கறுப்பு அணில்கள்

 வசந்தம் வந்துவிட்டது. கனடாவில் வசந்தம் என்று சொல்வதில்லை, துளிர்காலம் என்றுதான் கூறுவார்கள். இலைகள் கொட்டும் காலத்தை உதிர் காலம் என்பதுபோல. துளிர்காலம் என்றால் மரங்கள் மட்டுமல்ல உயிர்கள் துளிர்க்கும் காலமும். மூன்று மாதமாக நீண்ட நித்திரையிலிருந்த சில உயிர்கள் மீண்டும் நடமாட ஆரம்பிக்கும். நிலத்தில்  புதைந்துகிடந்த புற்கள் மறுபடியும் மெல்ல தலை நீட்டும். தெற்கே போன பறவைகள் வடக்கு நோக்கி திரும்பும். எங்கும் உயிர்களின் துடிதுடிப்பு.

 

ரொறொன்ரோ வீடுகளிலும், வீதிகளிலும், மரங்களிலும், பூங்காக்களிலும் கறுப்பு அணில்கள் வந்து விளையாடுகின்றன. மெலிந்து காணப்பட்டாலும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. மறைந்த பனிக்காலம் அவற்றை பட்டினி போட்டிருக்கிறது. விரைவில் பளபளப்பான சருமத்துடனும், குத்தி நிற்கும் மயிருடனும் இணையுடன் துள்ளி விளையாடத் தொடங்கும்.

இந்தக் காலங்களில் அவைகளுக்கு கிட்டப் போவதோ, நிலம் அதிர ஓடுவதோ, கார்களில் கடக்கும்போது ஹோர்ன் அடிப்பதோ ரொறொன்ரோவில் தடுக்கப்படிருக்கிறது. கறுப்பு அணில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவையினுடைய பெருக்கத்துக்கு தடையாக யாரும் எதுவும் செய்யக்கூடாது.

புறநானூறில் வரும் பெண் ஒருத்தி மான் இணைகள் பிரிந்துவிடுமென அஞ்சி ஒதுங்கிச் செல்வாள். அகநாநூறு இன்னும் விரிவாகச் சொல்லுகிறது. குறுங்குடி மருதனார் என்ற புலவர், தலைவனை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் தலைவியிடம் தோழி கூறுவதாக பாடலில் சொல்கிறார்.

'மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன. மான்கள் துள்ளி விளையாடுகின்றன. வேகமாகக் குதிரைகள் இழுக்க தேரில் உன் தலைவன் உதோ வந்துவிட்டான். ஏன் தேர் மணிச்சத்தம் கேட்கவில்லை என்று நினைக்கிறாயா? வேறு ஒன்றுமில்லை. துணையோடு இன்புறும் தேன்சிட்டுகள் பிரிந்துவிடும் என அஞ்சி  தேரின் மணி நாக்குகளை அவன் கட்டியிருக்கிறான். அவன் வந்துவிடுவான், உன் வருத்தத்தை விடுவாயாக.'

ரொறொன்ரோவில் கறுப்பு அணில்களை அவை கூடும் சமயத்தில் பிரிப்பவர்களுக்கு தண்டனை உண்டு. ஆனால் சங்க காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஆணும் பெண்ணும் மற்ற உயிரினங்களில் அத்தனை அன்போடு இருந்தார்கள்.
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta