எக்ஸ் தந்த நேர்காணல்

எக்ஸ் தந்த நேர்காணல்

அ.முத்துலிங்கம்

சினிமா என்று வரும்போது நடிகர் நடிகைகளையே எல்லோரும் சந்திக்க விரும்புவார்கள். அடுத்து இயக்குநர். அதற்கும் அடுத்தபடியாக  இசையமைப்பாளர். பின்னர் பாடகர் இப்படிப் போகும். நான் பார்க்க விரும்புவது தயாரிப்பாளர்களைத்தான். அவர்கள்மேல் நெடுங்காலமாக எனக்கு இருக்கும் ஈர்ப்பை வர்ணிக்கமுடியாது. அதைப்பற்றி விளக்கவும் இயலாது. அவர்கள் எதற்காக படம் தயாரிக்கிறார்கள்? பணமா அல்லது புகழா அல்லது கலைச் சேவையா? இந்தக் கேள்விக்கு மட்டும் என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

திரைப்படம் சம்பந்தமாக ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் நான் முதலில் படிப்பது தயாரிப்பாளர் பற்றித்தான். சமீபத்தில் இரண்டு சம்பவங்கள் படித்தேன். ஒன்று சின்னப்ப தேவர் பற்றி. பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தந்தவர் அவர். எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து 17 படங்கள் தயாரித்தவர். அது தவிர, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான  ராஜேஷ் கன்னாவை ஒப்பந்தம் செய்து ஹிந்திப் படம் தயாரித்து புகழ் சம்பாதித்தவர். அப்படி புகழின் உச்சியில் இருந்தபோது அவர் இறந்துபோனார். அதன் பின்னர் அவர் குடும்பம் மோசமான  பொருளாதாரச் சிக்கலில் மாட்டி மீண்டும் சீர்படவே இல்லை.  காதலன் , ஜெண்டில்மன் போன்ற வெற்றிப் படங்களை தந்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் தன் மகனை வைத்து ஒரு படம் தயாரித்தார். சிம்ரன் கதாநாயகி. பல வருடங்கள் படம் இழுபட்டது. பணப் பிரச்சினையில்  மாட்டி அவருடைய படம் வெளிவரவே இல்லை.

ஆனாலும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களை தயாரித்தபடியே இருக்கிறார்கள். இவர்களை என்ன தூண்டிவிடுகிறது? இதற்கான விடையை தேடுவது என்ற முடிவுடன் புலம்பெயர்ந்த ஈழத்து தயாரிப்பாளர் ஒருவரை அணுகினேன். என்னுடைய வேண்டுகோள் அவருடன் ஒரு மணிநேரம் பேசவேண்டும் என்பதுதான். ‘இன்றைக்கு சந்திப்போம், நாளைக்கு சந்திப்போம்’ என்று இழுத்தடித்தார். கடைசியில் ஒரு நாள் சம்மதித்தார். ஆனால் அவர் போட்ட நிபந்தனைதான் விசித்திரமானதாக இருந்தது.

’நான் சிறையில் இருந்தவன், உங்களுக்கு தெரியுமா?’  என்றார்.

நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன். அவரை சினிமா தயாரிப்பாளர் என்ற முறையில்தான் நான் அறிந்திருந்தேன். ஆனால் முகத்தில் ஒன்றையும் காட்டாமல் ‘உங்கள் பெயரை எப்படி எழுதவேண்டும்?’ என்று கேட்டேன். சில விசயங்களை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிடுவது நல்லது,

‘என் பெயரை போடவேண்டாம், அதுதான் நிபந்தனை’ என்றார்.’ ‘ஆனால் நீங்கள் சொல்லப்போகும் சம்பவங்களில் இருந்து வாசகர்கள் ஊகித்துவிடுவார்களே.’

‘அதனாலென்ன. அவர்கள் உழைப்புக்கும், கடும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசாக அது இருந்துவிட்டுப் போகட்டும்.’

’உங்கள் பெயருக்குப் பதிலாக கற்பனை பெயர் ஒன்றைப் போடலாமா?’

’அது பொய்யாகிவிடும்.’

’உங்கள் பெயரும் போடக்கூடாது; கற்பனைப் பெயரும் போடக்கூடாது என்றால் எப்படி நேர்காணல் செய்வது.’

‘சரி, எக்ஸ் என்று போடுங்கள்.’ அப்படியே முடிவானது.

சமீபத்தில் தமிழ்மகன் எழுதிய செல்லுலாயிட்  சித்திரங்கள் புத்தகத்தில் அவர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். ஒருமுறை இயக்குநர் கஸ்தூரி ராஜா வீட்டுக்கு போகிறார். அப்பொழுது அவர் ’துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பில் இருக்கிறார். அவருடைய மகன் தனுஷ் நடிக்கும் முதல் படம். ‘சினிமாவில் சம்பாதிச்ச அத்தனை காசையும் சினிமாவில் விட்டாச்சு. இந்தப் படமும் காலை வாரினால் சொந்த  ஊர்லே போய் செட்டில் ஆகவேண்டியதுதான்’ என்று கஸ்தூரி ராஜா சொல்கிறார். நல்ல வேளையாக படம் அபார வெற்றி பெற்றது. கஸ்தூரிராஜா தப்பினார்.

இவர்கள் எல்லாம் ஒரு சூதாட்டம் போலத்தான் பெரிய எதிர்பார்ப்புடன் படம் எடுக்க வருகிறார்கள்.  பணம் முக்கியமானதாகத் தெரியவில்லை. குறிக்கோள் புகழில்தான். அதை நோக்கித்தான் பலருடைய படையெடுப்பு இருக்கிறது. பல படங்கள் நிறைய பொருட்செலவில் எடுத்து வெளியே வருவதே இல்லை. சில படங்கள் வெளிவந்தும் பிரயோசனமில்லை. தயாரிப்பாளர் நட்டமடைகிறார். இவற்றை தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது அபூர்வம்தான்.

மிஸ்டர் எக்ஸ் என் கேள்விக்காக காத்திருந்தார். ஒட்டவெட்டிய தலைமுடி, வெள்ளையும் கறுப்பும் கலந்து தெரிகிறது.வெள்ளை உடையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

’எதற்காக உங்களைச் சிறையில் அடைத்தார்கள்?’

’இந்த விசயம் பலபேருக்கு தெரியாது. 1970ல் மாணவர் பேரவையை ஆரம்பித்தது நாங்கள்தான். நாங்கள் என்றால் குட்டிமணி, சபாரத்தினம் இப்படி 42 பேர். என்னுடைய வேலை மாணவர்களை தயார் படுத்துவது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது.’

’எப்படி நீங்கள் பயிற்சி கொடுப்பீர்கள்? ஆயுதப் பயிற்சியா?’

’நான் கராத்தே கறுப்பு பெல்ட், அதுதான் என்னுடைய தகுதி. இது தவிர ’மொலட்டோவ் கொக்ரெயில்’ செய்வதில் நிபுணத்துவம் அடைந்திருந்தேன்.  அப்பொழுது எங்களிடம் இருந்த ஆயுதம் அது ஒன்றுதான். போத்தலில் திரியியை பற்றவைத்து எறிவது. பெரிய சேதம் விளைவிக்காது, ஆனால் வெடிச்சத்தத்தை தொடர்ந்து பக்கென்று தீப்பிடிக்கும். பொலீஸ் இன்ஸ்பெக்டர்  பஸ்தியாம்பிள்ளை என்னைப் பிடித்து சிறையில் தள்ளிவிட்டார். நான் இரண்டு வருடம் சிறையில் இருந்தேன். வெளியே வந்ததும் லண்டனுக்கு படிக்கப் போய்விட்டேன்.’

’எப்படி போராளியான உங்களுக்கு படம் தயாரிக்கும் எண்ணம் வந்தது?

’நான் ஒரு சினிமாப் பைத்தியம் என்று சொல்லலாம். நான் மாத்திரமில்லை. எங்கள் வீட்டிலே எல்லோரும்தான். நான் பத்து வயதுப் பையனாக இருந்தபோது ’கல்யாணப் பரிசு’ படம் வந்தது. குறைந்தது பத்து தடவை அந்தப் படத்தை பார்த்திருப்பேன். எந்த திரைப்படத்திலிருந்தும் ஏதோ ஒரு வசனத்தை சொன்னால் எங்கள் வீட்டில் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அந்த வசனம் வந்த படத்தின் பெயரையும், யார் அதை பேசினார், எந்தச் சமயத்தில் பேசினார் என்ற விவரங்களையும்  பட்டென்று சொல்லிவிடும் திறமை பெற்றிருந்தார்கள்.

’லண்டனில் பொறியாளர் படிப்பை முடித்து வேலைபார்க்க  ஆரம்பித்தேன். ஆலோசகராக வேறு வேறுநாடுகளுக்கும் பயணித்தேன். நிறைய சம்பாதிக்க முடிந்தது. இந்தியா போனபோது படம் எடுக்கும் நோக்கமே எனக்கு இல்லை. முதன்முதலாக பாலு மகேந்திராவைச்  சந்தித்தேன். அவர் ஒரு படக்கதை எழுதி வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தேடியபடி இருந்தார்.  தான் எடுக்கப்போகும் படத்துக்கு விருது கிடைக்கும் என்பதில் அவருக்கு சந்தேகமே இல்லை. நான் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அவர் படம் எடுக்கத் தேவையான பணத்தை அவர் கையில் கொடுத்தேன். முழுசாக  ரூ20 லட்சம். ஒருவித ஒப்பந்தமும் கிடையாது. அவர் எடுத்த படத்தின் பெயர் ’வீடு.’ பாலு மகேந்திரா சொன்னதுபோலவே இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த படத்துக்கான விருது. சிறந்த நடிகைக்கான விருதை அதில்  நடித்த அர்ச்சனா பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி  ஆர். வெங்கட்ராமனிடமிருந்து  விருதை பெறுவதற்கு லண்டனில்  இருந்து நானும் மனைவியும் தயாரிப்பாளர்கள் என்ற முறையில் டெல்லிக்கு பயணம் செய்தோம். அங்கே கமல்ஹாசனும் வந்திருந்தார். நாயகன் படத்துக்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருந்தது. ஆனால் என்ன பிரயோசனம்?  படத்தை விற்க முடியவில்லை. செலவழித்த பணத்தில் ஒரு ரூபா கூட எனக்குத் திருப்பிக் கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு கலைச் சேவையை விட்டுவிட்டு நல்ல லாபம் ஈட்டக்கூடிய படம் ஒன்று எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்து அப்பொழுது மிகப் பிரபலமாக இருந்த நடிகர் சிவக்குமார், ராதிகா போன்றவர்களை அணுகினேன். இவர்களுடைய படங்கள் தொடர்ந்து 100 நாட்கள் ஓடி வெற்றிகண்டிருந்தன. இளையராஜா இசையில் படம் பிரமாதமாக வந்திருந்தது. படத்தின் பெயர் ’பகலில் பௌர்ணமி’.  இந்தப் படத்திற்காக என்னுடைய லண்டன் வீட்டை விற்கவேண்டி நேர்ந்தது. படம் வெற்றிபெற்றதும் புது வீடு ஒன்றை வாங்கிவிடலாம் என்ற முழுநம்பிக்கை இருந்தது. இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் ஒரு புதிர்தான். படத்தை விற்கவே முடியவில்லை.

பிறகு என்ன செய்தீர்கள்?

அத்துடன் நான் சினிமா பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்தேன். நான் கனடாவுக்கு புலம்பெயர்ந்து  அங்கே கம்பனி ஆரம்பித்து  எல்லாமே நல்லாய் போய்க்கொண்டிருந்தது. என்ன காரணமோ மீண்டும் ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. இந்தப் பிழை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இந்தியாவுக்கு திரும்பினேன். ‘பூவே என்னை நேசி’ என்ற படம் ரூ 30 லட்சத்திற்குள்  திருப்தியாக முடிந்துவிட்டது. படம் வெளியாவதற்கு சில நாட்களே இருந்தன. ஆனால் நான் அவசரமாக கனடாவில் ஒரு திருமணவிழாவில் கலந்துகொள்ள வேண்டிய  நிர்ப்பந்தம். இரண்டே நாள்தான். திருமணத்தை முடித்துவிட்டு கனடாவிலிருந்து பாரிஸ் வழியாகத் திரும்பினேன். பாரிசில் வேறு ஒரு விமானத்துக்கு மாறவேண்டும். அங்கே ஒரு கடையில் எனக்குப் பழக்கமான பாட்டு ஒலித்துக்கொண்டு இருந்தது. அது நான் எடுத்த படத்தில் வரும் பாட்டு. எட்டிப் பார்த்தேன். டிவியில் என் படம் ஓட பலர் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியில் தலை சுற்றி மயங்கிவிடுவேன் போல வந்தது. எனக்குத் தெரியாமல் லாப்பிலிருந்து படத்தை விற்றுவிட்டார்கள். நான் இந்தியாவுக்கு போகவே இல்லை. டிக்கட்டை மாற்றி வேறு விமானம் பிடித்து கனடா திரும்பினேன்.

அந்த அனுபவத்துக்கு பிறகு சினிமா பக்கமே திரும்புவதில்லை என்று தீர்மானித்திருப்பீர்களே?

இல்லையே. ஒரு உத்வேகம் கிடைத்தது. எப்படியும் இதில் வெற்றி பெற்றுக் காட்டவேண்டும்  என்ற இனம் புரியாத ஆர்வம். நாலாவது படம் எடுத்தபோது அதி கவனம் செலுத்தினேன். என்ன மாதிரி பிழைகள் விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். எனக்கு நன்கு பழக்கமான இயக்குநர் என்றபடியால் என் மனதில் நினைத்தபடி படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்று எண்ணினேன். அங்கேதான் ஒரு பிழைவிட்டேன். முதல் இரண்டு மூன்று காட்சிகள் எடுத்து முடிந்ததும் இயக்குநர் மாறிவிடுவார். உங்கள் கட்டளையை அவர் நிறைவேற்றியதுபோய் அவர் உங்களுக்கு கட்டளை இடத் தொடங்குவார். அவரோடு முரண்பட்டால் படம் நின்று போகும். அதிக பணத்தை விழுங்கியது இந்தப் படம்தான். அந்தக் காலத்திலேயே ஏறக்குறைய ஒரு மில்லியன் டொலர்கள். படத்தின் பெயர் ’அடைக்கலம்’. பிரசாந், தியாகராஜன், சரண்யா, ராதாரவி, உமா, நளினி ஆகியோர் நடித்தது. ஆனால் படத்தை ஒருவருமே வாங்கவில்லை. அதுவும் முழுத் தோல்வி.

எப்படி ’பகலில் பௌர்ணமி’ தோல்வி அடைந்தது என்பதற்கு மிஸ்டர் எக்ஸிடம் ஒரு பதிலும் கிடையாது. இளையராஜா இசையமைத்தது. புகழ் உச்சியில் இருக்கும்போதே ராதிகாவும், சிவகுமாரும் நடித்தது. நடிகர் சிவக்குமாருடைய ஞாபகசக்தி எனக்குத் தெரியும்.  அத்துடன் அவர் தினம் டைரி எழுதும் பழக்கமும் வைத்திருந்தார். ஆகவே அவரிடமே கேட்கலாம் என நினைத்து ஒரு நாள் அவரை டெலிபோனில் அழைத்தேன். சில விசயங்கள் பேசிவிட்டு ‘பகலில் பௌர்ணமி’ படம் ஏன் தோல்விடைந்தது என்று அவரிடம் கேட்டேன். அவர் அந்த விசயத்தை மறந்துவிட்டார். நான் நடிகர்களை நினைவூட்டினேன். ’அப்படியா?’ என்றார். மேற்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லை.

சில நாட்கள் கழித்து ஒரு மின்னஞ்சல் வந்தது. பூவைக் கேட்டவனுக்கு பூங்காவனமே கொடுத்தது என்று பாடல் உள்ளது. அதுபோல அவர் டைரிக் குறிப்புகளை படம் எடுத்து அப்படியே அனுப்பியிருந்தார். நம்ப முடியவில்லை. 28 வருடங்களுக்கு முந்தைய டைரிக் குறிப்புகள். சனிக்கிழமை, 1989 பிப்ரவரி 25ல் இப்படி எழுதியிருந்தது:

‘சினிமாஸ்கோப் படத்தில் கதாநாயகனாக இப்போதுதான் நடிக்கிறேன். ஹனீபா கதை வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை  அஜயன் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். நானும் ராதிகாவும் ரகுமான் – லிசி, ரகுவரன் – சோமையாஜுலு ஆகியோரும் நடிக்கின்றோம்.  இன்று காலை 7.45 க்கு படப்பிடிப்பு துவங்கியது. முரசொலி செல்வம் காமிராவை முடுக்கிவைத்து வாழ்த்திச் சென்றார். திருவான்மியூரில் SKR விஸ்வநாதன் என்ற எஞ்சினியர் வீட்டில் படப் பிடிப்பு நடக்கிறது.’ இதுதான் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் எழுதிய டைரிக் குறிப்பு. இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார். படம்  தோல்வியடைந்ததற்கான குறிப்பு ஓர் இடத்திலும் காணப்படவில்லை.

மறுபடியும்  நடிகர் சிவக்குமாரை தொலைபேசியில் அழைத்தேன். அவர் சொன்னது வேறுமாதிரி இருந்தது. ’தயாரிப்பாளர்தான் எல்லாம். ஒருவர் நடித்த படம் பாதியில் நின்றுபோகலாம். பணம் போதாக்குறையினால் நடித்து முடிந்த பின்னர் வெளிவராத படங்கள் ஏராளமாக இருக்கின்றன. நான் நடித்த ‘காக்கும் கரங்கள்’ படத்தில் 600 அடி நீளமான காட்சி ஒன்று. மூன்று நாட்களாக தொடர்ந்து படம் பிடித்தார்கள். படம் வெளியானதும் நான் என் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு அதைப் பார்க்கப் போனேன். அந்தக் காட்சியையே வெட்டிவிட்டார்கள். எனக்கு பெரிய அவமானமாகிவிட்டது. படம் ஒருவாரம் ஓடி முடிந்த பின்னர்கூட தயாரிப்பாளர்கள் காட்சிகளை வெட்டி இருக்கிறார்கள்’ என்றார்.

தயாரிப்பாளர் சர்வ வல்லமை பொருந்தியவர்தான். ஆனால் எதற்காக  அவர்கள் தங்களை முற்றாக அழித்துக் கொள்ளும்வரை தோல்வியை நோக்கியே நகர்கிறார்கள். இதை எக்ஸ்சிடம்  கேட்கவேண்டும் என நினைத்தேன். அவரைத் தேடி நான் போகவேண்டிய அவசியம் நேரவில்லை. தற்செயலாக ஒரு விழாவில் அவரைச் சந்தித்தேன். அதே கம்பீரத்துடன் காணப்பட்டார். தான் ஐந்தாவது படம் எடுக்கப் போவதாகச் சொன்னார். ’சினிமாவில் கதை தேர்வு, இயக்குநர், நடிகர்கள், இவை ஒன்றுமே முக்கியமில்லை. வியாபார நுட்பம்தான் பிரதானம்’ என்றார்.

’இத்தனை படங்கள் எடுத்து தோல்வி. மீண்டும் எடுக்க வேண்டுமா?’ என்று கேட்டேன்.

எக்ஸ் நிமிர்ந்து நின்றார். அவர் உயரம் ஓர் அடி கூடியது. கராத்தே கறுப்பு பெல்ட் என்பது நினைவுக்கு வந்தது. திடீரென்று முகத்தில் ஒரு வெறி. மொலட்டொவ் கொக்ரெயில் திரியை பற்றவைத்து எறிய முன்னர் ஒருவருடைய முகம் கொஞ்சம் சிவக்குமே அப்படி செம்மை படர்ந்தது.

‘தோல்வியை ஒப்புக்கொள்வதற்கா இந்த மனிதப் பிறப்பு. இது ஒரு சவால். விட்டதை பிடிக்க வேணும்’ என்றார்.

 

END

 

About the author

3 comments

  • நான் ஒரு படத்தை தயாரித்து இயக்க உள்ளேன். என்னுடைய படத்திற்கு வீடு,பகலில் பெளர்ணமி,அடைகலம் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து,படத்தை தொடங்க ஆசைப்படுகிறேன். ஆகையால் அவருடைய தொடர்பு எண்ணை தாங்கள் வாங்கி தர முடியுமா சார்…..

    நன்றி
    வேலுசாமி ப
    9962192116

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta