என்ன கதைப்பது

ஓரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை காணும்போது ஏற்படும் பொறாமையை நிறுத்தமுடியவில்லை.
 
சமீபத்தில் ஒபாமா கனடா வந்திருந்தார். அவரை கனடிய ஆளுனர் விமானத்திலிருந்து இறங்கியதும் வரவேற்றார். அரை நிமிட நேரத்தில் இருவரும் சிரித்து சிரித்து பேசினார்கள். இதை தொலைக்காட்சி காமிராக்கள் உலகெங்கும் ஒளிபரப்பின. அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை எவ்வளவு கற்பனை வளம் உள்ளவராலும் ஊகிக்கமுடியாது.
 
ஒருமுறை நான் நைஜீரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் வோலே சோயிங்காவுடன் கைகுலுக்க நேர்ந்தது. ஒரு முழு நிமிடம் நான் ஒன்றுமே பேசவில்லை. அப்பொழுதே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். அந்த தருணம் நழுவிப் போனது. 'உங்கள் சிறைக் கவிதைகள் படித்தேன், நல்லாயிருந்தது' என்று சொல்லியிருக்கலாமோ என்று பின்னர் பட்டது. ஆனால் யோசித்துப் பார்த்தபோது மௌனமாக இருந்ததே சரியென்று தோன்றியது.

உலகப் பிரபலமானவர்களை எதேச்சையாக சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும்? முதல் நிமிடத்திலேயே அவரை புகழக்கூடாது. சிலருக்கு அது அவமானமாகவும் கூச்சமாகவும் இருக்கும். எரிச்சலைக்கூடத் தரும். 'உங்கள் புத்தகத்தை வாசித்தேன், அதுபோல ஒன்றை என் வாழ்நாளில் படித்தது கிடையாது' என்று சொல்லலாமா?' அதனால் அவருக்கு என்ன பிரயோசனம். அதிக பெறுமதி வாய்ந்த அவருடைய நேரத்தை பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் சொல்வது அவருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும்; அல்லது வித்தியாசமாகவாவது இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு சம்பாசணையை கிளப்புவதற்கான சுவாரஸ்யத்தையாவது தரவேண்டும்.   

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போயிருந்தேன். அந்த நண்பர் எந்த விசயத்தையும்,  எந்த ஆளுடனும், எந்த சமயத்திலும் பேசுவதற்கு தயாராயிருப்பவர். அவருடைய அறிவு ஆழமில்லாதது, ஆனால் அகலமானது. மொழி தெரியாத எஸ்கிமோவை அவர் சந்திக்க நேர்ந்தால் சில நிமிடங்களில் எஸ்கிமோக்களுக்கு பிடித்த அஸாலீக் ரொட்டியை எப்படி மிருதுவாகச் செய்வது என்று அவர் கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த நண்பர் விருந்து முடிந்த பின்னர்  ஒரு புகைப்படத்தை எனக்கு காட்டினார். அதில் நண்பரும் இன்னொரு 75 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரரும் இருந்தனர். அந்த வெள்ளைக்காரர் ஒரு காலத்தில் உலகம் முழுவதற்கும் தெரிந்தவர். ஒரு கிராமத்து குழந்தைக்குக்கூட அவருடைய பெயர் பரிச்சயம், ஆனால் எனக்கு தெரியவில்லை. நண்பர் 'அவர் நீல் ஆம்ஸ்ரோங், சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்' என்றார்.

நான் உடனே பரபரப்பாகி, அப்படியா எங்கே சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன். பொஸ்டனில் ஒரு கருத்தரங்கில் நீல் ஆர்ம்ஸ்ரோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கே அவருடன் பேசுவதற்கு நண்பருக்கு சில நிமிடங்களை ஒதுக்கினார்கள். நண்பர் கேள்விகள் ஒன்றையும் முன்கூட்டியே தயாரித்திருக்கவில்லையாதலால் அந்தக் கணம் மனதில் தோன்றியதை கேட்டிருக்கிறார்.

நண்பர்: சந்திரனுக்கு போனது சரி, செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் பயணிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா?

ஆர்ம்ஸ்ரோங்: நான் இதை உத்தியோகபூர்வமாகச் சொல்லமுடியாது. ஆனால் நாசாவில் அதற்கான ஆராய்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இன்னும் இருபது வருடங்களில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மனிதன் பயணம் செய்யக்கூடும்.

நண்பர்: முதன்முதலில் சந்திரனை நோக்கி பயணித்தபோது உங்களுக்கு பயம் இருந்ததா?

ஆர்ம்ஸ்ரோங்: இருந்தது, ஆனால் பயணம் பற்றிய பயம் அல்ல. சோவியத் யூனியன் விஞ்ஞானிகள் மனிதன் இல்லாத விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பி அங்கே நாங்கள் காலடி வைப்பதற்கு முன்னர் அவர்கள் கொடியை நாட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. அது நடந்துவிடுமோ என்ற பயம் அந்த பயணம் முழுக்க எங்களிடம் இருந்தது. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

நண்பர்: மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது?

ஆர்ம்ஸ்ரோங்: மறக்க முடியாதது அல்ல, துன்புறுத்திய சம்பவம். நாங்கள் சந்திரனில் இறங்கிய பிறகு உடனடியாக தரையில் கால் வைப்பது என்ற திட்டமில்லை. ஓய்வெடுத்த பிறகுதான் அதைச் செய்வதாக இருந்தோம். ஆனால் சந்திரனுக்கு போன பிறகு அதை மாற்றினோம். சந்திரனில் இரண்டரை மணி நேரம் நானும் என் சக விண்வெளிப் பயணி அல்டிரினும் சோதனைகள் நடத்தினோம். சந்திரன் தன்னைத்தானே சுற்ற 28 நாட்கள் எடுக்கும். சந்திரன் பூமியை சுற்றவும் அதேபோல 28 நாட்கள் எடுக்கும். ஆகையால் சந்திரனின் ஒரு பக்கம் எப்பவும் பூமியை பார்த்தபடியே இருக்கும். சந்திரனில் பகல் 28 நாட்கள் என்றால் இரவும் 28 நாட்கள். அங்கே காற்று இல்லாதபடியால் காலை மாலை என்றெல்லாம் கிடையாது. வெப்பமோ தாங்கமுடியாது, 102 டிகிரி செண்டிகிரேட். அந்தக் காலத்து விண்வெளி உடை கார் ரேடியேற்றர் போல தண்ணீரை சுற்றி அனுப்பி உடம்பை குளிரவைக்கும். ஆனால் அது போதாது. உடம்பு கொதித்தபடி இருந்தது. என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை; தூங்கமுடியவில்லை. அந்த உடைதான் என்னை இம்சைப்படுத்தியது. 

ஒருவித ஆயத்தமும் இல்லாமல் நீல் ஆர்ம்ஸ்ரோங்குடன் இந்த சம்பாசணையை நண்பர் நடத்தியிருக்கிறார். எனக்கு இப்படியான வாய்பு கிடைத்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன். ஒன்றுமே மனதில் உடனடியாக தோன்றவில்லை. ஆற அமர சிந்தித்தபிறகு நான் ஆம்ஸ்ரோங்கிடம் இப்படி கேட்டிருக்கலாம் என்று பட்டது. 'விண்வெளி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது நீங்களும் அனுப்பினீர்கள் ஆனால் உங்கள் விண்ணப்பம் ஒருவாரம் பிந்தி, முடிவுதேதி கடந்தபிறகு  போய்ச் சேர்ந்தது. டிக்டே என்பவர் உங்கள் விண்ணப்பத்தை ரகஸ்யமாக எடுத்து ஏற்கனவே வந்திருந்த விண்ணப்பங்களுக்கு நடுவில் செருகிவிட்டார். ஆகவே நீங்கள் பயிற்சிக்கு தேர்வானீர்கள். எப்போதாவது நீங்கள் டிக்டேக்கு நன்றி சொன்னீர்களா?' என்று கேட்டிருக்கலாம். ஆனால்  உடனுக்குடன் மனதில் தோன்றியதைக் கேட்டு ஒரு சம்பாசணையை சரியான திசையில் செலுத்துவது என்பது என் நண்பர் போன்றவர்களுக்கே சாத்தியமானது.

பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது. நடிகை பத்மினி ஒருமுறை கனடாவுக்கு வந்திருந்தார். ஐம்பது வயதான ஒரு பெண்மணி விமான நிலையத்துக்கே வந்துவிட்டார், அவரை வரவேற்க. அவருக்கு பத்மினியை முன்பின் தெரியாது. ஆனால் அதற்காக அந்தப் பெண்மணி அதிகாலையிலேயே எழுந்து மிகையான ஒப்பனை செய்ததில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்தும் கைகளும் வேறு நிறத்திலும் இருந்தன. முதல் நாள் இரவே காசுகொடுத்து தலையலங்காரம் செய்து கதிரையில் உட்கார்ந்தபடியே இரவு தூங்கியதாகச் சொன்னார். இந்தப் பெண்மணி தன் மனதில் பத்மினியிடம் கேட்பதற்கான ஒரு கேள்வியை முப்பத்தைந்து வருடங்களாக காவி வருகிறாராம். பத்மினி கனடா மண்ணில் காலடி வைத்து சரியாக அரை மணி நேரம்கூட கழிய முன்னர் அவரிடம் இந்த நடுத்தர வயது பெண் கேட்ட கேள்வி: 'நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?'

நான் பிரபலமானவர்களை தேடிப் போய் சந்திக்கும்போது எப்படியும் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டு சம்பாசணையை தொடங்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அப்படிக் கேட்டால்தான் அவருக்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கான ஒரு சுவாரஸ்யம் ஏற்படும். கனடாவில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட்டை சந்தித்தபோது நான் முதல் கேள்வியாக அவருடைய புத்தகத்தைப் பற்றிக் கேட்கவில்லை. அவருடைய சிவப்பு சுருண்ட தலைமுடியை பற்றிய கேள்வியை எழுப்பினேன். 'இளவயதில் இருந்து இன்றுவரை உங்கள் தலைமுடி ஸ்டைல் மாறவில்லை. இதை பராமரிப்பதற்கு ஏதாவது விசேஷமாக செய்வீர்களா?' இதுதான் கேள்வி. அவருடைய முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அப்போது பார்த்திருக்கவேண்டும்.
அவர் 'இந்த முடி என்னுடைய ஐரிஷ் மூதாதையர் மரபில் வந்தது. நான் அதை பராமரிக்க சிரமப்பட்டு ஒன்றுமே செய்ததில்லை. அதன் வளர்ச்சியில் நான் குறுக்கிடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான்' என்றார். அதற்கு பிறகு மீதி கேள்விகளை இலகுவாக தொடர முடிந்தது. அதே மாதிரிதான் Zana Brisky யும். 2005ம் ஆண்டு அவர் இயக்கிய Born into Brothels விவரணப்படத்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது. நான் அவரிடம் 'விருதுச் சிலையை நீங்கள் எங்கே வைப்பீர்கள்? வீட்டிலா அலுவலகத்து மேசையிலா, வங்கி லொக்கரிலா?' என்று கேட்டேன். அவர் அலுவலகத்து மேசை என்று சொல்லிவிட்டு சிரித்தார். அதன்பிறகு சம்பாசணை தடையின்றி ஓடியது.


எனக்கு தெரிந்த ஒரு விஞ்ஞானி அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.  அந்தக் கூட்டத்தில் பில் கேட்ஸ் உரையாற்றினார். இந்த விஞ்ஞானியும் பேசினார். அவர்களுக்கிடையில் சில அடிகள் தூரமே இருந்தது. 'நீங்கள் பில் கேட்சிடம் ஏதாவது பேசினீர்களா?' என்று கேட்டேன். அவர் 'இல்லை, என்ன பேசுவது. விண்டோஸ் என்னுடைய கணினியில் நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வதா?' என்றார். 'என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? பில் கேட்ஸ்  நிலத்துக்கு அடியில் வீடு கட்டி வாழ்கிறார். அவர் வீட்டு கூரையில் புல் முளைக்கிறது. அதுபற்றி கேட்டிருக்கலாமே' என்றேன். நண்பரோ 'நீங்களே அடுத்தமுறை அதை அவரிடம் நேரில்  கேளுங்கள்' என்று பதில் இறுத்தார். 

உலகப் புகழ் பெற்றவர்களை சந்திப்பதற்கு  அருமையான இடம் பறக்கும் விமானம்தான். நான் ஒன்றிரண்டு பேரை விமானத்திலேயே சந்தித்திருக்கிறேன். விமானத்தில் அவர்கள் அகப்பட்டால் அவர்கள் உங்களிடமிருந்து தப்பி ஓட முடியாது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் அல்லது தூங்குவதுபோல பாசாங்கு செய்யலாம். தூங்கினாலும்  தூக்கம் கலைந்து எழும்பும்போது மீண்டும் தொடரலாம். ஒருமுறை பக்கத்தில் அமர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம்,  'நீங்கள் 'எனக்கு இன்று சுகமில்லை, ஆகவே கவிதை எழுத முடியாது. நான் கட்டுரைதான் எழுதுவேன்' என்று சொன்னீர்களாமே? அது உண்மையா?' என்று கேட்டேன். அவர் அப்படி சொன்னதே கிடையாது. அவர் 'உண்மையில்லை' என்று சொல்வார் அல்லது வேறு பதில்  கூறுவார். எப்படியும் ஒரு சம்பாசணை ஆரம்பமாகிவிடும்.

இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகத்தில் நடிப்பிற்கு அதிக சம்பளம் வாங்கும் அஞ்சலினா ஜூலியை விமானத்தில் தற்செயலாக சந்தித்தால் அவரிடம் கேட்பதற்குகூட என்னிடம் கேள்விகள் உள்ளன. 'உங்கள் பெயரில் ஆண் பெயர் இல்லை, இரண்டுமே பெண் பெயர்கள். அதற்கென்ன காரணம்? என்று கேட்கலாம். அல்லது  'நீங்கள் இளம் பெண்ணாக இருந்தபோது கோபம் வரும் சமயங்களிலெல்லாம் உங்கள் கைகளில் நீங்களே கத்தியால் வெட்டிக்கொள்வீர்களாமே. இப்பொழுதும் அப்படி செய்வதுண்டா?'
இந்தக் கேள்வியை, அஞ்செலினா ஜூலி சாப்பிட்டு முடித்தபின்னர் விமானப் பணிப்பெண் அவருடைய கரண்டிகளையும், கத்திகளையும் திரும்ப பெற்றுக்கொண்டு போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கேட்பேன். அதற்கு பதிலாக அவர் என்ன சொன்னாலும் அடுத்தநாள் அது பத்திரிகை செய்திதான்.

ஒரு கேள்வியே தயாரிக்க முடியாத ஒருவர் உடனுக்குடன் பதில் சொல்வதென்பது எவ்வளவு கடினமான காரியம். முந்திய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் காரசாரமாக நடக்கும். சுடச்சுட பதிலடி கொடுப்பார்கள். அதையெல்லாம் புத்தகங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மேற்கோள் காட்டப்படும் சாமர்த்தியமான வாசகம் ஒன்றுள்ளது. ஜோன் வில்க்ஸ் என்பர் எழுத்தாளர், அத்துடன் அரசியல்வாதி. ஒருமுறை அவருடைய எதிரி அவரைப் பார்த்து இப்படி வசை பாடினார். 'நீ ஒன்றில் தூக்கில் தொங்குவாய் அல்லது மேகநோய் பிடித்து சாவாய்.' வில்க்ஸ் மூக்குப்பொடி போடும் வழக்கமுள்ளவர். அவர் பொடியை எடுத்து சாவதானமாக மூக்கினுள் உறிஞ்சிவிட்டு இப்படி பதிலடி கொடுத்தார். 'அது சொல்ல முடியாது. நான் உம்முடைய கொள்கையை தழுவுகிறேனா அல்லது உம்முடைய ஆசைநாயகியை தழுவுகிறேனா என்பதில்தான் அது தங்கியிருக்கிறது.'   உடனுக்குடன் பேசி எதிரியை முறியடிப்பது என்பது ஒரு கலை.

தயாரிப்பு இல்லாமல் பேசும் அறிவு பல வருடங்களுக்கு முன்னர் என்னிடம் இல்லை.  ஒரு முழுக் கொலை செய்தவனுடன் இந்த உலகத்தில் எத்தனை பேர் உரையாடியிருப்பார்கள். ஒரு காலத்தில், 50 வருடங்களுக்கு முன்னர், கரோலிஸ் என்ற பெயர் இலங்கையில் பிரசித்தம். காலையில் தினப்பத்திரிகையை திறந்தால் அவனுடைய பெயரும் படமும் முதல் பக்கத்தில் இருக்கும். அந்தப் பிரபலத்துக்கு காரணம் கரோலிஸ் தன் மனைவியை கொலை செய்தவன். அவனுடைய வழக்கு தீர்ப்பு வெளியாகும்வரை  அவன் பெயர் பேப்பர்களில் அடிபட்டது. அவனைக் குற்றவாளி என்று கண்ட நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நான் மணமுடித்து இரண்டு வருடங்கள் ஆனபிறகு ஒரு நாள் நானும் மனைவியும் மாடியில் நின்றுகொண்டிருந்தோம். எங்கள் ஆறுமாதக் குழந்தை உள்ளே தூங்கியது. அப்பொழுது தூரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தன் நடந்து வருவது தெரிந்தது. வெள்ளைச் சாரம், வெள்ளை சேர்ட், கறுத்த அகலமான பெல்ட்.  அவனைப் பார்த்துவிட்டு என் மனைவி 'ஐயோ கரோலிஸ்' என்று கத்திவிட்டு உள்ளே ஓடினார்.

நான் எதிர்பார்த்த மாதிரியே கரோலிஸ் வந்து எங்கள் வீட்டு  கதவு மணியை அடித்தான். நான் திறப்பதா வேண்டாமா என்று தயங்கிவிட்டு கதவை திறப்பதற்காக கீழே இறங்கினேன். நான் மணமுடிப்பதற்கு முன்னர் என் மனைவி வீட்டில் கரோலிஸ் டிரைவராக வேலை பார்த்தவன். மனைவியுடைய நாலு வயதில் இருந்து அவருடைய 14 வயது வரை, பத்து வருடங்கள் காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிப் போவதும் மாலையில் திரும்ப அழைத்து வருவதும் அவன் பொறுப்பு. நேர்மையானவன், நம்பிக்கையானவன், குணசீலன் என்று பேரெடுத்தவன். அவன்தான் தன் மனைவியை நடு ரோட்டில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அது போதாமல் என் மனைவி வீட்டுக் காரை இரண்டுமுறை அவள் மேல் ஏற்றி அவள் செத்துப்போய்விட்டதை நிச்சயம் செய்தவன். இந்த தகவல்கள் எல்லாம் நீதிமன்றத்து விசாரணையில் வெளிவந்தன. பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு கரோலிஸ் வெளியே வந்திருந்தான்.

நான் கதவை திறந்தபோது அவன் இன்னொரு முறை மணியை அடிப்பதற்காக ஒருகையை தூக்கியபடி நின்றான். என்னைக் கண்டதும் அதே கையை மற்றக் கையுடன் சேர்த்து வணக்கம் என்றான். அவன் புறங்கைகளில் மயிர் எக்கச்சக்கமாக முளைத்து காணப்பட்டது. வாய் ஓரம் வெடித்து சிவப்பாக இருந்தது. நானும் வணக்கம் கூறினேன். என்னை அவனுக்கு தெரியாது, நான் மணமுடித்தபோது அவன் சிறையில் இருந்தான். ஆனால் ஊகித்திருப்பான். அவனுக்கு எவ்வளவு தமிழ் தெரியுமோ அதே அளவுக்கு எனக்கு சிங்களம் தெரிந்தது. என் மனைவி நல்லாக சிங்களம் பேசுவார், ஆனால் அவர் மாடி அறை ஒன்றில் நடுக்கத்துடன் ஒளித்துக்கொண்டிருந்ததால் எனக்கு உதவ யாரும் இல்லை. கரோலிசும் வந்த காரியத்தை முடிக்காமல் போகமாட்டான் போல இருந்தது. கரோலிஸ் தன் இடது தோளைப் பார்த்தபடி அடுத்து பேசிய வசனம் முக்கியமானது.

     'பேபி சுகமாய் இருக்கா?'
     'இப்ப தூங்குது. எழும்பியதும் தூக்கிக்கொண்டு வந்து காட்டுறன்.'

என் மனைவி குழந்தையாக இருந்த காலத்திலிருந்து கரோலிஸ் அவரை தூக்கி தோளில் வைத்து விளையாடியிருக்கிறான். அவன் பேபி என்று சொன்னது என் மனைவியைத்தான். தாகூரின் இன்னொரு காபூலிவாலா கதை. சின்ன பேபியும் பெரிய பேபியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை. ஒரு கொலைகாரனுடன் நான் தனிய விடப்பட்டேன். அவனுடன் என்ன பேசுவது, என்ன பேசாமல் விடுவது என்பது எனக்கு தெரியவில்லை. சாவியை நுழைத்து யாரோ கார் எஞ்சினை முடுக்கிவிட்டதுபோல என் நெஞ்சு டுக்கு டுக்கென்று அடித்தது. அடுத்த ஒரு மணிநேரம் சம்பாசணையை முடிவுக்கு கொண்டுவர நான் என்ன என்னவெல்லாமோ தந்திரங்கள் செய்யவேண்டியிருந்தது.

  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta