இல்லை என்பதே பதில்

இல்லை என்பதே பதில்

அ.முத்துலிங்கம்

தொடக்கம்

பெர்சி ஸ்பென்சர்  என்பவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்த ஓர் அமெரிக்கர். இவர் பின்னர் தானாகவே கற்றுக்கொண்டு  விஞ்ஞானி ஆனார். 1945ல் ஒரு குளிர்கால பகல் நேரத்தில் கதிர் அலை பற்றிய பரிசோதனை முடிவில் அவர் சட்டைப் பையில் இருந்த சொக்கலெட் உருகிவிட்டது. அது ஏன் நடந்தது என்று வியப்பு மேலிட  தொடர்ந்து ஆராய்ச்சி செய்து நுண்ணலை அடுப்பை கண்டுபிடித்தார். இன்று உலகம் முழுக்க பாவனையில் இருக்கும் அடுப்புக்கு மூல காரணமாக இருந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

இப்படியான ஒரு தற்செயல் நிகழ்வு 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி நடந்தது. விஜய் ஜானகிராமன் அமெரிக்காவில் 40 வருடமாக பணியாற்றிவரும்  பிரபல இருதய நிபுணர். தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டவர். இவர் வைதேகி ஹெர்பர்ட் என்பவரை சந்தித்தார். வைதேகி தமிழில் புலமை வாய்ந்தவர். சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனியொருவராகச் செய்து வரலாறு படைத்தவர். ஜானகிராமன் அவரைச் சந்தித்தபோது ’தமிழுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம்?’ என்றார். வைதேகி அம்மையார் ‘ ஹார்வர்ட் பல்கலைக் கழகம் உலகத் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கிறது. தமிழ் இன்றும் வாழும் ஆதி மொழி; செம்மொழி. மேன்மையான இலக்கியங்கள் கொண்டது. இந்த மொழிக்கு, 380 வருட பாரம்பரியம் கொண்ட ஹார்வர்டில் இருக்கை கிடையாது. இது மிகப்பெரிய அநீதி. உலகத்தில் மூத்த மொழி ஒன்றுக்கு மூத்த பல்கலைக்கழகத்தில் இடம் தருவதுதானே முறை’ என்றார்.

முதல் பொறி

இதுவே முதல் பொறி. மீன் துள்ளி விழும்போது வானத்தை பார்க்கும் என்பார்கள். சிறிய துள்ளல் பெரிய தரிசனம். ஜானகிராமன் மனதில் வியாபித்திருந்தது தமிழ் வானம்தான்.  உலகத் தமிழர்கள் மனது வைத்தால் முடியாத காரியமா என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.  அமெரிக்காவில் வாழும்  சுந்தரேசன் சம்பந்தமும்  புகழ்பெற்ற மருத்துவர். தமிழில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இருவருமாக சென்று ஹார்வர்ட் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் விருப்பத்தை சொன்னார்கள். ஹார்வர்ட் பெரும் ஆர்வம் காட்டவில்லை. விடாப்பிடியான  தொலைபேசி உரையாடல்களுக்கு  பின்னர்  ஹார்வர்ட் ஆறு மில்லியன் டொலர் வைப்பு நிதி கட்டவேண்டும் என்ற  நிபந்தனையை விதித்தது.  ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் செலுத்தி ஹார்வர்ட் நிதி திரட்டலை தொடங்கத் தீர்மானித்தார்கள். அடுத்து வந்த  ஹார்வர்ட் சந்திப்பில் அவர்களுடன் நானும் நின்றேன்.  அவர்கள் சார்பில் காசோலையை வழங்கி  நிதி  திரட்டலை ஆரம்பித்து வைக்கும் பெருமையை எனக்கு கொடுத்தார்கள்.  தொடர்ந்து அமெரிக்காவில்  தமிழ் இருக்கை அமைப்பு  அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டது. இதன் நோக்கம் உலகத்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்குவது.  முதல் படியாக  ஹார்வர்ட், அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ மற்றும் முக்கிய  தமிழ் இருக்கைகள் என்று முடிவுசெய்யப்பட்டது.

ஹார்வர்ட் விழா

ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஆரம்ப விழா அமெரிக்காவில் நடக்கவில்லை.  6 டிசம்பர் 2015 அன்று, கனடா, மார்க்கம் நகரில் நடந்தது. பனிசூழ்ந்த  இரவுக் கூட்டத்தில் மக்கள் குழுமியிருந்தது உற்சாகம் அளித்தது. இரண்டு மருத்துவர்களும் பேசினார்கள். அப்போது அவர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு முடிந்தபின்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப் போவதாக  உறுதியளித்தார்கள். மக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றார்கள்.

ஹார்வர்ட்டின் வெற்றி

ஆரம்பத்தில் நினைத்ததுபோல ஹார்வர்ட் நிதி சேகரிப்பு இலகுவாக அமையவில்லை. பணம் கொடுத்தவர்களிலும் பார்க்க கேள்வி கேட்டவர்களே அதிகம். எதிர்பாராத தடைகள் வந்தன. மருத்துவர் ஜானகிராமன் ‘தடைகள் என்பவை மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள்’ என்று நம்புகிறவர்.  மருத்துவர் சம்பந்தமோ நிதி சேகரிக்கும் கூட்டங்களில் இப்படிப் பேசினார். ‘நான் அமெரிக்காவுக்கு வந்தபோது என்னுடைய சொத்து என் சட்டைப் பையில் இருந்த 8 டொலர்தான். நான் இந்த உலகத்தை விட்டு நீங்கும்போது என் சொத்து அதிலும் குறைவாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஈத்துவக்கும் இன்பத்துக்கு ஈடில்லை.’ சிறிது சிறிதாக செய்தி உலகம் முழுக்க பரவி ஆதரவு பெருகியது. தமிழக அரசு $1.5 மில்லியன் நன்கொடை வழங்கியது. தமிழ்நாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருத்தர் சிறையில் கிடைத்த பணம் முழுவதையும் ஹார்வர்டுக்கு தானம் செய்தபோது பத்திரிகைகள் எழுதின.  ஒரு கட்டத்தில் உலகெங்கும் இருந்து பணம் வந்து குவிய, பொது அறிவித்தல் மூலம் ’பணம் அனுப்பவேண்டாம்’ என்று கேட்டு நிறுத்தவேண்டி  நேர்ந்தது.

ரொறொன்ரோ தமிழ் இருக்கை தொடக்கம்

’தோசைக் கல்லை ஆறப்போடக் கூடாது’ என்று மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி விஜயா அடிக்கடி சொல்வார்.   5 மார்ச் 2018ல் ஹார்வர்ட் நிதி சேகரிப்பு முடிவுக்கு வந்தது. சூட்டோடு சூடாக, ரொறொன்ரோ தமிழ் இருக்கை முயற்சி   10 மே 2018 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதை உற்சாகத்தோடு வேகமாக முன்னெடுத்தவர் சிவன் இளங்கோ. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டொலர்கள். தமிழர்களின் வாரிவழங்கும் நற்குணத்தில் நம்பிக்கை வைத்து, தமிழ் இருக்கை அமைப்பும், கனடிய தமிழர் பேரவையும் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் கையொப்பமிட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஹார்வர்டில் மேலதிகமாகச் சேர்ந்த பணத்தில் $197,000 ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் தங்கள் பங்காக $479,000 அளித்தது ரொறொன்ரோ தமிழ் இருக்கை தொடக்கத்திற்கு  பெரும் உதவியாக அமைந்தது.  ரொறொன்ரோவில்  நிதி சேகரிப்பு   இலகுவாக அமையவில்லை. பத்திரிகைகள், ஒன்றுகூடல்கள் , ரேடியோ, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு செய்தியை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கோவிட் நோய் பரவல் நிதி சேகரிப்புக்கு பெரும் தடையாக இருந்தது. அப்படியிருந்தும் உலக மக்களின் அமோகமான ஆதரவால் மூன்று மில்லியன் டொலர்கள் சரியாக மூன்று வருடங்களில் வெற்றிகரமாக திரட்டப்பட்டது.

ஏன் கனடா?

வெளி நாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு கனடாவை விட ஒரு சிறந்த நாடு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கும், தமிழுக்கும் மிக அணுக்கமான நாடு. தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக கனடிய நாடாளுமன்றம் 2006ல் அறிவித்திருந்தது. ரொறொன்ரோ பல்கலைக் கழகம் இதை முன்னெடுத்து வருடா வருடம் கொண்டாடி வருகிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ் இருக்கைக்கான பேராசிரியர் நியமிக்கப்படுவார்.  ஆண்டு தோறும் தமிழ் ஆராய்ச்சியில் உலகளாவிய விதத்தில் சிறந்தவருக்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம் விருதும், பணமுடிச்சும்  வழங்கி கௌரவிக்கும். விருதாளர் பேருரையாற்றி விருதை ஏற்றுக்கொள்வார். அதற்கான தனி வைப்பு நிதி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. கனடா, ஒன்ராறியோ மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மே 18ம் நாள் தமிழின அழிப்பு அறிவியல் வாரமாக பேணுவதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேறியிருக்கிறது. மூன்று  லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் கனடா நாட்டில் தமிழை வளர்ப்பதற்கான சூழல் மெச்சும்படியாக உள்ளது.

இருக்கை என்ன செய்யும்?

ரொறொன்ரோ தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும்.  தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படும். ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பதால் வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக இது அமையும்.  தமிழ் மொழியின் தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக  என்றென்றும் நிலைத்து நிற்கும். கனடிய அரசின் நல்கைகள், புலமைப்பரிசில்கள் , உதவித்தொகை ஆகியவற்றுக்கு வழிகோலும். பல்நாட்டு தமிழ் அறிஞர் மாநாடுகளை சாத்தியமாக்கும்.

என்ன பிரயோசனம்?

நிதி சேகரிக்கும்போது என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி ’தமிழ் இருக்கையால் எனக்கு என்ன பிரயோசனம்?’ என்பதுதான். ஈழத்திலிருந்து, ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாமல் அகதியாக புலம்பெயர்ந்து மிக நல்ல நிலைக்கு உயர்ந்து வாழ்பவர்கள் இப்படி கேட்பார்கள். ’உங்கள் பிள்ளைகள் இசை கற்கிறார்கள். கராத்தே கற்கிறார்கள். நீச்சல் கற்கிறார்கள். நடனம் கற்கிறார்கள். உங்களை மடியில் கிடத்தி உங்கள் தாயார் பேசியது தமிழ்  மொழி.  இந்த நாட்டுக்கு நீங்கள் கொண்டுவந்த சொத்து தமிழ்அல்லவா? இரண்டாயிரம் வருடங்களாக  தலைமுறை  தலைமுறையாக  தொடர்ந்து வந்த மொழிச்சங்கிலி உங்களுடன் அறுந்து போகிறது. உங்கள் அம்மா பேசிய மொழியை அவர் ஞாபகமாக  பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையல்லவா?’ என்பேன். நான் சொன்னது காற்றிலே கரைந்து எனக்கு மன உளைச்சல் ஏற்படும். அந்த நேரங்களில் எனக்கு ஊக்கம் அளித்தது சாமின் நுஸ்ரத் என்ற உலகப் புகழ் சமையல் அரசி சொன்னதுதான். ‘நான் தினமும் தோல்வியை சந்திக்கிறேன்.’  

ரொறொன்ரோ நிதி திரட்டல் அனுபவங்கள்

நிதி திரட்டலின்போது கிடைத்த அனுபவங்களை மறக்க முடியாது.  ’ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல் என மறுத்தலும்’ என்ற வரிகள் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். இல்லாதபோது சிலர் தருவேன் என்றனர். இருக்கும்போதும் மாட்டேன் என்றனர் சிலர்.  மொன்ரியலில் இருந்து ஒருவர் 30 கேள்விகள் கேட்டார். இருபது தடவை பணம் அனுப்புவதாகச் சொன்னார். பணம் வரவேயில்லை. சில வாரங்களில் பணம் எக்கச்சக்கமாக சேரும்; சில வேளைகளில் ஒன்றுமே பெயராது. மனம் சலித்துப் போகும். நற்றிணை யுகன் சொன்னது நினைவுக்கு வரும். ‘தண்ணீரில் போட்ட உப்பு அப்படியே கிடக்கும். திடீரென்று கரைந்து போகும். வெற்றி அப்படித்தான். எதிர்பாராத நேரத்தில் வந்து ஆச்சரியப்படுத்தும்.’

நியூசீலாந்திலிருந்து  வான்கூவர் வரைக்கும் மக்கள் நன்கொடைகள் அனுப்பினர். இங்கிலாந்துப் பெண்மணி ‘தமிழுக்கு  நாடு இல்லாவிட்டால் என்ன?  எல்லா நாடும் எமக்குச் சொந்தமானதுதான்’ என்று கணியன் பூங்குன்றனையும் தாண்டிப் பேசினார்.’ ஆஸ்திரேலியத் தமிழர் ’தமிழ் இருக்கை என்றால் என்ன? அது ஒரு சின்ன தமிழ் நாடுதானே!’ சிங்கப்பூர்க்காரர் சொன்னதை மறக்க முடியாது. ’இத்தனை பெரிய தொகையா?’ என்றேன். அவர் ‘இன்று சொர்க்கத்தில் விடுமுறை’ என்றார்.  

