வணங்குவதற்கு ஒரு மண்

 புறநானூறில் ஒரு பாடல் உள்ளது. குறுங்கோழியூர் கிழார் சேரமானைப் பார்த்து பாடியது.
'உன்னுடைய மண்ணை கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே உண்ணுவர். எதிரிகள் உண்ண முடியாது.' பழந்தமிழர்  சொந்த மண்ணை மாற்றான் அபகரிக்காமல் பாதுகாப்பதற்காகப் போர்புரிந்தார்கள். அதுவே ஒரு வாழ்வுமுறையாக அமைந்தது. மண்ணுக்காக போர்புரிந்து மரித்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி அவர்களை வழிபடுவது  தமிழர் பண்பாடாகியது.

 

அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டனுக்கு சமீபத்தில் போயிருந்தேன். ஆப்பிரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபோது ஆர்லிங்டனில் போரில் இறந்த வீரர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான மயானத்தை அமைத்தார். அதிலே உள்நாட்டுப்போரில் தொடங்கி இன்று ஆப்கானிஸ்தான், ஈராக்கு போன்ற நாடுகள்வரை மரிக்கும் அமெரிக்க வீரர்களை அடக்கம் செய்கிறார்கள்.  இன்றைக்கு அங்கே 300,000 நடுகல்கள் உள்ளன. வருடா வருடம் மயானத்தில் பெரும் அணிவகுப்பும் மரியாதையும் நடக்கிறது. அத்துடன் பெயர் தெரியாமல் இறந்த வீரர்களுக்கான நினைவு மண்டபமும் ஒன்றிருக்கிறது. வருடத்தில் 365 நாட்களும், இருபத்திநாலு மணிநேரமும் வீரர்கள் காவல் காக்கிறார்கள். தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் அங்கே நடக்கும் அணிவகுப்பை பார்வையிடுவதற்காக வருகிறார்கள்.

அமெரிக்காவில் மாத்திரமல்ல கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் போரில் இறந்துபோன வீரர்களின் சமாதிகளில் வருடாவருடம் மரியாதை நடக்கிறது. ஐரோப்பாவில் பல நாடுகள் வருடத்தில் ஒருநாளை மரித்தவர்களுக்காக ஒதுக்கிவைத்து அந்த நாளில் மயானங்களுக்கு சென்று இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து பூச்செண்டு வைத்து வழிபடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. மாமன்னன் நெப்போலியன் இறந்து பல வருடங்களுக்கு பின்னர் அவன் உடல் பிரான்சுக்கு கொண்டு வரப்பட்டது. அவன் ஞாபகமாக ஒரு ஸ்தூபி எழுப்பட்டு அதற்கு மக்கள் மரியாதை செய்கிறார்கள். ஆப்பிரிக்காவிலே இறந்துபோனவர்கள் எல்லாம் தெய்வம்தான். மூதாதை வழிபாடு அவர்களுக்கு முக்கியமானது. இறந்த போர்வீரர்களுக்கான மரியாதை இன்னும் முக்கியம் பெறுகிறது.

1919ம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலா படுகொலை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். மைக்கேல் டையர் என்பவர்தான் அப்போது பஞ்சாப் கவர்னராக இருந்தவன். அந்தப் படுகொலையில்  400 நிரபராதிகள்  சுட்டு கொல்லப்பட்டனர். மைகேல் டையர் அந்தக் கொலைகளுக்கு ஆணை கொடுத்தது மட்டுமல்லாமல்  அவன் அவற்றை சரி என்று நியாயப்படுத்தியவன். கொலைநடந்த இடத்தில் சனங்களுக்கு தண்ணீர் பரிமாறியவன் உத்தம் சிங். துடிதுடித்து வீழ்ந்து மடிந்த சனங்களை கண்களால் பார்த்தவன். அவன் அந்த இடத்து மண்ணை அள்ளி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு டையரை பழி வாங்குவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டான். அங்கே 21 வருடங்களாக அவனைத் தேடி கடைசியில் காக்ஸ்டன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றபோது அங்கே பேசவந்த டையரை சுட்டு வீழ்த்தினான். காந்தி அவன் செய்த கொலையை கண்டித்தார். உத்தம் சிங்கை 1940ம் வருடம் இங்கிலாந்தில் தூக்கில் போட்டார்கள். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1974ல் அவனுடைய எச்சங்களை கொண்டுவந்து இந்திய அரசின் ஆதரவோடு எரித்து கங்கையில் கரைத்தார்கள். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து மரியாதை செய்தார். இன்றும் உத்தம் சிங்கின் நினைவுச் சின்னத்தை பஞ்சாபில் மக்கள் வழிபடுகிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரேயே இலங்கையில் அநுராதபுரத்தில் தமிழ் மன்னன் எல்லாளனின் நீதியான அரசாட்சி நடந்தது. அவனுடைய ராச்சியத்தை கைப்பற்ற சிங்கள அரசனான துட்டகைமுனு போர் தொடுத்தான். அந்தப் போர் முன்னெப்பொழுதும் கண்டிராதமாதிரி உக்கிரமானதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. அந்தச் சமரை மஹாவம்சம் 'குளத்திலிருந்த நீர் எல்லாம் ரத்தச் சிவப்பாக மாறியது' என்று வர்ணிக்கிறது.  போரில் துட்டகைமுனு வென்றான்; எல்லாளன்  இறாந்துபோனான். எல்லாளன் மக்களால் போற்றப்பட்ட தமிழ் மன்னனாகையால் அவன் விழுந்த இடத்தில் துட்டகைமுனு அவன் நினைவாக மண்டபம் எழுப்பினான். அந்த இடத்தை தாண்டும்போது மரியாதை செய்யவேண்டும் என்றும் வாத்தியங்கள் மௌனிக்கப்படவேண்டும் என்று சட்டம் இயற்றினான். அந்தச் சட்டம் பல நூறு ஆண்டுகள் மக்களால் மதிக்கப்பட்டது.

எந்த ஒரு போரிலும் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செய்வதுதான் உயர் பண்பாளர்களின் கடமை. ஆனால் இன்று ஈழத்து போரில் இறந்துபோன வீரர்களின் நடுகல்கள் அழிக்கப்படுகின்றன என்று வருகின்ற செய்தி நம்ப முடியாததாக இருக்கிறது.

புறநானூறில் மாங்குடி கிழார் இப்படி சொல்கிறார்.

மலர்களில் குரவம், தளவம், குருந்தம், முல்லை என்று நான்கு வகை உள்ளன.
உணவில் வரகு, தினை, கொள், அவரை என்று நான்கு வகை இருக்கின்றன.
குடிகளிலும் நான்கு வகை.
ஆனால் தொழுவதற்கு எங்களுக்கு தெய்வம் ஒன்றுதான்.
அது இறந்துபோன வீரனின் நடுகல்.

இன்றோ எமக்கு தெய்வமில்லை.
நடுகல் இல்லை.
ஒரு மண்ணும் இல்லை.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta