இப்படித்தான் உலகம்

 இன்று நாள் 6.40க்கு விடிந்தது. மாலை 7.58க்கு சூரியன் மறைந்து பகல் முடிவுக்கு வரும். இன்றைய நாள்  ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன், மழை இல்லாமல் மூட்டமுடன் காணப்படும். காற்றழுத்தம் 103 ஆகவும், காற்று  வேகம் வடக்கு திசையில் மணிக்கு 19 கி.மீட்டராகவும், ஈரப்பதன் 61 ஆகவும், பார்வை தூரம் 24 கி.மீட்டராகவும் இருக்கும். வயது ஒரு நாள் அதிகரிக்கும். நான் இன்று ஒரு நல்லவரை சந்திப்பேன். ஒரு கெட்டவரை சந்திப்பேன்.

 

என் மகள் சிறுவயதாயிருந்தபோது யாராவது அவள் வயதைக் கேட்டால் ஐந்து என்று சொல்லமாட்டாள். ஐந்து வருடம், இரண்டு மாதம் என்பாள்; ஆறரை என்பாள்; ஏழுவருடம் 10 நாள் என்பாள். அவள் வயதை எண்ணும்போது ஒவ்வொரு நாளும் முக்கியம் பெறும். அவள் வாழ்ந்த ஒவ்வொரு தினமும் அவளுக்கு இனிப்பானது. ஒருநாளைத் தவறவிட்டாலும் ஏதோ துரோகம் செய்துவிட்டதுபோல நினைப்பாள். பதின்பருவம் நடந்தபோது 14 வயது என்று ஒருபோதும் சொல்லமாட்டாள், 'பதினைந்தாகப்போகிறது' என்பாள். 21 வயதில் பெரிய கொண்டாட்டம், இமயமலையின் உச்சியில் ஏறி நின்றதுபோல. முப்பதை தொட்டபோது 'ஓ முப்பதாகிவிட்டது' என்று முனகினாள். நாற்பது, ஐம்பது, அறுபது என்று வருடங்கள் பாய்ந்தோடுகின்றன. எழுபதை அடைந்ததும் இப்பொழுதுதானே அறுபதை கொண்டாடினோம் என்று ஆச்சரியப்படுகிறோம். சிறுவயதில் ஒருநாள் விடியும்போது அது ஒரு புது நாள், இன்னும் திறக்காத ஒரு பரிசுப் பொருள்போல. வாழ்க்கையை முழுவதுமாக, கடைசி சொட்டுவரை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையும் வேகமும் இருக்கும். முதுமையில் அந்த ஆவல் நசிந்துபோய்விடுகிறது, 'இன்னொருநாள்' என்று அலுத்துக்கொள்கிறோம். 

நான் தினம் ஒரு நல்லவரையும் கெட்டவரையும் சந்திக்கிறேன். காலையில் நடைபயில செல்லும்போது ஒரு நினைவுக் கல்லை கடக்கிறேன். ஒரு நாள் நின்று அதில் எழுதியிருப்பதை படித்துப் பார்த்தேன். ஜோஸப் ரொமில்சன் என்பவர், அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு முன்னர், 1748ல் கனடாவுக்கு குடிபெயர்ந்து ஒரு புதுக்குடியிருப்பை தொடங்கி வைத்தவர். ரூச் நதிக்கரையில் விவசாயம் செய்து மாக்கம் பிராந்தியத்தை வளமாக்கியவர். தானதருமங்கள் செய்து மக்களுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர். இன்று நான் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் அவருக்கு சொந்தமாக இருந்தது. அவருடைய வழித்தோன்றல்கள் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கிறார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இன்னொருவரும் வாழ்ந்தார். அவர் பெயர் ஆப்பிரஹாம், தன் மகனை சுட்டு கொலை செய்தவர். அவருக்கு ஒருவரும் நினைவுச் சின்னம் எழுப்பவில்லை.

நேற்று என் கம்புயூட்டரை திறந்தபோது ஒரு வைரஸ் வந்து தாக்கியது. கம்புயூட்டர் நான் நினைத்தபடி வேலை செய்யவில்லை, தான் நினைத்ததை செய்தது. பலமணிநேரம் செலவு செய்து ஒருவர் இந்த வைரஸை உண்டாக்கி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருந்து அனுப்பியிருக்கிறார். அவருக்கு நான் யாரென்று தெரியாது. அவருக்கு நான் ஒரு கெடுதல் செய்ததும் கிடையாது. ஆனால் இன்னொருவருடைய அழிவு அவருக்கு இன்பத்தை கொடுக்கிறது. என் பக்கத்து வீட்டில் 8வது படிக்கும் பையன் வந்து அந்த வைரஸை துரத்தி, கம்புயூட்டரை பழையபடி இயங்கவைத்தான். தொலைந்துபோன என் கோப்புகளை மீட்டெடுத்தான். ஒரு நல்லவன் இருந்தால் ஒரு கெட்டவனும் இருப்பான்.

நான் நடையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது என் வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த பேர்ச் மரத்தின் வேர்களுக்கிடையே ஒரு செல்போன் கிடந்தது. பார்த்தால் அது இப்பொழுது பிரபலமாகிவரும் விலை உயர்ந்த ஐபோன். யாரும் தவறுதலாக அங்கே கைநழுவ விடவில்லை; எறிந்திருக்கிறார்கள். அதை கையிலெடுத்து அதிலிருந்த சில நம்பர்களை அழைத்தேன். அழைத்தவர் எனக்கு தெரியாத ஒரு மொழியில் பேசினார். இன்னொருவரை அழைத்தேன். அவரும் அப்படியே. சில மணி நேரங்களில் ஐபோனின் சொந்தக்காரர் என்னை தொடர்புகொண்டு ஐபோனை வந்து எடுத்துப்போனார். அவர் சொன்ன கதை இதுதான். அவர் காரை பூட்டாமல் வெளியே நிறுத்திவிட்டு வேலையாக உள்ளே இருந்திருக்கிறார். நாலைந்து இளைஞர்கள் ஐபோனை திருடியிருக்கிறார்கள் ஆனால் பாதி வழியில் பயந்துபோய் அதை எறிந்துவிட்டு மறைந்துவிட்டார்கள்.

முதுமை மனிதர்களை பெரிதும் மாற்றிவிடுகிறது. சிறுவயதில் எங்கள் கண்கள் நல்லவர்களையே கண்டது.  நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்த இந்த உலகம் கெட்டவர்களால் நடப்பதில்லை. நல்லவர்களால்தான்  இயங்குகிறது. இதைத்தான் பல நூறு வருடங்களுக்கு முன்பு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் புலவர் புறநானூறில் கூறியிருக்கிறார்.

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்னமாட்சி யனையராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

This world lives
because
some men do not eat alone,
not even when they get
the sweet ambrosia of the gods;
they've no anger in them,
they fear evils other men fear
but never sleep over them;
give their lives for honour,
will not touch a gift of whole worlds
if tainted;
there's no faintness in their hearts
and they do not strive
for themselves.
Because such men are,
this world is.
(translation – A.K.Ramanujan)


நல்லவர்களால் ஆனது உலகம். உலகம் நம்பிக்கை அளிப்பது. அனுபவிக்கவேண்டியது. தினமும் ஒருதடவையாவது படிக்கவேண்டிய பாடல் இது. பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையில் இந்தப் பாடலைத்தான் எழுதி வைத்திருப்பார்.
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta