ஊபர்

ஊபர்

அ.முத்துலிங்கம்

சிலருக்கு  எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போனபோதும் இப்படி நடந்தது.

ஒருநாள் காலை நண்பரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. ’ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம். வரமுடியுமா?’ வழக்கம்போல  சரி என்று சொல்லிவிட்டு பின்னர் எப்படி போவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இத்தனை காலமாக செல்பேசியில் ஊபரை பயன்படுத்தியது  கிடையாது. அழைத்தேன். நாலு வாகனங்கள் அருகாமையில் இருந்தன. அதில் ஒன்று 5 நிமிட தூரம் என்று சொன்னது. அதையே தெரிவுசெய்தேன். சிரிது நேரத்தில் கார் வர நான் ஏறி அமர்ந்தேன்.

ஊபரில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. சாரதியிடம்  நான் போகவேண்டிய முகவரி இருந்தது. எத்தனை மணிக்கு அங்கே போய்ச்சேருவேன் என்ற தகவலும், கட்டண விவரமும்   என்னிடம் இருந்தன. போகவேண்டிய இடம் வந்ததும் இறங்கிச் செல்லலாம். பணம் கொடுக்கத் தேவையில்லை. அது நேராக கடன் அட்டை மூலம் ஊபர் கம்பனிக்கு போய்விடும். சாரதியுடன் பேசவேண்டிய அவசியமே கிடையாது.

காருக்குள் ஏறி அமர்ந்தவுடன் என் வழக்கப்படி வணக்கம் சொன்னேன். அவரும் சொன்னார்.  ஆர்மீனியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதி அவர். சொந்த நாட்டில் சுற்றுச்சூழலில் முனைவர் பட்டம் பெற்றவர், இங்கே வாடகைக் காரோட்டுவதாகச் சொன்னார். ஆங்கிலம், ரஸ்யன் மற்றும் ஆர்மீனியன் மொழிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுகிறார். வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டே இருக்கிறார், கிடைக்கவில்லை. ’இங்கே என்ன முக்கியமான பிரச்சினை பற்றி எழுதுகிறீர்கள்?’  ’ஆந்தைகள் அழிந்துகொண்டு வருகின்றன. அதைப்பற்றி எழுதுகிறேன்’ என்றார்.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார். 10 – 15 பயணம் கிடைக்கிறது. வெள்ளிக்கிழமைகளில்தான் ஆகக் கூடிய வருமானம். சிலவேளை இரவிரவாக வேலை செய்வதாகச் சொன்னார். இவருடைய வருமானத்தில் 20 வீதம் ஊபர் பிடித்துக்கொள்கிறது. மீதி அவருக்கு மட்டு மட்டாக இருக்கிறது.  மிகவும் கஷ்டமான சீவனம் என்று கவலைப்பட்டார். ’தளராதீர்கள், விரைவில் வெற்றி கிட்டும்’ என்று உற்சாகப்படுத்தினேன். நான் இறங்கும் இடம் வந்ததும்  நெஞ்சிலே வலது கையை வைத்து ’சானெட் ரானெம்’ என்றேன். அவர் திகிலடித்ததுபோல படாரென்று காரைவிட்டு இறங்கி வலது கையை நெஞ்சிலே வைத்து ’சானெட் ரானெம்’ என்றார். ஆர்மீனிய மொழியில் அதன் பொருள் ’உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்.’ ஆர்மினியாவில் தாய்மார் குழந்தைகளை ஆற்றும்போது முதுகிலே தட்டி ’சானெட் ரானெம்’ என்று சொல்வார்கள். அதுவே நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொள்ளும் முகமன் வார்த்தையாக மாறியது. உலகத்து முகமன் வார்த்தைகளில் இது மிகச் சிறந்தது என்று நான் நினைப்பதாகச் சொன்னேன். ’உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றார். மொகமட் நாஸிகு அலி என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர். அவர் எழுதிய கதை ஒன்றைப் படித்து தெரிந்து கொண்டேன் என்றேன். அவர் கண் கலங்கியது. குனிந்தபடி காரில் ஏறிப் புறப்பட்டார்.

நான் சந்திப்பு நடக்கும் இடத்தை நோக்கி நடந்தேன். அரை மணி நேரத்தில் வந்த காரியம் முடிந்துவிட்டது. திரும்பவும் வாசலுக்கு வந்து ஊபரை அழைத்தேன். அது வேலை செய்யவில்லை. பலமுறை அழைத்துக் களைத்துப்போய் வரவேற்பு பெண்மணியிடம் ஒரு டாக்சி வரவழைக்கச் சொன்னேன். அவர் ’அது தேவையில்லை. வலது பக்கம் திரும்பி நேரே போனால் அங்கே ஒரு ஹொட்டல் இருக்கும். அதன் முகப்பில் பல டாக்சிகள் நிற்கும்’ என்றார்.

நீளத்துக்கு வாடகைக் கார்கள் நின்றன. முதலாவது கார் சாரதியிடம் என் முகவரியை சொல்லிவிட்டு ஏறி உட்கார்ந்தேன். மறுபடியும் என் முகவரியை கேட்டார். சொன்னதும் அதை புவிநிலை காட்டியில் (GPS) பதிவு செய்ய முயன்றார். மறுபடியும் கேட்டார். சொன்னேன். அது வேலை செய்யவில்லை. கதவை படாரென்று திறந்து இறங்கி நின்றார். தொப்பியை கழற்றி கையிலே அடித்தார். தலைமுடி இரண்டு மடங்கு பெரிசாகி அதுவே ஒரு பெரிய தொப்பிபோல காணப்பட்டது. தலையை சொறிந்தார். ஏதோ யோசித்து  பின்னால் நின்ற  டாக்சி சாரதியின் செல்போனை இரவல் வாங்கி வந்தார். அதிலே பதிவதற்கு மறுபடியும் முகவரியை கேட்டார். நான்  சொல்ல, அதைப் பதிந்துகொண்டே காரை வேகமாக எடுத்தார். நான் மறக்கமுடியாத அந்தப் பயணம் ஆரம்பமானது.

நான் வசிக்கும் நகரத்தின் பெயரைச் சொன்னதும் அப்படி ஒரு நகரமே இல்லை என்று வாதாடினார். ‘அரை மணி நேரம் முன்பு நான் அங்கேயிருந்துதான் இங்கே வந்தேன். அவர் நம்ப முடியாமல் தலையை இருபக்கமும் ஆட்டினார். செல்பேசியில் முகவரியை பதிந்த பின்னரும் அது ஒருவித அசைவும் இல்லாமல் கிடந்தது. நேர்க்கோட்டுச் சாலையில் காரை வேகமாகச் செலுத்தினார். எதிரே வேகமாக வந்த வாகனங்களுக்கும், எங்களைத் தாண்டிப் போன வாகனங்களுக்கும் அவை எங்கே போகின்றன என்பது தெரிந்திருந்தது. சாரதிக்கு அவர் எந்த இலக்கை நோக்கி ஓட்டுகிறார் என்பது தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. காருக்கும் தெரியவில்லை.

கார் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது. முன் கண்ணாடியில் ’மரணம் வெகு தூரத்தில் இல்லை’ என்ற வாசகம் எழுதியிருந்தது. பயணிகளுக்கு ஆறுதல் தருவதற்கு எழுதி வைத்திருக்கிறாரா அல்லது உற்சாகம் தருவதற்கா? ரேடியோவில் ஒலி விசை உச்சத்தில் இருந்தது. ’ஏசு எங்களுடன் வருகிறார்’ என்றது பாடல். இரவல் செல்பேசி வழி காட்டாததால்  அந்த எரிச்சலில் தொலைபேசியில் யாரையோ அழைத்தார். அவருடன் ஏதோ மொழியில் பேசிவிட்டு மறுபடியும் அப்படி நகரம் இல்லை என்று என்னிடம் வாதாடினார். நான் நகரத்தின் பெயரை வெ-ஸ்-ட-ன் என்று எழுத்துக்கூட்டிச் சொன்னேன். டெலிபோனில் பேசியவர் பெண்ணாக இருக்கவேண்டும். சாரதியின் குரலில் சரசம் இருந்தது.  டெலிபோன் பெண் ஏதோ சொல்ல சாரதி வாகன வேகத்தைக் குறைக்காமல் சட்டென்று யூ திருப்பம் போட்டு  எதிர்பக்கமாக ஓட ஆரம்பித்தார்.

இப்பொழுது எங்கே எப்படி போவதென்பது தெரியுமா என்று கேட்டேன்.  அவர் பதில் பேசவில்லை.  என் வாழ்நாளில் நான் பயணம் செய்த அத்தனை நாடுகளிலும் இப்படி ஒரு சாரதியை சந்தித்தது கிடையாது. அவரின் ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. செல்பேசியிலும் வரைபடம் வரவில்லை. யாரோ பெண் பாதை விவரம் சொல்ல, இவர் ஓட்டிக்கொண்டு போவாராம். ஒரு முன்னேற்றம் என்னவென்றால் நான் போகவேண்டிய நகரம்  இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டார்.

இவரை பக்கவாட்டில் பார்த்தேன். முழு இருக்கையையும் நிறைத்து உட்கார்ந்திருந்தார். முகவரி தெரியாமல் ஓட்டுகிறோமே என்ற பதற்றம் கிடையாது. ஜமாய்க்கா நாட்டுக் காரராக இருக்கவேண்டும். ஆப்பிரிக்கர்களில் நிஜ ஆப்பிரிக்கரை கண்டு பிடிப்பதற்கு ஒரு சோதனை இருக்கிறது. அவர் முடியிலே ஒரு பென்சிலைக் குத்துவார்கள். எவ்வளவு தலையை ஆட்டினாலும் பென்சில் கீழே விழாது. இவரது தலைமுடியும் அடர்த்தியாக சுருண்டு கிடந்தது. எத்தனை பென்சில்கள் குத்தினாலும் புதைந்துபோகும். தோற்றமும் ஆப்பிரிக்கர்போலவே இருந்தது. 300 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் கூலிவேலைக்கு  சிறைபிடித்த ஆப்பிரிக்க வம்சாவளியில் வந்தவராக  இருக்கலாம்.

ஜமாய்க்கர்களுடைய  மொழி பட்டோயி என்று சொல்வார்கள். பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்திருக்கும். இரண்டு கைகளையும் ஆட்டி, விழிகளை சுழற்றி உரத்த குரலில் பேசுவார்கள். ரேடியோ சத்தத்தை மீறி கூவுவதுபோல  என்னிடம் பேசினார். ரேடியோ ஒலியை குறைக்கலாம் என்று அவருக்கு தோன்றவே இல்லை. ’சரியான பாதையில் போகிறீர்களா?’ என்று கத்தினேன்.  ரேடியோவில் இப்போது ’யேசுவே எங்கள் ரட்சகரே’ பாட்டு போய்க்கொண்டிருந்தது. இடது பக்க தலையை இடது பக்க கார் கண்ணாடியில் சாய்த்தபடி சாவதானமாக காரை ஓட்டினார். மீட்டரில் கட்டணம் படபடவென்று ஏறியது. புற்றிலிருந்து பாம்பு வெளியே வரக் காத்திருப்பதுபோல அவர் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைக்காக காத்திருந்தேன். ஒரு கணம் தலையை யன்னலில் இருந்து எடுத்து ’கவலையை விடுங்கள். யேசு எங்களுடன் கூட வருகிறார்’ என்றார். அவரும் வழி தவறிவிட்டாரா என்று நான் கேட்கவில்லை.

அத்தனை டாக்சிகள் நிரையாக நின்றன. இவரை எப்படி தேர்வு செய்தேன். என்னால் நம்ப முடியவில்லை. குரலிலே நட்பையும் கனிவையும் வரவழைத்துக்கொண்டு மெதுவாகக் கேட்டேன். ’நீங்கள் என்னை எதிர்வரும் ஆஸ்பத்திரியிலோ, ஹொட்டலிலோ இறக்கிவிடுங்கள். நான் வேறு ஒரு டாக்சி பிடித்து மீதித் தூரத்தை கடந்துவிடுவேன்’ என்றேன்.  அவர் சம்மதிக்கவில்லை. ’நோ நோ’ என்றார். மறுபடியும் யாரையோ செல்பேசியில் அழைத்தார். எனக்கு சமீபத்தில் படித்த ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ‘எச்சரிக்கை, ஓ வழிப்போக்கரே. ரோடும் உன்னோடு நகர்கிறது.’ உண்மைதான். அதே இடத்தில் நிற்பதுபோலத்தான் பட்டது. ’என்னுடைய வாடிக்கையாளரை பாதியிலேயே இறக்கிவிடும் வழக்கம் எனக்கில்லை’ என்றார். கார் தன்பாட்டுக்கு அதுவே தீர்மானித்த திசையில் ஓடிக்கொண்டிருந்தது.

நகரங்களில் கார் ஓட்டும்போது சரியான திருப்பத்தை தவறவிடக்கூடாது. விட்டால் மீண்டும் அதே பாதையை பிடிப்பது பெரும் பிரச்சினையாகிவிடும். தன் முழு உடம்பையும் சிரமப்பட்டு திருப்பி என்னைப்  பார்த்து ’ஒரு டொலர் இருக்குமா?’ என்றார்.  என் வியப்பை நிமிடத்துக்கு நிமிடம் கூட்டினார். இவரிடம் ஜி.பி.எஸ் இல்லை. செல்பேசி இல்லை. ஒரு டொலர் காசு இல்லை. இவருக்கு எப்படி பொஸ்டன் போன்ற ஒரு மாநகரத்தில் டாக்சி ஓட்ட அனுமதி கிடைத்தது. ’எதற்கு ஒரு டொலர்?’ என்று கேட்டேன். ’மாஸ்பைக் ரோட்டு வரி ஒரு டொலர் கட்டினால்தான் மேலே போகலாம்.’ நான் ஒன்றுமே பேசவில்லை.  ஒரு டொலரை மிச்சப் படுத்துவதற்காக  காரை படாரென்று திருப்பி குறுக்குப் பாதையில் ஓட்ட ஆரம்பித்தார். இவரிலே உள்ள அழகான அம்சம் என்னவென்றால் காரை திருப்பின பின்னர்தார் சைகை கொடுப்பது.

கார் இப்பொழுது நான் முன் எப்போதுமே பார்த்திராத பாதை ஒன்றில் ஓடியது. பொஸ்டன் நகரத்தில் இப்படி ஒடுக்கமான பாதைகள் இருப்பதை அன்றுதான் கண்டேன். கடாமுடா என்ற சத்தத்துடன் கார் துள்ளித் துள்ளி விழுந்தது. சமீபத்தில் பேராசிரியர் டேவிட் ஷுல்மன், காளிதாஸனின் சாகுந்தலம் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. வேட்டைக்கு புறப்பட்ட துஷ்யந்தன் வில்லைப் பிடித்து நிற்க, தேர் காட்டுப் பாதையில் துள்ளித் துள்ளி வேகமாகப் பறந்தது. தேர்ப்பாகன் குதிரைகளைப் பிடித்தபடி அவை பாதையில் சரியாக  ஓடுகின்றனவா என்று முன்னேயும், அரசன் விழாமல் நிலையாக நிற்கிறாரா என்று பின்னேயும் பார்ப்பானாம். தலை முன்னுக்கும் பின்னுக்கும் ஆடியபடியே இருக்கும்.

சாரதி அடிக்கடி திரும்பி பார்த்தார். நான் இருக்கை பெல்ட்டினால் என்னை இறுக்கிக் கட்டியிருந்தாலும் சீட்டின் நுனிக்கு வந்துவிட்டேன். போர்க்களத்தில் கதைப்பதுபோல பெரிய குரலில் சாரதி பேசினார்.  பாதிதான் என்னிடம் வந்து சேர்ந்தது. கொஞ்சம் இருட்டி, பகலின் நிறம் மாறியது. பனி பெய்தாலும் பெய்யலாம். இவருடன் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே. திடீரென்று ரேடியோ பாடலை மீறி ஒரு பெண்குரல் அசரீரி போல ஒலித்தது. புழு ஊரும் சத்தத்துக்கு மேல் என் செவிகளால் தாங்கமுடியாது. இத்தனை சத்தத்துடன் அசரீரிக் குரலும் சேர்ந்துகொண்டது.  ’500 மீட்டர் தூரத்தில் வலது பக்கம் திரும்பவும்’ என்றது. பேசியது அசரீரி அல்ல, அவருடைய செல்பேசி. உடம்பை வளைத்து திரும்பி என்னைப் பார்த்து மூன்று அடைத்த பற்களாலும், நாலு அடைக்காத பற்களாலும் சிரித்தார். ’என்ன?’ என்று கேட்டேன். அவர் அரை மணிநேரம் முன்பு பதிந்த என்னுடைய முகவரி இப்பொழுதுதான் செல்பேசியில் உயிர் பெற்று வழி சொல்ல ஆரம்பித்திருந்தது. நான் சொன்னேனே ’யேசு எங்களுடன் இருக்கிறார்.’ செல்பேசி தொடர்ந்து வழி சொன்னது. பல திருப்பங்களை கடந்து வந்ததும் உயிர் பெற்றது போல சட்டென்று மறுபடியும் நின்று போனது. ’என்ன? என்ன?’ என்று கேட்டேன். ’ஓ சிக்னல் போய்விட்டது’  என்று சொல்லிவிட்டு இடது பக்க கண்ணாடியில்  தலையை சாய்த்து, ஒரு தோள்மூட்டு மேலே உயர்ந்திருக்க வேகம் குறைக்காமல்  ஓட்டினார்.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழிந்துவிட்டது. சந்திப்பு நடந்த இடம்  என் வீட்டிலிருந்து 30 நிமிட தூரத்திலும் 28 டொலர் செலவிலும் இருந்தது. இத்தனைதூரம் தாண்டிவிட்டோம் அவருக்கு நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது தெரியாது. எனக்கும் தெரியாது. என் பதறிய பார்வையை கண்டுவிட்டார். ’உங்களுக்கு நேரம் பிந்திவிட்டதா? ஏதாவது அவசரமா?’ என்றார். ‘அவசரம் ஒன்றுமில்லை. பத்தாயிரம்  வருடங்கள் முன்னர் புறப்பட்ட நட்சத்திர வெளிச்சம் இன்னும் பூமியை வந்தடையவில்லை’ என்றேன். ’புரிகிறது. உங்கள் நகரத்தின் பெயரை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்?’  ’அடப்பாவி’ என்று மனதுக்குள் திட்டினேன். அந்தக் கணம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. PERKINS என்று எழுதிய பெரிய பலகை தென்பட்டது.  நீண்ட வெள்ளைக் கார் ஒன்று எங்களைக் கடந்து போனது. மீட்டர் சரியாக 64 டொலர் காட்டும்போது கேட்கும் கேள்வியா இது? ரேடியோ இன்னொரு யேசு கீதத்தை ஆரம்பித்தது.

அற்புதம் நடக்கவேண்டிய தருணம் அணுகியது. முன்வினைப் பயன் காரணமாக ’வீதி 30’ தென்பட்டது. அது ஒன்றுதான் எனக்குப் பரிச்சயமான  வீதி. ‘திருப்புங்கள் திருப்புங்கள்’ என்று அலறினேன். பட்டென்று யூ திருப்பம் செய்வதிலும், சட்டென்று பிரேக் அடிப்பதிலும், திடீரென்று ரோட்டு மாறிவிட்டு பின்னர் சைகை கொடுப்பதிலும் சாரதி ஈடு இணையற்றவர். அப்படியே செய்தார். நான் வழி சொல்லச் சொல்ல  ஒவ்வொரு திருப்பமாக எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அவர் சுவாசப்பையை காலி பண்ணுவதுபோல எல்லாக் காற்றையும் வெளியே அனுப்பினார். நெஞ்சு நடுக்கத்தை காட்டாமல் அவரிடம் எவ்வளவு என்றேன். மீட்டரைப் பார்த்துவிட்டு 72 டொலர் என்று வாய்கூசாமல் சொன்னார்.  ஒரு டொலர்கூட சில்லறை அவரிடம் கிடையாது என்பது எனக்குத் தெரியும். அன்று வீடு வந்து சேர்ந்தது அதிசயங்களில் ஒன்று. எதிர் திசையிலும், குறுக்குப் பாதையிலும் ஒரு கவலையும் இல்லாமல், மீட்டர் ஒரு பக்கம் ஓட, இவர் மறு பக்கம் ஓட்டி என்னை உயிருடன் கொண்டு வந்து சேர்த்த சாதனைக்காக மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுத்தேன்.  நன்றி என்று சொன்னார்.

‘ஐயா, நான் எப்படித் திரும்பிப் போவது?’  நான் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சாரதிகளிடம் வழி கேட்டிருக்கிறேன். முதன்முதலாக என்னிடம் ஒரு வாகன ஓட்டி வழி கேட்கிறார். ‘வந்த மாதிரித்தான். ஏசு உங்களுடன் வருகிறார்’ என்றேன்.

END

 

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta