என்னை மறக்கவேண்டாம்

 

[கடவுள் ஒருநாள் எல்லா பூக்களையும் அழைத்து அவற்றிற்கு பெயர் சூட்டினார். பூக்களுக்கு மகிழ்ச்சி, தங்கள் பெயர்களை தாங்களே சொல்லி பார்த்துக்கொண்டன. ஒரேயொரு பூ நிலத்தோடு வளர்ந்த செடியில் இருந்தபடி தன் முறைக்காக காத்து நின்றது. கடவுள் கவனிக்கவில்லை. எல்லா பூக்களுக்கும் பெயர் கொடுத்தாகிவிட்டது. 'என்னை மறக்க வேண்டாம், என்னை மறக்க வேண்டாம்' என்று கீச்சுக் குரலில் இந்தப் பூ கத்தியது. கடவுள் எட்டிப் பார்த்துவிட்டு ' சரி, அதுவே உன் பெயராக இருக்கட்டும்' என்றார்.]


எழுத்தாளர் சுஜாதா ஓர் இரவு முழுக்க தூங்கவில்லை. நடு இரவில் திடீரென்று படையப்பா படத்தில் ரஜினியுடன் நீலாம்பரியாக நடித்த அந்தப் பெண்ணின் பெயரை மறந்துவிட்டார். அவருக்கு நல்லாய் தெரிந்த பெண்தான், ஆனால் அந்த நேரத்தில் பெயரை மறந்துவிட்டார். எவ்வளவு முயன்றும் நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அடுத்த நாள் விடிந்த பிறகுதான் அந்தப் பெயர் ரம்யா கிருஷ்ணன் என்பது ஞாபகத்துக்கு வந்து நிம்மதி பிறந்தது; வேறு அலுவல்களையும் அவரால் கவனிக்க முடிந்தது.

அவசரமாக ஏதாவது எழுதிக்கொண்டிருப்பேன். அந்த இடத்தில் ஒரு வார்த்தை தேவையாக இருக்கும்; அது வராது. மீதி எல்லாம் வரும். எழுதியதற்கு பொருத்தமாக ஒரேயொரு வார்த்தை இருக்கும். அது மட்டும் நினைவுக்கு வராது. புறநானூறில் சோற்று மூட்டையை தூக்கிக்கொண்டு நிரையாகப் போகும் சிறுவர்கள் வருவது எந்த பாடலில் என்பது மறந்து போகும். மற்றப் பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வரும். விமான நிலையத்தில் காத்திருக்கும்போது உங்களுக்கு வேண்டிய விமானம் வராது. மற்ற எல்லா அறிவிப்புகளும் வந்துகொண்டிருக்கும். அது போலத்தான்.

விருந்து ஒன்றிலே ஒரு கிழவர் ஒரு கிழவியை சந்தித்தார். இருவரும் தனித்து வாழ்பவர்கள், அறுபது வயதை தாண்டியவர்கள். இருவருக்குமே துணை தேவையாயிருந்தது. நீண்டநேரம் அவர்கள் தங்களை மறந்து கதைத்தார்கள். கிழவருக்கு கிழவியை பிடித்துக்கொண்டது. வாழ்நாள் துணைவியாக அவர் தனக்கு வந்தால் எவ்வளவு நல்லது என்று யோசித்தார். ஒரு துணிச்சலில் நீ என்னை மணமுடிக்க சம்மதிப்பாயா என்று கேட்டார். கிழவியும் சரி என்று சொல்லிவிட்டார்.

நடு இரவில் கிழவருக்கு விழிப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் அவரை மணமுடிப்பதற்கு சம்மதித்தாரா இல்லையா என்பது மறந்துவிட்டது. எவ்வளவு யோசித்தும் அவர் கேட்டது ஞாபகத்தில் இருந்தது ஆனால் கிழவியுடைய பதில் மறந்துவிட்டது. விடியும்வரை காத்திருந்து விடிந்ததும் முதல் வேலையாக தொலைபேசியில் கிழவியை அழைத்தார். 'மன்னிக்கவேண்டும். நான் இரவு முழுக்க தூங்கவில்லை. நேற்று உன்னை மணமுடிக்க கேட்டேன். நீ சம்மதித்தாயா அல்லது மறுத்தாயா?' கிழவி உடனே 'நான் சம்மதித்தேன். நான் சம்மதித்தேன்' என்று அலறினார். ஆனால் அடுத்த கணமே அணைந்துபோய் மௌனமானார். கிழவர் 'என்ன விசயம்?' என்றார். கிழவி 'நானும் தூங்கவில்லை. நான் சம்மதம் சொன்னது எனக்கு ஞாபகமிருந்தது. ஆனால் யார் என்னை மணமுடிக்க கேட்டார் என்பது மறந்துவிட்டது. நல்ல காலமாக உங்கள் தொலைபேசி வந்தது' என்றார்.

மறதி விளைவிக்கும் கேடு பற்றி சொல்வதற்கு எல்லோரும் இந்தக் கதையைத்தான் உதாரணம் காட்டுவார்கள். மறதி வியாதி பற்றி நூறு வருடங்களுக்கு முன்னர் முதலில் ஆராய்ச்சி செய்தவர் Alzheimer என்ற  ஜேர்மன் மருத்துவர். அந்த வியாதிக்கும் அவருடைய பெயரையே சூட்டினார்கள். திரியில் எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுவதுபோல இந்த வியாதி சிலருக்கு முதுமையில் மூளையில் ஏறிவிடுகிறது. மூளைக்கு வேலை கொடுப்பதன்மூலம் இந்த வியாதியை தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் கூற்று. படிப்பது, எழுதுவது, செஸ் விளையாடுவது, குறுக்கெழுத்து, சுடொக்கு போன்ற புதிர்களைச் செய்வது நல்லது என்று சொல்கிறார்கள். புதிர்களை விடுப்பதில் எனக்கு விருப்பம் உண்டு.  ஒவ்வொரு நாள் காலையும், முதல்நாள் குறுக்கெழுத்து புதிரை எங்கே வைத்தேன் என்று தேடிக் கண்டுபிடித்த பிறகு நான் கிரமமாக செய்துவருகிறேன்.

நான் கனடாவுக்கு குடிவந்த சமயத்தில் எங்கள் வீட்டுத் தோட்டம் செடிகளும் கொடிகளும் புதர்களுமாக தாறுமாறாக வளர்ந்து கிடந்தது. அதைச் செப்பனிட்டு தருவதற்கு ஒரு தோட்டக்காரரை ஏற்பாடு செய்தேன். கோமஸ் என்ற ஒரு நாற்பது வயதுக்காரர் முறுகிய இரண்டு கைகளை ஆட்டியபடி வந்தார். எங்கே உங்கள் ஆயுதங்கள் என்று கேட்டேன். அவர் முதலாம் வகுப்பு பள்ளிச் சிறுவன் முதல் நாள் பள்ளிக்கூடத்தில் புதுச் சாப்பாட்டு பெட்டியை திறப்பதுபோல பெருமையுடன் தன் பக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு சுவிஸ் ராணுவ வில்லுக்கத்தியை எடுத்து விரித்துக் காட்டினார். ராவணனுடைய பத்து தலைபோல பலவிதமான ஆயுதங்கள் இருந்தன. தோட்டவேலைக்கு ஒன்றும் உதவாது.

வந்தவருக்கு தோட்டம் பற்றிய ஞானம் போதவில்லை. பூமியில் இருந்து ஏதாவது வளர்ந்தால் அதை வெட்டவேண்டும் என்பதுதான் அவருடைய ஆகக்கூடிய அறிவு. பக்கத்து வீட்டில் நான் ஒரு வாள் இரவல் வாங்கி கொடுத்தேன். அவர் அதை தடவிப் பார்த்துவிட்டு நல்லாய் பயிற்சி பெற்ற ஒரு வாள்சண்டை வீரர் போல செடிகள் கொடிகள் பற்றைகள் என்று இரண்டு மணி நேரமாக துவம்சம் செய்தார். திடீரென்று மழை ஓய்ந்ததுபோல ஓர் இடத்தில் குனிந்து கவனித்தார். பின்னர் முழங்காலில் உட்கார்ந்தார். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும், மனிதர் எழும்பவில்லை. அவருக்கு முன்னால் ஒரு சின்னச் செடி இருந்தது. அதில் நடுவில் மஞ்சளும் சுற்றிவர நீலமுமாக சின்னச் சின்ன பூக்கள். 'இதை மாத்திரம் வெட்ட வேண்டாம்' என்றார். அவர் கையிலேதான் வாள் இருந்தது, நான் எப்படி வெட்டப்போகிறேன்.

'இது என்ன பூ?' என்றேன். கோமஸ் என்னுடைய கேள்வியை பொருட்படுத்தவில்லை. 'என்னுடைய அப்பா மானிடோபா மாநிலத்தில் வசிக்கிறார். அது ஒரு அலுப்பான இடம். எங்கே பார்த்தாலும் சமதரை. மனிதரிலும் பார்க்க மாடுகளின் எண்ணிக்கை கூட. பத்துப் பேர் இருந்தால் அருகே ஒரு குளம் இருக்கும். அங்கே நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. என்னுடைய அப்பா என்னை அங்கே வரச்சொல்லி 12 வருடமாக கெஞ்சுகிறார். நான் தட்டிக்கழித்தேன், ஓரளவுக்கு அவரை மறந்தும் விட்டேன். சமீபத்தில்தான் அங்கே போனேன். அவருக்கு என்னை தெரியவில்லை, மறதி வியாதி.'

'அப்படியா, ஐயோ பாவம்' என்றேன்.
'மறதி வியாதி சங்கத்தின் சின்னம் இந்தப் பூதான். இதற்குப் பெயர் Forget me not. என்னை மறக்கவேண்டாம்.'

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta