மீண்டும் படிப்பதில்லை

                                    மீண்டும் படிப்பதில்லை

                                          அ.முத்துலிங்கம்

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம் திகைத்துப் போய்விட்டேன். அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். எப்படி யோசித்தும் எனக்குச் சொந்தமான ஒரு புத்தகத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  

சிறுவயதில் அம்புலிமாமா, கல்கண்டு முதலியவற்றை இரவல் வாங்கி படித்தது உண்டு. அது பின்னர் கிராமம் முழுக்க சுற்றுக்கு போய்விடும். கொஞ்சம் பெரியவன் ஆனதும் கல்கி, ஆனந்த விகடன் தொடர்களை படிக்க ஆரம்பித்தேன். கொக்குவில் போன்ற சிறிய கிராமத்தில் வாசிகசாலைகூட கிடையாது. புத்தகங்களை கடன் வாங்கி படிக்கத்தான் முடியும். பல்கலைக்கழகத்தில் யாராவது நண்பர்களிடம் இரவல் வாங்கி இரவு இரவாக படித்துவிட்டு அடுத்தநாள் காலை திருப்பிவிடுவேன். பல்கலைக்கழக படிப்பு முடிந்தபிறகு வேறு படிப்பு தொடங்கியது. ஆகவே கையில் பணம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாங்கிச் சொந்தமாக்கவேண்டும் என்ற சிந்தனையே  எனக்கு ஏற்படவில்லை. எல்லோரும் என்னைப்போல புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கிறார்கள் என்றே நினைத்தேன்.

எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கை பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.  என்னுடைய சொந்த அக்காவை கதாபாத்திரமாக வைத்து எழுதிய ’அக்கா’ சிறுகதை இலங்கையில் முதல் பரிசு பெற்றது. பின்னர் அந்த தலைப்புடன் சிறுகதை தொகுப்பு புத்தகமாக வெளிவந்தது. இப்பொழுது நினைத்துப்  பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ’அக்கா’ சிறுகதை புத்தகம்தான். ஆசிரியர் என்ற வகையில் எனக்கு 10 புத்தகங்கள் கிடைத்தன. ஆனால் அவை ஒவ்வொன்றாக மறைந்து இன்று என் கையில் ஒரேயொரு புத்தகம் மிஞ்சியிருக்கிறது. அதே அட்டை; அதே படம், அதே பழுப்பு நிற தாள், அதே மங்கிய எழுத்து.

பின்னாளில் Margaret Mitchell எழுதிய நூலை படித்தபோது நான் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்வேன். அவர்தான் உலகப் பிரபலம் பெற்ற Gone With the Wind நாவலை எழுதியவர். இந்த நாவலுக்கு அந்தக் காலத்திலேயே புலிட்ஸர் பரிசு கிடைத்தது. மார்கிரட் ஓர் அசுர வாசகி. கணவர் என்ன புத்தகம் கொண்டு வந்தாலும் அதை ஒருநாளில் வாசித்து முடித்துவிட்டு வேறு கேட்பார். ஒன்றிலும் அவருக்கு திருப்தியே வராது. அப்பொழுது ஒருநாள் கணவர் சொன்னார். ‘உனக்கு ஒரு நாவலும் பிடிக்கவில்லை. நீயாகவே ஒன்றை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் அந்த நாவல். அவருக்கு பிடித்த நாவலை அவரே எழுதியது போலத்தான் ஒரு புத்தகத்தை சொந்தமாக்க எனக்கு கிடைத்த ஒரே வழி நானே ஒன்றை எழுதுவதுதான்.

ஒரு புத்தகம் எனக்கு சொந்தமானாலும் நான் அச்சில் வந்த என்னுடைய படைப்பை படிப்பது கிடையாது. பல எழுத்தாளர்களுக்கும் இந்த பிரச்சினை உண்டு. எழுத்தாளர்  சு.ரா சொல்வார் தான் எழுதி அச்சாகியதை  திருப்பி படிப்பதே இல்லையென்று. அச்சாகும் முன்னர் எத்தனை தடவை என்றாலும் திருத்தி எழுதுவார் ஆனால் அச்சான பின்னர் படிப்பதே கிடையாது. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. வெளியிட்டவுடனேயே அது வாசகர்களுக்கு சொந்தமாகிவிடுகிறது. எழுத்தாளர் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

சமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்வதுதான் இதை எழுதுவதன்  நோக்கம். எந்த அக்காவை பாத்திரமாக வைத்து 1964ல் ’அக்கா’ என்ற சிறுகதையை எழுதினேனோ அந்த அக்கா 2019ம் ஆண்டு சனவரி மாதம் தேதி 26 சனிக்கிழமை இரவு 9.30க்கு காலமானார். அப்போது இலங்கையில் தேதி 27  ஞாயிறு காலை 8.00 மணி. அங்கே அந்த நேரம் தினமலர் என்ற பத்திரிகையில் 54 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ’அக்கா’ சிறுகதை மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தது. இது எனக்கு தெரியாது. ஆனால் முன்பின் தெரியாத ஒருவர், பெயர் இஸ்ராத், என்னை தொலைபேசியில் அழைத்து, சிறுகதை வெளியான செய்தியை எனக்கு சொன்னார். நான் அளவில்லா ஆச்சரியமடைந்தேன். அவருக்கு அக்கா இறந்துபோனது தெரியாது. அதைச் சொன்னேன். அவரால் அந்தச் செய்தியை நம்பமுடியவில்லை. 54 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பற்றி எழுதிய கதை அவர் இறக்கும் நாளில் மறுபிரசுரமானதை எப்படி விளக்குவது.

ஒரு நண்பர் அந்தப் பத்திரிகையில் வந்த சிறுகதையை படமாக மாற்றி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஒரு முறை அச்சில் வந்ததை நான் படிப்பதில்லை. விதிவிலக்காக அந்தச் சிறுகதையை மறுபடியும் படித்தேன். பல சம்பவங்களை மறந்துவிட்டேன். பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. 54 வருடங்களுக்கு முன்னர் முதல் முறை இந்தச் சிறுகதை பிரசுரமானபோது அக்கா உயிருடன் இருந்தார். இம்முறை அது பிரசுரமான அதே நாள், அதே நேரம் அவர் உயிரை விட்டார்.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta