் வந்தார். வெள்ளையும் சாம்பலும் கலந்த தலை முடி. நீலநிறச் சட்டைக்கு மேலே கறுப்பு ஸ்வெட்டர். நேராக என்னிடம் வந்து கைகொடுத்தார். நான் எழுந்து நின்று ஆச்சரியத்துடன் ‘எப்படி என்னைக் கண்டு பிடித்தீர்கள்?’ என்று கேட்டேன். ’நான் எழுதிய புத்தகத்தை நீங்கள் கையிலே வைத்திருக்கிறீர்கள்’ என்றார். நேர்காணலுக்கு அவர் தயார் என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார்.
கேள்வி: நீங்கள் ஒரு பொறியியலாளர். மூன்று வருடங்கள் ஒரு கம்பனியில் வேலைசெய்து நிறையச் சம்பாதித்தீர்கள். ஒருநாள் வீதியில் நடந்தபோது Harry என்று எழுதிய பெயர் பலகையை பார்த்தபோது, அது உங்கள் வாழ்க்கையை மாற்றியது. ஓர் எழுத்தாளராக மாறினீர்கள். இது எப்படி நடந்தது?
பதில்: 1970ம் ஆண்டு. எனக்கு வயது 23. என்னுடைய மனம் மிகவும் குழம்பிப் போயிருந்தது. வியட்நாம் போர் ஒரு காரணம். ’ஹரி’ என்ற பத்திரிகை அப்பொழுது மலிவுத் தாளில் தலைமறைவாக அச்சிட்டு வெலியிடப்பட்டது. என் ஆவேசமான சிந்தனைகளுக்கு அது வடிகாலாக அமைந்தது. நான் எழுதியவை மோசமான கட்டுரைகள். ஆனால் அவற்றை எழுதும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதன் பிறகு நான் பொறியியலாளர் வேலைக்கு திரும்பவே இல்லை. நான் காதலியிடம் சொன்னேன் ‘இனிமேல் நான் முழுநேர எழுத்தாளன்’ என்று. என்ன துணிச்சலில் அப்படிச் சொன்னேன் என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிர்தான்.
கே; அந்தச் சம்பவத்திற்கு முன்னர் ஏதாவது, எங்கேயாவது எழுதியிருக்கிறீர்களா?’
ப; இல்லையே. மாணவப் பருவத்தில் பள்ளிக்கூடத்தில்கூட எழுதியது கிடையாது. ஆனால் எழுத ஆரம்பித்தபோது உறுதியாக இருந்தேன். பொறியியலாளராக எனக்கு நல்ல வருமானம் இருந்தது. ஆனால் எழுத்தாளரானபோது கிடைத்த வருமானம் மிகச் சொற்பம்தான். ஆனாலும் நான் மனம் சோரவில்லை. இன்று போல அன்றெல்லாம் கணினி கிடையாது. ஒரு பழைய தட்டச்சு மெசினில் ஒருவித வெறியுடன் திருத்தி திருத்தி தட்டச்சு செய்தேன். இப்பொழுது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
கே: பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் அவ்வப்போது எழுதுவது என்பது வேறு. ஆனால் ஓர் இந்தியக் கணித மேதையின் சரிதத்தை எழுதவேண்டும் என்று எப்படித் தோன்றியது?
ப: பார்பரா குரொஸ்மன் என்பவர்தான் என்னை எழுதும்படி தூண்டினார். 1987ல் ராமானுஜனுடைய நூற்றாண்டை உலகம் கொண்டாடியது. நான் நூலகத்துக்குச் சென்று ராமானுஜன் பற்றிக் கிடைத்த குறிப்புகளைப் படித்தேன். அவர் சரிதம் சுவாரஸ்யமாக இருந்தது. பேராசிரியர் ஹார்டியும் இவரும் இணையும்போது அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டனர். கணித உலகில் இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். ராமானுஜன் இல்லாவிட்டால் ஹார்டி இல்லை; ஹார்டி இல்லாவிட்டால் ராமானுஜன் இல்லை. அவர்கள் இணைந்தது கணித உலகுக்கு மிகப் பெரிய கொடை. நானும் எழுத்துலகுக்குள் நுழைந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஒரு நீண்ட கதையை சொல்லக்கூடிய தகுதியை பெற்றுவிட்டேன் என்று எனக்குத் தோன்றியது. நானே அந்த அற்புதமான கதையை எழுதலாம் என்று தீர்மானித்தேன்.
கே: இந்தியாவில் ஐந்து வாரங்களைக் கழித்திருந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
அந்த அனுபவம் மறக்கமுடியாதது. எனக்கு வெள்ளைத்தோல் என்பதால் என்னை வியப்புடன் உற்று உற்று நோக்கினார்கள். தொட்டுக்கூடப் பார்த்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டு உதவி செய்தார்கள். முக்கியமான பலரையும் கண்டு பேச முடிந்தது. ஆவணங்களை இன்னும் சிலர் தந்துதவினார்கள். எனக்கு மிகக் குறைந்த முன்பணம் கொடுத்திருந்தார்கள். தங்குவதற்கும், பயணத்துக்கும் உணவுக்கும் அது போதாது. ஆகக் கடைசியான ஹொட்டல்களில் தங்கினேன். மலிவான உணவை உண்டேன். ஆனால் அந்த மக்களின் அன்பை மறக்க முடியாது. நான் இங்கிலாந்துக்குப் போனபோது என்னை அந்நியமாக உணர்ந்தேன். அவர்கள் ஒத்துழைக்கவே இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு எனக்கு உதவுவதில் அக்கறை காட்டினர்.
கே; கும்பகோணத்தில் மருத்துவர் சம்பந்தம் உங்களுக்கு உதவியிருந்தார். அவருடன் கோயில்களுக்கும், ராமானுஜன் படித்த பள்ளிக்கூடத்திற்கும் போய் நீண்ட நேரம் அங்கே உட்கார்ந்திருந்ததாகச் சொல்கிறாரே. என்ன காரணம்?
ப: எனக்கு பல வருடங்கள் எழுதிய அனுபவம் இருந்தாலும், முதன் முதலாக ஓர் இந்திய கணித மேதையின் சரிதத்தை எழுதுவதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்தும் இட்டிருந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. இத்தனை பெரிய பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவேனா என்ற சந்தேகம். அமைதியாக உட்கார்ந்து ராமானுஜன் சுவாசித்த அந்த காற்றை சுவாசித்தபோது மனது கொஞ்சம் தெம்பு அடைந்தது. என்னால் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து பயம் வரும்போதெல்லாம் சிறிது அமர்ந்து ராமானுஜனை மனதில் தியானம் செய்வேன். கொஞ்சம் தைரியம் வரும்.
கே: நீங்கள் இதுவரை எட்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். சமீபத்தில் வெளியான Eyes on the Street புத்தகத்துக்கு 5 வருடங்கள் உழைத்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியவற்றில் உங்களுக்கு ஆகப் பிடித்தது எது?
ப: ஓர் எழுத்தாளரிடம் கேட்கக்கூடாத கேள்வி. எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். ஆக வெற்றிகரமான புத்தகம் என்றால் அது ராமானுஜன் பற்றி எழுதிய The Man Who Knew Infinity தான். பல திசைகளிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிந்தன. 20 பதிப்புகள் கண்டது. 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதை சினிமாவாகப் படம் பிடித்தபோது இன்னும் புகழ் பரவியது.
கே; புத்தகம் மொழிபெயர்க்கும்போது உங்களுக்கு ரோயல்டி கிடைக்குமா?
ப: கிடைக்கும், ஆனால் அது மொழிக்கு மொழி வித்தியாசப்படும். கிரேக்கம், இத்தாலியன், கொரியன், சீனமொழி என்று பல மொழிபெயர்ப்புகள் வெளியாகின. அவற்றின் தராதரத்தை எல்லாம் நான் பார்ப்பதில்லை. என் ஏஜண்ட் பார்த்துக்கொள்வார்.
கே; ராமானுஜன் திரைப்படம் எப்படி இருந்தது. பார்த்தீர்களா?
ப: திரைப்படம் ரொறொன்ரோவில் 2015 செப்டம்பர் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டபோது அழைப்புக் கிடைத்து நானும் கலந்து கொண்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. திரைப்படம் நான் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டும் வெவ்வேறு ஊடகம் என்பதைப் புரிந்துகொண்டு படத்தை பார்க்கவேண்டும். புத்தகத்தில் நான் ஒரு காட்சியை 15 பக்கம் எழுதுவேன். அதை திரைக்காட்சியில் அரை நிமிடத்தில் கொண்டுவந்துவிட முடியும். அதே மாதிரி சினிமாவில் வந்த சில காட்சிகள் புத்தகத்தில் சொல்லப்படவே இல்லை. காட்சி ஊடகத்துக்கு அவை முக்கியம். புத்தகத்தை எழுத முன்னரே எனக்கு ஒரு விசயம் முக்கியமாகத் தெரிந்தது. ராமானுஜனைத் தனியாக எழுதினால் அதில் சுவாரஸ்யம் இல்லை. வெற்றியும் கிடையாது. அப்படியே ஹார்டியும். இருவரும் ஒன்று சேரும்போதுதான் அவர்கள் நட்பு பரிணமிப்பதுபோல கணித உலகமும் புதுப் பொலிவு பெறுகிறது. அவர்கள் நட்பைச் சுற்றித்தான் படம். அந்தவகையில் சினிமா மிகப் பெரிய வெற்றி. இதன் இயக்குநர் மாத்யூ பிரவுண் விடாமுயற்சிக்காரர். பல தொல்லைகள், சங்கடங்களுக்கு மத்தியிலும் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். பாராட்டுக்குரியவர்.
கே: ராமானுஜன் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது கோமளத்தம்மாள் ஒரு சோதிடரிடம் சென்றார். சோதிடர் ராமானுஜன் புகழின் உச்சியில் இருக்கும்போது இறந்துவிடுவார் என்று சொன்னார். ராமானுஜன்கூட தன் கைரேகையை பார்த்து தான் 35 வயதுக்குள் இறந்துபோகக்கூடும் என தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். இவற்றைப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டா?
ப: எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளை மதிக்கிறவன். அவர்கள் சொன்னதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயத்துக்கு புத்தகத்தில் இடமில்லை.
கே: நீங்கள் தமிழ்நாட்டில் பல வாரங்கள் அலைந்து ஆட்களைச் சந்தித்திருக்கிறீகள். ஆராய்ந்திருக்கிறீகள். புத்தகத்தில் எழுதாத ஏதாவது அதிர்ச்சி கொடுத்த சம்பவம் உங்களுக்கு ஏற்பட்டதா?
ப: அதிர்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால் நம்ப முடியாத ஓர் அதிர்ஷ்டம் எனக்கு அடித்தது. இன்றைக்கும் அதை என்னால் மறக்க முடியாது. அது நடந்திராவிட்டால் இந்தப் புத்தகம் எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம். நான் ஓர் ஆட்டோரிக்சாவில் பயணம் செய்தபோது தற்செயலாக விஸ்வநாதன் என்பவரைச் சந்தித்தேன். இவர் நாராயண அய்யருடைய பேரன். நாராயண அய்யர் ராமானுஜனுடைய வாழ்க்கையில் முக்கியமானவர். இவர்தான் துறைமுக அலுவலகத்தில் ராமானுஜனுக்கு வேலை வாங்கித் தந்தவர். இவருடைய மேலாளர் சேர் பிரான்சிஸ் என்பவர். ஹார்டியுடனான தொடர்பும் இங்கேதான் ராமானுஜனுக்கு கிடைத்தது. விஸ்வநாதன் மூலம் பல முக்கியமானவர்களைச் சந்திக்க முடிந்தது. பல கதவுகள் திறந்தன.
கே: மறுபடியும் ஆரம்பக் கேள்விக்கு வருகிறேன். ஒருவித எழுத்துப் பயிற்சியும் இல்லாமல் எழுத ஆரம்பித்தீர்கள். நல்ல ஊதியம் தந்த வேலையை யோசிக்காமல் துறந்தீர்கள். ராமானுஜனின் கதையைவிட உங்கள் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்படி உங்களால் எழுத முடிகிறது?
ப: பலதடவை இது பற்றி யோசித்திருக்கிறேன். எழுத்துக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை. அதுவாகவே வருகிறது.
END
I like what you guys are up too. Such smart work and reporting! Keep up the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my website 🙂
Can I just say what a relief to search out someone who actually is aware of what theyre talking about on the internet. You definitely know the best way to convey an issue to gentle and make it important. Extra individuals need to learn this and perceive this facet of the story. I cant consider youre not more widespread since you definitely have the gift.
The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.