நிதி நல்கியவர்கள்

ரொறொன்ரோ தமிழ் இருக்கை மூன்று மில்லியன் டொலர்  இலக்கை மூன்று வருடத்தில்  26 ஏப்ரல் 2021 அன்று எட்டியது. அதாவது கெடுவுக்கு 26 மாதங்களுக்கு முன்னரே இலக்கை அடைந்துவிட்டது. 4,143 உலக மக்களும், தமிழ் அமைப்புகளும், இலக்கிய வாசகர்களும், ஈழத்து பள்ளிக்கூடங்களிலிருந்து நிதி சேர்த்து அனுப்பிய மாணவர்களும்  இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். தமிழக அரசு வழங்கிய 173,317 டொலர்களும், தி.மு.க வழங்கிய 16,513 டொலர்களும்,   தந்தை செல்வநாயகம் அறக்கட்டளை  வழங்கிய 250,000 டொலர்களும், பெயர் சொல்ல விரும்பாத தமிழ் அன்பர் ஒருவர் வழங்கிய 500,000 டொலர்களும்   தமிழ் இருக்கைக்கு தேவையான மூன்று  மில்லியன் டொலர் இலக்கை  துரிதமாக அடைய உதவின.

படிப்பினைகள்

தமிழ் பற்றாளர்களும், ஆர்வலர்களும், கொடையாளர்களும் உலகம் முழுக்க நிரம்பியிருக்கின்றனர். இவர்களைக் கண்டு பிடிப்பதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. பத்திலே ஒருத்தர் நன்கொடை வழங்கினார். பத்துப்பேர் வழங்க வேண்டுமென்றால் நூறு பேரை அணுகவேண்டும். கலைஞர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள்,  தமிழ் அமைப்புகள், கிராம நலன்புரி சங்கங்கள், முதியோர் அமைப்புகள், பள்ளிக்கூட பழைய மாணவ மாணவியர் அமைப்புகள் ஒத்துழைத்ததனால் கிடைத்தது இந்த வெற்றி. அந்தந்த சங்கங்கள் நிதி திரட்டலை தகுந்த தலைவரிடம் ஒப்புவித்ததுதான்  வெற்றியின் முதல் படி.  ’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.’ இதுவே மந்திரம்.

பாராட்டுகள்

வைதேகி அம்மையாரை எவ்வளவு பாராட்டினாலும் கொஞ்சம் எஞ்சும். அவர் ஆரம்பித்து வைத்த பொறி ’மரம்படு சிறு தீப்போல’  பரவி இன்று ஹார்வர்ட், ரொறொன்ரோ, நியூயோர்க், ஹூஸ்டன், லண்டன், பேர்க்லி, ஜேர்மனி என உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. இன்று உக்கிரெய்ன் மொழிக்கு ஓர் இருக்கை வேண்டுமென்றால் உக்கிரெய்ன் நாடு  ஏற்பாடு செய்யும். ஐஸ்லாண்டிக் மொழிக்கு ஐஸ்லாண்ட் அரசாங்கம் உதவி செய்யும். தமிழுக்கு நாடு இல்லை. ஆகவே நாம்தான் செய்யவேண்டும். உலகத் தமிழர்கள்  ஒன்றிணைந்து தமிழுக்கான இருக்கை ஒன்றை ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் நிறுவியது இதுவே முதல் தடவை.  ’ஓர் இனக்குழு இணைந்து செயல் பட்டால் அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை’ என்று கனடா நாடாளுமன்றத்தில் தமிழ் இருக்கை வெற்றியை பாராட்டிப் பேசிய  மார்சி இயென் என்ற உறுப்பினர் கூறினார். இது முடிவல்ல, ஆரம்பம்தான்.  தமிழின் மேன்மையை முன்னெடுக்கும் கேள்விகளை உலகத் தமிழர்கள் தொடர்ந்து எழுப்பவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்தால் கிடைக்கும் ஆற்றல்  பல நாடுகளின் பலத்துக்கு  சமமானது. என்னுடைய மேசையில் இந்த வாசகம் இருக்கிறது. If you don’t ask, the answer will always be ‘No.’ ’நீ கேள்; கேட்காவிட்டால் உனக்கு  கிடைக்கும் பதில் எப்பொழுதும்  ’இல்லை’ என்பதாகவே இருக்கும்.  

END

About the author

3 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta