சொன்னதை திரும்பச் சொல்லு

 அன்புள்ள ஆசிரியருக்கு,
எனக்கு 27 வயது. என் காதலிக்கு 24 வயது. நாங்கள் இருவரும் 13 வருடங்களாகக் காதலிக்கிறோம். மாலதி, அதுதான் என் காதலி, தன்னுடைய 11வது வயதிலேயே என்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள் என்பதை கணிதம் தெரிந்த நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். அதாவது அவள் காதலித்த வருடங்கள் காதலிக்காமல் வாழ்ந்த வருடங்களிலும் பார்க்க அதிகம். மாலதி தோலங்கிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறாள். நல்ல சம்பளம். நான் மின்தூக்கிகள் சம்பந்தமான உயர் படிப்பு படிக்கிறேன்.  இன்னும் ஒரு வருடத்தில் முடித்துவிடுவேன்.

 

எங்களுக்குள் இப்போது பிரச்சினை. வருடத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்தால் இப்படித்தான். நான் எப்பொழுது அழைத்தாலும் 'நான் வருமானவரிப் பத்திரம் நிரப்புகிறேன். என்னை தொந்திரவு செய்யவேண்டாம்' என்று சொல்கிறாள். இது நம்பக்கூடிய சாட்டாக இல்லை. எதற்காக என்னை திடீரென்று தவிர்க்கிறாள் என்ற காரணம் புரியவில்லை. என் வாழ்நாளில் பாதிக்குமேல் இவளுக்கு பின்னால் போய்விட்டேன். நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன். இவளுக்கு தான் உழைக்கிறேன், நான் இன்னும் படிக்கிறேன் என்று என்னில் இளக்காரம் தோன்றிவிட்டதோ என்று  ஐயப்படுகிறேன். என்னுடைய குரலை செல்போனில் கேட்டதுமே உருகி வழிந்தோடும் இவளுடைய குரல் இப்போது அப்படியில்லை. இறுமாப்பும் அலட்சியமும்தான் தெரிகிறது. வேண்டா வெறுப்பாக  பேசுகிறாள். இரண்டு மாத காலமாக யாராவது எங்கேயாவது வருமானவரிப் பத்திரத்தை நிரப்புவார்களா?

இவளுடைய பாட்டி இறக்கும்போது இவளுக்கு தன்னுடைய மூக்குக் கண்ணாடியை பரிசாக அளித்திருக்கிறார். இவளுக்கு கண்பார்வையில் ஒரு குறையும் இல்லை. இருந்தாலும் பாட்டியின் மூக்குக்கண்ணாடியை அணிந்து வருவேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளுடைய கையை பிடித்து அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்காத பிடிவாதக்காரியாக மாறிவிட்டாள். இது பெரிய தலையிடிச்ச வேலை. ஒருவேளை இது காரணமாக இருக்குமோ? அல்லது பாட்டியுடைய பல்செட்டையும் அவள் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்று நான் கேட்டது காரணமாக இருக்குமோ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒருநாள் சுப்பர்மார்க்கட்டுக்கு நாங்கள் போய்ச் சாமான்கள் வாங்கினோம். ஒரு நல்ல காதலன் என்ற முறையில் நான் இப்படியான உதவிகளை செய்வதற்கு தயங்குவதில்லை. மாலதி இரண்டு பைகளில் சாமான்களை நிரப்பி இரண்டுகைகளிலும் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தாள். நானும் சும்மா வரவில்லை, கார் சாவியை காவிக்கொண்டுதான் வந்தேன். அவளுடைய அறை மூன்றாவது மாடியில் என்பதால் அவள் ஏறினாள், நானும் பின்னால் தொடர்ந்தேன். இரண்டு கைகளிலும் சாமான்களைத் தூக்கிக்கொண்டு மாடி ஏறுவதும், அதே சமயம் மூச்சு விடுவதும் கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னாள். நான் மூச்சு விடுவதை நிறுத்தினால் ஈசியாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் காரணமோ தெரியாது.

மாலதிக்கு முத்தமிடுவது பிடிக்கும். அடிக்கடி முத்தமிடுகிறாள். நேரம் காலம் இடம் பார்ப்பதில்லை. ரோட்டிலும் வாசலிலும் சுழல்கதவுக்குள்ளும் தியேட்டரிலும் உணவகத்திலும் இதேவேலைதான். சேற்றிலே செருப்புக்காலுடன் நடக்கும்போது எழும் உறிஞ்சும் சத்தம்போல முத்தம் சத்தம் போடுகிறது. சத்தக் குறைவான முத்தம் நல்லாயிருக்கும் என்று ஒருநாள் சொல்லிவிட்டேன். அதுவாயிருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன்.

அவளிடம் இன்னொரு குணம் உண்டு. காரில் போகும்போது  அவர்கள் நிறுவனம் தயாரிக்கும் தோலங்கியை அணிந்து முன் இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டே போவாள். பேசும்போதே சறுக்கி சறுக்கி இருக்கை உயரத்துக்கும் கீழே போய்விடுவாள். அப்பொழுதும் அவள் பேச்சில் நான் குறுக்கிடக்கூடாது. என்னுடைய கவனத்தை தொடர்ந்து ஓர் இடத்தில் நிற்பாட்டுவது எனக்கு கடினம். மூளைஅங்குமிங்கும் அலைந்துவிடும். திடீரென்று நிறுத்திவிட்டு 'நான் கடைசியாய் என்ன சொன்னேன். திருப்பிச் சொல்லுங்கோ' என்று என்னை test பண்ணுவாள். இது பெரிய அநியாயம் என்று எனக்கு படுகிறது. நான் என்ன ஒரு டேப்ரிக்கர்டரா?

நீங்கள் மூளைசாலி. உங்களுடைய புத்திமதி எனக்கு பிடிக்கும். நீங்கள்தான் ஏதாவது அறிவுரை சொல்லி என்னுடைய 13 வருடக் காதலியை மீட்டுத் தரவேண்டும்.

காதலிக்காக ஏங்கும்

அதியமான் நெடுமான் அஞ்சி

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta