எழுத்தாளரும் புகைப்படமும்

                      எழுத்தாளரும் புகைப்படமும்

அ.முத்துலிங்கம்

ஏதாவது பத்திரிகையிலிருந்து புகைப்படம் கேட்டு எழுதினால் உடனேயே சிக்கல் தொடங்கிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் இப்படி ஒரு பத்திரிகை கேட்டதும் நான் என்னிடம் இருந்த படம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. வேறு படம் இருக்கிறதா என்று எழுதிக் கேட்டார்கள். இன்னும் சில படங்கலைத் தேடி எடுத்து அனுப்பினேன். மறுபடியும் ‘கனதி காணாது’ என்று நிராகரித்தார்கள். இதுக்காக நான் ஒரு ஸ்டூடியோவுக்கு போய் படம் எடுத்து அனுப்ப முடியுமா? இருப்பதைத்தானே அனுப்பமுடியும்.

பலவருடங்களுக்கு முன்னரும் இப்படித்தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னுடைய கட்டுரையுடன் பிரசுரிப்பதற்காக ஒரு படம் கேட்டார். நான் அனுப்பிய படங்கள் ஒன்றுமே அவருக்கு பிடிக்கவில்லை. என்ன காரணம் என்றும் அவர் சொல்லவில்லை. வெளியே போய் ஒரு பிரபலமான ஸ்டூடியோவில் படம் எடுத்து அனுப்புவதென முடிவு செய்தேன். வார்டன் ஃபின்ச் சந்திப்பில் ஒரு நல்ல ஸ்டூடியோ இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு போனேன். வாசலிலே சோபியா லோரனின் பெரிய புகைப்படம் ஒன்று ஆள் உயரத்தில் நின்று வரவேற்றது. கடையின் உரிமையாளர் ஓர் இத்தாலியர். சோபியா லோரன் கனடா வந்தபோது தான் எடுத்ததாகச் சொன்னார். அவர் சொன்னதில் அரைவாசி உண்மை  இருக்கக்கூடும்.

நான் போன விசயத்தை சொல்லி எனக்கு பத்து படங்கள் எடுத்து தரவேண்டும் என்று கேட்டேன். பல்வேறு பின்னணிகளில் புத்தக அட்டைக்கு பயன்படுத்தக்கூடிய விதமான படங்கள் என்றும் கூடுதல் தகவல் தந்தேன்.  இதைவிடப் பெரிய விதமான  புகைப்படங்களை கையாண்டவர் போல நான் சொன்னதை சிரத்தையாகக் கேட்கவில்லை. ஏனென்றால் அவருக்கு புகைப்படங்கள் பற்றிய அத்தனை விசயங்களும் தெரியும். அப்பொழுதெல்லாம் எண்மியக் காமிராக்கள் இல்லை. அப்போதுதான் அவை வரத் தொடங்கியிருந்தன. இருந்தும், நின்றும், குனிந்தும், வளைந்தும் சரிந்தும் என்னை பல நிலைகளில் புகைப்படம் பிடித்தார்.  பத்துப் படங்களை தேர்ந்து வைத்துக்கொண்டு  அவ்வப்போது ஆசிரியர்கள் கேட்கும்போது அவற்றை கொடுத்து வந்தேன்.

அந்த விதமான நடவடிக்கையும் பல நாட்கள் நீடிக்கவில்லை. படத்துக்கு நிற்பதுபோல நிற்கிறீர்கள்  என்றார்கள்.  வேறு எப்படி நிற்பது? வங்கியில் கடன்

கே ட்டு நிற்பதுபோலவா? சிரிப்பு செயற்கையாக இருக்கிறது இன்னொரு குற்றச்சாட்டு.  கண்ணீருக்கு கிளிசரின் இருப்பதுபோல சிரிப்புக்கு ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை. எழுதுவது மட்டும் போதாது நடிக்கவும் தெரியவேண்டும் என எதிர்பார்த்தார்கள். படத்துக்கு நின்று காமிராவுக்காகச் சிரிக்கும்போது அது கோணலாக வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவற்றை அனுப்புவதை நிறுத்தினேன். டிஜிட்டல் காமிரா வந்த பின்னர் வேண்டிய படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தேன். எல்லா பத்திரிகைகளிலும் ஒரேமாதிரி  படங்கள் பிரசுரமாகின. என்னுடைய கட்டுரைகள் தரும் அலுப்பை விட படங்கள் வாசகர்களுக்கு அலுப்பை தந்தன.

ஒருமுறை பிரபலமான ஒரு புகைப்படக்காரரைச் சந்தித்தேன். அவரிடம் இருந்த காமிராவின் விலை அப்பொழுதே 8000 டொலர்கள் என்றார். அதிலே கூட என் முகம் என் முகமாகத்தான் வந்தது. பெரிய முன்னேற்றம் கிடையாது. ஒரு கிளிக்கில் இரண்டு படம் எடுக்கும். ஒரு படத்தில் கண் மூடி இருந்தால் மறுபடத்தில் கண் திறந்து இருக்கும். அவர் காமிராவை காலையில் அல்லது மாலையில்தான் வெளியில் எடுப்பார். சூரிய வெளிச்சத்தில் எடுத்தால் முகம் வெள்ளையடித்தது போல இருக்கும் என்பார்.

இந்தப் புகைப்படக்காரர் ஒரு மாலை நேரத்தில் சூரியன் மறைய சில நிமிடங்கள் இருந்தபோது ஒரு படம் எடுத்து தந்தார். ஒளியும் இருளும் மாறி மாறி புகைப்படத்தில் விழுந்திருக்கும். பல படங்களை எடுத்து ஒன்றை தேர்வு செய்து தந்திருந்தபடியால் அது நேர்த்தியாக இருந்தது. அதை வைத்து கொஞ்ச காலம் ஓட்டினேன். நான் மாறிக்கொண்டு வந்தேன். படம் மாறவில்லை. ஆகவே அதையும் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டியதாகிவிட்டது.

சமீபத்தில் நடந்ததுதான் நான் முற்றிலும் எதிர்பார்க்காதது. பிரபல பத்திரிகை அவசரமாகக் கேட்டதால் என் இருப்பிலிருந்து 20 படங்களை அனுப்பிவைத்தேன். அவர்களுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. ’ஏன் பிடிக்கவில்லை. இதுதான் என் முகம்’ என்று எழுதினேன். ’முகத்தை மாற்ற வேண்டாம். காமிராக்காரரை மாற்றுங்கள்’ என்று எழுதினார்கள்.

மறுபடியும் வேறு ஒருவரைப் பிடித்து அவருடைய விலை உயர்ந்த காமிராவில் 60 படங்கள் பிடித்து அதில் இருபதை தேர்வு செய்து அனுப்பிவைத்தேன். அதையும் நிராகரித்தார்கள். என்ன விசயம் என்றால் பத்திரிகையில் ’வடிவமைப்பு பிரிவு’ என ஒன்றிருக்கிறது. இது ஒரு தனி ராச்சியம். அங்கே ஆசிரியருக்கு செல்வாக்கு கிடையாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஏன் ஏது என்று கேட்கமாட்டார்கள். நிராகரிப்பதுதான் அவர்களுடைய வேலையின் பிரதானமான அம்சம். நான் என்ன நடிகரா? எழுத எடுத்த நேரத்திலும் பார்க்க மூன்று மடங்கு நேரம் படம் எடுப்பதில் செலவழிந்து போனது. இறுதியில் அவர்கள் சொன்னார்கள். மரத்தின் கீழ் எடுக்கவேண்டாம். வீட்டு வாசலில் எடுக்க வேண்டாம். பொது இடமாக, கனடாவின் பின்புலத்தில் எடுத்தால் நல்லாயிருக்கும். இந்தப் பெரிய கனடாவை எப்படி பின்புலமாக வைப்பது.

மறுபடியும் நாங்கள் காரில் சுற்றுலா சென்றோம். இடம் இடமாகச் சுற்றி அலைந்தோம். ஸ்டார்பக் கோப்பிக் கடையில் நல்ல பின்னணி கிடைத்தது. தலை விரித்துவிட்ட கனடியப் பெண்மணியிடம் நான் கோப்பி வாங்கும்போது ஒரு படம் எடுத்துவிட்டார். இரண்டாவது படம் எடுக்க முன்னர் நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.  உணவகத்துக்கு சென்று பெண்ணிடம் ஆணை  கொடுக்கும்போது  படம் எடுக்கவேண்டும் என்றேன். அவர் தலையை பின்னுக்கு இழுத்தார். அவரைத்தான் எடுக்கப் போகிறோம் என நினைத்தார். அவரும் எதிர்ப்புத் தெரிவித்தார். கனடிய வாத்துகள் கூட்டமாக அகப்பட்டது. அதிலும் பார்க்க சிறந்த பின்னணி எங்கே கிடைக்கும். ஒரு வாத்தும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில படங்களில் வாத்து என்னிலும் அழகாக தென்பட்டது.

மழை பிடித்தது. அது விட்டவுடன் அவசர அவசரமாக சில படங்கள் எடுத்துக்கொண்டோம். எண்ணிப்பார்த்தபோது 50 படங்கள் தேறிவிட்டன. செயற்கையாக இருந்த படங்களை கழித்தோம். ஒரு மாதிரி 15 படங்கள் தேறின. அனுப்பிவைத்தேன். கிடைத்ததற்கு பதில் இல்லை. கடிதம் எழுதினேன். பதில் இல்லை. வாரம் முடிந்ததும் பத்திரிகை வெளிவந்தது. நான் கனவிலும் நினைத்திராத காரியம் நடந்திருந்தது.

அட்டையில் என் உருவத்தை  ஓவியர் வரைந்திருந்தார். நாங்கள் அனுப்பிய அத்தனை படங்களிலும் ஆக மோசமன ஒரு படத்தை மிக மோசமான ஒரு ஓவியருக்கு கொடுத்திருக்கவேண்டும். அவர் என்னை வரைந்திருந்தார். என்னைப்போலவே இல்லை. என் பக்கத்து வீட்டுக்கரரைப்போல கூட இல்லை. இனிமேல் பிறக்கப் போகும் ஒருவருடைய படம் போல இருந்தது. அந்தப் படத்தில் உள்ளவர் அணிந்திருந்த  உடை போல ஒன்று என்னிடம் இல்லை. 18ம் நூற்றாண்டு இங்கிலாந்து அரசனின் வாசல் காப்போன் நிராகரிக்கக்கூடி ஓர் உடை. அவர் கற்பனையில் உருவாக்கியது. இவருக்கு நான் என்ன தீங்கிழைத்தேன் என யோசிக்க வைத்தது.

அடுத்த பிறவியில் பிரதி வடிவமைப்பாளராக பிறக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டேன். எழுத்தாளர் எத்தனை படம் அனுப்பினாலும் அதில் மோசமானது எது என்று என்னால் எளிதாகக் கண்டுபிடிக்கமுடியும்.

END

About the author

1 comment

Leave a Reply to Radhakrish Cancel reply

  • நல்ல நகைச் சுவையாக இருந்தது. இறுதியில் ஒரு அருமையான கண்டுபிடிப்பு…

    ராதாகிருஷ்

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta